புதன், 18 ஏப்ரல், 2012

தொடர்வது

அழுகை சத்தம் கேட்கின்றது
வாசல் கதவை மூடிவிடுகின்றேன்
அழுகை சத்தம் கேட்கின்றது
ஜன்னல்களையும் மூடிவிடுகின்றேன்
அழுகை சத்தம் கேட்கின்றது
அறைக்குள் சென்று விடுகின்றேன்
அழுகை சத்தம் கேட்கின்றது
படுக்கை விரிப்பால் போர்த்தி கொள்கின்றேன்
அழுகை சத்தம் கேட்கின்றது
அழுவது நானாகக்கூட இருக்கலாம்.


ஞாயிறு, 4 மார்ச், 2012

நிராகரிக பட்ட நிறம்

எல்லோரும் அணிந்திருந்தார்கள்
துக்கத்தின் மொத்த அடையாளமாய்
சின்ன துண்டு கருப்பு துணியை
சட்டையில் குத்தியிருந்தார்கள்
கருப்புதான் துக்கத்தின் அடையாளமாம்

வரும் தலைவனை எதிர்த்து
கோஷம் போட்டார்கள்
கருப்பு கொடி காட்டினார்கள்
கருப்புதான் எதிர்ப்பின் அடையாளமாம்

துக்கதிற்க்கும் சந்தோசமற்ற வாழ்வுக்கும்
கருப்புதான் குறியீடு
எதிர்ப்புக்கும் இணக்கமின்மைக்கும்
கருப்புதான் சித்தரிப்பு

அவன் திடமாயிருகின்றான்
உழைப்பாளியாயிருக்கின்றான்
நேசிக்க தெரிந்தவனாயிருக்கிறான்
அன்பானவனாயிருக்கிறான்
ஆனால் கருப்பாயிருக்கின்றான்
சமுதாயத்தில் கருப்பன்தான் கடைநிலை

அனைவருக்கும் கண்ணீரின் சுவையும்
இரத்ததின் நிறமும் ஒன்றுதான்
ஆனாலும் நிறங்களிலும்
கருப்புதான் நிராகரிப்படுகின்றது.

புதன், 15 பிப்ரவரி, 2012

முதலிரவு

இன்று காலையில்தான் சங்கரனுக்குக் கல்யாணம் முடிந்தது. முருகன் கோவிலில் வைத்து, மிகவும் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே அழைக்கப்பட்டு நடந்த கல்யாணம். சுருக்கமாக சொல்லியே ஏகப்பட்டக் கூட்டமாகிவிட்டது. நெருங்கிய சொந்தத்தில் என்று சொன்னால்கூட, ஒருத்தருக்குச் சொல்லி இன்னொருத்தருக்குச் சொல்லவில்லையென்றால் மனச்சடவுதான் வரும் ஊருக்குள்ளே. கல்யாணத்திற்கு வந்தவர், விஜயாவின் மாமாவை பார்த்து கேட்டார்,

“ ஏம்பா, வீரபாகு, பையன் கல்யணத்தை சுருக்கமா எடுக்கேனு சொல்லிப்புட்டு, தடபுடலா நடத்துறியே. நல்லதுதான் ............நடக்கடும்.....நல்லபடியா”

இதற்கு மாமா பதில் எதும் சொல்லாமல், சிரித்துக்கொண்டே,
“வணக்கம் மாப்பிள்ளே. யெங்கப்பா .....தங்கச்சிய காணோம்?, நீ மட்டும்தான் வந்தையா?” என்றார்.

”இல்லப்பா. சேர்ந்துதான் வந்தோம். அந்தா நின்னு பேசிக்கிட்டிருக்கா பார். வழியில் ஒவ்வொருத்தர்ட்டையும் நின்னு பேசி பேசி .....முகூர்த்தம் முடிவதற்குள் வந்திருவாள்னு நினைக்கேன்” என்று சொல்லி வாசல் அருகில் நிற்கும் தன் மனைவியை காண்பித்து, ஏதோ பெரிய ஜோக் சொன்னமாதிரி பலமாய் சிரித்தார் கனகராசு. விஜயாவின் மாமா வீரபாகுவும் கனகராசுவும் சமவயதை ஒத்தவர்கள். மாமன் மச்சான் முறை. இருவரும் சந்தித்துக் கொண்டால், கேலி கிண்டலுக்கு குறைவே கிடையாது.

”வாங்கண்ணே. இப்பதான் வர்ரேகளாக்கும்?” வந்தவரைப் பார்த்து கேட்டார் விஜயாவின் அத்தை கோமதியம்மாள். வந்திருந்தது, விஜயாவின் முகவூர் பெரியப்பா.

”அப்பவே வந்துடேன்மா. கல்யாணம், முருகன் கோயில்லேனு சொன்னயா, நான் பாட்டுக்கு பெரிய முருகன் கோயிலுக்கு போயிட்டேன். அங்கதான் சொன்னாக கல்யாணம் இந்தக் கோயில்லனு. சரி..... வந்ததே வந்துட்டோம்னு பெரிய முருகன் கோயிலுக்குப் போயி சாமி கும்பிட்டுகிட்டு, அப்படியே அம்மன் கோயிலுக்கும் போயிட்டு, அங்கிருந்து நடந்து வர்ரேன்.”

”சரிதான். வெள்ளிகிழமையும் அதுவுமா மூணு கோயிலுக்கும் போனால், புண்ணியம்தான். வாங்கண்ணே, மண்டபத்தில் போயி ஒரு கப் காபி குடிச்சிட்டுவாங்க” கோமதியம்மாள் சொன்னார்.

”அட நீ வேற.......முகூரத்தத்திற்கு நேரமாச்சிலே......கல்யாணம் முடிஞ்சதும் சாப்பிடுகிறேன்” முகவூர் பெரியப்பா.

”ஆமா இருந்து சாப்பிட்டுவிட்டுதான் போவணும். முகூர்த்தத்திற்கு இன்னும் நேரம் கிடக்கு. ஏய்...செல்வராசு.....பெரியப்பாவ பந்திக்கு கூட்டிட்டுபோயி இரண்டு இட்லியும் காப்பியும் பரிமாருடாப்பா” என்று அங்கு வந்துகொண்டிருந்த செல்வராசுவிடம் சொன்னார் கோமதியம்மாள். முகவூர் பெரியப்பாவும் சொல்வராசுடன் பேசிக்கொண்டே மண்டபத்துக்கு சென்றார்.

