புதன், 28 டிசம்பர், 2011

ஒளவையாரும் போன்சாயும்

ஒளவையாரை வெளியே வரும்போதுதான் அருகில் கவனிக்க முடிந்தது. ஒரு முடி கூட மீதமில்லமல் அனைத்தும் நரைத்திருந்தது, அழுது கொண்டிருந்தார், அருகிலிருந்த பாரதியாரும் அழுது கொண்டிருந்தார். இருவருமே அவரவர்களின் அம்மாக்களின் மடியிலிருந்தார்கள். இவர்களை காந்திஜி பார்த்தார். பக்கத்தில் பாரத மாதாவும் பார்த்துக் கொண்டிருந்தார். பாரதியின் முண்டாசை கழற்றினார் அவரின் அம்மா. ”தலை வேர்திருக்கிறது. அதனால்தான் அழுகின்றான். நல்ல வேளை மேடையில் இருக்கும் போது அழவில்லை”. என்றார் பாரதியாரின் அம்மா. “ம்...” என்று ஒற்றை எழுத்தில் பதில் சொல்லிவிட்டு, நரை முடியை கழட்டுவதில் மும்முரமானார் ஒளவையாரின் அம்மா. ஒவ்வொரு ஹேர்பின்னையும் பொறுமையாக கழட்டினார். இப்போதுதான் அழுகையை நிறுத்தினார் ஒவையார்.

பள்ளியின் ஆ
ண்டுவிழாவில் பார்த்த காட்சிதான் இது. குழந்தைகளுக்கான மாறுவேட நிகழ்ச்சி. எல்லாம் ஒன்றாம் இரண்டாம் வகுப்பு குழந்தைகள். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வேடத்தில். குழந்தைகளை பெரியவர்களாய் வேடமிட்டு பார்ப்பதில், குழந்தையும் தெரியும் ஒளைவையாரும் தெரிவார். மாறுவேட கலை ரசிக்கக்கூடியதாயிருந்தது. இது நடந்தது ஆகஸ்ட் மாதத்தில்.

சில நாட்களுகு முன், சென்னையிலுள்ள செம்மொழி பூங்காவுக்கு ஊரிலிருந்து வந்திருந்த விருந்தினர்களுடன் செல்ல நேர்ந்தது. தமிழ் நாட்டின் ஆட்சி மாற்றம் பூங்காவிலும் தெரிந்தது. சென்றிருந்த அனைவருக்கும், குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிடித்தது அங்கு இருந்த போன்சாய் (Bonsai) மரங்கள்தான். இந்த சிற்றுரு (miniature) மரங்கள் ஜப்பான் / சீனாவிலிருந்து வந்த வேளாண்கலை (Art of cultivation) – வேளாண் அறிவியல் (agricultural science) அல்ல. பெருமரங்களை சிறிய அளவில் பார்ப்பதில் உள்ள சந்தோசம், ஐந்து வயது குழந்தைகளை ஒளைவையாராகவும், பாரதியாராயும் பார்பதைப் போலவே இருந்தது.

செம்மொழி பூங்காவில் போன்சாய் மரங்களை பார்க்கும் போது, எழுத்தாளர் ஷேபா டேவின் ’த வீக்’ வார இதழில் வெளியாகியிருந்த ஒரு கட்டுரைதான் ஞாபத்திற்க்கு வந்தது. அவரின் கட்டுரையில்.........குஜராத் பல்கலைக்கழகத்தின் Dr. ரஞ்சனா ஹரிஷ் அமைப்பாளராயிருந்து நடைபெற்ற பெண் எழுத்தாளர்களுக்கான மாநாட்டில் பேசிய முன்னனி எழுத்தாளர்களையும் சேர்த்து அனைத்து எழுத்தாளர்களின் பேச்சும் பெண்ணின் இழிவு நிலை பற்றியதாகவே இருந்தாய் சொல்கின்றார். ஏன் தமிழ்நாட்டிலுள்ள தலித்திய எழுதாளர் பாமாவின் படைப்புக்ளும் பெண்ணின் இழிவை எடுத்துறைப்பதாய்தான் இருக்கின்றது. அப்போது Dr. ரஞ்சனா ஹரிஷின் அப்பா, பழுத்த காந்தியவதி பலவருடஙகளுக்கு முன்பு பெண்கள் பற்றி எழுதிய கவிதையை சொல்லக் கேட்டதிலிருந்து, போன்சாய் மரங்கள் என் மனதைவிட்டு அகல மறுக்கின்றன என்கின்றார். ஒரு போன்சாய் மரத்திற்க்கு எவ்வளவுதான் சூரியஒளியும், நல்ல உரமும் கிடைத்தாலும் அது சிற்றுரு அளவிலே போன்சாயாகத்தான் இருக்கும். பேருறு பெற்ற மரமாய் உருவாக கனவுகூட காணாது. அதே மாதிரிதான், பெண் எழுத்தாளர்கள் சமுதாயத்தில் என்னதான் உயரத்தை எட்டினாலும் ‘பெண்ணிழிவு’ பற்றியே அவர்களின் படைப்புகள் இருக்கின்றன்.

ஒப்பீட்டளவில் அருமையானதாகவும், சமுகநோக்கில் வேதனையான நிலைதான் பெண்களுக்கு – போன்சாய் மரங்களுக்கு.




1) Fancy dress picture Courtesy: Dinamalar dated 4 Dec 2011
http://www.dinamalar.com/photogallery_detail.asp?cat=Album&id=76&nid=805&no=1

2) Bonsai picture Courtesy: http://en.wikipedia.org/wiki/Bonsai

3) Reference ‘The Week’ dated Dec 4, 2011



செவ்வாய், 27 டிசம்பர், 2011

எலிகளின் சத்தம் (அன்னா ஹசாரே)

அன்னா ஹசாரே மீண்டும் அறைக்கூவல் (கூச்சலில்லை) விட்டிருக்கின்றார். அது மாபெரும் எழுச்சியை இந்தியாவில் உண்டாக்கியிருக்கின்றது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து பாக்கிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான் வழியாக ஐரோப்பாவையும், தென்கிழக்கில் வலுப்பெற்று பர்மா, வியட்னாம் வழியாக ஆசியாவையும், ஆகமொத்தில் உலகம் முழுவதும் இந்த எழுச்சி இன்னும் சில தினங்களிலோ வாரங்களிலோ பரவும் என பன்னாட்டு தலைவர்கள் எல்லாம் நம்புகின்றார்கள். உண்மையை சொன்னால் தலைவர்கள் எல்லாம் பயந்து போயிருக்கின்றார்கள். இந்த எழுச்சிக்கான உத்தியை, சமீபத்தில் நாம் கண்கூடாக பார்த்த துனிஷ்யா, எகிப்து, சிரியா நாட்டுகளில் நடந்த புரட்சியை அன்னா ஹசாரே உற்று நோக்கி கொண்டிருந்த போது அவருக்கு மனதில் உதையமானதாய் சொல்லுகின்றார்கள்.

சரி.....சரி....என்ன அறைகூவல்? என்ன எழுச்சி?

முதலில் அறைகூவலை பார்ப்போம்.

அதாவது ......... நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ள ’ஊழல் எதிர்ப்பு சட்ட மசோதா’ பலம் பொருந்தியதில்லை என்றும் அதை எதிர்த்து மக்கள் அனைவரும் ‘சிறை நிரப்பும்’ படி அன்னா ஹசாரே அறைகூவி அழைக்கின்றார்.

பல முறை நாடாளுமன்றத்திற்க்கு அதுவும் பரம்பரையாய் நாடாளுமன்றத்திற்க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினகள் இந்த அறைகூவலை கேட்டு நடுங்கி போயிருக்கின்றார்கள். அன்னா ஹசாரே மேல் ஒரு விதமான பயமே வந்து விட்டது அவர்களுக்கெல்லாம். இருக்காதா பின்னே. மசோதாவை இன்னும் பிரிண்ட் செய்து உறுப்பினர்களுக்கு தரப்படவில்லை, உறுப்பினர்களுக்கு அதில் என்ன ஷரத்து இருக்கின்றது என்று தெரியாது. விவாதிக்கப்படவில்லை. திருத்தங்கள் பரிந்துரைக்கப் படவில்லை. இதற்கு முன்பே ஹசாரே, பலமில்லா சட்ட மசோதானு செல்லிட்டார்னா, என்ன ஒரு ஞான(கண்) பார்வை. அதனால்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமல்லாது, சட்டமன்ற உறுப்பினர்கள், முனிசிபாலிட்டி உறுப்பினர்கள்னு அரசியல்வாதிகள் மட்டுமல்லாது ஒவ்வொரு குடும்பத்திலுள்ள உறுப்பினர்கள் வரை அனைவருக்கும் ஹசாரேமீது பயம் கலந்த மரியாதையும், சிலருக்கு மரியாதை கலந்த பயமும் தனியாகவோ கலந்தோ வந்துவிட்டது.

ஹசாரேவிட்ட அறைகூவலை கொஞ்சம் புரிவது மாதிரி தெரிகின்றது. அதனால் நாட்டில் என்ன எழுச்சி உண்டாகிவிட்டது?.

ஹசாரேவின் அறைகூவல் கேட்டவுடனே வீறுகொண்டு எழுந்து உங்கள் வீட்டிற்க்கு பக்கதிலுள்ள எதாவது சிறைச்சாலைக்கு சென்றீர்கள் என்றால் நீங்கள் ஊழலுக்கு எதிரான போராளியல்ல, ஒரு பெருச்சாளிதான் (அதாவது சந்தேகமே இல்லாமல் ஊழல் பெருச்சாளிதான்).

சிறை நிரப்பு போரட்டதிற்க்கு சிறைச்சாலைக்குதானே செல்ல வேண்டும் என்று நீங்கள் கேட்டால், உங்களை மாதிரி ஹசாரேவின் போரட்ட உத்தி தொரியதவர்களை வைத்து என்ன செய்வது? செய்திதாள் படிக்கும் பழக்கமிருந்தால் தெரிந்திருக்கும். சரி.......செல்லுகின்ற மாதிரி செய்து விடுங்கள். ஊழலுக்கு எதிரான இந்தியா (India Against Corruption) என்ற இணைய தளதிற்க்கு சென்று கணினி எலியில் Right click செய்து சிறைசெல்ல பதிவு செய்தால் சிறைசென்ற கஷ்டத்தை பெறுவீர்கள். போராட்டமும் வலுப்பெறும்.

போராட்ட குழுவின் சிங் தன்னார்வலர் செளகான் செல்லுவதை கேளுங்களேன். “அன்னா ஹசாரே 'சிறை நிரப்பு போராட்ட’ ஆன்லைன் பிரச்சாரத்தை துவங்கி மூன்று நாட்களுக்குள் நாடு முழுவதும் இருந்து, 1.1 லட்சம் மக்கள் பதிவிட்டிருக்கின்றார்கள். இது எதிர் பார்க்காத எழுச்சி. இதை யாராலும் தடுக்கவும் முடியாது.”

அப்பாடா...... இப்ப ஹசாரேவின் எழுச்சியும் புரிந்தா உஙக்ளுக்கு.

இனி நாட்டில் ஊழல் ஒழிந்துவிடும்.


[டெல்லியில் ரெம்ப குளிராம். அதனால் உண்ணாவிரத இடத்தை மும்பைக்கு மாற்றிவிட்டார்கள். கம்பளிக்குள் போனால் குளிர் போய்விடும். அதற்கே பயந்தவர்களை சிறை கம்பி பின்னால் போக சொன்னால் என்ன செய்வார்கள். இணையத்தில் பதிவிட்டதுடன் கடமை முடிந்ததாய் ஓலமிடுவார்கள்.

வலியில்லா எலிகளின் சத்தம் !!!

நாங்கள் எந்த ஒரு கட்சிக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால், வலுவான சட்டம் இயற்றப்படவில்லை என்றால் காங்கிரசுக்கு எதிராக சேனியா காந்தி, ராகுல் காந்தியின் வீட்டின் முன்பு போராடலாமுன்னு ஹசாரே சொன்னாரே? அவர்கள் வீடும் டெல்லியில்தானே இருக்கின்றது. குளிருமே !!. என்ன செய்வது? அதற்க்கு இரண்டு வழிகள் இருப்பது ஹசாரே தெரியும். ஒன்று, அவர்கள் வீட்டை போராட்டக்காரர்கள் வசதிக்காக மும்பைக்கு மாற்ற சொல்லலாம். அதற்க்கு அவர்கள் மறுத்தால், இத்தாலிய சதிகாரர்கள் என்று குற்றம் சாட்டலாம். இரண்டாவது வழி, வீட்டையெல்லாம் மாற்ற வேண்டாம். போராட்டத்தை குளிர்
குறைந்ததும் வெயில் காலத்தில் வைத்துக் கொள்ளலாம். இதில் எது என்பதை, கோர் கமிட்டி (Core committee) முடிவு செய்யுமோ? ]

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

பிழைபாடு (Errornomics)

’வாழ்க்கையில் முன்னேற முப்பது வழிகள்’, ‘ நீங்களும் சாதிக்கலாம்’, ‘வெற்றியின் திறவுகோல்’ இப்படி நிறைய சுயமுனேற்ற புத்தகங்கள் பி.சி. கணேசன் முதல் எம். எஸ். உதயமூர்த்தி எழுதியவைகளை படித்து முடித்தவுடன் நமக்கு ஒரு தெம்பு உண்டாகும். ஆனால் அந்த உற்ச்சாகம், இரண்டொரு நாளில் நாம் செய்து விடும் சின்ன ஆனால் தவிர்க்க முடிந்த நிகழ்வால் கரைந்துவிடும்.

புலிட்சர் பரிசு வென்ற, ஜோசப் டி ஹலினன் எழுதிய பிழைபாடு (Errornomics) என்ற புத்தகத்தில் தினமும் நடக்கும் தவறுகள் எப்படி நம் வாழ்வை வடிவமைக்கின்றது என்றும் தடுக்க என்ன செய்ய
முடியும் என விளக்குகிறது. ‘ஏண்டா,இவனும் தானே தப்பு பண்ணினான். இப்ப என்னடான்னா, ஏதோ இவன் உத்தமன் மாதிரியும், மற்றவர்கள் மட்டுமே தப்பு பண்ணின மாதிரியும் பேசிட்டு போறான் பாரேன்’ இந்த சொல்லாடலை அடிக்கடி கேட்டிருப்போம். ஏன் நாமே நிறைய உபயோகித்திருப்போம். அப்போதொல்லாம், ஏன் இப்படி மாற்றி மாற்றி பேசுகின்றார்கள் என்று புரியாது. எனக்கு நடந்த சம்பவம் ஒன்றைச் சொன்னால் எளிதாய் புரியும் என நினைகின்றேன். தமிழக அரசு, பேருந்து கட்டணம், பால் விலை மற்றும் மின்சார கட்டணமெல்லாம் இரண்டு மடங்காக உயர்த்திய போது, எங்கள் அப்பர்ட்மெண்டில் உள்ள Mr. X சொன்னார், “விழுந்து விழுந்து அம்மாவுக்கு ஓட்டு போட்டீங்கல்ல. இப்ப நல்ல படுங்க. வேணும் உங்களுக்கெல்லாம். வந்த ஐந்து மாதத்திலேயே இந்த போடு போடுது.........ஐந்து வருசம் முடிவதற்குள் என்ன என்ன படப்போறோமோ....... கலைஞர் ஆட்சி குடும்ப ஆட்சினு சொன்னானுக. ஆனால் சாதாரண குடிமகனுக்கு எதாவது பாதிப்பு வந்ததா? யேசிக்க மாடானுக’ ஆனால் இதே Mr. X தான், தேர்தல் நேரத்தில், கலைஞருக்கு ஓட்டு போட்டால், தமிழ் நாடே காலியகிவிடும். அம்மாவுக்கு ஒட்டு போடுங்கள் என்றார். அப்பொது ஒருவர் ‘ ஏன் சார், அந்தம்மாவின் ஆட்சிதான் எவ்வளவு மோசம்னு தெரியும்ல’ னு கேட்டதற்க்கு, ‘ அம்மா, முன்னம மாதிரி இல்லை. பட்ட தோல்விகளில் திருந்திட்டாங்க’னு பதில் சொன்னார்.

இப்போது சரியான நிகழ்வைத் தான் செய்ததாய் மனம் மறுகட்டமைத்துக் கெள்ளுமாம். மனம், தனது பிழையான முடிவுகளை எடுக்கவில்லை என்று நம்பிக்கை அடையும். இது மனபிரழ்வு அல்ல. மனசாய்பு நிலைதான் என்று ஜோசப் ஹலினன் சொல்லுகின்றார்.

மனத்தின் உயர்வுசிக்கலும் (Conceit lie) பிழைகளுக்கான காரணம். எடுத்துக்காட்டாக சாதாரண மக்களின் முடிவுகள்தான் மதம், மொழி, இனம், சுற்றம் என்று சார்பு நிலையுடயதாய் (biased) இருக்கும் என்றும் நான் எடுக்கும் முடிவுகள் நடுநிலை (impartial) யாய் இருக்கும் என்ற மன பாதிப்பு நிலையிலிருப்பதாயும் சொல்லுகின்றார்.

மேலும், எதிர்மறையான பின்னூட்ட(adverse feedback)மும், மனத்தால் எளிதாய் நிராகரிக்கபடும் அல்லது பின்னுட்டமாய் எடுத்துக் கொள்ளுவதற்க்கும் அப்பாற்பட்ட விளைவை உண்டாக்கும். வீட்டில் மனைவியின் சமையல் ’நன்றாக இருக்கின்றது’ என்பதற்க்கும், ‘குறையுடையது’ என்பதற்கும் உள்ள வித்தியசம் நம்மில் பலரும் அறிவோம்.

நமது வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ, முப்பது விழுக்காடு பயனற்ற பொருட்கள் இருப்பதை ஆராய்ச்சிகள் சுட்டிகாட்டுகின்றன. இதற்க்கு காரணம், முனைப்பு (projection bias) பிழை என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஒரு பொருள் (அதே மாதிரி பொருள் வீட்டில் பயனற்று இருக்கும் போதும்) வாங்க வேண்டும் என்ற முடிவுகள் அறிவால் அல்லாமல் உணர்வு உந்துதலால் எடுக்கப்படும் போதுதான் நிகழ்கின்றன.

சரி, பிழைகளை எப்படி திருத்திக் கொள்வது? ஒவ்வொரு பிழையையும் அதன் அடிப்படை காரணத்தை (root cause) ஆராய்ந்தால், செய்யும் பிழைகள் குறையும் என்கிறார் ஜோசப் ஹலினன். பிழைபாடு (Errornomics) புத்தகம், ஒரு வித்தியாசமான கோணத்தில் நிகழ்வுகளை விளக்கியுள்ளது.

