செவ்வாய், 26 ஏப்ரல், 2011

அன்னா ஹசாரேவுக்கு 3 ஆண்டுகள் சிறை

தமிழ்நாடு மருத்துவமனை ஸ்ரீவில்லிபுத்தூரில் பஸ் ஸ்டாண்டிலிருந்து கணபதி தியேட்டருக்கு போகின்ற வழியில் இருக்கும். பெயர் பார்த்து அரசாங்க ஆஸ்பத்திரினு நெனைக்க வேண்டாம். பிரைவேட் ஆஸ்பத்திரிதான். அதற்கு எதிரேதான் எங்கள் வீடு. ஆஸ்பத்திரிக்கு, ஊருக்குள் பெயர் இல்லாவிட்டாலும், சுற்றியுள்ள பட்டி தொட்டிகளில் ரெம்ப நல்ல பெயர். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகிலிருக்கும் கிராமங்களில் யாராவது மருந்தடித்தால் அவனையோ அவளையோ தூக்கி டிராக்டரில் போட்டு நேரே தமிழ்நாடு மருத்துவமனைக்குத்தான் கொண்டு வருவார்கள். (மருந்துன்னா பால்டாயில், அரளி விதை மேட்டர்). மருந்த குடிச்ச கேஸை தனியார் ஆஸ்பத்திரியில் எடுக்க மாட்டார்கள். போலீஸ் கேஸ் ஆகும்னுதான். ஆனால் இந்த ஆஸ்பத்திரியில் அப்படியெல்லாம் இல்லை. மருந்த குடிச்ச ஆளை கொண்டு வந்த பின்னாலே கிராமத்து பெண்கள் பத்து பதினைந்து பேர் தலைவிரி கோலமாய் அழுது கொண்டே வருவார்கள். அவர்கள் அப்படியே ஆஸ்பத்திரிக்குள் நுழைவார்கள். ஆனால் போன வேகத்தில் அவர்களை வெளியே அனுப்பிவிடுவார்கள். அவ்வளவு பேர் உள்ளே இருந்தா எப்படி வைத்தியம் பார்க்கிறது?. வெளியே வந்த பெண்கள் தங்கள் ஒப்பாரியை, தெருவில் தொடர்வார்கள். விஷம் சாப்பிட்டது ஆணா பெண்ணா, ஏன் சாப்பிட்டார் என்று ஒப்பாரியை கேட்டாலே தெரிந்துவிடும். சன் பிக்சர்ஸ் எடுக்கும் பட விளம்பரம் சன் டிவியில் ஐந்து நிமிடத்திற்க்கு ஒரு முறை வருவது மாதிரி விஷம் சாப்பிட்ட கதை ஒரு தொடர் இடைவெளியில் ஒப்பாரிக்கப்படும்.