சிலபேர், முகவூர் பெரியப்பா மாதிரி அன்று மூன்று கோயிலுக்கும் போய்வந்து புண்ணியம் தேடிக் கொண்டார்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் இரண்டு முருகன் கோவில் உண்டு. ஒன்று சின்ன முருகன் கோவில், மற்றது பெரிய முருகன் கோவில். மதுரை ரோட்டிலிருந்து பைபாஸ் ரோடு பிரிகின்ற இடத்தில், பிள்ளைமார் கல்யாண மண்டபத்திற்குப் பக்கத்தில் இருப்பதுதான் சின்ன முருகன் கோவில். கோவில் பெரியதுதான், ஆனால் சுற்றுப் பிரஹாரம் சின்னது, அதனால்தான் சின்ன முருகன் கோவில்னு பேர். பொதுவா கல்யாணத்தில் தாலிகட்டை மட்டும் கோவிலில் வைத்துக்கொண்டு, சாப்பாடு, ரிசப்ஷன் எல்லாம் பக்கதிலிருக்கும் மண்டபத்தில் வைத்துக்கொள்வர்கள். பெரிய முருகன் கோவிலுக்கு பைபாஸ் ரோடுலேயே கொஞ்ச தூரம் போகணும். மாரியம்மன் கோவிலுக்குப் பக்கத்தில் இருக்கும். ரோட்டுக்கு ஒரு பக்கத்தில் முருகன் கோவில், மறு பக்கத்தில் மாரியம்மன் கோவில். விஜயாவுக்கு கல்யாணம் பெரிய முருகன் கோவிலில் வைத்துத்தான் நடந்தது. விஜயாவின் இஷ்ட தெய்வமும் முருகன் தான். அவள் மிக மிக ரகசியமாக வைக்கும் வேண்டுகோள்கள் எல்லாம் முருகனிடம்தான். பரிட்சையில் பாஸானது, நல்ல கணவர் அமைந்தது ...இப்படி சில நிகழ்வுகள், அவளுக்காக முருகன் நிறைவேற்றிய கோரிக்கைகள்தான். அதுபோல் வாழ்க்கையில் உள்ள குறையைச் சொல்லி அழுவதும் முருகனிடமே.

கோமதியம்மாளிடம், கோயில் பூசாரி சந்தனம் கேட்டார். கோமதியம்மாள், விஜயாவிடம், சந்தனம் மண்டபத்தில் மணப்பெண் அறையில் இருக்கின்றது என்றும், போய் எடுத்துவரச்சொல்லி சந்தன கும்பாவைக் கொடுத்தார். சந்தன கும்பாவுடன் மணப்பெண் அறைக்கு விஜயா சென்றாள். மணப்பெண் சரசுக்கு அலங்காரம் முடிந்து, அவளின் தோழிகள் ஜடைநாகத்தை ஹேர்பின் வைத்து கூந்தலில் மாட்டிக்கொண்டிருந்தார்கள்.

”பொண்ணுக்கு அலங்காரம் முடிந்ததா? ” என்று கேட்டாள் விஜயா. கொஞ்சம் கோணலாகியிருந்த நெத்திச்சூடியை சரி செய்து, சுமார் இரண்டு அடி பின்னால் சென்று பார்த்த விஜயா,

”ம்.....இப்பத்தான் நெத்திச்சூடி சரியாயிருக்கு” என்றாள்.

விஜயாவின் சொந்த சித்தி மகள்தான் சரசு. அக்கா...அக்கானு....எப்பவும் கூடயேதான் கிடப்பா. மாநிறம், ஒல்லியான தேகம். கட்டியிருந்த நீல நிற பட்டுப்புடவை நல்ல பொருத்தமாய் இருந்தது. பூசாரி சந்தனம் கேட்டது ஞாபகம் வந்தவளாய், அதைத் தேடி எடுத்தாள். வாழை இலையில் மடித்து வைத்திருந்த சந்தனத்தைக் கும்பாவில் விட்டு கரைத்தாள். நல்ல மணம். இவ்வளவு வாசனையுள்ள சந்தனம், ஸ்ரீவில்லிபுத்ததூரிலேயே சிவனாண்டி பூக்கடையில்தான் கிடைக்கும். நன்றாகக் கரைத்து முடித்தவள், விரலில் ஒட்டியிருந்த சந்தனத்தைக் கும்பாவின் விளிம்பில் வழித்தாள். அப்படியும் போகவில்லை.

கை நிறைய ஒட்டியிருந்த சந்தனத்தை ”சரசு, கைய காட்டு...” என்று சொல்லி, அவள் கையில் தேய்த்துவிட்டு, மண்டபத்தை நோக்கி நடந்தாள். இவள் கல்யாணத்திலேயும், இப்படித்தான், சிவனாண்டி பூக்கடையிலிருந்துதான் சந்தனம் வாங்கியிருந்தார்கள். உடன் இருந்த தோழிகள், இவள் கையில் சந்தனம் பூசிவிட்டார்கள். அப்போது ஒருத்தி,

”ஏய்....நிறய பூசாதீங்கடி.....அப்புறம்.....மாப்பிள்ளை விஜயாவை பார்த்து மயங்கிட்டு, சந்தன வாசனையில்தான் மயங்கிட்டேனு சொல்லிருவாருடி....” னு சொல்லி கிண்டல் செய்தாள். அந்த நினைப்பில், அவளுக்கு வெட்கமும், சிரிப்பும்தான் வந்தது. அப்போதுதான், சாப்பிட்டு கை கழுவ வந்த முகவூர் பெரியப்பாவை பார்தாள்.

”வாங்க பெரியப்பா” என்றாள்.

நிமிர்ந்து பார்த்த பெரியப்பா, அனிச்சையாக, “எப்படிமா இருக்கே விஜயா?” என்றார்.

”நல்லா இருக்கேன் பெரியப்பா” என்று பதில் சொல்லிவிட்டு, கோவிலை நோக்கி நடந்தாள். அவளையே பார்த்து கொண்டே, “ம்ம்...... நல்லா இருக்கேனு சொல்லிட்டுப்போவுது இந்த புள்ள.....” என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டார்.

