புதன், 29 ஜூன், 2011

ஆயிரத்தில் ஒருவன் (எம்.ஜி.ஆர்)

தலைப்பு ’எம்.ஜி.யாரின் ஆயிரத்தில் ஒருவனும் எனக்கு விழுந்த அடியும்’ என்றுதான் இருக்க வேண்டும். எனக்கு விழுந்த அடி.......இப்போ இல்லை, முப்பது வருடங்களுக்கு முன்பு. நான் எந்த தகராருக்கும் போகவில்லை, யாரும் என்னுடன் தகராரும் செய்யவில்லை. அப்படியிருந்தும் எனக்கு அடி விழுந்தது. ரவுண்டு கட்டி அடித்தார்கள். இரவு 1 மணிக்கு. என்னுடன் வந்தவர்கள்தான் அடித்தார்கள். அடுத்த நாளும் விளக்கம் கேட்டு அடித்தார்கள். நான் சொன்ன விளக்கமும் விளங்கவில்லை அவர்களுக்கு. நான் எழுத வந்தது, எனக்கு விழுந்த அடியை பற்றியல்ல. அடித்தவர்கள் இன்னும் விளங்கிக் கொள்ளாமால் இருப்பதை பற்றியே.


நாங்க மொத்தம் எழு பேர். பாண்டியனும், பிரபுவும் மட்டும் வரிசையில் நின்றார்கள். மற்றவர்கள் எல்லாம் கொஞ்சம் தள்ளி நின்றோம். கூடத்தில் முண்டியடித்து டிக்கட் கவுண்டரை அடைந்து வெற்றிகரமாய் டிக்கட்டுடன் வந்தார்கள். நாங்கள் தங்கியிருந்த ஹாஸ்டலிருந்து, இரவு பத்து மணி ஷோவுக்காக மதுரை அரசரடியிலிருக்கும் வெள்ளைக்கண்ணு தியேட்டருக்கு வந்திருந்தோம். எங்கள் கல்லூரியில் படித்துக் கெண்டிருந்த சீனியர் உதயன் செலவில்தான் எல்லேருக்கும் டிக்கெட். அவர்தான் பார்ட்டி கொடுத்தார். சிவகாசியில் நல்ல வசதியான குடும்பம் அவர்களுடையது. பார்ட்டிக்கு காரணம், அவரின் இன்றய சாதனை. அப்படி என்ன சாதனை? அது. அவர், ’ஆயிரத்தில் ஒருவன்’ திரைபடத்தை 25 முறையாக இன்று பார்க்கபோவதுதான். அவர் இதற்க்கு முன்பு 24 முறையும் யாருடனாவது சேர்ந்துதான் சென்றுதான் படம் பார்த்தார். உடன் வருபவர்களும் படத்தை பலமுறை பார்த்திருந்தாலும் மீண்டும் பார்ப்பார்கள். ஆனால் நான் ஒருவந்தான் முதல்முறையாக இந்த படத்தை பார்க்க வந்திருந்தேன். தியேட்டரில் எம்.ஜி.ஆர் திரையில் தோன்றும் போதெல்லாம் விசில் சத்தம்தான். இடைவேளையில் ஆளுக்கு ஒரு டீ குடித்தோம். அதுவும் சீனியர் உதயனின் உபயம்தான்.