புத்தகத்தின் தலைப்பு : Errornomics
ஆசிரியர் : Joseph T. Hallinan
வெளியீட்டளர் : Ebury Press, UK


வியாழன், 1 டிசம்பர், 2011

வேப்ப மரம்

காலையில் அப்பார்ட்மெண்டில் நுழையும் போதே எதிர்பட்டார்கள், கணவனும், மனைவியும். அவர் ராமசாமி, எங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் செக்ரட்டரி. உடன் இருந்தது அவரின் மனைவி. அந்த் பெண்மணியின் கையில் வயரில் பின்னிய கூடை இருந்தது. அது அவர்கள் கோவிலுக்கு போய் வருவதற்க்கான அடையாளம். அவர் பெயருக்குதான் செக்ரட்டரி, ஆனால் நடந்து கொள்வதோ, ஒரு பொறுப்பான உரிமையாளர் மாதிரிதான். வாச்மேன், பெருக்கி சுத்தம் செய்பவர்கள், பிளம்பர், எலக்ட்ரீசியன் போன்ற எல்லோரையும் மேய்ப்பது அவர்தான். தான் வீட்டுக்கு பண்ணுவது மாதிரியேதான் அப்பாட்மெண்டில் இருக்கும் இருபத்தி நாலு வீட்டுகளுக்கும் தேவையான ரிப்பேர் வேலைகளை இழுத்துப் போட்டு செய்வார். எங்கள் குடியிருப்பில் அவர் வைத்ததுதான் சட்டம். அவர் சொல்லுவதை யாரும் எதிர்த்து கூறுவதும் இல்லை, அவர் செய்யும் வேலையில் யாரும் உதவியும் செய்வதும் இல்லை. அவரும் யாருடைய உதவிக்காகவும் காத்திருப்பதில்லை. பண்ணவேண்டிய வேலைகளை அவரே முடித்துவிட்டு, அடுத்து நடக்கும் அப்பார்ட்மெண்ட் கூட்டத்தில் சொல்லுவார். சில வேலைகளில் அவரே வந்து, ”உங்கள் வீட்டுக்கு வரும் தண்ணீர் குழாயில் ஓட்டையிருக்கிறது. தண்ணீரொல்லாம் வீணாக போகினறது. பிளம்பரை வரச் சொல்லியிருக்கின்றேன், இன்று மாலைக்குள் ரிப்பேர் செய்து விடுவான்” என்பார். சொன்ன மாதிரியே பிளம்பரை விரட்டி விரட்டி வேலை வாங்கி மாலைக்குள் பிரச்சினையை தீர்த்துவைப்பார். எல்லாவேலைகளையும் நல்லபடியாக முடித்தும் விடுவார். வெகு சில நேரங்களில் மட்டும், தன்னிச்சையாக முடிவெடுத்துவிட்டு குழப்பத்தில் கொண்டும் விட்டுவிடுவார். அவர் பொது துறை வங்கியொன்றில் வேலை செய்து ரிட்டைடு ஆனவர். காலையில் பார்த்ததும் நான் தான் கேட்டேன்.


”என்ன சார், இன்று இரண்டாவது சனிக்கிழமை. அப்பார்ட்மெண்ட் கூட்டம் இருக்கா?”

”ஆமா......இருக்கு. பத்து மணிக்கு வந்துவிடுங்கள்” என்று சொல்லி, சிறிது இடைவேளைக்குப் பின் அவரே தொடர்ந்தார்.

”இப்பத்தான் கோயிலுக்கு போயிட்டு வருகின்றோம். சனீஸ்வரனுக்கு எள்ளு பொட்டலம் போட்டு விளகேற்றி பூஜை செய்துவிட்டு வருகின்றோம். இன்றோடு பதினோரு சனிக்கிழமையும் முடிந்தது” என்று ரெம்ப மகிழ்ச்சியுடனும், ஏதோ சாதித்தது மாதிரியும் சொன்னார்.

”இத்தோடு, நம் அப்பார்ட்மெண்டை பிடித்த சனி தொலைந்தது.....” என்று பலமாக சிரித்தார். அவர் மனைவியும் அந்த சிரிப்பில் கல்ந்துகொண்டார். நான்தான், முகத்தில் புன்னகை புரிவது மாதிரி காட்டிக் கொண்டேன். மனத்திற்குள் எரிச்சல்தான். வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. “சனியா பிடித்திருக்கின்றது.....சனி, பைத்தியம்தான் பிடித்திருகின்றது இந்த் ஆளுக்கு.” என்று நான் மனதுக்குள் சொல்லிகொண்டேன். பதினோரு சனிக்கிழமை கோவிலுக்கு செல்வதற்க்குப் பதில் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தால், பைத்தியமாவது தெளிந்திருக்கும்.

”சரி சார். மீட்டிங்குக்கு வந்துர்றேன்.” னு சொல்லிவிட்டு வீட்டை நோக்கி நடையை கட்டினேன். என்னுடைய வீடு, ஆறாம் நம்பர் வீடு. நாலு நாலு வீடுகளாய், மொத்தம் ஆறு வரிசைகளில் வீடுகள் இருக்கும். முதல் வரிசையில் உள்ள வீடு ஒன்றாம் நம்பரிலிருந்து நான்காம் நம்பர் வரையிருக்கும். ஜந்தாம் நம்பர் முதல் எட்டாம் நம்பர்வரை இரண்டாவது வரிசை. ஜந்தாம் நம்பர் வீடு தரை தளம், ஆறாவது வீடு முதல் மாடி. அதுதான் எங்கள் வீடு. எங்கள் ராஜ்யம். என் மனைவிதான் மகாராணி, நான் முடிசூடா மன்னன். எங்கள் மகன்தான் இளவரசன். நாங்கள் முன்றுபேர்தான். வீட்டின் பராமரிப்பு முழுவதும் என் மனைவியின் பொறுப்புதான். வீடு, இரண்டு பெட் ரூம் உள்ள சிறிய வீடுதான். ஒரு ஹால். சாப்பாட்டு அறை, அப்புறம் சமையல் அறை. இந்த்பக்கம் இரண்டு படுக்கை அறையும், அதற்கு இடையில் குளியல்றையும் கக்கூசும் இருக்கும். இந்த சிறிய வீட்டையே என் மனைவி சென்டிமீட்டர்.. சென்டிமீட்டராய் அழகு செய்திருப்பாள். சுத்தமும், நேர்த்தியும் அவளுக்கு கைவந்த கலை. அவளுக்கு பிடித்தமானதும் கூட. இப்போது என்று இல்லை, கட்டிட வேலை நடக்கும்போதே,வீட்டை நானும் அவளும் தினமும் வந்து பார்போம். மனதில் பட்ட புது புது ஜடியாக்களைக் கட்டட காண்ராக்ட்டரிடம் சொல்லுவாள் அவ்ள். வீட்டின் ஒவ்வோரு கட்டுமானத்தையும் பார்த்து பார்த்து ரசித்தோம்.

பதினைந்து ஆண்டுகள் ஆனாலும், இன்றும் அப்படியே இன்றும் ஞாபகத்திலிருக்கின்றது, நாங்கள் இந்த வீட்டை வாங்கியது. வீடு வாங்க வேண்டும் என்ற பொறி போட்டதே என் மனைவிதான். பொறிபோட்டது மட்டுமல்லாமல், அதை ஊதி ஊதி பெரிதாக்கி வீடு வாங்க வேண்டும் என்ற ஆசையையே உண்டாக்கிவிட்டாள். சரி வீடு வாங்க எவ்வளவு செலவாகும், நம்முடைய சேமிப்பில் எவ்வளவு என்று கணக்கு போட்டோம். ஆபீஸ் நண்பர் கொடுத்த வீட்டு கடன் ஜடியாவையும் சேர்த்தாலும், பெரிய துண்டு விழுந்தது. பணத்திற்க்கு என்ன சொய்வது என்று தெரியாமல் சோர்ந்து போனோம். துண்டு விழுந்த பண்த்திற்க்கு ஜடியா கொடுத்ததும் என் மனைவிதான். ஆம்...அவளின் தங்க நகைகளை விற்றால், வரும் பணம் சரியாக இருக்குமென்றாள். என்க்குத்தான் மனதுக்கு ஒரு மாதிரி இருந்தது, அவளுக்கு பிடித்தமான நகைகளை விற்க வேண்டியிருக்க்ன்றதே என்று. அதற்கு அவள்,

”பிடித்தமான நகைகளை விற்று, பிடித்தமான வீடுதானே வாங்குகின்றேம். நகை எப்போது வேண்டும்னாலும் வாங்கலாம். வீடு வாங்கின்றதுதான் கஷ்ட்டம்.” என்று சொன்னாள். எனக்கும் சரி என்றே பட்டது.

பணத்திற்க்கு வழி வந்தவுடன், வீடு தேட ஆரம்பித்தோம். பல இடங்களில் அலைந்து தேடி, இங்கு வந்து பார்க்கும்போது, இந்த அப்பார்ட்மெண்ட் இருக்கும் இடம் காலி மனைதான். மேற்கு ஒரத்தில் ஒரு கிணரும், கிணற்றுக்கு கொஞ்சம் தள்ளி ஒரு வேப்பம் கண்ணுவும் மட்டுமே இருந்தன. இடமும் எங்களுக்கு பிடித்துப் போயிற்று. சிறிய தொகையை அட்வான்ஸாக கொடுத்து வீட்டை புக் செய்தோம். கையிலிருந்த பணத்தை கொடுத்து பத்திர பதிவை முடித்தொம். பின்னர், வீட்டு கடனுக்கு விண்ணப்பித்து, அந்த பணம் வந்தும், பில்டரிடம் கொடுத்தோம். வீட்டு வேலை மள மளவென்று நடந்து. வீடு கட்டி முடிந்து நாங்கள் குடிவர ஒன்றேகால் வருடமாகிவிட்டது. எங்கள் சமையலறை ஜன்னலுக்கு பின்னால், முதல் மாடிவரை நன்றாக வளர்ந்து கிளைவிட்டு வேப்பமரமாயிருந்த்து, அந்த சிறிய வேப்பங்கண்ணு. மர நிழலும், காற்றும் பட்டு சமையலறையே குளுகுளுனுதான் இருக்கும் எப்போதும். அந்த வேப்ப மரத்தில் அணில்கள் துள்ளி குதித்து விளையாடுவதும், குருவி முதல் பல வகை பறவைகளும் வந்து அமர்ந்து பாடிவிட்டு பறந்து போவதை பார்த்துக் கொண்டே சமையல் செய்வது என் மனைவிக்கு நல்ல பொழுது போக்காகிப்போனது. அவை ஒவ்வென்றும், ஷிப்டு போட்டு வந்து போகும். காலையில் முதலில் வந்து ஆஜராவது சிட்டுகுருவிகள்தாம்.

”என்ன இன்னைக்கு இவ்வளவு லேட்? ஊரெல்லாம் சுத்திட்டு இப்பதான் வர நேரம் கிடைத்ததா?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருப்பது சிட்டுகுருவிகளிடம்தான். காலை சமையல் சிட்டுகுருவிகளுடன் பேசிக்கொண்டே முடியும். குருவிகளும் கொஞ்சநேரம் வேப்பமரத்தில் இருந்துவிட்டு செனறுவிடும். அவர்களுக்கு பின் வருவது இரண்டு மூன்று அணில்கள். அவைகள் மரத்தின் கிளைகளில் ஒடி விளையாடிக்கொண்டிருக்கும். வேப்பம்பழத்தை அணில்கள் சாப்பிடுவதை ரசித்து பார்த்தும், அதை எங்களிடம் சொல்லியும் சந்தோசப்படுவாள். அவைகள், பின்னங்கால்கள் இரண்டயும் ஊன்றி உக்கார்ந்து கொண்டு, முன்னங்கால்களால் பழத்தை இறுக்கமாய் பிடித்துக்கொள்ளும். யாரோ வந்து பிடிங்கிகொண்டுபோய்விடுவது மாதிரி அவசர அவசரமாய் சாப்பிடும். பிடித்திருந்தால் முழு பழத்தையும் சாப்பிடும், இல்லையென்றால் ஒரு கடியில் தூக்கிப் போட்டுவிடும். சாப்பிட்டு முடித்தபின் அங்கும் இங்குமாய் கிளைகளில் ஆட்டம் போட்டுவிட்டு, அவைகளும் சென்றுவிடும். இப்படி தினம் தின்ம் ஒரு புதிய கதைகள் எங்களுக்கு கிடைக்கும். வேப்பமரத்திற்க்கு வாடிக்கையாக வரும் குருவி, அணில்களிலிருந்து, அப்பப வந்து போகும் பறவைகள் வரை எல்லாமே அத்துப்படி. அணில்களை ஒவ்வொறாய் அடையாளம் தெரியும். எனக்கும் காண்பித்து கொடுப்பாள். எனக்கு என்னமோ எல்லா அணில்களும் ஒரே மாதிரித்தான் தெரியும்.

ஒரு நாள், புதிதாக இரண்டு காகங்கள், வேப்பமரத்திற்க்கு ரெகுலராக மதிய வேலைகளில் வருவதாய் சொன்னாள். அதில் ஒன்று ஆண் காகம் என்றும் ஒன்று பொண் காகம் என்றும் சொன்னாள். அது எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பது? என்று மகன் கேட்ட கேள்விக்கு,
”உற்று காக்கைகளைப் பார்த்தாலே, அதன் நடவடிக்கையிலே தெரியும்” என்று சொல்லி என்னைப் பார்த்தாள். எனக்கு ஒன்றுமே புரியாமல் திரு திரு என முழித்தேன். உடனே என் மனைவி,

”இப்படித்தான் ஆண் காகம் முழிக்கும், அதிலேயே கண்டுபிடித்து விடலாம்” என்று என்னைப்பார்துச் சொல்லி, கிண்டல் செய்தாள். எல்லேருமே சிரித்துவிட்டோம். மற்றொரு நாள், அந்த் காகங்களில் ஒன்று மரக்கிளையிலிருந்து, எங்கள் வீட்டை நோக்கி கரைந்து கொண்டே இருந்த்து. என் மனைவி,

“சரி சரி போதும்” என்று அதட்டலாய் காகத்திடம் சொன்னாள். இதைப் பார்த்த மகன், ”காக்கா என்னமா சொல்லுது?” என்று கேட்டான்.

”காகம் இப்படி வீட்டைப்பார்த்து கத்தினால், நம்ம வீட்டுக்கு விருந்தினர்கள் வரப் போகின்றார்கள் என்று அர்த்தம்.” னு பதில் சொன்னாள் மனைவி.

”யாரு வருவானு காக்கா சொல்லுமாமா?” என்று அடுத்த கேள்வி கேட்டான் மகன்.

”சேகர் மாமா வருவான்” என்று சொல்லி சமாளித்தாள் என் மனைவி.

சேகர் அவளின் தம்பி. அடிக்கடி வியபார விசயமாய் ஊருக்கு வருவான். வரும்போதொல்லம் ஒரு நடை வீட்டுக்கு வந்துவிட்டுப் போவான். என் மகனுக்கும் சேகர் மாமாவென்றால் பிரியம்தான். சொன்னமாதிரியே, அன்று மதிய வேளையில் சேகர் வீட்டுக்கு வந்தான். அவனை பார்த்தவுடன், என் மகன்,

”மாமா, நீங்கள் வருவீங்கன்னு எங்களுக்கு தெரியும்.”

” எப்படிடா, தெரியும் உங்களுக்கு?” கேட்டான் சேகர்.

”காக்கா, அம்மாகிட்ட சொல்லுச்சி” இது, என் மகன்.

”யாரு? இந்த காக்காவா?” னு என்னைப்பார்த்து கிண்டல் செய்து, என் மகனிடம் கேட்டான்.

”இல்ல மாமா....நிஜக் காக்கா சொல்லுச்சி” என்றான் மகன்.

”இதுவும் நிஜக் காக்காதான்” சேகர் சொன்னான்.

”ம்..மாமா....அம்மாவிடம் வேணுமானால் கேளுங்கள்” என்று சொன்ன மகன், மனைவியை சமையலறையிலிருந்து கையை பிடித்து இழுத்து வந்தான். தம்பியை பார்த்த மனைவி,

”வா... சேகர், இப்பதான் வர்ரயா? சாப்பிடுகிராயா? ” என்னாள் மனைவி.

”இல்லக்கா....இப்ப்த்தான் சாப்பிட்டேன்” எனறு பதில் சொன்னான் சேகர்.

இப்படித்தான், தின்மும் காக்கா கதையும், குருவி கதையும் வழக்கமாகிவிட்டது எங்கள் வீட்டில்.

சில வாரங்களுக்கு முன்பு எனது மனைவி சொன்னாள்,

”காகம் ரெண்டும் குச்சிகளை எடுத்துவந்து மரக்கிளையில் வைக்கின்றது. கூடு கட்டபோகிறதுனு நினைக்கின்றேன்”

அவள் சொன்ன மாதிரியே இரண்டு நாட்களில் கூடு கட்ட ஆரம்பித்தன. காக்கை கூடு கட்டுவது என்பது நாம் வீடு கட்டுவதை போன்றதே. முதலில் பெரிய பெரிய குச்சியாக வைத்து பலமான அடித்தளமிடும். பின்னர் சின்ன சின்ன சுள்ளியாகவைத்து கட்டும். அப்போது, கூடு சுமாரான வட்டவடிவில் இருக்கும். இந்த நேரத்தில் பெண் காகம் கூடுக்குள் உட்கார்ந்து பார்க்கும். சில குச்சிகளை மாற்றி அமைக்கும் அல்லது மேலும் சில குச்சிகளை சேர்க்கும். அதன் பின்னர் காய்ந்த புல்லையோ, வைக்கோலையோ கொண்டுவந்து மேலே போட்டு கூட்டை மெத் மெத்தென்றாக்கும். நாம் கட்டிலில் மைத்தை போட்டு படுப்பது மாதிரி. அப்போதும் காகம் கூடுக்குள் உட்கார்ந்து பார்க்கும். சிறு சிறு திருத்தம் செய்யும். அத்ன் பின் பெண் காகம் கூட்டிலேயே நெடுநேரம் செலவிடும். இதை பார்த்த என் மனைவியின் கணிப்பு, ”முட்டையிட்டு குஞ்சு பொரிக்கப்பேகின்றது காகம்”.அதே மாதிரிதான் நடந்த்து.

மூன்று மாதங்களுக்கு முன், என் மனைவியுடன் கல்லுரியில் படித்த நிஷாவின் கணவரும், அவர்களின் ஜந்து வயது மகளும் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள். நிஷாவின் கணவர், ஒரு சுவீட் பாக்கட்டை கொடுத்து, தாங்களுக்கு இரண்டாவதாக பையன் பிறந்திருப்பதாய் சொன்னார். என் மனைவி அந்த் குழந்தையிடம் கேட்டாள்,

”உங்க வீட்டுக்கு குட்டி பாப்பா வந்திருக்கா?”

”ம் ஆமா ஆன்டி” இது குழந்தை சொன்ன பதில். பதில் சொல்லும்போதே, குழந்தையின் கண்களில் குதுகுலம்.

”குட்டி பாப்பா என்ன சொல்கின்றான்?”

” குட்டி பாப்பா தூங்கிக்கிட்டே இருக்கின்றான். தூங்கிட்டிருக்கும்போதே சிரிப்பான் ஆன்டி. ஆனா, அழும்போது மட்டும் முழித்துப்பார்பான்”

”அப்படியா?. சரி.....அடுத்ததடவை வரும்போது அவனை கூட்டிட்டு வருவையா? எங்க வீட்டுல இருக்கின்ற மரத்தில், குருவி, காக்காயெல்லம் இருக்கன்றது. நாம அவனுக்கு காண்பிப்போம@

”எங்க இருக்கு ஆன்டி ....” குழந்தை கேட்டது.

இப்போது என் மனைவிக்கு குதுகுலம், குழந்தையை கூட்டிக்கொண்டு, சமையலறைக்கு சென்றாள். அங்கிருந்து, வேப்ப மரத்திலிருந்த காக்காவின் கூட்டை காண்பித்து கொடுத்தாள்.