முகூர்த்தம் நல்லபடியாக முடிந்தது. கடைசி பந்தியில்தான் சாப்பிட்டாள் விஜயா. கொஞ்சமாய்த்தான் சாப்பிட்டாள். சாப்பாடு ருசியாகத்தான் இருந்தது, ஆனால் அவளால்தான் சாப்பிட முடியவில்லை. கனகா அத்தையுடன் சேர்ந்து, மண்டபத்தைக் காலிபண்ணிவிட்டு வீட்டுக்கு வரும்போது சாயங்காலமாகிவிட்டது. குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். எல்லாம் கல்யாணத்திற்கு வந்தவர்கள்தான். இன்னும் ஒரிரு நாட்களுக்கு வீடு இப்படித்தான் இருக்கும். ஆனால் எல்லா பிள்ளைகளும் விஜயா சொன்னபடி கேட்பார்கள். விஜயாவிடம் நல்ல ப்ரியமும் கூட. விஜயா சித்தி, விஜயா அத்தைனு ஒண்ணு மாத்தி ஒண்ணா வந்து அவளிடம்தான் கேப்பார்கள். அவ்வளவு ஏன்?, அவர்களுக்குள் சண்டை வந்தால் கூட, விஜயாவிடம்தான் வருவார்கள். பிள்ளைகள் அடித்த லூட்டியில், நேரம் போனதே தெரியவில்லை. குழந்தைகள் எல்லோரும், கல்யாண மாப்பிள்ளையும் பெண்ணுடன் சேர்ந்தே சாப்பிட்டார்கள். பிறகு, பெரியவர்கள் எல்லாம் சாப்பிட்டு முடித்தனர்.

கோமதியம்மாள், ”விஜயா, அந்த பித்தளை விளக்கை கொஞ்சம் கழுவி வைய்மா” என்றார். பின்னர், சரசு பக்கம் திரும்பின கோமதியம்மாள்,

“சரசு, அக்கா விளக்கை கழுவி எண்ணெய் போட்டு தருவாள். உங்க ரூமில வைத்து விளக்கேத்துமா”

”சரி அத்தே” எனறு சொல்லி தலையாட்டினாள்.

”பிள்ளைகளும் பெண்களும், முன்னால் ஹாலில் ஜமுக்காளம் விரித்துப் படுங்க. நேரமாவுது” என்று சொல்லிவிட்டு, சொல்வராசுவைக் கூப்பிட்டு, பாய்களை எடுத்து மொட்டை மாடிக்கு ஆம்பிள்ளைகள் படுக்க கொண்டுபோகச்சொன்னார். ஹாலில் விஜயாதான் ஜமுக்காளத்தை விரித்தாள். அவளும், ஒரு ஓரத்தில் வலது கையை மடக்கி தலைக்குவைத்து சுவத்துப் பக்கமாய்ப் பார்த்து படுத்துக்கொண்டாள். சிறிது நேரத்தில் கோமதியம்மாளும், புது பொண்ணு, முதலிரவு அறைக்குள் சென்றபின், ஹாலுக்கு வந்து லைட்டை அணைத்துவிட்டு படுத்துக்கொண்டார். விஜயாவிற்குத் தூக்கம் வரவில்லை. ஆறு வருடங்களுக்கு முன்பு நடந்த அவளின் முதலிரவுதான் நினைவிற்கு வந்தது.

அறைக்குள் நுழையும் போது சந்தோசமும், புதிரும், படபடப்பும் கலந்த ஓர் உணர்வுதான் இருந்தது விஜயாவுக்கு. புது அனுபவமாயிருந்தது. பிடித்துமிருந்தது. கணவர்தான், “நீ நல்லா பேசுவேனு சொன்னாங்க” என்று சொல்லி, அவளின் கன்னத்தை தொட்டு அவர் பக்கமாய் திருப்பினார். கணவரின் விரல்கள் பட்டதும், அவளுக்கு அந்த ஸ்பரிசத்தில் உடம்பெல்லாம் புல்லரிதத்து. அவளுக்கும் பேசவேண்டும் போலத்தான் இருந்து. ஆனால் முடியவில்லை. அவளைப் பார்த்து,

”நான் பேசுவதாவது பிடித்திருக்கா....” என்று கேட்டதற்கு.
”ம்..” னு பதில் சொன்னாள்.
”பதில் சொல்லுறத பாத்தா.......பேசிக்கிட்டிருக்கிற ஆளத்தான் பிடிக்கல போல”
” பேசிக்கிட்டிருக்கிற ஆள புடிக்கும்................” அன்று சொல்லிவிட்டு, பொருள் அறிந்து வெட்கப்பட்டாள்.
”யப்பா......முத்து...முத்தாய் கொட்டுதுப்பா.........நல்லாதான் பேசுதா...” னு கிண்டல் செய்தார்.

அவர் அருகில் இருப்பதே சுகமாய் இருந்தது. அவரின் பேச்சு, அவளை இயல்புக்கு கொண்டு வந்தது. இருவரும் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அன்றிலிருந்து, இன்றுவரை கணவரின் அன்பு குறைந்ததே இல்லை. எதற்கெடுத்தாலும், “விஜயா....விஜயா” னு மூச்சிக்கு முன்னூறு தடவை கூப்பிட்டுக்கிட்டிருப்பார். பேச்சுக்கும், மூச்சுக்கும் மட்டுமல்ல விஜயா. குடும்பத்தில் எடுக்கும் முடிவுகளுக்கும், விஜயா வேண்டும். வளமாயிருந்த வாழ்க்கையை மாற்றியது ஒரு பூச்சி. ஆமா... பூச்சியால்தான் வாழ்க்கையே மாறிப்போனது. அது விசப்பூச்சிஇல்லை. அது கொட்டியதாலோ, கடித்ததாலோ வரவில்லை எந்த தீங்கும். வந்த பிரச்சினை வராததால் வந்தது. கல்யாணமாகி மாதங்கள் ஓடியும்......ஒரு புழு....பூச்சிகூட தங்கவில்லை அவள் வயிற்றில். அந்தா இந்தானு ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. முருகன் கோவிலில் ஆரம்பித்து, போகாத கோவில் இல்லை. அவளின் மாமியாருக்கும் மன வருத்தம்தான். ஆணோ பெண்ணோ, ஒரு குழந்தை வேண்டும். திருமணமான இரண்டு மூன்று ஆணடுகள் கோயில் கோயிலாகவும் ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாகவும் சுற்றினாள். கடவுளும் கண்திறக்கவில்லை, வைத்தியமும் பலன் அளிக்கவில்லை. வருடம் செல்ல செல்ல மனம் அழுது ஒய்ந்தது. நான்காம் ஆண்டில் நம்பிக்கைகூட அவளைவிட்டு நகர்ந்து சென்றது. கொஞ்சம் கொஞ்சமாய் மனதைத் தேற்றிக்கொள்ள பழக்கிக்கொண்டாள்.