படமும் விசிலும் தொடர்ந்தன. நேரம் ஆக ஆக எனக்கு தூக்கம் கண்ணை சுழட்டியது. எம்.ஜி.ஆரின் தனி பாணியான விரலை முக்கில் வைத்து சுண்டிவிட்டு பேசும் வசனத்திலுள்ள சாகாசமும், வில்லனிடம் வாயின் ஒரத்தில் ரத்தம் வரும்வரை அடிவாங்கி, ரத்ததை கை கொண்டு தொட்டு பார்த்தபின் வில்லனையும் அவனின் ஆட்களையும் போட்டு துவைக்கும் வீராவேசமும் என்னை கவரவில்லை. அதற்காக அவைகள் மோசம் என்றோ தரம் குறைந்தது என்றோ நான் நினைத்ததேயில்லை. என்னை பொறுத்தமட்டில், சினிமாவில் நடிகர் சந்திரபாபு செய்யும் செயல்களை ரசிக்க முடிந்தது. ஆனல் எம்.ஜி.ஆர் மூக்கில் கைவைத்தவுடன் தியேட்டர் முழுவதும் அதிரும்படியான கைதட்டில், அவர் என்ன வசனம் பேசுகின்றார் என்பதே கேட்காது. நானோ தூக்கம் தாங்கமுடியாமல் தூங்கிவிட்டேன். படம் முடிந்தபின் தூங்கிகொண்டிருந்த என்னை எழுப்பினார்கள் நண்பர்கள். தியேட்டரைவிட்டு வெளியேவந்ததும், என்னிடம் ‘ஏண்டா படம் பார்காமல் துங்கினாய்?’ என்றார்கள். காரணம் சொன்னேன். ‘அது எப்படிடா, எம்.ஜி.ஆர் படத்தில் தூங்கலாம்?’ என்று கேட்டு அடித்தார்கள். சொன்ன விளக்கத்தை யாரும் கேட்கவில்லை. நான் எந்த தகராருக்கும் போகவில்லை, யாரும் என்னுடன் தகராரும் செய்யவில்லை. ஆனால் அடி வாங்கினேன்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஹாஸ்டலில் சின்ன பஞ்சாயத்து நடந்தது. நண்பர்கள் எல்லேரும் தலைவராயிருந்து, சினிமா பார்காமல் தியேட்டரில் தூங்கியது தப்பு என்று தீர்ப்பு சொன்னார்கள். ஆனால் பழனி மட்டும்தான் சொன்னார், ‘ஏம்பா, இவன் படிக்கும் தாமரை, தீக்கதிர், வோட்காவிலிருந்து கங்கைவரை புத்தகங்களை கையிலெடுத்தா, நமக்கு தூக்கம் வரும்ல. அதுமாதி..... தியேட்டரில் இவன் தூங்கிட்டான்....... விடுங்கடா”

மேலே நடந்த சம்பவத்தை எதற்க்கு சொன்னோனென்றால், நான் கால்லூரியில் படித்த காலத்தில் பெருவாரியான இளஞர்கள், சினிமாவை பொழுது போக்கு சமாச்சாரமாய் மட்டும் எடுத்துக் கொள்ளவில்லை. தங்களின் வாழ்வையே சினிமாவும் கலந்ததாய் ஆக்கிக் கொண்டார்கள். அவர்களின் வாழ்வு இன்றுவரையும் அப்படித்தான். ஒரு பொழுது போக்கானாலும், சந்திப்பானாலும், இணைய குழுவானாலும் சினிமாவை தாண்டி இருக்க முடியவில்லை. அவர்களின் வாழ்கையில் நடந்த சுவாரசியமான விடயங்களையும், நல்ல-கெட்ட நிகழ்வுகளையும் சினிமாவை இணைத்தே மனதில் பதித்து வைத்திருக்கின்றார்கள். உதாரணமாக, ‘ரேஜா படம் ரிலீசாகி முணு மாசம் இருக்கும் போதுதான் என் மூத்த மகள் பிறந்தாள்’, ’கல்யாணமாகி முதல் முதலாய் ’ஊமைவிழிகள்’ படத்துக்குதான் சென்றோம்’. கல்யாணமாகி ஒரு பெண்ணுடன் வாழ ஆரம்பிக்கும் போதும் ஒவ்வொரு நிகழ்வையும் இணைத்து பார்க்க சினிமாவைதான் ஞாபகத்தின் அடையாளக் குறியீடாக வைத்துக் கொள்ளுகின்றார்கள். சரியாக சொன்னால், சினிமா இல்லாமல் பத்து நிமிடம்கூட போசவோ அல்லது இணைய குழுவுக்கு ஒரு ஈ மெயில் அனுப்பவோ முடியவில்லை. சினிமாவற்ற வாழ்வு வாழமுடியவில்லை.

இணைய குழுவில் இவர்களின் கருத்துப்பரிமாற்றங்களில் சில................