”காக்கா ஏன் ஆன்டி அங்கயே உக்காந்திருக்கு?” குழந்தையின் கேள்வி.

”காக்காவுக்கும் ஒரு குட்டி காக்கா பாப்பா வரப்போது...” மனைவி காக்காபுராணத்தை ஆரம்பித்தாள். காக்கா கதையை முழுவதுமாய் கேட்டுவிட்டு சென்றார்கள்.

அவர்கள் வந்து சென்றபின், ஒரு ஞாயிற்றுக்கிழமை நிஷாவின் வீட்டுக்கு பிறந்த குழந்தையையும் அவர்களையும் பார்க்க சென்றிருந்தோம். எங்களை பார்த்ததும், அவர்களின் மகள், என் மனைவியைப் பார்த்து ஆர்வமாய் கேட்ட முதல் கேள்வியே,

”காக்காவுக்கு குட்டி பாப்பா வந்திருச்சா ஆன்டி? “

”இன்னும் வரல....குட்டி பாப்பா வந்தவுடன் சொல்ரேன். நீ, உன் தம்பி பாப்பாவுடன் எங்க வீட்டுக்கு வரணும்“

சரின்னு அந்த் குழந்தையும் தலையாட்டினாள். பின்னர், நாங்கள் கிளம்பி வீடு வந்து சேர்ந்தோம். வீட்டில் நுழைந்த உடன், காகத்தின் இடைவிடாத சத்தத்தைக் கேட்டு, என் மனைவி சமையலறைக்குச் சென்று பார்த்து, சத்தம் போட்டாள்,

”ஏங்க இஙக வாங்களைன் .........”

நானும் என் மகனும், என்னமோ .....ஏதோன்னு சமையலறைக்கு ஒடினோம். அங்கு, ஜன்னலைத் தாண்டி ஒரே வெட்ட வெளி. வேப்ப மரத்தைக் காணவில்லை. பால்கனிக்கு வந்து பார்த்தால், மரம் வெட்டப்பட்டு கிடக்கின்றது. காககையின் கூடு சிதைந்து போய், காக்கையின் முட்டை உடைந்து மஞ்சள் கரு சிதறி தரையில் கிடந்தது. காகம் இரண்டும், மாறி மாறி வந்து முட்டையை பார்த்து கத்திக்கோண்டே இருந்தன. என்ன நடந்தென்றே புரியவில்லை எங்களுக்கு. அப்பார்ட்மெண்ட் வாச்மேனை கூப்பிட்டுக் கேட்டேன். அதற்க்கு அவ்ர்,

”சார், உங்களுக்கு விசயமே தெரியாதா?” என்று ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு அவரே தெடர்ந்தார்,

”வேப்ப மரத்தில் காக்கா கூடு கட்டி முட்டை போட்டுருந்திச்சாம். அப்பிடின்னா, நம்ம அப்பார்ட்மெண்ட்க்கு சனி குடிவந்திருமாம். அதனால், செக்ரட்டரி சார்தான் காக்கா கூட்டோடு சேர்ந்து மரத்தையும் காலி பண்ணச்சொன்னார்.”

”அப்பார்ட்மெண்டுக்கு சனி பிடிக்கல, அவ்ருக்குதான் பைத்தியம் பிடித்திருக்கின்றது.” என்றேன் நான்.


என் மகன், மனைவியிடம் கேட்டான்,

”காக்கா, இப்ப என்னம்மா சொல்லுது?”

”காக்கா எதுவும் சொல்லலைப்பா, அழுகின்றது. அதன் முட்டையை யாரோ உடைத்துவிட்டர்கள். அதனால், அழுகின்றது,” என்று மனைவி பதில் சொன்னாள்.

மனிதர்களை பற்றி அந்த காகங்கள் ரொம்ப மட்டமாய்தான் நினைத்திருக்கும். காகங்களின் சத்தம் குறையவேயில்லை, வெகு நேரம் கேட்டுக்கொண்டேயிருந்தது.

புதன், 26 அக்டோபர், 2011

புன்னைமரத்தடியில்

மாநிறமா அல்லது கருமையா ? என்று பட்டிமன்றம் வைத்து வாதிட்டு, நடுவர் என்ன முடிவு சொன்னாலும், அந்த தீர்ப்பு ஒருதலை பட்சமான தீர்ப்பாகத் தோன்றும் இடைப்பட்ட நிறம் அவளுக்கு. நாற்பத்தைந்தை கடந்த வயது என்று சொல்லத் தோணாத தோற்றம். ”மீனாக்ஷி காலேஜ்” என்ற பஸ் கண்டக்டரின் குரல், இவளை சுயநினைவுக்கு இழுந்து வந்தது. அவசர அவசரமாய் பஸ்ஸிலிருந்து இறங்கினாள். உடன் கணவரும், இரண்டு மகன்களும் இறங்கினார்கள். மூத்த மகனுக்கு இருபது வயது இருக்கலாம். இளையவனுக்கு மூத்தவனைவிட இரண்டு அல்லது மூன்று வயதுகள் குறைவாக இருக்கலாம். பஸ் ஸ்டாப்பிலிருந்து கல்லூரிக்கு சிறிது தூரம் நடக்க வேண்டும். அங்கிருந்து பார்த்தாலே கல்லூரியின் பெயர் பலகை பளிச் என்று தெரிந்தது. புதிதாக பெயிண்ட் அடித்திருக்கிறார்கள் போலும். கல்லூரியின் பெயரை பார்த்தவுடன் அம்பிகாவுக்கு ஒரு வித படபடப்பு, குதுகலிப்பு.ஹும்.....படிப்பை முடித்து, கல்லூரியை விட்டு பிரிந்து சென்று இருபத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன அவளுக்கு. கால் நூறாண்டுக்கு பின் இப்போதுதான் மீண்டும் கல்லூரிக்குள் காலடி வைக்கப் போகின்றாள். சகமாணவர்கள் செய்த முயற்சியில், இன்று அனைவரும் “வெள்ளி விழா” கொண்டாடப் போகின்றார்கள்.

கல்லூரி வாழ்க்கையை நினைக்கும் போதெல்லாம், நல்ல சந்தோசமான நிகழ்ச்சிகள், அடித்த லூட்டிகள், கேலி, கிண்டல், விளையாட்டு என்றுதான் எப்பேதும் நினைவுக்கு வரும். இப்போதும் அதே நினைவுகள்தாம் அம்பிகாவுக்கு. கல்லூரியின் நுழைவு வாயிலை நெருங்கிவிட்டார்க்ள். நிறைய மாற்றங்கள். அங்கு இருந்த ஆலமரம் பெரிதாக வளர்ந்து விழுதுகளுடன் பரவியிருந்தது. மரத்திலிருந்து கல்லூரிவரை ரோட்டின் இரண்டு பக்கமும் வளர்ந்து கிடந்த முள்புதர்களை வெட்டி சைக்கிள் ஸ்டாண்டு கட்டியிருந்தார்கள். அதன் அருகில் பழய மாணவர்களை வரவேற்று பெரிய பேனரும், வருகை பதிவேடும் இருந்தன. பதிவேட்டில், அம்பிகா, அவள் மற்றும் குடும்பத்தினரின் விபரங்களை பூர்த்தி செய்தாள். பின்னர், கல்லுரியின் நுழைவாயிலை அடைந்தார்கள். வலது பக்கம் இருக்கும் திறந்த வெளியில் பந்தல், அலங்கார மேடை எல்லாம் போடப்பட்டிருந்தது. நுழைவாயிலிருந்து நேராக சென்றால் கல்லூரி முதல்வரின் அலுவலகமும் அதற்கு முன்பு பேர்ட்டிகோ. அதன் அருகிலேயே, எங்கும் பச்சை பசேல் என்று காட்சியாய் பூங்கா. பூங்காவின் கடைசியில் ஒரு புன்னை மரம். இங்கு இருந்து பார்தாலே தெரிகின்றது, புன்னை மரம் நன்றாக வளர்த்திருப்பது. அது அவளை பார்த்து “எப்படி இருக்கிறாய் அம்பிகா?” அன்று கேட்பதை உணர்ந்தாள். அம்பிகாவுக்கு, அவளைப் போலவே, புன்னை மரத்திற்க்கும் வயதகிவிட்டதாய் தோன்றியது. கடைசியாக, கல்லூரியின் கடைசி நாளில், அம்பிகாவும் அவனும் இந்த மரத்தடியில்தான் வெகுநேரம் பேசி கொண்டிருந்தார்கள். அப்போது, அம்பிகா, புன்னை மரத்திடம் சொன்னாள், “திருமணமானவுடன் உன்னை வந்து பார்ப்போம்” என்று. அவனும், ஆமோதிப்பது போல் தலையாட்டினான்.

அவன், அருண், வேதியல் வகுப்பு மாணவன். இவளின் சகமாணவன். அம்பிகா, அருண் இருவர் பெயரும் அகர வரிசையில் அடுத்தடுத்து வருபவை. வேதியல் கூடத்தில் அடுத்தடுத்த இருக்கைகள். அருண், ரொம்ப கலகல டைப். அம்பிகவுக்கு எதிர்மறை. அவன் பத்து நிமிடம் பேசினால், இவள் பத்து வினாடிதான். அதுவும் அவளாய் சென்று அவனிடம் பேசமாட்டாள். ஆனால், எதாவது சந்தேகம் இருந்தால் அவனிடம் கேட்பாள். அவன் மிகவும் இயல்பாய் பழகினான். இரண்டாவது செமஸ்டரில் ஒருநாள், சோதனை கூடத்தில் நடந்த மாதந்திர தேர்வில், “வேதியல் உப்பை” கண்டு பிடிக்க திணறிக்கொண்டிருந்தான். அருகிலிருந்த அம்பிகாவிடம் கேட்டான். இவனைப் பார்த்து முறைத்துவிட்டு, பதில் சொல்லாமல் திரும்பிக் கொண்டாள். பேசுவதை ஆசிரியை பார்த்துவிவார் என்ற பயம் அவளுக்கு. அருணுக்கு வேதியல் உப்பை கண்டும் பிடிக்கமுடியவில்லை, நேரமும் கடந்து விட்டது. சிறிய துண்டு காகிதத்தில் ஏதோ கிறுக்கினான். அம்பிகாவின் அருகில் வைத்துவிட்டு, கூடத்தைவிட்டு வெளியேறினான். பதட்டத்தோடு அந்த காகிதத்தை எடுத்தாள், அதில்

என்ன உப்பு ?
என்றுதானே கேட்டேன்
உன் பார்வையில்
ஏன் இவ்வளவு காரம் ?

என்று எழுதியிருந்தது. அதிலிருந்த அவனின் கோபத்தைவிட, அவளுக்கு அதன் கவிதை வரிகள் பிடித்திருந்தது. அவள் அதை ரசித்தாள். வகுப்பறையில் பார்த்ததும் கண்ணால் “சாரி” சொன்னாள்.

அவ்வப்போது கவிதை எழுதி காண்பிப்பான். அவனுடைய கவிதைகள் அவள் மனதுக்கு பிடித்துபோயின. மெள்ள, மெள்ள அவனையும் தான். நிறைய பேசினார்கள். பேசப் பேச பிணைப்பும் கூடியது. நிறைய நேரம் சேர்ந்தேயிருந்தார்கள். எல்லாம் இந்த புன்னை மரத்தடியில் இருக்கும் பெஞ்சில்தான். காதலும் புன்னை மரத்தோடு சேர்ந்தே வளர்ந்தது. கல்லூரியின் கடைசி நாளில், இனி கடிதத்தில் தொடர்பு வைத்துகொள்ளவும், அவனுக்கு வேலை கிடைத்தவுடன் திருமணம் செய்யவும் முடிவெடுத்தார்கள்.

நாட்கள் நகர்ந்தன. கடிதங்கள் குறுக்கும் நெடுக்குமாய் பரிமறப்பட்டன. இவள் வீட்டில் திருமணத்திற்கான ஏற்ப்பாட்டை ஆரம்பித்து விட்டார்கள். எதாவது காரணம் சொல்லி தட்டிக்கழித்தாள். அவனுக்கும் உடனுக்குடன் தெரியப்படுதினாள். எந்த பதிலும் இல்லை அவனிடமிருந்து. நீண்ட இடைவெளிக்குப் பின் வந்த கடிதத்தை ஆவலாய் பிரித்தாள். வருத்தப்படவா? அழவா? என்று தெரியாத குழப்பம். கடிதத்தில், அவன் தந்தையின் மரணம், குடும்பச்சுமை, மூன்று தங்கைகளின் திருமணம் எனறு பிரச்சனைகளை பட்டியலிட்டிருந்தான். காதலோடு காத்திருப்பதாய் கடிதமிட்டாள். வர வர கடித வரத்தும் குறைந்துவிட்டது.

அன்று பெண்பார்க்கவரும் வரன் குடும்பம் அவர்களுக்கு ஏற்றதும், பையனின் குணமும், வேலையும் ந்ல்லபடி அமைந்துள்ளதாயும் அப்பா சொன்னார். அம்மாவின் சுகவீனமும், வீட்டாரின் நிர்பந்தமும் அவளை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தது. சூழ்நிலைக்காக ஒத்து மணம் முடித்தாலும், காதலின் வலியையும் காயத்தையும் ஆழமாய் உணர்த்தாள். காலம் இட்ட மருந்தில் கொஞ்சம் கொஞ்சமாய் சுகமடைந்தாள். வடுமட்டுமே எஞ்சி நின்றது, நினைவாக. நல்ல கணவனும் பிள்ளைகளும் வாய்க்கப்பெற்றதை வரமாய் நினைத்தாள்.

” ஏய்......நீ, அம்பிகதானே? “ என்ற கேள்வி, இவளை நிகழ்காலத்துக்கு இழுத்துவந்தது.
“ஆமா, நீ .....பிரியா?!”
“எப்படி இருக்கிறாய்? ....இவர்தான், என் வீட்டுக்காரர்.......இவர்கள் இரண்டு பேரும் என் மகன்கள். மூத்தவன்..........”

ஒருவரை ஒருவர் குடும்பத்தை அறிமுகம் செய்துகொண்டனர். கொஞ்ச நேரத்தில், பெரிய கூட்டமே சேர்ந்து விட்டது. ஒரே அரட்டை கச்சேரியும், கலாட்டாவாயுமாய் இருந்தது. சிறிது சிறிதாக குடும்பதினர்களும் அரட்டையில் அங்கதினரானார்கள். அம்பிகாவின் கண்கள் அவ்வப்போது தேடின. அருண் வருவதாய்த்தான் சொன்னார்கள். கண்கள் மட்டும் இன்றி மனமும் தேடியது. அவனும் கல்யாணத்திற்க்கு பின் பெங்களுரில் இருப்பதாய், பல வருடங்களுக்கு முன்பு தோழி ஒருத்தி சொன்னது நினைவுக்கு வந்தது. பார்த்தால் என்ன நினைப்பான்?. என்ன பேச அவனிடம் ? கும்பத்தோடு வருவானா? அவன் குடும்பத்தில் எத்தனை பேர்? ......அடுக்கடுக்காய் கேள்விகள். தோழிகள், கல்லூரியின் கடைசி நாளிலிருந்து, கல்யாணம், கணவன், பிள்ளைகள் என்று கடந்த காலம் முதல் நிகழ்காலம் வரை ஒன்றுவிடாமல் நிகழ்ச்சி நிரல் போட்டு அளவாளாவினார்கள்.

அவன்தான் வந்துகொண்டிருந்தான். உடன் அவனது மனைவி மற்றும் மகள். அருகில் வந்ததும் எல்லோருக்கும் ”ஹாய்” சொன்னான். இவளுக்கும்தான். இருபத்தி ஐந்து ஆண்டகளுக்கு பிறகு அப்போதுதான் சந்திகிக்கின்றார்கள். ஒருவித பட படப்பு இவளுக்கு. இயல்பாய் இருக்க முயன்று தோற்றாள். அவனுக்கு காதோரம் முடிகள் நரைத்திருந்தன. சட்டை பாக்கெட்டில் கண்ணாடி இருந்தது. சோர்வாய் இருந்தான். பிரயாணக் களைப்பாக இருக்கலாம். அவன் மனைவியையும் மகளையும் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான். அருண், சொன்னான், தன் மனைவிக்கு உடம்பு சரியில்லை என்று. ஆனாலும், அருணின் மனைவி நன்கு கல கலப்பாக எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்தாள்.

கல்லூரி நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. யார் யாரோ பேசினார்கள். இவளுக்கு எதுவுமே காதிலும் விழவில்லை, மனதில் பதியவுமில்லை. அவனைப் பார்த்ததிலிருந்து மனம் இறுக்கமாயும், இதயம் கனமாயும் உணர்ந்தாள்.அவனோடு பேசினால் நன்றாக இருக்கும் போல் தோன்றியது. ஒரு வழியாக நிகழ்ச்சிகள் முடித்தன. தேனீர் இடைவேளைக்கு பின், பழைய மாணவர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்குமான கிரிக்கெட் போட்டி தொடங்குவதாய் அறிவிக்கப்பட்டது. அம்பிகாவின் கணவரும், மகன்களும் கிரிக்கெட் விளையாடச் சென்றுவிட்டார்கள். தனியாக இருந்தாள். வாழ்க்கையின் கடந்த காலநிகழ்ச்சிகள்தான் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அருண் அவளை நோக்கி வந்துகொண்டிருந்தான். அங்கு இருந்த சேரில் அமர்ந்தான். மனைவிக்கு தலைவலி என்று காரில் ஓய்வெடுக்க மகளுடன் சென்றுவிட்டதாய் சொன்னான்.

இவளிடம், “எப்படி இருக்கிறது வாழ்க்கை?” என்றான். இவளுக்கு, பதில் சொல்ல முடியவில்லை. அவனும் பதிலை எதிர்பார்க்கவில்லை. ”வா காலேஜை சுற்றிப்பார்கலாம்” என்று அழைத்தான். பதிலே சொல்லாமல் உடன் சென்றாள். மௌனமாய் பேசிகொண்டே நடத்தார்கள். அவர்களின் கால்கள், இருவரையும் பூங்காவின் புன்னை மரத்தை நோக்கியே இழுத்து சென்றது. பழகியதின் நினைவுகள். பழய நினைவுகள் இருவருக்கும்.

மௌனதின் சத்தமே ஓங்கி ஒலித்தது. “ கவிதையெல்லாம் எழுதுகின்றாயா?” என்று அவள் தான் ஆரம்பித்தாள். அவன் சொன்னான்,

நடைமுறை வாழ்கையே
உரைநடையான பின்
கவிதையெல்லாம்
கனவாகிப் போய்விடும்

“அருமையான கவிதை. இன்னும் உன்னுள் அதே கவிஞன் உயிரோடு இருக்கிறான்” என்றாள்.

“ஆம், கவிஞன் இருந்து, காதல் செத்து என்ன பயன்?” இது அவன் பதில்.

மீண்டும் மௌனம், அவர்களிடையே. இப்போது மௌனம் பேசவில்லை, மௌனித்தது. புன்னை மரத்தை வந்தடைந்தார்கள். இருவரும், மரத்தையே பார்த்துகொண்டிருந்தார்கள். புன்னையும் இவர்களை பார்ப்பதாய் உணர்ந்தார்கள். அவனயும் அறியாமல் புன்னை மரத்தை தொட்டு வருட்டினான்.