அவளின் மாமியார்தான், மகனுக்கு மறுமணம் பற்றிய பேச்சை எடுத்தார்கள். அதைக் கேட்டு, அவளைவிட அவளின் கணவனே துணுக்குற்றான். மறுதலித்தான். மனம் ஒப்பாமல், விஜயாவிடம் ஒரு நாள் அழுதேவிட்டான். விஜயாதான், இரண்டாம் கல்யாணம் செய்வது ஊர் வழக்குதானே என்று சமாதானம் சொன்னாள். என்னதான் ஊர் வழக்கு என்றாலும், அவனுக்கு விஜயாவைவிட்டுவிட்டு இன்னொரு பெண்ணுடன் வாழ்வது மனதிற்கு சரியெனப் படவில்லை. ஒரு வழியாக வீட்டிலிருந்த எல்லோரும் சொல்லி அவனை மறுமணத்திற்கு சம்மதிக்க வைத்தார்கள். அதில் பெரும் பங்கு விஜயாவிற்கே. தெரிந்த பெணணாய்ப் பார்த்து பேசி முடித்து, கல்யாணமும் நடந்தேறியது. அவள் கணவன் சங்கரனுக்கும், சித்தி மகள் சரசுக்கும் இன்றுதான் முதலிரவு. அவர்களை அனுப்பிவைத்துவிட்டு விஜயா இங்கு படுத்திருக்கின்றாள். இவளுக்கும் இது முதலிரவுதான். ஆம், கணவனை இன்னொரு பொண்ணுடன் பகிர்ந்தளித்த முதல் இரவு. அவளையறியாமல் அவள் கண்களிலிருந்து வழிந்த வெதுவெதுப்பான கண்ணீர் பட்டு விஜயா, சுய நினைவுக்கு வந்தாள். யாராவது பார்த்திருப்பார்களா? என்று திரும்பி பார்த்தாள். அந்த இருண்ட இரவில் எல்லோரும் தூங்கிப் போயிருந்தார்கள், இவளைத் தவிர.


நன்றி: பண்புடன்



புதன், 1 பிப்ரவரி, 2012

பிணங்களின் கனவுகள்

மனதில் கனவு வந்தது
வயிற்றில் பசி வந்தது
கனவை பசி தின்றது
பசி உடலை தின்றது
உடல் உயிரை தின்றது
கண்ட கனவு பிணத்தோடு

திங்கள், 30 ஜனவரி, 2012

கடவுளுக்காக காத்திருப்போம்

கைலாயதிலிருக்கும்
சிவ பொருமானே

பாற்கடலில்
பள்ளி கொள்ளும் திருமாலே

பரமண்டலத்திலிருக்கும்
எங்கள் பிதாவே

எப்போது எங்கள்
சேரிக்கு வருவீர்கள்?

புதன், 25 ஜனவரி, 2012

மெல்ல நகரும் நாட்கள்

நாடு இரண்டாயிருக்கின்றது
உண்ணாவிரதம் இருப்பவர்கள்
உணவில்லாமல் இருப்பவர்கள்

உங்களுக்கு தெரியுமா?
இந்த இரண்டையும்
நான் விரும்பவில்லை என்று

ஊழல் இரண்டாயிருக்கின்றது
லஞ்சம் கொடுப்பவன்
லஞ்சம் வாங்குபவன் என்றல்ல

ஒரு ரூபாய் வருமானத்தில்
கோடி செய்தவர்கள்
ஊழல் ஒழிக என்று சொல்லி
ஊழல் செய்யும் பூசன்கள்
.

நாடு இரண்டாய் இருக்கின்றது
உங்களுக்குத்தான் தெரியுமே
இந்த இரண்டையும்
நான் விரும்பவில்லை என்று.

புதன், 18 ஜனவரி, 2012

ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளம்

மனித கலாச்சாரமே நதி கரையில்தான் பிறந்து வளர்ந்ததாய் சரித்திர ஆய்வாளர்கள் சொல்லுவார்கள். நாகரீகத்தின் தொட்டில் நதி கரைகள்தான். சுமேரியாவிலிருந்து சிந்துசமவெளி கலாச்சாரம் வரை நதி கரையைதான் நாகரிகத்தின் வெளிப்பாடுக்கான இடங்களாக குறிப்புகளில் உள்ளன.

நதிகரையில் பிறந்தவர்கள், தங்களின் வாழ்க்கையை அந்த நதியின்றி நினைத்துகூட பார்க்க முடியாது. அது கரை புரண்டு ஒடும் கங்கையானாலும் சரி, வருடத்தில் முழுவதும் மணல் ஓடும் வைகையானாலும் அவர்களுக்கு அப்படி ஒரு பிணைப்பு நதியோடு. வைரமுத்து வராக நதி, வைகை நதின்னு அவர் எழுத்தில் நதிகளின் நினைவுகள் பெருக்கெடுத்து ஓடும்.

நதிகளில்ல சிற்றூர் பேருர்களிலும் கலாச்சாரத் தொட்டில், அங்கு இருக்கும் குளங்கள்தான். அதனால் மனித கலாசாரம் நீர் சார்ந்தது என்று தான் சொல்ல வேண்டும். அப்படிபட்ட குளம் சார்ந்த ஊர்தான் ஸ்ரீவில்லிபுத்தூர். அங்கு இருக்கும் குளம்தான் ‘திருமுக்குளம்’. ஊரில் மக்களுக்கு தேவையான பெரிய நீர் தேக்கமாயிருக்கின்றது.

சுகா எழுதிய ’மூங்கில் மூச்சு’ல், திருநெல்வேலியில் தாமிரபரணி ஆறு ஒவ்வொரு வீட்டின் ரேசன் கார்டிலும் சேர்க்கப்பட்டிருக்கும் என்று குறிப்பிட்டிருப்பார். ஆனால் என் போன்ற ஸ்ரீவில்லிபுத்தூர்காரர்களுக்கோ அல்லது அங்கு இளம்பிராயத்தை கழித்த ஒவ்வொருக்கும் ‘திருமுக்குளம்’ என்பது நினைவு கார்டிலும் (Memory card) பதியப்பட்டிருக்கும். சுலபத்தில் அழிக்க முடியா பதிவாயிருக்கும்.

நான் படித்த சி.எம்.எஸ் மேல் நிலை பள்ளிக்கு, திருமுக்குளம் வழியாகத்தான் போக வேண்டும். நான் உடம்பு சரியில்லாத நாட்களைதவிர மற்ற நாட்களில் பள்ளிக்கு செல்லாமல் இருந்தில்லை. திருமுக்குளத்தை ஒரு நாளும் பார்க்காமல் இருந்தில்லை. பள்ளி முழு ஆண்டு விடுமுறையிலும் குளத்தை பிரிந்தது இல்லை. இன்னும் சொல்லப்போனால் அப்போதுதான் நாள் முழுவதும் குளத்தில் இருப்போம். கோடையில், நடுக்குளத்தில் மட்டும் கொஞ்சம் தண்ணீர் இருக்கும், மற்றபடி தண்ணீர் வற்றிய குளம்தான் எங்களின் கிரிக்கட் மைதானம். குறைந்து 10 அல்லது 15 குழுக்கள் எப்போதுமே விளையாடுவார்கள்.

