புதன், 16 பிப்ரவரி, 2011

பாழான பால்

கடந்த வாரம் நான் நாகர்கோவில் சென்றிருந்தேன். உறவினரின் மகனின் திருமணத்திற்காக கல்யாண மண்டபத்திற்கு போகும் போது என் மாமா வீட்டிற்க்கு சென்றேன். அவரும் உடன் வருவதாய் சொல்லியிருந்தார். குளித்து ரெடியாகிக்கொண்டிருந்தார். மாமா ஊரில் வியபாரம் செய்கின்றார். அது அவரின் அப்பாவுடைய தொழிலின் தொடர்ச்சி. மாமா கூட்டுக் குடும்பமாய் அவரின் தம்பி மற்றும் அக்காவின் குடும்பத்தோடு ஒரே (பெரிய) வீட்டில் இருக்கின்றார். என்னை பெருத்தமட்டில், அவர் கல கலனு பேசி பழகக்கூடியவர். ஆனால் அவர் வீட்டில்தான் அவரை கண்டால் எல்லோருக்கும் பயம் கலந்த மரியாதை. அதிலும் வீட்டுப் பெண்களுக்குதான் அவரின் கோபத்தை எதிர்கொள்ள முடியாது. கோபம் வந்தால், சாப்பாட்டு தட்டை தூக்கி எறிந்துவிட்டு சென்றுவிடுவார் மாமா. தரையில் காய்கறி கூட்டும், பொரியலும் சாதமும் இரைந்து கிடக்கும். பெண்கள், கீழே நொறுங்கி கிடக்கும் அப்பளத்தோடு அவர்களின் உடைந்த மனதையும் சுத்தமாய் துடைத்தெடுத்து குப்பையில் போடுவர்கள். காய்கறி நறுக்கி சமைத்து உப்பு உரைப்பு பார்த்து தளித்து செய்த பொறியலை தரையிலிருந்து கூட்டி பொருக்கும்போது மனதுக்கு கஷ்டம்தான். மாமா நல்ல மனிதர்தான். ஆனால் என்ன?, அவரின் கோபத்தின் வெளிப்பாடே சாப்பட்டை ....உணவை வீணடிப்பதுதான்.

இப்படி யோசித்துக் கொண்டிருக்கையில், மாமா ரெடியாகி வந்தார். ரெண்டு பேரும் கோட்டாரிலிருந்த கல்யாண மண்டபத்திற்க்கு சென்றோம். அந்த மண்டபம் பெரியது. பலமுறை அங்கு நடந்தேறிய திருமணத்திற்க்கு சென்றிருக்கின்றேன். மண்டபத்தில் சமுதாயத்தின் ஏழைகள் பணக்காரர்கள் வீட்டு கல்யாணங்கள் நடக்கும். ஏழை வீட்டுக் கல்யாணத்திற்க்கும் பணக்கார வீட்டுக் கல்யாணத்திற்க்குமான வித்தியாசம் இரண்டுதான் பிரதானம். ஒன்று மண்டப அலங்கார வேலைகள், மற்றது சாப்பாடு. வசதியான வீட்டுக் கல்யாணத்தில் வகை வகையாக கூட்டுப் பொரியல்கள் இலையை நிறைக்கும். அவியல், வாழைக்காய் துவரன், நாலுவகை பச்சடி, பருப்பு, சாம்பார், ரசம், மூணு வகை பாயாசம் – பப்படம் போட்டு சாப்பிட, பழம் போட்டு சாப்பிடனு 11 வகை, 13 வகை, 16 வகைனு அளவு வைத்து சாப்பாடு பரிமாரப்படும். இதையெல்லாம் ரசித்து, ருசித்து, செரிக்க சாப்பிட்டால் அரை மணிநேரமாவது ஆகும். ஆனால் இவை யாவும் ருசித்து சாப்பிடுவதற்க்கோ, செரிக்க சாப்பிடுவதற்க்கோ, ஏன் சாப்பிடுவதற்க்கே அல்ல. பின்னர் எதுக்குத்தான் உணவு?

நானும் மாமாவும் மூன்றாவது பந்தியில் சாப்பிட அமர்ந்தோம். அன்று இலையில் வைத்த கூட்டை எண்ணி பார்த்தால் 18 வந்தது. அது என்ன கணக்கு? கூட்டு பொரியலை சாப்பிட்டாலே வயிறு நிரம்பிவிடும் போல் இருந்தது. மீண்டும் எண்ணி சரி பார்கும் முன்பு சாதம் விளம்பினார்கள். நான் மிகவும் கொஞ்சமாய்தான் சாதம் வங்கினேன். சாதத்தை தொடர்ந்து பருப்பும் நெய்யும் வந்தது. அதை சாப்பிட ஆரம்பித்தவுடன் சாதமும், சாப்பாரும் வந்தது. நான் வேண்டாம் என்று சொல்லி பருப்பு சாதத்தை தொடர்ந்தோன். என் அருகில் இருந்த மாமா உட்பட பருப்பு சாதத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, சாதம் வாங்கி சாம்பாருக்கு சென்றார்கள். அதை முடிக்கும் முன்பே ரசம், மோர் என்று பாயாசம் என்று ரிலே ரேஸ் ஒடும் போது ஒவ்வொருவராய் இலையை மூடி எழுந்திரிக்க ஆரம்பித்தார்கள். மாமாவும் சாதம், கூட்டு பெரியலுடன் இலையை மூடிவிட்டார். நான் சிறிதே வாங்கிய பருப்பு சாதத்தையும் எல்லா கூட்டுகளையும் மீதமில்லாமல் காலி செய்துவிட்டேன். பந்தியில் யாருமில்லை. நானும், எனக்காக காத்திருக்கும் மாமாவும் மட்டுமே. மாமாவுக்கு சங்கோஜமாய் இருந்ததோ என்னவோ, தெரியவில்லை, என்னை பார்த்து மாமா கேட்டார்,

‘என்ன மாப்பிளை மக (என் மனைவி) உங்களுக்கு சரியா சாப்பாடு போட மாட்டாளா?’