”காதலை இங்குதானே
விதைத்து
நம் இதயத்தில் அல்லவா
புதைத்தோம்
ஒரு மரணத்திற்க்கு
இரண்டு கல்லரைகளா?”

என்று சொல்லி அவளை நோக்கினான். அவள் கண்கள் குளமாகியிருந்தன. இவனுக்கும் கண்கள் கலங்கின. முகத்தை மரத்தின் பக்கம் திருப்பிக்கொண்டான். புன்னையும் ஆயிரம் கண்களுடன் அழுதுகொண்டிருந்தது.

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

அன்னா ஹசாரேவும் ஆதித்யா டி.வியும்

பொதுவாக தினத்தந்தி போன்ற தமிழ் தினசரிகளில்,’ சிரிப்பு’க்கு என்று ஒரு சிறிய இடம் இருக்கும். ஆனால் ஆங்கில தினசரிகளிலோ பக்கம் பக்கமாய் ’சிரிப்பு’தான். அவை வெளியிடும் அன்னா ஹசாரேவின் செய்திகளை படித்தால் பக்கத்திற்க்கு பக்கம் ’சிரிப்பு’தான். அதுவும் தினமும் தொடராய் படித்தால் ஒரு நல்ல பொழுது போக்குதான்.

அவர்கள் சீரியசாய் உண்ணாவிரதம் இருப்பது என்ன ஜோக்கா?னு நினைக்கலாம். அதை அவர்களின் அறிக்கையிலிருந்தே அறிந்து கொள்ளலாம். முதலில், சூப்பர் ஸ்டார் அன்னா ஹசாரே பற்றி பார்ப்போம். எங்களுடைய உண்ணவிரத கோரிக்கைகளை (அதாவது 22 கண்டிசன்கள்) அரசு ஏற்கும்வரை போராட்டம் தொடரும் என்றார். கப்புனு தூக்கி திகாரில் (நியூசென்ஸ் கேசில்) போட்டவுடன், அரசு சொன்ன ‘எத்தனை நாட்கள், எந்த இடம்....’ என்ற கண்டிசன்களுடன் உண்ணவிரதம் ஆரம்பம். 15 நாட்களுக்கான அனுமதி வாங்கி கொண்டு, மேடையில் உட்கார்ந்தவுடன் விட்ட முதல் முழக்கமே ‘சாகும் வரை உண்ணவிரதம்’. சிரிப்பு வந்தால் சிரித்துவிடுங்கள். இதற்கு இடையில் ’அன்னா ஹசாரே ஜெயிலைவிட்டு வர மறுப்புனு...’ டிராமாக்குள் ஒரு குட்டி டிராமாவேற.


எனக்கு பின்பும் இந்த போராட்டத்தை இளைஞர்கள் எடுத்து செல்ல வேண்டும். (அதாவது அவர் ஊழலுக்கு எதிராய் இப்போது இருக்கும் உண்ணாதவிரதத்தில் உயிர் விட்டுவிடுவாராம்). ஆனால் அன்னா ஹசாரே குழுவிலுள்ள அர்விந்த் கெஜ்ரிவால் என்னாடாவென்றால், ‘அன்னா ஹசாரே சாகும்வரை உண்ணாதவிரதம்’ என்று எங்குமே எப்போதுமே சொன்னதில்லைனு ஜோக் அடிக்கின்றார்.


எங்களுடன் பேச வேண்டும் என, அரசு தரப்பு விரும்பினால், பிரதமர் மன்மோகன் சிங் அல்லது ராகுல் உள்ளிட்டோர் தான், பேச்சு நடத்த வர வேண்டும்' என, மத்திய அரசுக்கு, அன்னா ஹசாரே குழு, கெடு விதித்துள்ளது.

இதை படிக்கும் பொது, வடிவேலு ஜோக்தான் ஞாபகத்திற்க்கு வருகின்றது. வடிவேலுவின் குழு, ஒரு பையனை செடப் செய்து, வரும் வாகனங்களில் குறுக்கே விழச்செய்து காசு பறிப்பதுதான் திட்டம். அப்போது பைக்கில் வரும் நகைவியபாரியின் பைக்கில் விழ முயற்சி சொய்வார்கள். அப்போது நடக்கும் உரையாடலில், வடிவேல், வியபாரியிடம் பையில் எவ்வளவு பணம் இருக்கின்றது என்று கேட்பார். அதற்கு, வியபாரி, ’10000 ரூபாய்’ என்பார். உடனே, வடிவேலுடன் இருப்பவர் சொல்லுவார், ‘அண்ணே அது பத்தாதுணே”. இதை கேட்ட வியபாரி, ‘நான் எங்கடா கொடுப்பேன்னு சென்னேன்’பார். திருட்டு தொழிலில் அது ஒருவிதமான டெக்னிக். அது மாதிரி, அன்னா ஹசாரேவுடன் போச்சுவார்த்தைக்கு நிறைய பேர் வரிசைகட்டி நின்றதுமாதிரி, அதில் மன்மோகன் சிங்கையும் ராகுலை மட்டுமே அனுமதித்த மாதிரி இருக்கின்றதை படிக்கும் போது உங்களுக்கும் வடிவேல் ஜோக்தானே ஞாபகத்திற்க்கு வருகின்றது.


ஹசாரே குழுவிலுள்ள மற்றுமொருவர் கிரண் பேடி. இவர்தான் இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என்ற (சோப்பு விளம்பரத்தில் நடித்த முதல் ஐ.பி.எஸ் அதிகாரி என்ற) பெருமையுடையவர். இவர் 35 ஆண்டுகள் போலீஸ் அதிகாரியாக பணியாறியவர். இவர் இப்போது, ‘போலீஸ் படை அரசியல்வாதிகளின் கைக்குள் இருக்கின்றது. அரசியல்வாதிகள் சொல்லுவதைதான் போலீஸ் கேட்கின்றார்கள்’னு அறிக்கை விடுகின்றார். இவர் பணியற்றிய போது போலீஸ் படை என்ன அரசியல்வாதிகளின் கைக்குள் இல்லாமல், டெல்லியில் பானிபூரி விற்பவரின் சட்டை பாக்கெட்டிலா இருந்தது. அது போகட்டும், அடுத்து சொல்லுவதை பார்ப்போம் – ‘அரசியல்வாதிகள் சொல்லுவதைதான் போலீஸ் கேட்கின்றார்கள்’. இவர் சர்வீசில் இருக்கும் போது யார் செல்லுவதை கேட்டார்? அரசியல்வாதியல்லாமல், பக்கத்துவீட்டு சொர்ணாக்கா சொல்லியதையா கேட்டார்?.

இப்படி அன்னா ஹசாரே குழுவிலுள்ளவர்கள் ஆளாளுக்கு ‘ஜோக்கடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இதுநாள்வரை, ரிலாக்ஸ் பண்ணவேண்டுமென்றால், ஆதித்யா டி.வியை பார்ப்பேன். காமெடி சீன்களை கொஞ்ச நேரம் பார்த்தாலே போதும். ஆனால் இப்போதெல்லாம், அன்னா ஹசாரே பற்றிய செய்தியை படித்தாலே மனது, உடம்பு, எல்லாமே ரிலாக்ஸ் ஆகிவிடுகின்றது.

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

சுதந்திரம்

வேண்டும் வேண்டும்
மீண்டும்
ஒர் சுதந்திரம்

சின்ன திரை
சிறையில் இருப்போருக்கு
வேண்டும் ஒர் சுதந்திரம்

நடிகனின் படத்திற்கு
பாலாபிஷேகம் பண்ணும்
பதினெட்டு வயது பாலகனுக்கு
வேண்டும் ஒர் சுதந்திரம்

பள்ளிகூட சுவரின்
கில்லி பட சுவரொட்யிலிருந்து
வேண்டும் ஒர் சுதந்திரம்

திரையரங்கு ஓடி
திரவியம் விரையத்திலிருந்து
வேண்டும் ஒர் சுதந்திரம்

அசின் தெரிந்த
ஒளவையார் தெரியாத
அறியாமையில் இருந்து
வேண்டும் ஒர் சுதந்திரம்

வேண்டும் வேண்டும்
மீண்டும்
ஒர் சுதந்திரம்

புதன், 20 ஜூலை, 2011

பம்பாய் முதல் மும்பாய் வரை

வருடா வருடம் வருடபிறப்பு
தவறாமல் ஊரில் குண்டு வெடிப்பு
வன்முறையே வாழ்கை
முறையானதா?

வேலைக்கு சென்ற அப்பா
வீடு திருபம்பாவிட்டால்
பிள்ளைக்கு தெரியும்
அப்பா வெடிகுண்டுக்கு பலி என்று

தெருவில் இரைந்து கிடந்தார்கள்
இரைந்து கிடந்த எல்லோரும்
இறத்து கிடந்தார்கள்

அடித்து நொறுக்கி
தரைமட்டமானது தர்க்கா
வீழ்ந்தது என்னவோ
மனித நேயம்தான்

இடித்த கடப்பாரைகளுக்கும்
வெடித்த குண்டுகளுக்கும்
எங்கே இதயம் இருக்கின்றது

ரதயாத்திரையின் தடத்தில்
ரத்த யாத்திரைதான்
ஆறுதல் சொன்ன
அரசியல் தலைவர்கள்
மும்பய் கோவை என
தீவிரவாதத்தை
தேசியவாதமாகிவிட்டார்கள்

உயிரற்ற உடல்கள் எல்லாம்
உடைத்து நொறுக்கப்பட
பாப்ரி மசூதியின் செங்கற்களா?

புதன், 29 ஜூன், 2011

ஆயிரத்தில் ஒருவன் (எம்.ஜி.ஆர்)

தலைப்பு ’எம்.ஜி.யாரின் ஆயிரத்தில் ஒருவனும் எனக்கு விழுந்த அடியும்’ என்றுதான் இருக்க வேண்டும். எனக்கு விழுந்த அடி.......இப்போ இல்லை, முப்பது வருடங்களுக்கு முன்பு. நான் எந்த தகராருக்கும் போகவில்லை, யாரும் என்னுடன் தகராரும் செய்யவில்லை. அப்படியிருந்தும் எனக்கு அடி விழுந்தது. ரவுண்டு கட்டி அடித்தார்கள். இரவு 1 மணிக்கு. என்னுடன் வந்தவர்கள்தான் அடித்தார்கள். அடுத்த நாளும் விளக்கம் கேட்டு அடித்தார்கள். நான் சொன்ன விளக்கமும் விளங்கவில்லை அவர்களுக்கு. நான் எழுத வந்தது, எனக்கு விழுந்த அடியை பற்றியல்ல. அடித்தவர்கள் இன்னும் விளங்கிக் கொள்ளாமால் இருப்பதை பற்றியே.


நாங்க மொத்தம் எழு பேர். பாண்டியனும், பிரபுவும் மட்டும் வரிசையில் நின்றார்கள். மற்றவர்கள் எல்லாம் கொஞ்சம் தள்ளி நின்றோம். கூடத்தில் முண்டியடித்து டிக்கட் கவுண்டரை அடைந்து வெற்றிகரமாய் டிக்கட்டுடன் வந்தார்கள். நாங்கள் தங்கியிருந்த ஹாஸ்டலிருந்து, இரவு பத்து மணி ஷோவுக்காக மதுரை அரசரடியிலிருக்கும் வெள்ளைக்கண்ணு தியேட்டருக்கு வந்திருந்தோம். எங்கள் கல்லூரியில் படித்துக் கெண்டிருந்த சீனியர் உதயன் செலவில்தான் எல்லேருக்கும் டிக்கெட். அவர்தான் பார்ட்டி கொடுத்தார். சிவகாசியில் நல்ல வசதியான குடும்பம் அவர்களுடையது. பார்ட்டிக்கு காரணம், அவரின் இன்றய சாதனை. அப்படி என்ன சாதனை? அது. அவர், ’ஆயிரத்தில் ஒருவன்’ திரைபடத்தை 25 முறையாக இன்று பார்க்கபோவதுதான். அவர் இதற்க்கு முன்பு 24 முறையும் யாருடனாவது சேர்ந்துதான் சென்றுதான் படம் பார்த்தார். உடன் வருபவர்களும் படத்தை பலமுறை பார்த்திருந்தாலும் மீண்டும் பார்ப்பார்கள். ஆனால் நான் ஒருவந்தான் முதல்முறையாக இந்த படத்தை பார்க்க வந்திருந்தேன். தியேட்டரில் எம்.ஜி.ஆர் திரையில் தோன்றும் போதெல்லாம் விசில் சத்தம்தான். இடைவேளையில் ஆளுக்கு ஒரு டீ குடித்தோம். அதுவும் சீனியர் உதயனின் உபயம்தான்.

படமும் விசிலும் தொடர்ந்தன. நேரம் ஆக ஆக எனக்கு தூக்கம் கண்ணை சுழட்டியது. எம்.ஜி.ஆரின் தனி பாணியான விரலை முக்கில் வைத்து சுண்டிவிட்டு பேசும் வசனத்திலுள்ள சாகாசமும், வில்லனிடம் வாயின் ஒரத்தில் ரத்தம் வரும்வரை அடிவாங்கி, ரத்ததை கை கொண்டு தொட்டு பார்த்தபின் வில்லனையும் அவனின் ஆட்களையும் போட்டு துவைக்கும் வீராவேசமும் என்னை கவரவில்லை. அதற்காக அவைகள் மோசம் என்றோ தரம் குறைந்தது என்றோ நான் நினைத்ததேயில்லை. என்னை பொறுத்தமட்டில், சினிமாவில் நடிகர் சந்திரபாபு செய்யும் செயல்களை ரசிக்க முடிந்தது. ஆனல் எம்.ஜி.ஆர் மூக்கில் கைவைத்தவுடன் தியேட்டர் முழுவதும் அதிரும்படியான கைதட்டில், அவர் என்ன வசனம் பேசுகின்றார் என்பதே கேட்காது. நானோ தூக்கம் தாங்கமுடியாமல் தூங்கிவிட்டேன். படம் முடிந்தபின் தூங்கிகொண்டிருந்த என்னை எழுப்பினார்கள் நண்பர்கள். தியேட்டரைவிட்டு வெளியேவந்ததும், என்னிடம் ‘ஏண்டா படம் பார்காமல் துங்கினாய்?’ என்றார்கள். காரணம் சொன்னேன். ‘அது எப்படிடா, எம்.ஜி.ஆர் படத்தில் தூங்கலாம்?’ என்று கேட்டு அடித்தார்கள். சொன்ன விளக்கத்தை யாரும் கேட்கவில்லை. நான் எந்த தகராருக்கும் போகவில்லை, யாரும் என்னுடன் தகராரும் செய்யவில்லை. ஆனால் அடி வாங்கினேன்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஹாஸ்டலில் சின்ன பஞ்சாயத்து நடந்தது. நண்பர்கள் எல்லேரும் தலைவராயிருந்து, சினிமா பார்காமல் தியேட்டரில் தூங்கியது தப்பு என்று தீர்ப்பு சொன்னார்கள். ஆனால் பழனி மட்டும்தான் சொன்னார், ‘ஏம்பா, இவன் படிக்கும் தாமரை, தீக்கதிர், வோட்காவிலிருந்து கங்கைவரை புத்தகங்களை கையிலெடுத்தா, நமக்கு தூக்கம் வரும்ல. அதுமாதி..... தியேட்டரில் இவன் தூங்கிட்டான்....... விடுங்கடா”

மேலே நடந்த சம்பவத்தை எதற்க்கு சொன்னோனென்றால், நான் கால்லூரியில் படித்த காலத்தில் பெருவாரியான இளஞர்கள், சினிமாவை பொழுது போக்கு சமாச்சாரமாய் மட்டும் எடுத்துக் கொள்ளவில்லை. தங்களின் வாழ்வையே சினிமாவும் கலந்ததாய் ஆக்கிக் கொண்டார்கள். அவர்களின் வாழ்வு இன்றுவரையும் அப்படித்தான். ஒரு பொழுது போக்கானாலும், சந்திப்பானாலும், இணைய குழுவானாலும் சினிமாவை தாண்டி இருக்க முடியவில்லை. அவர்களின் வாழ்கையில் நடந்த சுவாரசியமான விடயங்களையும், நல்ல-கெட்ட நிகழ்வுகளையும் சினிமாவை இணைத்தே மனதில் பதித்து வைத்திருக்கின்றார்கள். உதாரணமாக, ‘ரேஜா படம் ரிலீசாகி முணு மாசம் இருக்கும் போதுதான் என் மூத்த மகள் பிறந்தாள்’, ’கல்யாணமாகி முதல் முதலாய் ’ஊமைவிழிகள்’ படத்துக்குதான் சென்றோம்’. கல்யாணமாகி ஒரு பெண்ணுடன் வாழ ஆரம்பிக்கும் போதும் ஒவ்வொரு நிகழ்வையும் இணைத்து பார்க்க சினிமாவைதான் ஞாபகத்தின் அடையாளக் குறியீடாக வைத்துக் கொள்ளுகின்றார்கள். சரியாக சொன்னால், சினிமா இல்லாமல் பத்து நிமிடம்கூட போசவோ அல்லது இணைய குழுவுக்கு ஒரு ஈ மெயில் அனுப்பவோ முடியவில்லை. சினிமாவற்ற வாழ்வு வாழமுடியவில்லை.

இணைய குழுவில் இவர்களின் கருத்துப்பரிமாற்றங்களில் சில................

ஒருவர், ஐ.இ.எஸ் (I.E.S) அதிகாரி. மத்திய அரசாங்கத்தின் மிக பெரிய நிர்வனத்தில் துணை தலைமை பொறியாளர் (Deputy Chief Engineer). தமிழ் படம் வெளியான தினத்திலோ அல்லது இரண்டொரு நட்களிலோ ‘இந்த படம் பார்த்தேன்’ என்றும் அதற்கான ஒரு வரி விமர்சனமும் தாங்கிய மின் அஞ்சல் இருக்கும். இன்றும், அலுவலக வேலைக்கு நடுவில் எப்படி முதல் நாளே படத்திற்க்கு செல்ல முடிகின்றது? என்பதே என் கேள்வி.

இன்னொருவர், அமெரிக்காவில் இண்டெல் (Intel) கம்பெனியின் தொழில்நுட்ப பிரிவில் உயர் பதவியில் உள்ளவர். இணைய குழுவில் அவர் செய்தியோ, வாழ்த்தோ அனுப்பினால் யூ டுப் (You Tube) லிருந்து தரவிறக்கம் செய்யப்பட்ட சினிமா பாடலாக மட்டுமே இருக்கும். அவர் வேலை செய்யும் சூழலில் இருக்கும் சுவராசியமான நிகழ்வுகள், சந்தித்தவைகள், சாதித்தவைகள்...என்று எதுவுமே இருக்காது. சினிமா பாடலாய்த்தான் தன் இருப்பை உணர்த்த முடிகின்றது அவருக்கு.

நான் ஒருநாள் அவசரமாய் ஒரு செய்தி சொல்ல, எங்களுடன் படித்த நண்பனுக்கு அலை பேசியில் அழைக்க வேண்டியதாய் இருந்தது. செய்தி எங்கள் குழு சம்பந்தபட்டதாயிருந்தது. இதற்க்குகாக அலுவலக நேரத்தில் அழைத்து பேசவா? என்று யேசித்து, செய்தியின் முக்கியத்துவதத்தை கருதி அழைத்தேன். அப்போது, அவர் இருந்ததோ, சினிமா தியேட்டரில். உடன் வேலைபார்க்கும் இரண்டுபேரோடு வந்திருப்பதாய் சொன்னார். அவர் வேலை பார்ப்பது சென்னை மாநாரட்சியில்!