ஒருவர், ஐ.இ.எஸ் (I.E.S) அதிகாரி. மத்திய அரசாங்கத்தின் மிக பெரிய நிர்வனத்தில் துணை தலைமை பொறியாளர் (Deputy Chief Engineer). தமிழ் படம் வெளியான தினத்திலோ அல்லது இரண்டொரு நட்களிலோ ‘இந்த படம் பார்த்தேன்’ என்றும் அதற்கான ஒரு வரி விமர்சனமும் தாங்கிய மின் அஞ்சல் இருக்கும். இன்றும், அலுவலக வேலைக்கு நடுவில் எப்படி முதல் நாளே படத்திற்க்கு செல்ல முடிகின்றது? என்பதே என் கேள்வி.

இன்னொருவர், அமெரிக்காவில் இண்டெல் (Intel) கம்பெனியின் தொழில்நுட்ப பிரிவில் உயர் பதவியில் உள்ளவர். இணைய குழுவில் அவர் செய்தியோ, வாழ்த்தோ அனுப்பினால் யூ டுப் (You Tube) லிருந்து தரவிறக்கம் செய்யப்பட்ட சினிமா பாடலாக மட்டுமே இருக்கும். அவர் வேலை செய்யும் சூழலில் இருக்கும் சுவராசியமான நிகழ்வுகள், சந்தித்தவைகள், சாதித்தவைகள்...என்று எதுவுமே இருக்காது. சினிமா பாடலாய்த்தான் தன் இருப்பை உணர்த்த முடிகின்றது அவருக்கு.

நான் ஒருநாள் அவசரமாய் ஒரு செய்தி சொல்ல, எங்களுடன் படித்த நண்பனுக்கு அலை பேசியில் அழைக்க வேண்டியதாய் இருந்தது. செய்தி எங்கள் குழு சம்பந்தபட்டதாயிருந்தது. இதற்க்குகாக அலுவலக நேரத்தில் அழைத்து பேசவா? என்று யேசித்து, செய்தியின் முக்கியத்துவதத்தை கருதி அழைத்தேன். அப்போது, அவர் இருந்ததோ, சினிமா தியேட்டரில். உடன் வேலைபார்க்கும் இரண்டுபேரோடு வந்திருப்பதாய் சொன்னார். அவர் வேலை பார்ப்பது சென்னை மாநாரட்சியில்!

மற்றும் ஒருவர் வெளிநாட்டில் 20 ஆண்டுகளுக்கு மேல் வாழ்கின்றார். அவரின் தினப்படி வேலைகளில் ஒன்று, ஏதாவது ஒரு தமிழ் படம் பார்ப்பது. அவர் இந்தியா வ்ரும் ஒவ்வோரு முறையும் சினிமா சி.டி, கேசட் வாங்கி செல்வதும், அதுபோக தழில் சினிமாவுக்கான இணையதளத்தில் சந்தா சேர்ந்து புதிய படங்களை பார்ப்பதாயும் சொன்னான்.

இது போக, என்னை ’ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்க்கு கூட்டிசென்ற உதயன் சாரை சில வருடங்களுக்கு முன்பு பார்த்தேன். சும்மா, கிண்டலுக்காதான் கேட்டேன் அவரிடம்,

‘என்ன சார் ’ஆயிரத்தில் ஒருவன்’ இப்ப சிவகாசி தியேட்டரில் போட்டாலும் பார்க்கின்றீகளா?’

தியேட்டருக்கு போயே ரொம்ப நாளாகின்றது. அதான் எல்லா பட்மும் சி.டியில் வைத்திருக்கின்றேனே. வீட்டு செட்டில் தினமும் எதாவது படம் ஓடும்.”

” அப்ப ஆயிரத்தில் ஒருவன், 50ஐ தாண்டியிருக்குமா?’

’50தா?, அது 100க்கு மேலே போயிருக்கும். எண்ணுவதை விட்டே நொம்ப நாளாச்சி”

“!!!!???”