’எல்லாம் இந்த மனுசனாலத்தான்”னு ஒரு வயதான அம்மா, கெஞ்ச தூரம் தள்ளி அமர்ந்து எதுவுமே நடக்காதமாதிரியான முகபாவனையுடனுடன் பீடி குடிக்கும் ஒரு வயதான ஆளை பார்த்து சொன்னால், அது ‘மகன்-அப்பா’ தாகராறுன்னு அர்த்தம். விஷம் சாப்பிட்டது ஒரு வலிப யையன், அழுது கொண்டிருப்பதுதான் அவனின் அம்மா என்பது விளங்கிவிடும். கூடவே ஒரு இளம் பெண்ணும் அழுதால், அது அவனின் மனைவி. அதே மாதிரி ஒரு வயதான அம்மா, ”எல்லாம் இந்த நாசமா போகிற பயலாலத்தான், இவளுக்கு இம்புட்டு கஷ்டம்”னு மேற்கே திரும்பி அழும்போது, ஒரு இளவயது ஆள் முறுக்கிக்கிட்டு கிழக்கே திரும்பி நின்றால், அது ‘கணவன் மனைவி’ தாகராருனு அர்த்தம். உள்ளே உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது ஒரு பெண், அழுவது அவளின் தாய், முறுக்கு கம்பிதான் கணவன். வந்த அன்று மாலையிலே ‘ஓ..ஓ”னு அழுகுரல் கேட்டால், வந்த கேஸ் பிழைக்கவில்லை. அப்படியில்லை என்றால் மூன்றாம் நாளோ நான்காம் நாளோ சத்தமில்லாமல் டிஸ்ஜார்ஜ் ஆகி சென்று விடுவார்கள். இந்த நிகழ்வுகளெல்லாம் எங்கள் தெருவிலிருக்கும் யாவருக்கும் தெரியும். ஆனால் ஒரே ஒரு கேஸ் மட்டுமே எல்லோரையும் குழப்பிவிட்டது. விஷம் சாப்பிட்டது ஒரு இளைஞன் என்பது மட்டுமே ஊகிக்க முடிந்தது. யாருடன் தகராரு, ஏன் விஷம் சாப்பிட்டான்னு தெரியவில்லை. அந்த வாலிபன் பிழைத்து எழுந்து டிச்ஜார்ஜ் ஆகும்போது பெரிய கூட்டம் “போலீசே..... போலீசே.....சட்டம் 309ல் கைது செய்”னு குரல் எழுப்பி கொண்டிருதார்கள். அங்கிருந்த போலீசும் அவனை ஸ்டேசனுக்கு கூட்டிச் சென்றது. தெருவிலிருக்கும் யாருக்கும் ஒண்ணுமே புரியவில்லை. எங்க அப்பாதான் விசாரித்து சொன்னார்கள். தற்கொலை சட்டப்படி குற்றமாம். அந்த சட்டம் 309 தான். வத்திராயிருப்பிலிருக்கும் கம்யூனிஸ்ட்டு கட்சிகாரங்கள் புகார் கொடுத்ததால் அவனை கைதுசெய்தார்கள் என்று நிறைய சொன்னது எதுவும் மனதில் நிற்கவில்லை. ஆனால் ’தற்கொலை சட்டப்படி குற்றம்’ என்பது மட்டும் பதிந்துவிட்டது. அதன்பின் அரளி விதையை அரைத்து குடித்து ஆஸ்பத்திரிக்கு வரும் கேஸை எல்லாம் போலீஸ் கைது செய்யும் என்று நினைத்தோம், ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
பின்னர், கல்லூரியில் படிக்கும் போதுதான் தெரிந்து கொண்டேன், இந்திய தண்டனைச் சட்டம் 309வது பிரிவில் ''யாராவது தற்கொலை செய்வதற்கு முயற்சி செய்து, அதற்கென ஏதாவது ஒரு செயலைப் புரிந்திருந்தால் அந்தக் குற்றத்திற்காக ஓர் ஆண்டுக்கு உட்பட வெறுங்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்'' என்று. அதுவும் தற்கொலை செய்வதற்கு முயற்சி பால்டாயில், அரளி விதை, .....னு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அப்படி பார்த்தால், ’சாகும்வரை உண்ணாவிரதம்னு’ போர்டு மாட்டி ஊரைக்கூட்டி தற்கொலை செய்வதற்கு முயற்சி சொய்த அன்னா ஹசாரேவுக்கு ஒருவருட சிறை தண்டனையாக விதிக்கப்பட வேண்டும். அதுவும் ஹசாரே, காந்திய வழியில் பொது சேவைக்காக சாகும்வரை உண்ணாவிரதமாம். என்ன பொய்? காந்தி என்றாகிலும் வெள்ளைக்காரனை எதிர்த்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தாரா? இல்லவே இல்லை. காந்தி இருந்த சாகும்வரை உண்ணாவிரதமெல்லாம், தான் சொன்னதையே கேட்க வேண்டும் என்ற பிடிவாதத்துக்காக, தன்னுடன் இருக்கும் இந்திய சாகாக்களை எதிர்த்துதான். சரத் பவார்க்கு லேக்பால் மசோதா கமிட்டிக்கு தலைமைதாங்க தகுதியில்லை என குற்றம் சாட்டப்பட்ட உடனேயே ராஜினாமா செய்தார். ஆனால் ஒரே குடுமபத்திலிருந்து ஏன்? சாந்திபூஷணும் அவரின் மகனும் என்ற கேள்வி வந்தபோதும், சாந்திபூஷணை பற்றிய CD வெளியாகி சர்ச்சையை கிளப்பியபோதும் பிடிவாதமாய் அவரை மாற்ற மறுத்துவிட்டார் ஹசாரே. CD அமெரிக்க விஞ்ஞான கூடத்தில் பொய்யானது என்று நிருபணம் ஆகியது என்று சப்பைகட்டுவேற. அப்ப என்ன இந்திய தொழில்நுட்ப வல்லுனர்கள் எல்லாம் என்ன திறமையற்றவர்களா? ஏன் 121 கோடி இந்திய மக்களில், இரண்டு பூசண்களைவிட்டால் வேறு ஆள் இல்லையா? ஹசாரேவின் செயல்கள் எல்லமே தன்னிச்சையான பிடிவாதம் நிறைந்ததுதானே.

சரி, ஹசாரேவின் ’சாகும்வரை உண்ணாவிரத’த்துக்கு வருவோம். தற்கொலை முயற்சிக்கு ஒரு வருடம். அப்புறம், மிரட்டியதற்க்காக (Blackmail), லோக்பால் மசோதா வேண்டுமென அரசாங்கத்தை மிரட்டியதற்க்காக (threatening to fast unto death), இ.பி.கோ 503ன் படி இரண்டு ஆண்டுகள். ஆக மொத்தம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட வேண்டும்.



குறிப்பு:

அது போக 82 லட்சம் ரூபாய்க்கு கணக்கு காட்டாததற்க்கு தனியே வருமான வரித்துறை வழக்கும், நரேந்திர மோடி நல்ல ஆட்சியாளர் என்று சான்றிதழ் வழங்கிய சமுதாய ஊழல் (social corruption) க்குகான வழக்கும் தனித்தனியே விசாரித்து தண்டனை வழங்கப் படவேண்டும்.

2 கருத்துகள்:

Chittoor Murugesan சொன்னது… Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பாஸ்!
தங்களுக்கு சாக்கடை மணத்தை விட ஃபெனாயில் மணம் ரெம்ப அலர்ஜி போல ..

குலவுசனப்பிரியன் சொன்னது… Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நன்றாக கேட்டீர்கள். அருமையான கருத்துக்கள். எத்தனையோ சாதாரண மக்கள் தினமும் தங்கள் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கு போராடுகிறார்கள்.
அதில் எல்லாம் அக்கறை காட்டாத ஊடகங்கள்,
அன்னார்போன்ற கபடதாரிகளை விளம்பரபடுத்துவது எப்போதும் போல திசை திருப்பும் வேலைதான்.

கருத்துரையிடுக

பால்ராஜன் ராஜ்குமார்