ஒவ்வொரு வருடமும் நிறையாது, நல்லா மழை பெய்தால்தான் நிறையும். குளம் நிறையும் போது பார்பதற்க்கு மனதிற்க்கு சந்தோசமாயும், கண்ணுக்கு ரம்மியமான காட்சியாகவும் இருக்கும். குளம் நிறைந்தவுடன், போலீஸும், முனிசிபாலிட்டிலிருந்தும் தண்டோரா போடுவார்கள் – ’திருமுக்குளத்திற்கு பெற்றோர், தங்கள் குழந்தைகளைத் தனியே குளிக்க அனுப்ப வேண்டாம்’. ஆனால் அதில் ஒரு சோகம் என்னவென்றால், ஒவ்வொரு வருடமும், குளம் நிறைந்தவுடன் ஒரு பையன் நீரில் முழுகி செத்துவிடுவான். இறந்த செய்தி அறிந்தவுடன், போட்டது போட்ட படியே, அது பள்ளிகூடம் நடக்கும் நாளாயிருந்தால், எங்க அம்மா பள்ளிகூடத்திற்க்கே பதட்டத்துடன் வந்துவிடுவார்கள். நானும், எனது தம்பிகளும் பத்திரமாய் இருப்பதை பார்த்தால்தான் அவர்களுக்கு நிம்மதி. ‘பள்ளிகூடம் விட்டவுடன், ஒழுங்காக வீட்டுக்கு வரணும். திருமக்குளம் பக்கம் போன........”னு மிரட்டி செல்வார்கள்.

விறகுக்கு மலைக்கு செல்லும் விறகுக்கார பெண்கள் ”மேற்க நல்ல மழை, இன்னும் இரண்டு நாளில் திருமக்குளத்துக்கு தண்ணீர் வரும்’னு சொல்லும் போதே எங்களுக்கெல்லாம் உற்ச்சாகம் தொற்றி கொள்ளும். குளத்தின் மூணு மதகிலயும் தண்ணீர் அருவியா கொட்டுதுனு சொல்லும் போதே எங்க அம்மா மற்றும் தெருவிலிருக்கும் பெண்களுடன் சேர்ந்துபோய் பார்போம். குளம் நிறம்பியதும் மீண்டும் ஒருமுறை கூட்டமாய் சுற்றுலா பயணம் இருக்கும். ராஜபாளையத்திலிருக்கும் எங்கள் அக்காகூட இதற்க்காக வந்து போவார்கள்.

குளத்தின் தென்கிழக்கில் இருக்கும் அரச மரத்து துறையில் பையங்க யாரும் குளிக்க மாட்டார்கள். பெண்கள்தான் குளிப்பார்கள். அங்கிருக்கும் சுவற்றிலிருந்து ‘தொம்....தொம்’ என்று குதித்து நீச்சல் அடித்தால் பெண்கள் வைவார்கள். அதனால் பையங்க எல்லோரும் கீழ்பக்கக்கரையில் இருக்கும் படிதுறையில்தான் குதித்து குளிப்போம், தண்ணீர் நிறைந்திருக்கும் போது தீர்த்தவாரி மண்டபதின் மேல்ஏறி, அங்கிருந்தும் குதிப்போம். மணி கணக்காக குளிப்போம். நேரம் போவதே தெரியது. பசி எடுத்தாதான் வீட்டுக்கு போவோம். கலை வேலையில் நல்ல கூட்டம் இருக்கும். மேலேயிருந்து குதித்தால் சில பெரியவர்கள், வேறு படிதுறைக்கு துரத்திவிடுவார்கள். மத்தியானத்திற்க்கு பின் போனால் ஜாலியாக குளிக்கலாம். ஆனால் அந்த நேரத்தில், அங்கு ஒரு பைத்தியம் வரும். நிஜமாலுமே, அந்த ஆள் பைத்தியம்தான். அழுக்கான லுங்கி மட்டுமே உடுத்தியிருக்கும். கையில் ஒரு நீளமான கம்பு இருக்கும். அதனால் எங்களுக்கு என்ன பிரச்சனைனா? எங்களை மாதிரி சின்ன பையன்களை குளிக்க விடாமல் விரட்டும். எங்களை விரட்டிவிட்டு ஆளில்லாத படித்துறையில் இறங்கி போயி, கையிலிருந்த் கம்பால் தண்ணீரை விலாசு விலாசும். அதற்கு, பயந்து கொஞ்ச தூரம் சென்று விடுவோம். தூரதிலிருந்து, அந்த பைதியத்தை நோக்கி கல்லெறிந்து ”தகர டப்பா”னு காத்தினால் அடிக்க வரும். திருமுக்குளத்தில் நீச்சலடிப்பது போக இதுவும் ஒரு விளையாட்டாய் ஆகிவிடும்.

ஒரு நாள் இதை பார்த்த சுந்தரம் மாமா, எங்களையெல்லாம் திட்டிவிட்டு, அந்த பைத்தியத்திடம் போய், ‘மூர்த்தி வீட்டுக்கு போடா, அவனை நான் கூட்டியாறேன்”னு சொன்னார்கள். மந்திரத்திற்க்கு கட்டுபட மாதிரி, பைத்தியம் அப்படியே தெருவில் இறங்கி நடந்து சென்றது. அதன் பின் எங்களை கூப்பிட்ட சுந்தரமாமா, ’டேய் அவனை கல்லை கொண்டு அடிக்காதங்கடா. அவன் மகனுக்கு உங்கள் வயசு இருக்கும் போது இந்த குளத்தில் முழுகி செத்து போய்ட்டான்டா. அத நெனச்சி நெனச்சி அவனுக்கு பைத்தியமே பிடிச்சி போச்சி. அதான் உங்கள மாதிரி பையன்களை குளிக்கவிடாமல் வெரட்டுகிறான். இந்த தண்ணீதான என் மகனை கொன்னதுனு, கம்பால தண்ணிய் போட்டு அந்த அடி அடிக்கிறான். அவன் பையனை நான் கூட்டிவருவதாய் சொன்னவுடன் எழுந்து போயிட்டாம்பாரு. நல்ல நெசவாளிடா வினாயக மூர்த்தி”.

இதை சொல்லிவிட்டு, துண்டை இருப்பில் கட்டிக் கொண்டு, வேட்டியை அவிழ்த்து தண்ணில் நனைத்து துவைத்து குளிக்க ஆரம்பிதார் சுந்தரம் மாமா. எங்களுக்குத்தான அதன் பின் குளிக்க முடியவில்லை.