பலர் தத்தம் துறைகளில் வல்லுனர்களாகவும், உயர் பதவியிலும் இருக்கின்றார்கள். பலர் நிதிநிலைமையில், பண வசதியிலும் உயரத்தை எட்டியிருக்கின்றார்கள். ஆனால் ஒவ்வொருவருக்கும் துறைசார்பற்ற நீழ்ச்சியும் வெளிப்பாடும் (exposure) சினிமாவரைதான். புத்தகம் வாசிப்பு – அது புனைவு (fiction) அல்லது அபுனைவு (non fiction), பயணம், இசை நிகழ்ச்சி,.......என்று ஏதுமற்று இருக்கின்றார்கள். சினிமா ஒரு பொழுது போக்கு என்பதைவிட, தினப்பொழுதும் சினிமாவுக்கே எனறாகி போகிவிட்டது. சினிமாவுடன் கட்டுண்ட வாழ்வுதான் வாழ்கின்றது ஒரு தலைமுறையே.

சினிமாதாண்டிய உலகத்தை இழந்து நிற்கின்றார்களா? அல்லது பதின்பருவத்தில் பொழுதுபோக்கிற்க்கான வடிகாலாயிருந்த சினிமாவுடன் நின்றுவிட்டவர்களா, இவர்கள்?

வியாழன், 23 ஜூன், 2011

காய்கறியும் கருவாடும்

இன்று ஸ்பீடு போஸ்ட் (Speed Post) அனுப்ப கே.கே. நகர் தபால் அலுவலகத்திற்க்கு சென்றேன். காலையில் சீக்கிரமே சொன்றேன். எப்போதும் காலையில் அவ்வளவு கூட்டம் இருக்காது. ஆனால் இன்று கூட்டமாயிருந்தது. சென்றிருந்த இரண்டு சக்கர வாகனத்தை ஒரமாய் நிறுத்திவிட்டு, கையிலிருந்த தபாலில் அனுப்ப வேண்டிய கவரை எடுத்து கொண்டு தபால் அலுவலகத்திற்க்குள் நுழைந்தேன். நான் முதலில் பார்த்தது, எங்கள் ஏரியா போஸ்ட்மேன் பாக்கியநாதனைத்தான். அவரை பார்தவுடன் எனக்கு அதிர்ச்சி. எப்போதும் யூனிபார்மில் பார்த்து பழக்கப்பட்ட எனக்கு, அவரை, அந்த நிலைமையில் நான் எதிர்பார்கவில்லை. அப்போதுதான், கூட்டத்திற்க்கான காரணமும் விளங்கியது. போஸ்ட்மேன் பாக்கியநாதன் லுங்கி பனியன் அணிந்து, அவர் முன்னால் கூடை கூடையாக குவிந்து கிடந்த காய்கறிகளை கூவி கூவி விற்றுக் கொண்டிருந்தார். அதிர்ச்சியில் நான் அப்படியே அவரை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்தான் என்னை பார்த்து,
‘என்ன சார் காலையிலே?’னு கேட்டார்.

நான் சுயநினைவு வந்தவனாய், ‘ஸ்பீடு போஸ்ட் அனுப்ப வந்தேன்’னு சொன்னேன்.

கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு, ‘என்ன பாக்கியநாதன் சார், நீ..ங்..க..ள்...?’.

‘என்ன சார் , காய்கறி வியாபாரமா?. இது புது ஸ்கீம் சார். போன வாரம்தான் போ
ஸ்ட் மாஸ்டர் ஜெனரல் துவங்கிவைத்தார். ஒரு வாரத்தில் நல்லா பிக்கப் ஆகி விட்டது. சொல்லப் போனால் அண்ணா நகர் போஸ்ட் ஆபிஸைவிட நாங்கள்தான் காய்கறி வியபாரத்தில் டாப். அவர்கள், இன்னமும், ஸ்டாம்பும், இன்லேண்டும்தான் விற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.’

‘....?’

’இன்னும் கொஞ்ச நேரத்தில் போஸ்ட் ஆபிஸ் வேன் வரும். பிரஷ் காய்கறி வந்தவுடன் கூட்
டம் சமாளிக்க முடியாது.’

‘சரி சார். போஸ்டல் டெலிவரியொல்லாம்.......’

‘நான் பத்து மணிக்கு வியாபாரத்தை ராமநாதனிடம் பார்க்க சொல்லிவிட்டு, டெலிவரிக்கு யூனிபார்மில் போய்விடுவேன்’

‘சரி சார். நான் ஸ்பீடு போஸ்ட் அனுப்பிவிட்டு கிளம்புகின்றேன்’ னு கவுண்டரை நோக்கி நகர்ந்தோன்.