எனக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை. அங்கு இருந்த மூடப்பட்ட இலைகள் எல்லாம் வீணாக்க பட்ட உணவை மறைக்க முயன்று தோற்று போய்க்கொண்டிருந்தன. கல்யாண வீட்டுகாரர்கள், அந்தஸ்துக்கா, பெருமைக்கா உணவை பரிமாரினார்கள்? வந்தவர்கள், பேருக்காக சாப்பிடோம் என்று சொல்லி உணவை வீணடிக்கின்றார்கள். இப்படி நடப்பது இந்த ஒரு கல்யாணத்தில் மட்டுமல்ல, எல்லா கல்யாணத்திலும்தான். எப்படியோ, வீணடிக்கப் படுவது உணவுதான்.

சாப்பிட்டு முடித்து அங்கிருந்த உறவுக்காரர்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பினோம். சென்னை திரும்ப மாலையில்தான் ரெயில். காலையில் ஊர் திரும்பினேன். காலையில் காப்பி குடிக்கலாமென்றால், பால் வரவில்லை. பால் உற்பத்தியாளர்களின் ஆர்பாட்டம்தான் காரணம் என்று அடுத்த நாள் தினமலர் படிக்கும்போது தெரிந்து கொண்டேன். அதிலிருந்த செய்தியும், மன வருத்தத்தைதான் தந்தது.

ஆத்தூரில் பால்விலையை உயர்த்தக்கோரி சாலையில் 5000 லிட்டர் பாலை கொட்டியும், க‌றவை மாடுகளுடன் 200-க்கும் மேறபட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆத்தூர் புளியங்குறிச்சியில் பால்விலையை உயர்த்தக்கோரி தனியார் பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் சாலையில் மறியல் செய்து 5000 லிட்டர் பாலை கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். (தினமலர் - பிப்ரவரி10, 2011)

ஆத்துரில் மட்டுமல்லது தமிழ்நாடு முழுவதும் ‘பாலை கொட்டும்’ போராட்டம். ஒரு வேளைக்கு ஒரு பச்சிளங் குழந்தைக்கு 100 மில்லி லிட்ட்ர் என்றால்கூட இலட்சக்கணக்கான குழந்தைகளுக்கு பயன் பட்டிருக்கும். யாருக்கும் பயன் படாமல் பாழானது பால். ஆர்பாட்டத்திற்க்கும் உணவுதான் வீணாக்கப் படுகின்றது.

கால் வயிறும், அரை வயிறும் சாப்பிட்டு உயிர் வாழ்வோர் கோடி கணக்கில் உள்ள நம் போன்ற தேசத்தில், என் மாமா போன்றோரின் தனி மனித கோபத்திற்கும், பால் வியபாரிகளின் ஆர்ப்பாட்டத்திற்க்கும் உணவை வீணடிக்கும் உத்திதான் வழியென மனம் ஒப்பு கொள்ள மறுக்கின்றது.

(புகைபடம்- நன்றி:தினமலர்-பிப்ரவரி,10,2011)

5 கருத்துகள்:

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது… Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வேதனை மிக்க விடயம்.

//பந்தியில் யாருமில்லை. நானும், எனக்காக காத்திருக்கும் மாமாவும் மட்டுமே. மாமாவுக்கு சங்கோஜமாய் இருந்ததோ என்னவோ, தெரியவில்லை, என்னை பார்த்து மாமா கேட்டார், //

‘என்ன மாப்பிளை மக (என் மனைவி) உங்களுக்கு சரியா சாப்பாடு போட மாட்டாளா?’



பலர் இப்படித்தான் நினைக்கிறார்கள்; பார்க்கிறார்கள்.
ஊரோடில் ஒத்தோடு - என்பதைப் பின்பற்ற வேண்டிய தர்மசங்கடம் பல தடவை வந்தது.

பெயரில்லா சொன்னது… Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

unmaiyana varutham

சுதர்ஷன் சொன்னது… Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

என்ன கொடுமை இது ?இப்பிடிஎல்லாமா நடக்குது :(
//100 மில்லி லிட்ட்ர் என்றால்கூட இலட்சக்கணக்கான குழந்தைகளுக்கு பயன் பட்டிருக்கும்..// mhm

பால்ராஜன் ராஜ்குமார் சொன்னது… Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@யோகன் பாரிஸ்(Johan-Paris)

On Wed, Feb 16, 2011 at 3:41 PM, Johanadarajah, Nada wrote:

தலைப்பை பாழான பால் என மாற்றவும்;
நன்றி

Johan Paris


2011/2/17 Rajkumar
அன்புள்ள யோகன் பாரிஸ்,

தவறை சுட்டி காட்டியதற்க்கு மிக்க நன்றி.


நட்புடன்,
ராஜ்குமார்.

பால்ராஜன் ராஜ்குமார் சொன்னது… Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@S.Sudharshan

ஆம் சுதர்சன், பார்த்தால் கஷ்டமாய் இருக்கின்றது.

கருத்துரையிடுக

பால்ராஜன் ராஜ்குமார்