மற்றும் ஒருவர் வெளிநாட்டில் 20 ஆண்டுகளுக்கு மேல் வாழ்கின்றார். அவரின் தினப்படி வேலைகளில் ஒன்று, ஏதாவது ஒரு தமிழ் படம் பார்ப்பது. அவர் இந்தியா வ்ரும் ஒவ்வோரு முறையும் சினிமா சி.டி, கேசட் வாங்கி செல்வதும், அதுபோக தழில் சினிமாவுக்கான இணையதளத்தில் சந்தா சேர்ந்து புதிய படங்களை பார்ப்பதாயும் சொன்னான்.

இது போக, என்னை ’ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்க்கு கூட்டிசென்ற உதயன் சாரை சில வருடங்களுக்கு முன்பு பார்த்தேன். சும்மா, கிண்டலுக்காதான் கேட்டேன் அவரிடம்,

‘என்ன சார் ’ஆயிரத்தில் ஒருவன்’ இப்ப சிவகாசி தியேட்டரில் போட்டாலும் பார்க்கின்றீகளா?’

தியேட்டருக்கு போயே ரொம்ப நாளாகின்றது. அதான் எல்லா பட்மும் சி.டியில் வைத்திருக்கின்றேனே. வீட்டு செட்டில் தினமும் எதாவது படம் ஓடும்.”

” அப்ப ஆயிரத்தில் ஒருவன், 50ஐ தாண்டியிருக்குமா?’

’50தா?, அது 100க்கு மேலே போயிருக்கும். எண்ணுவதை விட்டே நொம்ப நாளாச்சி”

“!!!!???”


பலர் தத்தம் துறைகளில் வல்லுனர்களாகவும், உயர் பதவியிலும் இருக்கின்றார்கள். பலர் நிதிநிலைமையில், பண வசதியிலும் உயரத்தை எட்டியிருக்கின்றார்கள். ஆனால் ஒவ்வொருவருக்கும் துறைசார்பற்ற நீழ்ச்சியும் வெளிப்பாடும் (exposure) சினிமாவரைதான். புத்தகம் வாசிப்பு – அது புனைவு (fiction) அல்லது அபுனைவு (non fiction), பயணம், இசை நிகழ்ச்சி,.......என்று ஏதுமற்று இருக்கின்றார்கள். சினிமா ஒரு பொழுது போக்கு என்பதைவிட, தினப்பொழுதும் சினிமாவுக்கே எனறாகி போகிவிட்டது. சினிமாவுடன் கட்டுண்ட வாழ்வுதான் வாழ்கின்றது ஒரு தலைமுறையே.

சினிமாதாண்டிய உலகத்தை இழந்து நிற்கின்றார்களா? அல்லது பதின்பருவத்தில் பொழுதுபோக்கிற்க்கான வடிகாலாயிருந்த சினிமாவுடன் நின்றுவிட்டவர்களா, இவர்கள்?

வியாழன், 23 ஜூன், 2011

காய்கறியும் கருவாடும்

இன்று ஸ்பீடு போஸ்ட் (Speed Post) அனுப்ப கே.கே. நகர் தபால் அலுவலகத்திற்க்கு சென்றேன். காலையில் சீக்கிரமே சொன்றேன். எப்போதும் காலையில் அவ்வளவு கூட்டம் இருக்காது. ஆனால் இன்று கூட்டமாயிருந்தது. சென்றிருந்த இரண்டு சக்கர வாகனத்தை ஒரமாய் நிறுத்திவிட்டு, கையிலிருந்த தபாலில் அனுப்ப வேண்டிய கவரை எடுத்து கொண்டு தபால் அலுவலகத்திற்க்குள் நுழைந்தேன். நான் முதலில் பார்த்தது, எங்கள் ஏரியா போஸ்ட்மேன் பாக்கியநாதனைத்தான். அவரை பார்தவுடன் எனக்கு அதிர்ச்சி. எப்போதும் யூனிபார்மில் பார்த்து பழக்கப்பட்ட எனக்கு, அவரை, அந்த நிலைமையில் நான் எதிர்பார்கவில்லை. அப்போதுதான், கூட்டத்திற்க்கான காரணமும் விளங்கியது. போஸ்ட்மேன் பாக்கியநாதன் லுங்கி பனியன் அணிந்து, அவர் முன்னால் கூடை கூடையாக குவிந்து கிடந்த காய்கறிகளை கூவி கூவி விற்றுக் கொண்டிருந்தார். அதிர்ச்சியில் நான் அப்படியே அவரை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்தான் என்னை பார்த்து,
‘என்ன சார் காலையிலே?’னு கேட்டார்.

நான் சுயநினைவு வந்தவனாய், ‘ஸ்பீடு போஸ்ட் அனுப்ப வந்தேன்’னு சொன்னேன்.

கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு, ‘என்ன பாக்கியநாதன் சார், நீ..ங்..க..ள்...?’.

‘என்ன சார் , காய்கறி வியாபாரமா?. இது புது ஸ்கீம் சார். போன வாரம்தான் போ
ஸ்ட் மாஸ்டர் ஜெனரல் துவங்கிவைத்தார். ஒரு வாரத்தில் நல்லா பிக்கப் ஆகி விட்டது. சொல்லப் போனால் அண்ணா நகர் போஸ்ட் ஆபிஸைவிட நாங்கள்தான் காய்கறி வியபாரத்தில் டாப். அவர்கள், இன்னமும், ஸ்டாம்பும், இன்லேண்டும்தான் விற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.’

‘....?’

’இன்னும் கொஞ்ச நேரத்தில் போஸ்ட் ஆபிஸ் வேன் வரும். பிரஷ் காய்கறி வந்தவுடன் கூட்
டம் சமாளிக்க முடியாது.’

‘சரி சார். போஸ்டல் டெலிவரியொல்லாம்.......’

‘நான் பத்து மணிக்கு வியாபாரத்தை ராமநாதனிடம் பார்க்க சொல்லிவிட்டு, டெலிவரிக்கு யூனிபார்மில் போய்விடுவேன்’

‘சரி சார். நான் ஸ்பீடு போஸ்ட் அனுப்பிவிட்டு கிளம்புகின்றேன்’ னு கவுண்டரை நோக்கி நகர்ந்தோன்.

அங்கு இருக்கும் மேடத்தை காணவில்லை. சீட் காலியாக இருந்தது. நான் திரும்பவும் பாக்கியநாதனிடம் வந்து கேட்டேன். அதற்க்கு அவர் பதில் சொல்லாமல், எதிர் திசையில் கையை காண்பித்தார். அங்கே, அந்த மேடம், கருவாடு வியபா
ரத்தில் இருந்தார்கள். வியபாரம் ரொம்ப டல் போல, கருவாட்டு மேலே இருந்த ஈக்களை விரட்டிக் கொண்டிருந்தார்கள். அவர் இருக்கும் இடத்திற்க்கு சென்றேன். என்னை பார்த்து, கருவாடு வாங்க வந்த கஸ்டமர்னு நினைத்து, ‘சார் நெத்திலி நல்லாயிருக்கு சார்’னு கையில எடுத்து காண்பித்தார்கள். அதற்க்கு நான்,

‘மேடம், ஸ்பீடு போஸ்ட் அனுப்பணும், நீங்கதான் பாத்துகிறீங்களா?”

‘ஆமா...ஆமா. கவுண்டரில் யாருமே இல்லைனு. கருவாட்டுக்கு வந்தேன்“ னு உடனே எழுந்து வந்தார்கள்.

கவருடன் காசையும் கொடுத்தேன். எனக்கு ஒரு சந்தேகம். நான் அனுப்பும் தபால், என்னுடைய நண்பனுக்கு. அவன் சேலத்தில் இருக்கின்றான். சுத்த சைவம். இந்த கருவாட்டு வாடை, கவருடன் சேலம்வரை சென்றால், அவன் பாடு திண்டாடம்தான்.................................

ஹா....ஹா......னு அடக்க முடியாமல் வாய்விட்டு சத்தாமாய் சிரித்ததை கேட்டு சமையலறையிலிருந்து என் மனைவி ஹாலுக்கு வந்து,காலை பேப்பர் படித்துக் கொண்டிருந்த எனக்கு
என்ன ஆகிவிட்டது என்று கேட்டார்கள்.

அதற்கு, நான் கற்பனையில் நினைத்த மேல் சொன்ன சம்பவத்தை சொன்னேன்.

‘போஸ்ட்டாபீசுக்கும் காய்கறிக்கும் என்ன சம்பந்தம்?’

“இந்தா பேப்பரை படி. போஸ்ட் மாஸ்ட் ஜெனரல், போஸ்ட் ஆபிஸில் வாட்ச் வியபாரத்தை துவக்கி வைத்தாராம். இதற்க்கு முன்பு, தங்கம் விற்பனையை ஆரம்பித்தார்கள். அதற்கு முன்பு ஷேர் மார்கட் அப்பிளிகேஷன், இன்சூரன்ஸ், VIT நுழைவு தேர்வு விண்ணப்பம்....இப்படி பல...பல. இது இப்படியே போனால் என்னவாகும்னு நினைத்தேன். சிரிப்பாக வந்தது.”

’அவங்களுந்தான் எ
ன்ன பண்ணுவார்கள்?. ஈ மெயில், கூரியர்னு வந்தபின், எதாவது செஞ்சாதானே பிழைக்க முடியும்.”

‘ ‘
‘நாளையிலிருந்து காலையில் வாக்கிங் போயிட்டு வரும் போது, அப்படியே, போஸ்ட்டாபிசில் காய்கறியும் வாங்கி வந்திடுங்கள்.”

“!!!!!! ?????”





[போஸ்ட் ஆபிசில்.........வாடாத பச்சை காய்கறியும், காய்ந்த கருவாடும்....
நடந்தாலும் நடக்கும்.......











போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் திரு. ராமனுஜமும், HMT அதிகாரிகளும்.

( படமும், செய்தியும் - நன்றி: த ஹிந்து நாளித
ழ்
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2127615.ece) ]



திங்கள், 30 மே, 2011

இடையபொட்டல்

ஸ்ரீவில்லிபுத்தூர் இடையபொட்டலை நோக்கி எங்க தெருவிலிருந்த பசங்க எல்லோரும் சென்று கொண்டிருந்தோம். எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. முழுஆண்டு தேர்வுக்கு பின் வரும் கோடை விடுமுறைதான், ஆனால் ஆறாம் வகுப்பா அல்லது ஏழாம் வகுப்பு ஆண்டு தேர்வான்னு ஞாபகம் இல்லை. அப்படி ஒரு விடுமுறையில்தான், என் பள்ளி தோழன் சீனா சொன்ன செய்தியை கேட்டு தெரு பசங்க எல்லோரும் ஹைப்பர் டென்சன் ஆகிவிட்டோம். அதனால் தான் இடையபொட்டலுக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தோம். ‘சீனா’, அவனுடைய பெயர் இல்லை, அது ஒரு வழிச்சொல். ஆமா சீனாவுக்கு சீனானு பெயர் எப்படி வந்ததுனு தெரியுமா? அவன் பெயர் நாராயணன் - சி. நாராயணன். (அவன் அப்பா பெயர் சிவபிரகாசம்). ‘சி’யும் ‘நா’ வையும் சேர்த்து ‘சிநா’னு கூப்பிட ஆரம்பித்து அதுவே சீனாவகிவிட்டது. அவன் வீடு ஆர்.சி சர்ச்க்கு பக்கதிலிருக்கும் கீழப்பட்டி தெருவில் இருந்தது. அங்கிருந்து எங்க தெருவிற்கு விளையாடவருவான். எங்க தெருவிலும் ஒரு நாராயணன் இருந்தான் – ஜெ. நாராயணன். அவனை ‘ஜெனா’னுதான் கூப்பிடுவோம்.

எங்கோ இடையபொட்டலில் ஆரம்பித்து சீனா, ஜெனாவிற்க்கு வந்து விட்டது கதை. அப்படி இடையபொட்டல்ல என்னதான் இருந்தது? சரி, அதற்கு முன்பு ஒரு கேள்வி, இடையபொட்டல் எங்க இருக்குனு தெரியுமா?. தெரியாதுனா சொல்றேன். சி.எம்.எஸ் பள்ளிக்கூடம் புது பில்டிங்கிலிருந்து லெப்ட் திரும்பி ஊரணி வழியாக தைக்கப்பட்டிக்கு வரும்போது கீரை தோட்டத்திற்க்கு முன்னால் இருக்கும் திறந்த சிறுமைதானம்தான் இடையபொட்டல். மேற்கு பக்கமாயிருந்த கீரை தோட்டத்தில்தான் ஜெயகிருஷ்ணா தியேட்டர் கட்டியிருக்கின்றார்கள். இடையபொட்டலில்தான் நாடக கம்பெனிகள் கொட்டகை போட்டு சில மாதங்கள் நாடகம் நடத்துவார்கள். நாங்கள் இடையபொட்டலை சென்றடைந்து, அங்கு கிடந்த கம்பு, கலர் துணிகள் (ஷாமியானா துணிகள்), கம்பிகளை பார்த்தவுடன் சீனா சொன்னது உண்மைதான் என்று புரிந்தது. ஆம், எங்கள் ஊருக்கு சர்க்கஸ் வரப்போகின்றது. அன்றிலிருந்து, தினமும் இரண்டு மூன்றுதடவையாவது அங்கு வந்து சர்க்கஸ் வேலையின் முன்னேற்றம் பற்றி தெரிந்து கொள்ளுவோம் !!. ஒருவாரத்தில் சர்க்கஸ் கூடாரம் ரெடியாகி பெயர் பலகையும் நட்டுவிட்டார்கள் – “சின்னமனூர் சர்க்கஸ்” . அதன் பின்பும் அங்கு வருவோம். வெளியே இருந்து பார்த்தால் எதுவும் தெரியாது, தட்டிவைத்து காம்பவுண்ட் கட்டியிருப்பார்கள். ஆனால் சிங்கம் போன்ற மிருகங்களின் சத்தம் கேட்கும். அதற்காகத்தான் வருவோம்.


வீட்டில் நச்சரித்து, ஒருவ்ழியாக அன்று சர்க்கஸ் பார்க்க எங்க்ள் குடும்பத்தோடு சென்றிருந்தோம். அதுதான் நான் வாழ்கையில் முதல் முதாலாய் பார்க்கும் சர்க்கஸ். சர்க்கஸ் ஆரம்பித்து ஒருவாரமாகிவிட்டது. பள்ளி தோழர்கள் நிறைய பேர் பார்த்துவந்து சொன்ன கதை கேட்டு, ஆர்வம் அதிகமாயிருந்தது. மரப்பலகையிலான கேலரியில் இருந்தோம். எனக்கும் என் தம்பிகளுக்கெல்லாம் சந்தோசம் பிடிபடவில்லை. திடீர் என்று அரங்கமே சிரித்தது. பார்த்தால், கலர் கலராய் கோடு போட்ட துணியில் பேண்ட், பூ போட்ட சட்டை, முகமொல்லாம் வெள்ளை கலரில் அலங்காரம் – கோமாளி ! அவர் நடுவில் இருக்கும் மைதானத்தில் நடந்து வந்து கொண்டிருக்கின்றார். வேறு ஒன்றுமே செய்யவில்லை, நடந்துதான் வந்து கொண்டிருக்கின்றர்ர். ஆனால் எல்லேரும் சிரிக்கின்றோம். சிறிது நேரத்தில் பார்வையாளர்களின் சிரிப்பு இரட்டிப்பானது. அதே மாதிரி இன்னுமொரு கோமாளி! ஆனால் அளவில் பாதிதான் இருந்தார். குட்டி கோமாளி!! இரண்டுபேரும், நடந்து கொண்டிருந்தார்கள். பெரிய கோமாளி, சும்மா நடந்து கொண்டிருந்த குட்டி கோமாளியை ஒரு எத்து விட்டார். குட்டி கோமாளி இரண்டு பல்டி அடித்து விழுந்தார். எல்லோரும் சிரித்தோம், யாருமே பரிதாப படவில்லை. விழுந்த குட்டி கோமாளி எழுந்து கோபமாய் உள்ளே சென்றார். கையில் கிரிக்கெட் பேட் மாதிரி கட்டையுடன் குட்டி கோமாளி வெளியே வந்து, நேராக பெரிய கோமாளியை நோக்கி சென்றார். இது எதுவுமே தெரியாமல், பார்வையாளர்கள் பக்கம் பார்த்து கொண்டிருந்த பெரிய கோமாளியை கொண்டுவந்த கட்டையால் அடி விட்டார் குட்டி கோமாளி. பெரிய சத்தம் – டமால்!. அடிவாங்கிய பெரிய கோமாளி ஒண்ணு ரெண்டு மூணு நாலுன்னு பல்டி அடித்து விழுந்தார். ஒரு வழியாக எழுந்து குட்டி கோமாளியை பிடிக்க போகும் போது கால் தடுக்கி விழுந்து இன்னும் இரண்டு பல்டி. அடிக்கின்ற ஒவ்வொரு பல்டிக்கும் நாங்கள் எல்லோரும் சிரித்து ஆரவாரம் செய்தோம். பசங்களுடைய மனப்பூர்வமான சப்போர்ட் எப்போதுமே குட்டி கோமாளிக்குத்தான். அது மட்டுமா, கடைசியாக நடக்கும் பார் விளையாட்டிலும் கோமாளியின் அட்டகாசம்தான். பார் விளையாட்டில் ஒவ்வொருவரும் ஒரு முனையிலிருந்து அடுத்த முனைக்கு கம்பியில் தொங்கிக் கொண்டே செல்வார்கள். எதிர் முனையிலிருப்பவர்கள் வருபவரை பிடித்துக் கொள்வார்கள். ஆனால் கோமாளி செல்லும் போது மட்டும் கோமாளியை பிடிக்கமுடியாமல், அவரின் பேண்டை பிடிக்க, கோமாளிக்கு பேண்ட் அவிழ்ந்து (உள்ளே மற்றுமொரு பேண்ட் போட்டிருப்பார்), அந்தரத்திலிருந்து கீழே இருக்கும் வலையில் விழுவார். விழும்போது சும்மாவா விழுவார் கோமாளி? இல்லை, ஆகாயத்தில் அந்தர் பல்டி சில அடிப்பார், வலையில் விழுந்து எம்பி எம்பி சில பல்டி அடிப்பார். அப்போது இருந்தே கோமாளிக்கும் அவர் அடிக்கும் பல்டிக்கும் நான் ரசிகன்.