அங்கு இருக்கும் மேடத்தை காணவில்லை. சீட் காலியாக இருந்தது. நான் திரும்பவும் பாக்கியநாதனிடம் வந்து கேட்டேன். அதற்க்கு அவர் பதில் சொல்லாமல், எதிர் திசையில் கையை காண்பித்தார். அங்கே, அந்த மேடம், கருவாடு வியபா
ரத்தில் இருந்தார்கள். வியபாரம் ரொம்ப டல் போல, கருவாட்டு மேலே இருந்த ஈக்களை விரட்டிக் கொண்டிருந்தார்கள். அவர் இருக்கும் இடத்திற்க்கு சென்றேன். என்னை பார்த்து, கருவாடு வாங்க வந்த கஸ்டமர்னு நினைத்து, ‘சார் நெத்திலி நல்லாயிருக்கு சார்’னு கையில எடுத்து காண்பித்தார்கள். அதற்க்கு நான்,

‘மேடம், ஸ்பீடு போஸ்ட் அனுப்பணும், நீங்கதான் பாத்துகிறீங்களா?”

‘ஆமா...ஆமா. கவுண்டரில் யாருமே இல்லைனு. கருவாட்டுக்கு வந்தேன்“ னு உடனே எழுந்து வந்தார்கள்.

கவருடன் காசையும் கொடுத்தேன். எனக்கு ஒரு சந்தேகம். நான் அனுப்பும் தபால், என்னுடைய நண்பனுக்கு. அவன் சேலத்தில் இருக்கின்றான். சுத்த சைவம். இந்த கருவாட்டு வாடை, கவருடன் சேலம்வரை சென்றால், அவன் பாடு திண்டாடம்தான்.................................

ஹா....ஹா......னு அடக்க முடியாமல் வாய்விட்டு சத்தாமாய் சிரித்ததை கேட்டு சமையலறையிலிருந்து என் மனைவி ஹாலுக்கு வந்து,காலை பேப்பர் படித்துக் கொண்டிருந்த எனக்கு
என்ன ஆகிவிட்டது என்று கேட்டார்கள்.

அதற்கு, நான் கற்பனையில் நினைத்த மேல் சொன்ன சம்பவத்தை சொன்னேன்.

‘போஸ்ட்டாபீசுக்கும் காய்கறிக்கும் என்ன சம்பந்தம்?’

“இந்தா பேப்பரை படி. போஸ்ட் மாஸ்ட் ஜெனரல், போஸ்ட் ஆபிஸில் வாட்ச் வியபாரத்தை துவக்கி வைத்தாராம். இதற்க்கு முன்பு, தங்கம் விற்பனையை ஆரம்பித்தார்கள். அதற்கு முன்பு ஷேர் மார்கட் அப்பிளிகேஷன், இன்சூரன்ஸ், VIT நுழைவு தேர்வு விண்ணப்பம்....இப்படி பல...பல. இது இப்படியே போனால் என்னவாகும்னு நினைத்தேன். சிரிப்பாக வந்தது.”

’அவங்களுந்தான் எ
ன்ன பண்ணுவார்கள்?. ஈ மெயில், கூரியர்னு வந்தபின், எதாவது செஞ்சாதானே பிழைக்க முடியும்.”

‘ ‘
‘நாளையிலிருந்து காலையில் வாக்கிங் போயிட்டு வரும் போது, அப்படியே, போஸ்ட்டாபிசில் காய்கறியும் வாங்கி வந்திடுங்கள்.”

“!!!!!! ?????”





[போஸ்ட் ஆபிசில்.........வாடாத பச்சை காய்கறியும், காய்ந்த கருவாடும்....
நடந்தாலும் நடக்கும்.......











போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் திரு. ராமனுஜமும், HMT அதிகாரிகளும்.

( படமும், செய்தியும் - நன்றி: த ஹிந்து நாளித
ழ்
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2127615.ece) ]



பால்ராஜன் ராஜ்குமார்