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

சென்னையில் கை ரிக்‌ஷா

புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

தை முதல் நாள்தானே தமிழ் புத்தாண்டு? கலைஞர், தை முதல் நாளை தமிழ் புத்தாண்டு என அறிவித்தது, தமிழ் அறிஞர்களின் கருத்துகளைதான் (கலைஞரின் சொந்த முடிவல்ல). தை 1 தான் தமிழ்புத்தாண்டென அறிஞர்கள் கூறுவதை படித்துவிட்டு நல்ல சிந்தனையுடன் தை புத்தாண்டை கொண்டாடி மகிழ்வோம்.


தி.மு.க. ஆட்சியை மக்கள் கடந்த மே மாதம் தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறிந்தார்கள், அ.தி.மு.க. ஆட்சி வந்தது. பதவி ஏற்ற அரசு மேம்பட்ட நிர்வாக்தையும் மக்கள் நல திட்டங்களையும் தரும் என எதிர்பார்த்தார்கள். ஆனால் அ.தி.மு.க. அரசு தி.மு.க.வினர் மீது தீவிர நடவடிக்கையும், அதி தீவிரமாய் தி.மு.க. அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்களை ரத்து செய்தார்கள். அ.தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஆறு மாதத்தில், மூடு விழா நடத்திய திட்டங்களில் சில;

· சமச்சீர் கல்வித் திட்டம் ஒழிப்பு
· செம்மொழி நூலகம் ஒழிப்பு
· அண்ணா பல்கலைகள் ஒழிப்பு,
· தொல்காப்பிய பூங்கா முடக்கம்,
· சென்னை புறநகர் போலீஸ் கமிஷனரகம் ரத்து,
· செம்மொழி பூங்கா பெயர் மறைப்பு
· முத்தமிழ் பேரவை
· மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கம்
· இலவசமாக கிடைத்த மருத்துவ இன்சூரன்ஸ் திட்டம் ரத்து
· அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றம்
· தை முதல் நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு’ என்ற முந்தைய அரசின் அறிவிப்பை மாற்றி ‘சித்திரை முதல்நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு’ என்று அறிவித்தது,
· சட்ட மேலவையை மீண்டும் கொண்டு வரும் திட்டம் ரத்து


கலைஞர் அரசு கொண்டுவந்த திட்டங்கள் என்பதற்காகவே நல்ல திட்டங்கள் எல்லாம் ரத்து செய்யப் படுகின்றது. கலைஞர் ஆரம்பித்ததை ரத்து செய்கின்றது அ.தி.மு.க அரசு. அப்படியானால், கலைஞரால் ஒழிக்கபட்டது ஆரம்பிக்க படுமோ?

கலைஞரால் ஒழிக்கப்பட்ட “கை ரிக்‌ஷா” மீண்டும் துவக்கப்படால், தமிழ் நாடு முழுவதும் கைரிக்‌ஷாதான். கை ரிக்‌ஷா அறிமுகத்தினால் ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்பு என அரசு அறிக்கை வெளியிடலாம். அரசின் நடவடிக்கையால் மசு கட்டுபடும் (air pollution) என சில அறிவு ஜீவிகள் வரவேற்கலாம் (குழந்தைகள் நல மருத்துவமனையாகஅண்ணா நூற்றாண்டு நூலகம் மாற்றபடும் என்ற அறிவிப்பு வந்த போது, அதை வரவேற்று தினமலர் செய்தி வெளியிட்டிருந்தது).




Picture Courtesy: http://www.thingsasian.com/stories-photos/3426

புதன், 11 ஜனவரி, 2012

அழிக்க விரும்பா பிம்பங்கள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் சி.எம்.எஸ். மேல்நிலை பள்ளியில் படிக்கும் போது படிப்பு மற்றும் விளையாட்டு (பள்ளியின் அணியிலிருந்ததால் தினமும் பேஸ்கட்பாலும், விடுமுறை நாட்களில் கிரிகெட்டும்) மட்டும்தான் பள்ளி வாழ்க்கை. அதைவிட்டால் பொழுது போக்கு என்றால் கதை புத்தகம் படிப்பது, ஓவியம் வரைவது மற்றும் நண்பர்களுடன் அரட்டை அடிப்பது. நண்பர்களுக்கு இருந்த மாதிரி எனக்கு சினிமாவில் விருப்பமே இருந்ததில்லை. பின்னர் புனித சவேரியார் கல்லூரி, பாளையம்கோட்டையில் புகுமுக வகுப்பில் சேர்ந்த போது படிப்பு மட்டுமே வாழ்கையாய் போனது. அடுத்த ஆண்டு நல்ல கல்லூரியும், விரும்பிய பாட படிப்பும் கிடைக்கவேண்டும் என்பதால் அப்படி அமைத்துக் கொண்ட வாழ்வு. இளம்கலை படிப்புக்காக கல்லூரியில் நுழைந்த போது வாழ்வே வித்தியாசமாவும் சுதந்திரமாயும் உணர்ந்தேன். ஆனால் மூன்று மாதத்தில் கேள்விப்படாத நிகழ்வுகள் நடந்தேறின கல்லூரியில். உடன் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவன், முந்தய நாள் இரவு ஹாஸ்டலில் மாணவர்களுக்குள் நடந்த கோஷ்டி தகறாறில் இரண்டு சீனியர் மாணவர்களுக்கு கைகள் உடைந்து போனதாய் சொன்னான். எலும்பு உடையும்படியான தகறாரா? அதுவும் 18 அல்லது 19 வயது பையன்களுக்கா? அப்படி என்ன அவர்களுக்குள் பிரச்சனை? ஒண்ணுமே புரியவில்லை முதலில். இந்தமாதிரி தகராறு அடிக்கடி நடந்தன. தகராறின் தன்மையையும் சேதத்தையும் பொறுத்து சில நாட்களோ, வாரங்களோ கல்லூரியை மூடிவிடுவர்கள். முதலாம் ஆண்டு முழுவதுமே தகராறின் காரணம் தெரியாவிட்டாலும், கல்லூரிக்கு விடுப்பு என்பதால் குஷியாகத்தான் இருந்தது. போகப்போக வகுப்புகள் நடந்த நாட்களைவிட கல்லூரி மூடப்பட்ட நாட்கள்தான் அதிகமாகின. மூடப்பட்ட நாட்களில் வீட்டிலிருந்த நாட்கள் போரடிக்க ஆரம்பித்தன.