கூண்டுக்குள் பைக் ஒட்டுவது, ஜீப் குதிப்பது போன்ற வீர விளையாட்டுகளைவிட மிருகங்களின் சாகசங்கள்தான் ரெம்பவே வசீகரிக்கும். யானை, முன்னங்காலை தூக்கி ரொண்டு காலாலும் நடந்து வரும்போது உடன் வந்த உங்கள் வீட்டு குழந்தையையோ, சர்க்கஸ் பார்க்க வந்த குழந்தைகளையோ கவனித்து பாருங்கள், அவர்களும் இரண்டு கைகளையும் துக்குவார்கள். சிறுபிள்ளையில், நானும்தான், என்னையறியாமல் கையைதூக்கி எழுந்து நின்றிருக்கிறேன். அது உணர்வோடு உடலும் ஒன்றிவிடும் நிகழ்வு. ஏன் என்று தெரியவில்லை? வளர்ந்தபின் நமக்கு நாமே தடை போட்டுக் கொள்கின்றோம். வாய்விட்டு சத்தமாய் வீட்டிலிருக்கும் போதுகூட சிரிப்பதில்லை. உணர்வை அடக்கி அடக்கி, உணர்வற்று போகின்றோம்.

கால்பந்து விளையாடும் போது, யானை அடிக்கும் பந்து சொல்லும் திசையை நோக்கி ’ஓ...ஓ...ஒ....’ னு சத்தமும் பயணிக்கும். யானை புட்பால் விளையாண்டதை பற்றி ஒருவாரம் பேசி திரிந்த நாட்களும் உண்டு. கம்பி வேலிக்குள், ரிங்மாஸ்ட்டரின் சாட்டைக்கு பயப்படாமல் ஒரு சிங்கம் கர்ஜிக்கும் போது நமக்கு பயமாகத்தான் இருக்கும். எந்த வித்தையும் காடாமல் தள தள பள பளனு நடந்து போகும் நீர்யானையும் அதிசயமே.


சின்ன பெண், உடலை வில்லாக வளைந்து, கப் அன் சாசரை ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்குவாள். அதில் ஒரு கப் கிழே விழும் போது, நம் இதயத்தின் ஒரே ஒரு துடிப்பும் சிதறி விழும். எல்லாவற்றையும் அடுக்கி முடித்தபின், வரும் கைதட்டல் நிற்கவே வெகுநேரமாகும். அந்த சின்ன பெண், துள்ளி குதித்து பார்வையாளர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு ஓடும் அழகே அழகு.

சர்க்கஸ் முடிந்து கூடாரத்தை பிரித்து கொண்டு போகும் போது எங்கள் இதயத்தின் ஒரு பகுதியும் அதனுடன் சென்றுவிடுவாதாய் தோன்றும். தெரு பசங்க எல்லோரும் சேகமாய் பார்த்து கொண்டிருப்போம்.

அதற்க்கு பின் ஸ்ரீவில்லிபுத்தூரிலே ஜம்போ சர்க்கஸ், ராஜ் சர்க்கஸ், பாரத் சர்க்கஸ்னு நிறைய சர்க்கஸ் கம்பெனிகள் ஒவ்வொரு லீவுக்கும் வந்தன. எதையுமே விட்டுவிடவில்லை. எல்லாமே பார்த்து அனுபவித்தோம். சென்னை வந்தபின் மூர் மார்கட் கிரவுண்டுக்கு, எனது மகனை கூட்டிக் கொண்டு குடும்பத்தோடு ஜெமினி சர்க்கஸ், ரஷ்யன் சர்க்கஸ்னு சென்று பார்த்த போதும் சர்க்கஸை அதே ரசனையுடன் ரசிக்க முடிகின்றது.

சர்க்கஸ்க்கு சென்றே ரெம்ப நாட்களாகின்றது........போக வேண்டும்.

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

அன்னா ஹசாரேவுக்கு 3 ஆண்டுகள் சிறை

தமிழ்நாடு மருத்துவமனை ஸ்ரீவில்லிபுத்தூரில் பஸ் ஸ்டாண்டிலிருந்து கணபதி தியேட்டருக்கு போகின்ற வழியில் இருக்கும். பெயர் பார்த்து அரசாங்க ஆஸ்பத்திரினு நெனைக்க வேண்டாம். பிரைவேட் ஆஸ்பத்திரிதான். அதற்கு எதிரேதான் எங்கள் வீடு. ஆஸ்பத்திரிக்கு, ஊருக்குள் பெயர் இல்லாவிட்டாலும், சுற்றியுள்ள பட்டி தொட்டிகளில் ரெம்ப நல்ல பெயர். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகிலிருக்கும் கிராமங்களில் யாராவது மருந்தடித்தால் அவனையோ அவளையோ தூக்கி டிராக்டரில் போட்டு நேரே தமிழ்நாடு மருத்துவமனைக்குத்தான் கொண்டு வருவார்கள். (மருந்துன்னா பால்டாயில், அரளி விதை மேட்டர்). மருந்த குடிச்ச கேஸை தனியார் ஆஸ்பத்திரியில் எடுக்க மாட்டார்கள். போலீஸ் கேஸ் ஆகும்னுதான். ஆனால் இந்த ஆஸ்பத்திரியில் அப்படியெல்லாம் இல்லை. மருந்த குடிச்ச ஆளை கொண்டு வந்த பின்னாலே கிராமத்து பெண்கள் பத்து பதினைந்து பேர் தலைவிரி கோலமாய் அழுது கொண்டே வருவார்கள். அவர்கள் அப்படியே ஆஸ்பத்திரிக்குள் நுழைவார்கள். ஆனால் போன வேகத்தில் அவர்களை வெளியே அனுப்பிவிடுவார்கள். அவ்வளவு பேர் உள்ளே இருந்தா எப்படி வைத்தியம் பார்க்கிறது?. வெளியே வந்த பெண்கள் தங்கள் ஒப்பாரியை, தெருவில் தொடர்வார்கள். விஷம் சாப்பிட்டது ஆணா பெண்ணா, ஏன் சாப்பிட்டார் என்று ஒப்பாரியை கேட்டாலே தெரிந்துவிடும். சன் பிக்சர்ஸ் எடுக்கும் பட விளம்பரம் சன் டிவியில் ஐந்து நிமிடத்திற்க்கு ஒரு முறை வருவது மாதிரி விஷம் சாப்பிட்ட கதை ஒரு தொடர் இடைவெளியில் ஒப்பாரிக்கப்படும்.

’எல்லாம் இந்த மனுசனாலத்தான்”னு ஒரு வயதான அம்மா, கெஞ்ச தூரம் தள்ளி அமர்ந்து எதுவுமே நடக்காதமாதிரியான முகபாவனையுடனுடன் பீடி குடிக்கும் ஒரு வயதான ஆளை பார்த்து சொன்னால், அது ‘மகன்-அப்பா’ தாகராறுன்னு அர்த்தம். விஷம் சாப்பிட்டது ஒரு வலிப யையன், அழுது கொண்டிருப்பதுதான் அவனின் அம்மா என்பது விளங்கிவிடும். கூடவே ஒரு இளம் பெண்ணும் அழுதால், அது அவனின் மனைவி. அதே மாதிரி ஒரு வயதான அம்மா, ”எல்லாம் இந்த நாசமா போகிற பயலாலத்தான், இவளுக்கு இம்புட்டு கஷ்டம்”னு மேற்கே திரும்பி அழும்போது, ஒரு இளவயது ஆள் முறுக்கிக்கிட்டு கிழக்கே திரும்பி நின்றால், அது ‘கணவன் மனைவி’ தாகராருனு அர்த்தம். உள்ளே உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது ஒரு பெண், அழுவது அவளின் தாய், முறுக்கு கம்பிதான் கணவன். வந்த அன்று மாலையிலே ‘ஓ..ஓ”னு அழுகுரல் கேட்டால், வந்த கேஸ் பிழைக்கவில்லை. அப்படியில்லை என்றால் மூன்றாம் நாளோ நான்காம் நாளோ சத்தமில்லாமல் டிஸ்ஜார்ஜ் ஆகி சென்று விடுவார்கள். இந்த நிகழ்வுகளெல்லாம் எங்கள் தெருவிலிருக்கும் யாவருக்கும் தெரியும். ஆனால் ஒரே ஒரு கேஸ் மட்டுமே எல்லோரையும் குழப்பிவிட்டது. விஷம் சாப்பிட்டது ஒரு இளைஞன் என்பது மட்டுமே ஊகிக்க முடிந்தது. யாருடன் தகராரு, ஏன் விஷம் சாப்பிட்டான்னு தெரியவில்லை. அந்த வாலிபன் பிழைத்து எழுந்து டிச்ஜார்ஜ் ஆகும்போது பெரிய கூட்டம் “போலீசே..... போலீசே.....சட்டம் 309ல் கைது செய்”னு குரல் எழுப்பி கொண்டிருதார்கள். அங்கிருந்த போலீசும் அவனை ஸ்டேசனுக்கு கூட்டிச் சென்றது. தெருவிலிருக்கும் யாருக்கும் ஒண்ணுமே புரியவில்லை. எங்க அப்பாதான் விசாரித்து சொன்னார்கள். தற்கொலை சட்டப்படி குற்றமாம். அந்த சட்டம் 309 தான். வத்திராயிருப்பிலிருக்கும் கம்யூனிஸ்ட்டு கட்சிகாரங்கள் புகார் கொடுத்ததால் அவனை கைதுசெய்தார்கள் என்று நிறைய சொன்னது எதுவும் மனதில் நிற்கவில்லை. ஆனால் ’தற்கொலை சட்டப்படி குற்றம்’ என்பது மட்டும் பதிந்துவிட்டது. அதன்பின் அரளி விதையை அரைத்து குடித்து ஆஸ்பத்திரிக்கு வரும் கேஸை எல்லாம் போலீஸ் கைது செய்யும் என்று நினைத்தோம், ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
பின்னர், கல்லூரியில் படிக்கும் போதுதான் தெரிந்து கொண்டேன், இந்திய தண்டனைச் சட்டம் 309வது பிரிவில் ''யாராவது தற்கொலை செய்வதற்கு முயற்சி செய்து, அதற்கென ஏதாவது ஒரு செயலைப் புரிந்திருந்தால் அந்தக் குற்றத்திற்காக ஓர் ஆண்டுக்கு உட்பட வெறுங்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்'' என்று. அதுவும் தற்கொலை செய்வதற்கு முயற்சி பால்டாயில், அரளி விதை, .....னு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அப்படி பார்த்தால், ’சாகும்வரை உண்ணாவிரதம்னு’ போர்டு மாட்டி ஊரைக்கூட்டி தற்கொலை செய்வதற்கு முயற்சி சொய்த அன்னா ஹசாரேவுக்கு ஒருவருட சிறை தண்டனையாக விதிக்கப்பட வேண்டும். அதுவும் ஹசாரே, காந்திய வழியில் பொது சேவைக்காக சாகும்வரை உண்ணாவிரதமாம். என்ன பொய்? காந்தி என்றாகிலும் வெள்ளைக்காரனை எதிர்த்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தாரா? இல்லவே இல்லை. காந்தி இருந்த சாகும்வரை உண்ணாவிரதமெல்லாம், தான் சொன்னதையே கேட்க வேண்டும் என்ற பிடிவாதத்துக்காக, தன்னுடன் இருக்கும் இந்திய சாகாக்களை எதிர்த்துதான். சரத் பவார்க்கு லேக்பால் மசோதா கமிட்டிக்கு தலைமைதாங்க தகுதியில்லை என குற்றம் சாட்டப்பட்ட உடனேயே ராஜினாமா செய்தார். ஆனால் ஒரே குடுமபத்திலிருந்து ஏன்? சாந்திபூஷணும் அவரின் மகனும் என்ற கேள்வி வந்தபோதும், சாந்திபூஷணை பற்றிய CD வெளியாகி சர்ச்சையை கிளப்பியபோதும் பிடிவாதமாய் அவரை மாற்ற மறுத்துவிட்டார் ஹசாரே. CD அமெரிக்க விஞ்ஞான கூடத்தில் பொய்யானது என்று நிருபணம் ஆகியது என்று சப்பைகட்டுவேற. அப்ப என்ன இந்திய தொழில்நுட்ப வல்லுனர்கள் எல்லாம் என்ன திறமையற்றவர்களா? ஏன் 121 கோடி இந்திய மக்களில், இரண்டு பூசண்களைவிட்டால் வேறு ஆள் இல்லையா? ஹசாரேவின் செயல்கள் எல்லமே தன்னிச்சையான பிடிவாதம் நிறைந்ததுதானே.

சரி, ஹசாரேவின் ’சாகும்வரை உண்ணாவிரத’த்துக்கு வருவோம். தற்கொலை முயற்சிக்கு ஒரு வருடம். அப்புறம், மிரட்டியதற்க்காக (Blackmail), லோக்பால் மசோதா வேண்டுமென அரசாங்கத்தை மிரட்டியதற்க்காக (threatening to fast unto death), இ.பி.கோ 503ன் படி இரண்டு ஆண்டுகள். ஆக மொத்தம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட வேண்டும்.



குறிப்பு:

அது போக 82 லட்சம் ரூபாய்க்கு கணக்கு காட்டாததற்க்கு தனியே வருமான வரித்துறை வழக்கும், நரேந்திர மோடி நல்ல ஆட்சியாளர் என்று சான்றிதழ் வழங்கிய சமுதாய ஊழல் (social corruption) க்குகான வழக்கும் தனித்தனியே விசாரித்து தண்டனை வழங்கப் படவேண்டும்.

சனி, 23 ஏப்ரல், 2011

அன்னா ஹசாரேவும் உண்ணாவிரதமும்

ஸ்ரீவில்லிபுத்தூரின் பிரபலமான நகைவியபாரியின் மகன் கல்யாணம், அப்போது புதிதாக கட்டியிருந்த பிள்ளைமார் கல்யாண மணடபத்தில் வைத்து நடந்தது. அந்த மண்டபம் ராமகிருஷ்ணாபுரத்தில், மதுரை ரோட்டிலிருந்து பைபாஸ் ரோடு பிரிகின்ற இடத்தில் இருந்தது. ஊரிலிருந்த மண்டபங்களிலே பெரியது (இருபது வருடங்களுக்கு முன்பு). 150 பேர் ஒரே நேரத்தில் உட்கார்ந்து சாப்பிடக்கூடிய வசதி உடையதாய் இருந்தது. பணக்கார வீட்டு கல்யாணமென்றால் ஏழு எட்டு பந்திவரை சாப்பாடு பரிமாரப்படும். நடுத்தர வீட்டு கல்யாணத்திற்க்கு மூன்று நான்கு பந்திகள். நகைவியபாரியின் வீட்டு கல்யாணத்தில் இருபது பந்திக்கு மேல் ஊரில் பேசிக்கொண்டார்கள். ஆயிரக்கணக்கில் விருந்து சாப்பிட்டதை ஊர் மக்கள் வெகுநாட்க்களாக பேசியது எனக்கு நன்றாக ஞாபகமிருக்கின்றது. சாப்பாட்டு செலவே ஐம்பது அறுபது ஆயிரம் ரூபாயிருக்கும் என்றார்கள். இப்போதய கணக்குபடி, இரண்டு, இரண்டரை லட்சம் ரூபாய். 3000 பேர் சாப்பிடுவதர்க்கு இவ்வளவு செலவானது சரியே. செலவு மட்டுமல்ல விசயம். அதற்க்கான வேலையும் நிறைய. காய்கறி வங்குவது, அதை மண்டபத்திற்க்கு கொண்டுவந்து சேர்ப்பது, சமையல் ஆட்களை ஏற்பாடு செய்வது, சமையல் நடக்கும்போது உடன் இருந்து பார்ப்பது, பந்தி பரிமாறுவதுன்னு எகப்பட்ட வேலையிருக்கும்.

சென்னை அண்ணாநகரில் என்னுடன் வேலை பார்த்தவரின் மகளுக்கு கல்யாணம் நடந்தது. சாப்பாடு எல்லமே காண்ட்ராக்ட்டில் விட்டுவிட்டார்கள். கொஞ்சம் செலவுகூட, ஆனால் எல்லா வேலைகளையும் அவர்களே பார்த்துக் கொள்ளுவார்கள். கல்யாணவீட்டுக்காரர்கள் ப்ரீயாக இருக்கலாம். எத்தனை சாப்பாடுன்னு மட்டும் சொன்னால் போதும். அவர்களுக்கு அன்று ஆன செலவு எப்படியும் லட்சம் ரூபாய் இருக்கும்.

இவ்வளவு ஏன்?, எங்க அப்பார்மொண்டில் நடக்கும் பிறந்த நாள் விழாக்களுக்குகூட டின்னர் சாப்பாடு ஹோட்டலில் ஆர்டர் செய்தால், பார்ட்டி நடக்கும் இடத்துக்கே வந்து பரிமாறுகின்றார்கள். 25 பேர் இருந்தால்கூட பரவாயில்லை. இரண்டாயிரம் ரூபாய்க்கு பில் வரும். ஆனால் வேலை மிச்சம்.

பத்து நாட்களுக்கு முன்பு மதிய உணவு ஹோட்டலில் சாப்பிட வேண்டியதாகிவிட்டது. கே.கே. நகர் சரவண பவனில் சாப்பிட்டேன். சா
தா அளவு சாப்பாடு. விலை 60 ருபாய். போதுமானதாய் இருந்தது. ருசியாகவும் இருந்தது.

சென்னையில் இன்றைய தேதிக்கு ஒரு ஆள் ஹோட்டலில் போய் சாப்பிட்டால் 60 ரூபாய் ஆகிறது. அதே மாதிரி கல்யாண விழாவில் 1000 பேர் சாப்பிட்டால் லட்சம் ரூபாய் ஆகின்றது.

ஒரு ஆளுக்கு, ஒரு நாள் சாப்பாட்டு செலவு (3 x 60 ) ரூபாய் 180. அதே நான்கு நாட்களுக்கு சாப்பாட்டுக்கு எவ்வளவு ஆகும் என்றால் ரூபாய் 720 னு கணக்கு போட்டுவிடலாம். இது என்ன ராக்கட் விஞ்ஞானமா என்ன?

அதே ஆள் நான்கு நாட்களுக்கு சாப்பிடாமலிருந்தால் என்ன செல்வாகும்? ஒன்றுமே செலவாகாதுன்னு சொன்னால், அது சரிதான். ஆனால் அன்னா ஹசாரே நான்கு நாட்கள் சாப்பிடாமல், அதாங்க உண்ணாவிரதம் இருந்தால் செலவு எவ்வளவு தெரியுமா? ரூபாய் 50 லட்சமாம். இது ராக்கட் விஞ்ஞானத்தைவிட கடினமாயிருக்கின்றது. உண்ணாவிரதத்துக்கு இவ்வளவு செலவு தேவையா? இவர் இதற்காக வசூலித்த தொகை மொத்தம் ரூபாய் 82 லட்சம். இவ்வளவு பணம் கொடுத்து யார் யாரெல்லம்னு இதுவரை அன்னா ஹசாரே செல்லவேயில்லை. ஊழலுக்கு காரணமே ஒளிவு மறைவான பரிவர்த்தனை தானே. சரி சரி அதொல்லாம் மற்றவர்களுக்குத்தானே. அன்னா ஹசாரேதான் ஊழலை ஒழிக்க பிறந்த
கான். அதனால் எதுவும சொல்ல தேவையில்லை. அவருக்குதான் சென்னை மெரினா பீச்சிலிருந்து டில்லிவரை மெழுகுவத்தி எந்திச் செல்ல ஒரு பகுத்தறிவற்ற கூட்டமிருக்கின்றதே.

திங்கள், 4 ஏப்ரல், 2011

உணர்வுக்கு என்ன பெயர்? (NRI)

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒரு வறண்ட பூமி. தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடும் என்று சொல்லமுடியாது. அது பாட்டுக்கு தலையைவிரித்து போட்டு ஹாய்யா ஊர் முழுக்க நிதானமாய் நடந்து கொண்டிருக்கும். அவ்வளவே! வருடத்திற்க்கு பத்து மாதம் தண்ணீர் தட்டுபாடுதான். ஆனால் மக்களின் இதயங்கள் ஈரமானவை. என்னுடைய சொந்த ஊர் என்பதற்க்காக சொல்லவில்லை. மக்கள் ஆசா பாசத்துடன் பழகுவார்கள். எங்கள் தெருவில் ஒருவரை ஒருவர் மாமா, அத்தை, அண்ணே, அண்ணினு உறவுமுறை சொல்லிதான் வளர்ந்தேன். சாதியம் புரிந்து, அதில் அனேகர் வேற்று சாதி என்பது அறிந்து, அதை புறந்தள்ளி, இன்றும் உறவு முறையோடுதான் அழைத்துக்கொள்கின்றோம். எங்கள் தெருவிலிருக்கும் அம்மாக்களும் அக்காக்களும் கன்னிமார் கோவில் தெருவிலிருந்து தைக்கபட்டி தெருக்கு தண்ணீருக்காக குடம் சுமப்பார்கள். காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலமிட்டு, சமையல் செய்து, துணிதுவைப்பது போன்ற அன்றாட வேலைகள் மாதிரிதான் தண்ணீருக்கு குடம் சுமப்பதும்.

மழை காலங்களில் முதல் மழையை விட்டுவிட்டு, அடுத்த மழையிலிருந்து மொட்டைமாடியில் விழுந்து குழாயில் வரும் தண்ணீரை வாளியில் பிடித்து தண்ணீர் தொட்டியில் நிரப்புவோம். நிரப்பியபின், குழாய்க்கடியில் நாங்கள் அமர்ந்து குளிப்போம். அதுதான் எங்களுக்கு அருவி குளியல். அப்போதொல்லாம், நான் பார்த்தவரை ராஜபாளையத்திற்க்கு அருகிலிருக்கும் ‘அய்யனார் அருவி’தான் மிகப்பொரிய நீர்வீழ்ச்சி என நினைத்துக்கொண்டிருந்தேன். பள்ளியில் படிக்கும்போது, ஒரு விடுமுறையில் குடும்பத்துடன் குற்றாலம் சென்று, ஐந்தருவி, பழய குற்றாலம் அருவி, தேனருவி, புலியருவினு பார்த்து குளித்து குதூகலித்த அனுபவம் மனதில் இன்றும் நிற்க்கின்றது. பிரமிப்பும் மனதைவிட்டு நீங்கவில்லை. அய்யனார் அருவியுடன் ஒப்பிடும்போது குற்றாலத்தை பார்த்து பிரமிப்பதில் ஆச்சரியமில்லைதான். இப்போதெல்லாம், நாகர்கோவிலுக்கு போகும்போது அருகிலிருக்கும் திருபரப்பு அருவியில் நேரம் போவதே தெரியாமல் குளிப்போம். குளித்து முடித்து பசியுடன் வந்து அங்கு இருக்கும் கடைகளில் சூடான பஜ்ஜி சாப்பிட்டால் ....சுகமே சுகம்தான்.

ஒரு வினாடி, பார்த்து மலைத்துதான் போனேன். அடுத்த வினாடி, கீழே விழும் இவ்வளவு தண்ணீரும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு போனால், ஊரில் தண்ணீர் பஞ்சம் தீர்ந்து விடுமே என்ற எண்ணம் தோன்றியது. சத்தமாய் வாய்விட்டும் சொல்லிவிட்டேன். அதை கேட்ட என் மனைவியும், சுற்றியிருந்த நண்பர்கள் கூட்டமும் அடக்கமுடியாமல் சிரித்தார்கள். அதில் ஒரு நண்பன், “நயாகரா நீர்வீழ்ச்சியை பார்த்து ஊருக்கு எடுத்து சொல்ல எங்கிய உன் நினைப்பை .......”னு சொல்லி மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான். அன்று முழுவதும் நான் தான் அவர்களுக்கு காமெடி டார்கட். அதுதான் என்னுடைய அப்போதைய உணர்வு. அமெரிக்கா, நல்ல வளம் நிறைந்த நாடு, நலமான மக்கள். அங்கு இந்தியர்கள், நல்ல முறையில் வளமோடு வாழ்ந்து அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் பெருமையும் பொருளும் ஈட்டுகின்றனர். ஆனால் எல்லோரும் அப்படியல்ல.

கல்லூரியில் என்னுடன் படித்தவன் இருந்த அப்பார்ட்மெண்ட் அரிசோனாவின் பினிக்ஸ் நகரின் தெற்க்கு பகுதியில் இருந்தது. நாங்களும் அதே அப்பார்ட்மெண்டில் வீடுபார்த்தது சந்தோசமாயிருந்தது. எங்கள் இருவரின் மனைவிமார்களும் எங்களுடைய் குழந்தைகளும் நெருக்கமானவர்கள். அப்போது நண்பனின் குடும்பம் அமெரிக்காவந்து நான்கு வருடங்கள் ஆகியிருந்தன. வரும்போது அவர்களின் மகனுக்கு வயது ஆறு. அதுவரை சென்னையில் சூளைமேட்டிலிருந்த பள்ளிகூடத்தில் படித்துகொண்டிருந்தான். நன்றாக வளர்ந்திருந்தான் அவர்களின் பையன், அவனுடன் பேசும்போது, அவன் பதில் சொல்லாமல் திரு திருனு முழித்துக் கொண்டிருந்தான். அதற்க்கு அவனின் அம்மா, “அவனுக்கு தமிழ் புரியாது. ஆதனால்தான் முழிக்கின்றான்” என்றார்கள். அதை கேட்ட எனக்கும் என் மனைவிக்கும் அதிர்ச்சியாயிருந்தது. ஆறு வயதுவரை தாய் மொழி பேசிய பையன், நான்கே வருடதில் தமிழ் மறக்கடிகப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சியாயிருந்தது. அதை தொடர்ந்து அவர் சொன்னதை கேட்டு மனவருத்தம்தான் மிஞ்சியது. அவர், “பசங்களுக்கு புரியகூடாது அல்லது சீக்கிரட்டா பேசணும்னா நாங்க ரெண்டுபேரும், தமிழில் பேசிக்கொள்வோம்”னு அவரது கணவரை காண்பித்து சொன்னார்கள். அவரின் மாமனார், அதாவது என் நண்பனின் அப்பா, கல்லூரியில் தமிழ் ஆசிரியராய் இருந்து ஓய்வு பொற்றவர். கணவன் மனைவி இருவருக்கும் சொந்த ஊர் மதுரை. இருவருமே பட்டிமன்ற போச்சாளர் (தமிழ்) போராசிரியர் சால்மன் பாப்பயையா அவர்களின் உறவினர்கள்.

இவர்களை மட்டுமல்லாது, வேறு சில இந்தியர்களிடம் பெற்ற கமெண்ட்களும் சில இங்கு

- இந்தியாவிற்க்கு கோடைகாலத்தில் போக கூடாது, ஒரே வெயில். (இவர் அமெரிக்காவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின் இந்தியா சென்று திரும்பியபின் அடித்த கமெண்ட். சொந்த ஊர் குடிவாடா, ஆந்திரா. இவர் அமெரிக்கா போகும்முன்பு, குடிவாடா குளு குளுனு இருந்தது போலவும், இப்போது மாறிவிட்டது போலவும்தான் இருக்கின்றது)
- சேலை கட்டிக்கொண்டு எப்படித்தான் ஊரில் இருக்கின்றார்களோ?. என்ன உடை இது? (What a costume is this?). இப்படி சொன்னவர், சேலத்தை சேர்ந்தவர்.

எந்த நாட்டவனும், பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற, நமது அண்டை நாட்டவரோ, ஏழை கிழக்கு ஐரோப்பிய நாட்டவனும் இப்படி சொல்ல நான் கேட்ட்தில்லை. இதை கேட்கும் போது வரும் உணர்வை, என்ன உணர்வு என்றே சொல்லத் தெரியவில்லை. வலியா? வருத்தமா? கோபமா? எரிச்சலா?, அது எல்லாம் கலந்த ஒரு உணர்வுதான் ஒவ்வொரு முறையும். அதற்க்கு காழ்புணர்வு என மாணிக்கம் அவர்கள் பெயரிட்டால், அதை எடுப்பதா? இல்லை விடுப்பதா?


[என்னுடய ‘வெளிநாட்டு வாழ் இந்தியன் (NRI)’ என்ற பதிவிற்க்கு நண்பர் மாணிக்கதின் பின்னூட்டம்:


கக்கு - மாணிக்கம்
எதன் அடிபடையில் இவைகளை எழுதினீர்கள் என்று விளக்க வேண்டும் நண்பரே. அது உங்கள் கடமையும் கூட இப்போது. வெறும் காழ்புணர்வில் மட்டுமே இதுபோல எழுத நீங்கள் தலைப்பட மாட்டர்கள் என்ற நம்பிகையுடன் கேட்கிறேன்.
நட்புடன் - மாணிக்கம் ]

ஞாயிறு, 27 மார்ச், 2011

வெளிநாட்டு வாழ் இந்தியன் (NRI)

தூர தேசத்தில்
தொலைந்துபோனவர்கள்
காணாததை கண்டதும்
காணாமல் போனவர்கள்

இந்த விழுதுகள்
மரத்தையே
அழுக்கென அறிவிக்கும்

விடுதியையே
வீடாக்கி கொண்டவர்கள்
விடுமுறைக்கு மட்டுமே
வீடு திரும்பும் பறவைகள்

வான் கோழியாய்
வாழ விரும்பும்
மயில் கூட்டங்கள்

வாழ்கை துணைக்கு
வலைபோட்டு தேட
இந்திய கடலுக்கு
மீன் பிடிக்க வருவார்கள்

தமிழ் மொழியே
தரமில்லை என
ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்

பெற்றோர்க்கு
முதியோர் இல்லத்தையே
முகவரியாக்கிய
முன்னோடிகள்

இந்தியாவில் அமெரிக்கனாயும்
அமெரிக்காவில் இந்தியனாயும்
அரிதாரம் கொண்டவர்கள்

அன்னியர் தேசத்தில்
இந்திய அடையாளம்
இந்திய தேசத்தில்
அன்னியர் அடையாளம்

திங்கள், 28 பிப்ரவரி, 2011

நாளை மற்றுமொரு நாளே….

ஐந்தாவது வகுப்பு வரை நான், தொடக்க பள்ளி படிப்பை ஸ்ரீவில்லிபுத்தூர் பண்டாரக்குடி தெருவிலிருக்கும் சி.எஸ்.ஐ. பள்ளியில் படித்தேன். நான் அங்கு படிக்கும் போது, வேறு பள்ளியில் படிக்கும், என் சமவயதை உடைய பசங்கள் எங்கள் பள்ளிக்கு வைத்துள்ள பெயர் ‘ஓட்ட பள்ளிக்கூடம்’. எங்கள் பள்ளிக்கூடம் ஒன்றும் ஒட்ட உடைசலானதல்ல, மழை காலங்களில் ஒழுகும். அவ்வளவே. அதிலும் எங்களுக்கு ஒரு விளையாட்டு உண்டு. இரண்டு கைகளையும் ஒட்டி கிண்ணம்மாதிரி வைத்துக்கொண்டு, மேலே ஓட்டிலிருந்து விழும் தண்ணீரை பிடிக்க வேண்டும். யாரால் அதிகமாக தண்ணீர் பிடிக்க முடிகின்றதோ அவனே வெற்றியாளன். எனக்கு நான்கைந்து சொட்டுக்கு மேல் விழாது. கையை தவிர தலையிலோ, உடம்பின் எதாவது ஒரு பகுதியில்தான் விழும். அல்லது போட்டி முடியும் முன்பே என் அம்மா குடையுடன் என்னையும் என் தம்பியையும் கூப்பிட வந்துவிடுவார்கள். அடுத்த நாள், போட்டியில் யார் ஜெயித்தது என்று கேட்டால், அது ஜானாகத்தான் இருக்கும். ஜானின் முழு பெயர் ஜான்சன் பொன்னையா. விளையாடும் போது ‘ஜான்......முழம்’னு அவனை பட்ட பெயர் சொல்லும் போது உணர்ச்சிவசப்பட்டு கையை ஓங்கி தோற்றுவிடுவான். ஜான் பழகுவதற்க்கு நல்ல பையன், அவன் என்னுடைய நண்பன் மற்றும் வகுப்பில் எனக்கு பக்கத்தில் அமர்ந்திருப்பான். ஒவ்வொரு மாதாந்திர தேர்வின் ரேங்க் படிதான் வகுப்பில் அமர்ந்திருப்போம். அதாவது முதல் ரேங்க் மாணவன் முதலிலும். கடைசி ரேங்க் கடைசி பெஞ்சிலும் இருப்பார்கள். ஜான் மட்டுமல்ல, ஜார்ஜ், வில்சன், ராபர்ட் என்று சந்தைபேட்டையிலிருந்து வரும் பசங்க எல்லோருமோ எனக்கு நண்பர்கள்தான். பள்ளிக்கூடம் முடிந்தபின் இவர்கள் என்னுடைய தெருவில் அரச மரத்தடியில் விளையாடிவிட்டு போவார்கள். ஒரு நாள், நான் இவர்கள் இருக்கும் சந்தைபேட்டைக்கு விளையாடச் சென்றேன். அன்றுவரை, இவர்கள் தெருவும் எங்கள் தெருவும் ஒன்றுதான், இவர்கள் வீடும் என் வீடுமாதிரிதான் என்று நினைத்திருந்தேன். ஆனால் அங்கு சென்று பார்த்த காட்சிகள் எனக்கு வேறு உலகத்தை அறிமுகப்படுத்தியது. தெருவெல்லாம் தார் ரோடு அல்லாமல் மண் ரோடு. எங்கும் தண்ணீர் கட்டிகிடந்தது. சகதியில் பன்றிகள் சுகமாய் படுத்து கிடந்தன. தெரு ஓரத்திலே குழந்தைகள் மலம் கழித்துக்கொண்டிருந்தனர். விளையாட இடமே இல்லை. ஜான் வீட்டிற்க்கு சென்றேன். குடிசை வீடு. மண் தரை. தனி தனி அறைகள் எதுவும் இல்லை. இதே மாதிரிதான் எல்ல வீடுகளும் இருந்தன. அப்போதைய என் உணர்வை சொல்ல தெரியவில்லை, ஆனால் அந்த இடமே பிடிக்கவில்லை. விபரம் தெரியாத வயது.

நான் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வேலை மாற்றலாகி வந்தபோது, கல்லூரியில் படித்த நண்பன் சென்னையில் ஒரு பாம்பே கம்பெனிக்கான மேனேஜராக இருந்தான். அவன் அலுவலகம், பார்சன் காம்பிளக்ஸில் இருந்தது. அவன் அலுவலகத்தில் மொத்தம் மூன்று பேர், நண்பனையும் சேர்த்து. அவ்வப்போது அவன் அலுவலகத்திற்க்கு சென்று பேசிக்கொண்டிருப்பேன். அங்கு வெங்கட்டு (வெங்கட்) என்று ஒரு ஆபீஸ் பாய் இருந்தான். பதினேழு பதினெட்டு வயதிருக்கும். சுறு சுறுப்பாய் இருப்பான். பத்தாம் வகுப்பு பெயிலானதோடு படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டான். இவந்தான் காப்பி வாங்கிவருவான். ஒரு நாள், அங்கு சென்ற போது, என் நண்பன் கிளையண்டை (வாடிக்கையாளர்) பார்க்க வெளியே சென்றிருந்தான். வெங்கட்டு, ஆபீஸ் ஹாலில் இரண்டு கைகளால் கால்களை இருக்கி பிடித்து தரையில் குத்தவைத்து உட்கார்ந்திருந்தான். என்ன ஆச்சினு குனிந்து பார்தால், அவன் குளிர் ஜீரத்தில் நடுங்கி கொண்டிருந்தான். அலுவலகதிலுல குமஸ்த்தாவும் அன்று வரைவில்லையாம். சரினு, அலுவலகத்தை பூட்டிவிட்டு, வெங்கட்டை ஒரு டாக்டரிடம் அழைத்து சென்றேன். வைரல் இன்பெக்‌ஷன்னு சொல்லி மாத்திரையும் எழுதி கொடுத்து, ஜீரம் குறைய ஊசியும் போட்டார், டாக்டர்.

”சார் வந்திருவாரு, நான் ஆபீஸுக்கு போகணும். சாவி என்கிட்டதானே இருக்குது”என்று சொன்னான் வெங்கட்டு. அந்த நிலையில் அவனை ஆபீஸுக்கு பதில் வீட்டில் கொண்டு விடுவதே சரியென பட்டது எனக்கு.

“உன்னை உன் வீட்டில் விட்டுவிட்டு, ஆபீஸு சாவிய நான் எடுத்து கொண்டு போறேன்” என்று சொன்னேன்.

”வீட்டுக்கு நானாகவே போய்க்கிறேன் சார்” என்றான் வெங்கட்டு.

அவன் சொன்னதை கேட்காமல், நான் தான், அவனை என் டூ வீலரில் கூட்டிக் கொண்டு, அவன் வீடு இருக்கும் தேனாம்பேட்டைக்கு சென்றேன். அது, ரோட்டு மேலே இருக்கும் குடிசை பகுதி – சேரி. அங்கு இறங்கி, இனி போய்க் கொள்ளுவேன் என்று சொன்னவனுடன், விடாபிடியாக வீடுவரை சென்றேன். வெளியிலிருந்து பார்க்கும்போது வெறும் குடிசைகள் மட்டுமே தெரியும் பகுதி, அருகில் சென்று பார்த்தால், அவ்வளவு, சுகாதார கேடு நிறைந்தாய் இருக்கும். நான் சிறுவயதில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பார்த்ததைவிட மிக மிக மோசமாயிருந்தது சென்னையிலிருந்த சேரி. வாழ்வின் விளிம்பு நிலை மனிதர்களின் நிலை மனதிற்க்கு உறுத்தலாயிருக்கும். சில நாட்களுக்கு மனதைவிட்டு அகலாமல் நிலைகொண்டிருந்தன இழிநிலை காட்சிகள். இது நடந்து பல வருடங்களாகிவிட்டன. ஆனால் இப்போதும், எதாவது ஒரு குடிசை பகுதியை பார்க்கும் போதும், அந்த எண்ணங்கள் நிழலாடும்.

கந்தன் என்ற ஒரு மனிதனின் ஒரோ ஒரு நாள் வாழ்வை பற்றிய படித்தேன். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒரு நாள்கூட இல்லை. காலையில் கந்தன் ஏழு மணிக்கு எழுந்திறுப்பதிலிருந்துதான் கதை ஆரம்பிக்கிறது. அன்று இரவே முடிகின்றது. இருபத்தி நான்கு மணி நேரம்கூட இல்லை. ஜி. நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே….நாவல் பக்கத்திற்க்கு பக்கம் விறுவிறுப்பாய் மட்டுமல்ல, அறுவறுப்பாயும் இருந்தது. அறுவறுப்பானது எழுத்தோ, நடையோ அல்ல, அவை அருமையானவை. அறுவறுப்பானது, கதையின் மறுக்கமுடியாத யதார்த்தமான கதைதளம், பாத்திரங்கள், மற்றும் நிகழ்வுகளே. கதாபாத்திரங்கள் உண்மையில்லை என்றோ, கதையே மிகைபடுத்தப்பட்ட புனைவு என்றோ மறுக்க முடியாது. நாம் தினமும் பார்த்துக் கொண்டிருக்கும் ஆனால் நாவலாக வாசிக்கப்படாத நிஜங்கள்.