இரண்டாம் ஆண்டில்தான் புரிந்தது தகராறின் காரணம் ஜாதிய வெறி என்பது. அப்போதுதான் எனக்கும் ஞாபகம் வந்தது, கல்லூரியில் சேர்ந்த போது, பல சீனியர் மாணவர்கள் ராகிங்கின் போது என்னுடைய ஜாதியை கேட்டது. இந்த கேள்வியே, என்னை எங்க அப்பவிடம் கேட்டு ‘நான் எந்த பிரிவில் வருவேன் – உயர் ஜாதியா? தாழ்ந்த ஜாதியா? கீழான ஜாதியா?’ என்று விளங்கிகொள்ள செய்தது. ஆனாலும் உடன் படிக்கும் சக மாணவர்களை வகை பிரிக்கவில்லை, இனம் பார்த்து சேரவுமில்லை. நான் மட்டுமல்ல, நிறைய மாணவர்களும் அப்படித்தான் – ஜாதியை பற்றி அறிவற்றவர்களாயும் அல்லது ஆர்வமற்றவர்களாயுமே இருந்தோம். ஆனால் இதற்க்கு மாறாக ஜாதிய வெறியில் ஊறித்திளைத்த கிராமத்திலிருந்தோ அல்லது குடும்ப பின்னணியிலிருந்து வரும் மாணவர்கள், ஜாதிய பிம்பங்களுடந்தான் வலம் வருவர்கள். அதுவும், தான் இன்ன ஜாதி என்று மிகவும் செருக்குடன். சரி, அவனவன் ஜாதி அவனுக்கு உயர்வாக தெரிந்தாலும் பரவாயில்லை. மற்றைய ஜாதிகாரர்களை, குறிப்பாக கீழ் ஜாதிகாரர்களை வசைபாடுவதையே வழக்கமாக்கி கொள்ளுவார்கள். உதாரணத்திற்க்கு,

ஏன்டா *****நாய் இங்கு வாரான்? (கீழ் ஜாதியின் பெயரை செல்லி அத்துடன் ‘நாய்’ என்ற விகுதியும் இணைந்தே உரையாடல்கள் இருக்கும்)

ஹாஸ்டல் மெஸ் நேரத்திற்க்கு பின்னால் லேட்டாக செல்லுவார்கள். அங்கு ஒண்ணுமே இருக்காது சாப்பிடுவதற்க்கு. உடனே. “*****நாய்கள் வந்து தின்னுட்டு போயிட்டனுகளா?”னு கேக்க வேண்டியது.

இப்படி ஜாதிய வெறி வளர்ந்து, நாங்கள் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது நடந்த தகராறில், இரண்டு மாணவர்கள் அடித்துக் கொல்லப்பட்டார்கள். வயது 18, 19ல் இருப்பவர்கள், சக மாணவனை கம்பால், இரும்பு கம்பியால் அடித்து கொன்றார்கள். என்ன ஒரு வக்கிரமம், என்ன வெறி? அடித்தது, பணக்கார ஏழெட்டு மேல் ஜாதி பசங்கள். செத்தது, ஏழை தலித் மாணவர்கள். கோர்ட் கேசுனு நடக்கும் போது, பார்த்த சாட்சியாக எந்த மாணவனும் வர பயந்தார்கள் அல்லது பயமுறுத்தப் பட்டார்கள். சரியான சாட்சியஙகள் இல்லாததால், மரண தண்டனையிலிருந்தோ, ஆயுள் தண்டனையிலிருந்தோ தப்பிவிட்டார்கள். சில வருட படிப்பு நாசமானது. அது ஒன்றும் அந்த பணக்கார பசங்களுக்கு பெரிதில்லை. அது சரி, ஆனால், எப்படி இரண்டு மாணவர்கள் கொலையுண்டார்கள்? தண்டனை யாருக்கு? அதற்கு, இரண்டு ஆட்களை பணம் (கூலி) கொடுத்து, அவர்கள்தான் கொலைசெய்ததாய் சொல்லச் சொல்லி, தண்டனை பெற செய்தார்கள். சாட்சியங்கள் இல்லை, நடந்தது ஊரைவிட்டு தொலைவிலிருந்த இடத்தில், இரவில் நடந்த கொலைக்கு காலையில்தான் போலீஸ் வந்தது, அழிக்கபட்ட தடயங்கள், பணபலம், செத்தவர்களுடைய பெற்றோர்கள் கூலிகள், சமுதாயத்தில் பலமற்றவர்கள் என கொலையாளிகளுக்கு சாதகம்தான் நிறைய.

இது நடந்தது 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அப்போது கல்லூரியிலிருந்து படித்துமுடித்து மாணவர்களுக்கு இப்போது வயது 50. இவர்கள் எல்லாம், சிறந்த நிர்வகிகளாக தனியார் துறைகளிலும், அரசு பணியில் உயர் அதிகாரிகளாவும், கல்லூரிகளில் பேராசிரியர்களாகவும் இருக்கின்றார்கள். இவர்கள் சேர்ந்து, கூகுள் குரூப் ஆரம்பித்து நடத்தி வருகின்றார்கள். சிலரின் உழைப்பால், கல்லூரியில் படித்ததில் 10 அல்லது 12 பேரைத்தவிர, அனைத்து தோழர்களையும் கண்டறிந்து, தொடர்பை உருவாக்கினார்கள். கூகுள் குரூப்பில் தொடபுக்கு வந்தவுடன், எல்லோருக்கும் மகிழ்ச்சி. எல்லோரும், கல்லூரியிலிருந்து பிரிந்த 20 வயதிற்க்கு திரும்பினார்கள். பணம், நேரம், உழைப்பை செலவு செய்து ஒருங்கிணைத்தவர்களுக்கு சந்தோசமாயிருந்தது.

இந்த திறந்த வெளி என்னும் கண்ணாடி கூண்டுக்குள் கல் எரிந்தான் ஒருவன். உடன் படித்த எத்தனையோ பெண்களிருக்க, ஒரு பெண்னை, கல்லூரியில் படிக்கும்போது இருந்தாளே ****வாலா? (ஒரு மிருகத்தின் வாலா?), அவளா இவள்? என்று கேட்டான் ஒரு ஈ மெயிலில். சிலர்தான் எதிப்பு தெரிவித்து, இது பொதுவெளி, இங்கு இப்படி நடப்பது தப்பு என்றும் அதற்கு மன்னிப்பு கேட்கவேண்டுமென்றார்க்ள். அவன் மன்னிப்பே கேட்கவில்லை. அது மட்டுமல்லது அவன் கல்லூரியில் படிக்கும்போதே அப்படிதான் என்று அவனின் குணாதியங்காளை செல்லி ஒருசாரார், மன்னிப்பு கேட்காமல் பார்த்து கொண்டார்கள். ஐம்பது வயதில் ஒரு பெண்ணைபார்த்து, ’*****வால்’னு பொதுவெளியில் கேட்பது, அநாகரிகம். தப்பையும் பண்ணிவிட்டு “சாரி’னு செல்ல முடியாமல் ஈகோ தடுப்பதாய் எண்ணினேன். அப்போதுதான், நண்பன் என்னிடம் பேசும்போது சொன்னன், அது ஈகோ பிரச்சனையில்லை, ஜாதிய வெறி என்று. அது மட்டுமல்லது, என்னதான் ஆனாலும் அவன் ‘சாரி’ கேட்க மாட்டான், கேட்கவும் விடமாட்டார்கள். காரணம், அந்த பெண் ஒரு தலித். அப்படி கேட்டவனை கூகுள் குரூப்பிலிருந்து யாரும் வெளியேற்ற சொல்லவில்லை.


மறறுமொரு நிகழ்வு. நிதி நிர்வாகதில் நடந்த முறைகேட்டை ஒருவன் கேட்டான். (அவனுக்கு சேகர்னு பெயர் வைத்துகொள்ளுவோம்). உடனே, நிதிக்கான பொறுப்பானவனும் (அருண் என்று வைத்து கொள்வோம்) அவனை சேர்ந்தவர்கள் யாரும் விளக்கம் அளிக்காமல், சேகரை அடித்து விடுவேம், நொறுக்கிவிடுவோம் என்று ஈ மெயிலிலே மிரட்டினார்கள். அப்படி மிரட்டிய அருணுக்கு கல்லூரி பேராசிரியர் வேலை! (அப்படி நாங்கள் மிரட்டவே இல்லை என்று சொல்ல முடியாது. அதற்கான எழுத்து பூர்வமான சாட்சியம் கூகுள் குருப்பிலிருக்கும் எல்லோரிடமும் உண்டு). இந்த மிரட்டலுக்கு சேகர் பயப்படாமல் ’வந்து பார்’ என்றான். செய்வதறியாத அருண், நான் சேகருடன் தொலைபேசியில் பேசி சமாதானமானதாய் ஒரு மெயில் அனுப்பிவிட்டான். சேகரும், அரசு நிர்வாகதில் உயர் அதிகாரிதான். அவன் கேட்ட கேள்வியும் சரிதான். அப்ப ஏன் அவனை மிரட்டினார்கள். என்றால், அவர் ஒரு தலித்.

கொஞ்ச நாட்கள் பொருத்திருந்தவர்கள், மீண்டும் சேகரின் மேல் குற்றசாட்டு. என்னவென்றால், அவன் கூகுள் குரூப்பில் ஒரு குறிப்பிட்ட மதம் சார்பாய் மெயில் அனுப்புவதாய். அது என்னமோ உண்மைதான். ஆனால் குற்றம் சாட்டுபவர்கள், அவர்களின் மதம் சார்பாய் அவர்கள் நம்பும் கடவுளின் படங்களையும், மத நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுவது என்று பார்த்தால் 20 மடங்கு மிகுதி. (யார் மதம் சம்பந்தமாய் எழுதுகின்றார்கள் என்று இருக்கின்ற ஈ மெயில்களை பார்த்தாலே தெரியும். அதை குற்றம் சாட்டுபவர்கள் மறந்து விட்டார்கள்). சேகர் மதம் சார்பாய் மெயில் எழுதுவதால் அவரை கூகுள் குருப்பிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற மிரட்டல்கள். மேலும் சிலர் சேகரை பார்த்து ‘நாய்’ என்ற விகுதியும் இணைந்தே ஈ மொயில்தான் அனுப்புகின்றார்கள். (இதில் கூத்து என்னான்னா? இப்படி ‘நாய்’ உரையாடல் நடத்துவது, ’*****வால்’ என்று கேட்ட ஒழுக்கசீலர்!!!!). வெறியில் ஒருவன், ’மாறுகால் மாறுகை வாங்கிவிடுவேன்’ என்று சேகரை பார்த்து மெயிலில் எழுதுகின்றான். இப்படி சொன்னவன் ஒரு அரசு ஊழியன். ’மாறுகால் மாறுகை வங்கிவிடுவேன்’ என்று சொல்லுமளவுக்கு ஜாதிய வெறி. அப்படி சொல்லுவதனால் ஆன பின் விளைவுகளை எண்ணிபார்ப்பதில்லை. எண்ணமற்ற மனம், அறிவை இழந்துவிடுகின்றது. அறிவற்றவனுக்கு தெரியாது, இந்த ஈ மெயில்லை வைத்து சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்பது.

இவர்கள் ஒன்றை சுத்தமாக மறந்துவிட்டார்கள். இபோது இவர்கள் ஆடும் களம் மாறியிருக்கின்றது. ஈ மொயில், அதுவும் ஈ மொயில் குழுமம் என்பது திறந்த வெளி. கூகுள் குருப் எனபது பொது வெளி. இங்கு தடையங்களை அழிக்க முடியாது. சாட்சியஙகளை குலைக்க முடியாது. எனக்கு என்ன அதிர்ச்சி என்றால், கல்லூரி நாட்களில் ஜாதி பிரஞ்சை இல்லாமல் இருந்தவர்கள் சிலர்கூட, இப்போது ஜாதிய பிம்பங்களின் பிரதிபலிப்பாய் பட்டவர்தனமாய் வெளிபடுகின்றார்கள். என்ன செய்ய, ஜாதிய உணர்வு என்பது இவர்களுக்கு அழிக்க விரும்பா பிம்பங்கள். ஜாதிய வெறி இவர்களின் எலும்புகளின் உள்ளே உறைந்து போயிருக்கும் மஜ்ஜைகள் (Caste feeling is buried so deeply into their bones). இவர்களின் பிம்பங்கள் உடைபட, ஜாதியமற்ற சமுதாயம் அமைய இன்னும் சில நூற்றாண்டுகள் காத்திருப்போம்.

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

கொத்து கொத்தாய் செத்தார்கள்

இராக்கில் போர்
முடிவடைந்து விட்டதாம்.
தினமும் ஒரு தெருவில்
குண்டுவெடிப்பு.
உதிரத்தால்
ஊர் எங்கும் கோலம்.
ஓடமுடியாமல்
ஒன்றாய் செத்தார்
கள்.
கொத்து கொத்தாய்
பிண குவியல்கள்.
குழந்தைகள் ஒவ்வொன்றும்
செத்தபின்பும் முகத்தில் சிரிப்பு
பார்த்தவுடனே
கடவுளை அடக்கம் செய்தேன்.












Picture Courtesy:
(1) Source: http://www.businessinsider.com/10-most-dangerous-places-on-earth-2011-8?op=1

(2) Source:http://in.news.yahoo.com/photos/pictures-of-the-week-14th-feb-20th-feb-slideshow/#crsl=%252Fphotos%252Fpictures-of-the-week-14th-feb-20th-feb-slideshow%252F9-potw-200211-photo.html
பால்ராஜன் ராஜ்குமார்