காலையில் குடிசையில் படுத்திருக்கும் கந்தன் படுக்கையிலிருது பள்ளி எழும் காட்சியே இப்படித்தான்........”.....தலையணையை இலேசாகத் தள்ளிவிட்டுத் தந்தி அடிக்க ஆரம்பித்தது. மீண்டும் கையைத் தரையில் ஊன்றிக்கொண்டான். தேவைப்படாத ஒரு ஏப்பம். அதைத் தொடர்ந்து குமட்டல். குமட்டலோடு இருமல். விலா எலும்புகள் முறிவதுபோல் இருந்தது. வாயிலிருந்து ஐம்பது மில்லி கோழை வழிந்து பனியனை நனைத்த பிறகு சிறிது நிம்மதி”. எழுந்த கந்தன், மீனாவின் பெட்டியை துளாவி பணம் காசு இருக்கின்றதா என்று பார்கின்றான். வேறு எதற்க்கு, ஜிஞ்சர் (சரக்கு) அடிக்கத்தான். இரண்டு ரூபாய்க்கு மேல் தேறாததால் காலி பட்டில்களை, அப்போது வரும் மூக்கனின் மனைவி ராக்காயிடம் கொடுத்து தெரு முக்கிலிருக்கும் ராவுத்தர் கடையில் போட்டு வெறகு கடையில் ஜிஞ்சர் வாங்கிவர சொல்கிறான். காலையில் வெளியே போகணும்னா, மூன்று அவுன்ஸ் ஜிஞ்சர் அடித்தாதான் முடியும். அவனிடம் வந்த கிராக்கி ஒருவன், கொஞ்சம் வயசு கூடவானாலும் பரவாயில்லை, சிரிச்சுப் பிடித்து விளையாடற பிள்ளையா வேண்டும் என்று கேட்டதற்க்கு, கந்தனுக்கு ராக்கயி நினைப்பு வந்தாய் அவளிடம் சொன்னான். அவனுடயை அனுமதியுடன் அவனின் மீனா தொழிலுக்கு போவது கேட்ட ராக்காயி, அவளின் மூக்கனுக்கு தெரியாமல் அதையே செய்தால் சரி என்ற மனநிலைக்கு வந்துவிடுகின்றாள். ராக்காயி மோகனாவாக மாறுவதும் தேவை என உணர்த்தப்படுகின்றது. மோகனா வங்கிவந்த திரவத்தை ஒரே மடக்காக குடித்துவிட்டு, சிகரெட்டை புகைத்தான் கந்தன்.

பக்கத்து வீட்டு....குடிசை பெண்னை அனுப்பி மீனாவை அழைத்துவர சொன்னான். வந்த மீனாவிடம், ஏட்டையாவுக்கு கொடுக்க பணம் வேண்டும் என்கிறான். முந்தைய இரவில் சம்பாதிக்க முடியாததற்க்கு காரணம் சொல்லி, பேச்சியக்காவிடம் பணம் வாங்க எழுந்து செல்கிறாள். மீனாவை பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன் கோவிலில் பார்த்து பிடித்துபோனது அவனுக்கு. வெத்திலைக் கடை சோலையிடம் பேசிமுடித்ததும், கந்தனின் அம்மா சொர்ணாத்தம்மாள் சோலைக்கு சொந்தம் என்று அவர் சொன்னதும், அம்மாவிடம் ஒருவாட்டிக்கு ரெண்டுவாட்டிக்கு சம்மதம் வாங்கி மீனாவிற்க்கு கோவிலில் வைத்து தாலி கட்ட சொன்னதும் நினைவிற்க்கு வந்தன. பேச்சியக்காவிடம் பணமும், இட்டிலியும் வாங்கிவந்தாள் மீனா. கந்தன் காலை நேரத்து வயிற்று பசியை மீனா கொண்டுவந்த இட்டியாலும் உடற்பசியை மீனாவைக் கொண்டும் தணித்துக் கொண்டான். விறகு கடைக்கு சென்று மீண்டும் மூணு அவுன்சு ஜிஞ்சர் மருந்து சாப்பிட்டுவிட்டு, பல் விளக்கி, குளித்து, சலவை செய்யப்பட்ட ஆடைஅணிந்து வீட்டைவிட்டு கிளம்பும்போது நாமும் அவனோடு ஊருக்குள் பயணிக்கின்றோம்.

முத்துசாமிக்கு கைம்பெண்னை மணம்முடிக்க பெண்ணோடு பேசிவிட்டு, அவனோடு சேர்ந்து சாரயம் குடித்து, சாரயக்கடையில் தகர்ராரில் எதிராளியின் கத்திவீச்சிலிருந்து தப்பி, தகறாரு செய்தவனை அடித்து துவைத்துவிட்டு, வள்ளி லாட்ஜீக்கு சென்று நேற்று இரவு வந்த கிராக்கியிடம் மிரட்டி பணம் பிடுங்கி, செட்டியாருக்கும் ஐரீனுக்கும் பஞ்சாய்த்து பண்ணி முடித்து, தேவி லாட்ஜில் வந்து சிறிது தூங்கி எழுந்தான். தேவி லாட்ஜின் முதலாளி சுப்பு நாயுடு, தன் மேனேஜரிடமும், கோவில் டிரஸ்டியிடமும், பிசினெஸ்ல கொஞ்சம் நெளிவு சுளிவு வேண்டுமென்பார். கந்தனால், கறாராயிருந்த கோவில் டிரஸ்டி சமாதானம் செய்யப்பட்டார். எந்த அளவுக்கு என்றால், ஒன்றும் தெரியாமலோ எல்லாம் தெரிந்தோ, “பிசினெஸ்ல என்ன கோவில் காரியங்களில்கூட கொஞ்சம் நீக்குபோக்கு வேண்டியிருக்கு. நாமென்ன அரசியல்வாதிகளா, கொள்கைன்னு வம்பா இருக்க?” என்று சொல்லுமளவுக்கு. தூங்கி எழுந்து கிளம்ப ஆயத்தமான கந்தனிடம், லாட்ஜ் சிறுவன் “காப்பி வேணுமா சார்?”னு கேட்டதற்க்கு இருநூறு மில்லி சாராயம் வாங்கிவரச் சொன்னான். சோபாவில் உக்கார்ந்து பொருளாதரமும் சோஷியலிசமும் பேசிக்கொண்டிருந்தவர்களேடு சிறிது நேரம் இருந்துவிட்டு தரகர் அந்தோணியை பார்க்க ஷெனாய் நகருக்கு கிளம்பினான் கந்தன். அந்தோணி, வீடு, குடிமனை, நிலம், கார், ஆண்கள், பெண்கள், இன்னும் எதை எல்லாம் வாங்கி விற்க்கலாமோ அல்லது வாடகைக்கோ குத்தகைக்கோ அமர்த்திக் கொள்ளலாமோ, எல்லாமே அவரது தரகுத் தொழிலுக்கு உட்பட்டவைதான். அந்தோணி தரகராய் மட்டுமல்ல, தத்துவஞானியும்கூட. பலவகையான தொழில் செய்த அனுபவத்தாலும், ஐம்பத்தைந்து வயதாகியதாலும் அந்தோணியின் ஆலோசனைகளை மிகவும் மரியாதையுடன் கந்தன் எடுத்துக் கொள்வான். பணமே ஒரு மானங்கெட்ட விஷயம் என்ற ஞானம் அந்தோணிக்கு பள்ளிநாட்களில் கிடைத்ததே சுவாரசியமானதுதான். சோமு நாடார் பையன், பிறந்த மேனியா கிரவுண்டை சுற்றி ஓடிவந்தால் பத்து ரூபாய் தருவதாய் சொன்னபோது, இரண்டு தடவை கிரவுண்டை சுற்றிவந்தால் இருபது கிடைக்குமான்னு கேட்டார். முடியாது என்று சொன்னதற்க்கு, சரி, கெடெச்சது லாபம்னு ஓடி பத்து ரூபாயை வென்றவர். மீனா விசயமாய்தான், அவரை பார்க்கப்போனான் கந்தன். ஆனால் அவரோ பிடிகொடுக்காமல் நழுவியது, கந்தனுக்கு ஏமாற்றமாயிருந்தது. அந்தோணியின் வீட்டிலிருந்து இரவு திரும்பும்போது ஒரு கொலையை பார்த்த சாட்சியாய் இருந்து அன்னக்கிளியுடன் சேர்ந்து போலீஸ் ஜீப்பில் ஏறி செல்வதோடு கதை முடிகின்றது.

ஒரு மனிதனின் ஒரு நாள் வாழ்க்கையில் செய்த சின்னத்தங்கள், காட்டிய துணிச்சல், பெற்ற நோய்கள், பட்ட அவமானங்கள்தான் கதை. இவையே கதை நாயகனின் வாழ்க்கை. அவனின் அடுத்த நாளைப்பற்றி நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? என்று கேட்கிறார் ஆசிரியர் ஜி. நாகராஜன். ஏனெனில் அவனுக்கும், நம்மில் பலரைப்போலவே – நாளை மற்றுமொரு நாளே.

புத்தகத்தின் தலைப்பு : நாளை மற்றுமொரு நாளே…….
ஆசிரியர் : ஜி.நாகராஜன்
வெளியீட்டாளர் : காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்

சனி, 26 பிப்ரவரி, 2011

தீ குளித்த நெருப்பு

கொடும்பாவி கொளுத்தினாய்
பிரியாணி பொட்டலம்
கொடுத்தார்கள் உனக்கு

உன் தலைவன்
அனல் தெறிக்க
அதிக பிரசங்கியாய் பேசி
சிறை பட்டான்.
பேருந்துக்கு தீ பொறியிட்டாய்
பேருந்து பற்றி எரிந்தது
வீரன் என்று சொன்னர்கள் உன்னை

இன்று கோழையாய்
உன்னையே கொளுத்தி கொண்டாய்
நெருப்பு தீ குளித்ததாய் சொல்லி
உன் புகைப்படத்துக்கு மாலையிட்டார்கள்
மாவீரன் என்று மார்தட்டினார்கள்

மாலைக்கா பஞ்சம் நாட்டிலே....
உன் தலைவன்
அனல் தெறிக்க
பேசுகின்றான்
அடுத்த மாவீரனை கண்டெடுக்க!

புதன், 16 பிப்ரவரி, 2011

பாழான பால்

கடந்த வாரம் நான் நாகர்கோவில் சென்றிருந்தேன். உறவினரின் மகனின் திருமணத்திற்காக கல்யாண மண்டபத்திற்கு போகும் போது என் மாமா வீட்டிற்க்கு சென்றேன். அவரும் உடன் வருவதாய் சொல்லியிருந்தார். குளித்து ரெடியாகிக்கொண்டிருந்தார். மாமா ஊரில் வியபாரம் செய்கின்றார். அது அவரின் அப்பாவுடைய தொழிலின் தொடர்ச்சி. மாமா கூட்டுக் குடும்பமாய் அவரின் தம்பி மற்றும் அக்காவின் குடும்பத்தோடு ஒரே (பெரிய) வீட்டில் இருக்கின்றார். என்னை பெருத்தமட்டில், அவர் கல கலனு பேசி பழகக்கூடியவர். ஆனால் அவர் வீட்டில்தான் அவரை கண்டால் எல்லோருக்கும் பயம் கலந்த மரியாதை. அதிலும் வீட்டுப் பெண்களுக்குதான் அவரின் கோபத்தை எதிர்கொள்ள முடியாது. கோபம் வந்தால், சாப்பாட்டு தட்டை தூக்கி எறிந்துவிட்டு சென்றுவிடுவார் மாமா. தரையில் காய்கறி கூட்டும், பொரியலும் சாதமும் இரைந்து கிடக்கும். பெண்கள், கீழே நொறுங்கி கிடக்கும் அப்பளத்தோடு அவர்களின் உடைந்த மனதையும் சுத்தமாய் துடைத்தெடுத்து குப்பையில் போடுவர்கள். காய்கறி நறுக்கி சமைத்து உப்பு உரைப்பு பார்த்து தளித்து செய்த பொறியலை தரையிலிருந்து கூட்டி பொருக்கும்போது மனதுக்கு கஷ்டம்தான். மாமா நல்ல மனிதர்தான். ஆனால் என்ன?, அவரின் கோபத்தின் வெளிப்பாடே சாப்பட்டை ....உணவை வீணடிப்பதுதான்.

இப்படி யோசித்துக் கொண்டிருக்கையில், மாமா ரெடியாகி வந்தார். ரெண்டு பேரும் கோட்டாரிலிருந்த கல்யாண மண்டபத்திற்க்கு சென்றோம். அந்த மண்டபம் பெரியது. பலமுறை அங்கு நடந்தேறிய திருமணத்திற்க்கு சென்றிருக்கின்றேன். மண்டபத்தில் சமுதாயத்தின் ஏழைகள் பணக்காரர்கள் வீட்டு கல்யாணங்கள் நடக்கும். ஏழை வீட்டுக் கல்யாணத்திற்க்கும் பணக்கார வீட்டுக் கல்யாணத்திற்க்குமான வித்தியாசம் இரண்டுதான் பிரதானம். ஒன்று மண்டப அலங்கார வேலைகள், மற்றது சாப்பாடு. வசதியான வீட்டுக் கல்யாணத்தில் வகை வகையாக கூட்டுப் பொரியல்கள் இலையை நிறைக்கும். அவியல், வாழைக்காய் துவரன், நாலுவகை பச்சடி, பருப்பு, சாம்பார், ரசம், மூணு வகை பாயாசம் – பப்படம் போட்டு சாப்பிட, பழம் போட்டு சாப்பிடனு 11 வகை, 13 வகை, 16 வகைனு அளவு வைத்து சாப்பாடு பரிமாரப்படும். இதையெல்லாம் ரசித்து, ருசித்து, செரிக்க சாப்பிட்டால் அரை மணிநேரமாவது ஆகும். ஆனால் இவை யாவும் ருசித்து சாப்பிடுவதற்க்கோ, செரிக்க சாப்பிடுவதற்க்கோ, ஏன் சாப்பிடுவதற்க்கே அல்ல. பின்னர் எதுக்குத்தான் உணவு?

நானும் மாமாவும் மூன்றாவது பந்தியில் சாப்பிட அமர்ந்தோம். அன்று இலையில் வைத்த கூட்டை எண்ணி பார்த்தால் 18 வந்தது. அது என்ன கணக்கு? கூட்டு பொரியலை சாப்பிட்டாலே வயிறு நிரம்பிவிடும் போல் இருந்தது. மீண்டும் எண்ணி சரி பார்கும் முன்பு சாதம் விளம்பினார்கள். நான் மிகவும் கொஞ்சமாய்தான் சாதம் வங்கினேன். சாதத்தை தொடர்ந்து பருப்பும் நெய்யும் வந்தது. அதை சாப்பிட ஆரம்பித்தவுடன் சாதமும், சாப்பாரும் வந்தது. நான் வேண்டாம் என்று சொல்லி பருப்பு சாதத்தை தொடர்ந்தோன். என் அருகில் இருந்த மாமா உட்பட பருப்பு சாதத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, சாதம் வாங்கி சாம்பாருக்கு சென்றார்கள். அதை முடிக்கும் முன்பே ரசம், மோர் என்று பாயாசம் என்று ரிலே ரேஸ் ஒடும் போது ஒவ்வொருவராய் இலையை மூடி எழுந்திரிக்க ஆரம்பித்தார்கள். மாமாவும் சாதம், கூட்டு பெரியலுடன் இலையை மூடிவிட்டார். நான் சிறிதே வாங்கிய பருப்பு சாதத்தையும் எல்லா கூட்டுகளையும் மீதமில்லாமல் காலி செய்துவிட்டேன். பந்தியில் யாருமில்லை. நானும், எனக்காக காத்திருக்கும் மாமாவும் மட்டுமே. மாமாவுக்கு சங்கோஜமாய் இருந்ததோ என்னவோ, தெரியவில்லை, என்னை பார்த்து மாமா கேட்டார்,

‘என்ன மாப்பிளை மக (என் மனைவி) உங்களுக்கு சரியா சாப்பாடு போட மாட்டாளா?’

எனக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை. அங்கு இருந்த மூடப்பட்ட இலைகள் எல்லாம் வீணாக்க பட்ட உணவை மறைக்க முயன்று தோற்று போய்க்கொண்டிருந்தன. கல்யாண வீட்டுகாரர்கள், அந்தஸ்துக்கா, பெருமைக்கா உணவை பரிமாரினார்கள்? வந்தவர்கள், பேருக்காக சாப்பிடோம் என்று சொல்லி உணவை வீணடிக்கின்றார்கள். இப்படி நடப்பது இந்த ஒரு கல்யாணத்தில் மட்டுமல்ல, எல்லா கல்யாணத்திலும்தான். எப்படியோ, வீணடிக்கப் படுவது உணவுதான்.

சாப்பிட்டு முடித்து அங்கிருந்த உறவுக்காரர்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பினோம். சென்னை திரும்ப மாலையில்தான் ரெயில். காலையில் ஊர் திரும்பினேன். காலையில் காப்பி குடிக்கலாமென்றால், பால் வரவில்லை. பால் உற்பத்தியாளர்களின் ஆர்பாட்டம்தான் காரணம் என்று அடுத்த நாள் தினமலர் படிக்கும்போது தெரிந்து கொண்டேன். அதிலிருந்த செய்தியும், மன வருத்தத்தைதான் தந்தது.

ஆத்தூரில் பால்விலையை உயர்த்தக்கோரி சாலையில் 5000 லிட்டர் பாலை கொட்டியும், க‌றவை மாடுகளுடன் 200-க்கும் மேறபட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆத்தூர் புளியங்குறிச்சியில் பால்விலையை உயர்த்தக்கோரி தனியார் பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் சாலையில் மறியல் செய்து 5000 லிட்டர் பாலை கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். (தினமலர் - பிப்ரவரி10, 2011)

ஆத்துரில் மட்டுமல்லது தமிழ்நாடு முழுவதும் ‘பாலை கொட்டும்’ போராட்டம். ஒரு வேளைக்கு ஒரு பச்சிளங் குழந்தைக்கு 100 மில்லி லிட்ட்ர் என்றால்கூட இலட்சக்கணக்கான குழந்தைகளுக்கு பயன் பட்டிருக்கும். யாருக்கும் பயன் படாமல் பாழானது பால். ஆர்பாட்டத்திற்க்கும் உணவுதான் வீணாக்கப் படுகின்றது.

கால் வயிறும், அரை வயிறும் சாப்பிட்டு உயிர் வாழ்வோர் கோடி கணக்கில் உள்ள நம் போன்ற தேசத்தில், என் மாமா போன்றோரின் தனி மனித கோபத்திற்கும், பால் வியபாரிகளின் ஆர்ப்பாட்டத்திற்க்கும் உணவை வீணடிக்கும் உத்திதான் வழியென மனம் ஒப்பு கொள்ள மறுக்கின்றது.

(புகைபடம்- நன்றி:தினமலர்-பிப்ரவரி,10,2011)
பால்ராஜன் ராஜ்குமார்