திங்கள், 28 பிப்ரவரி, 2011

நாளை மற்றுமொரு நாளே….

ஐந்தாவது வகுப்பு வரை நான், தொடக்க பள்ளி படிப்பை ஸ்ரீவில்லிபுத்தூர் பண்டாரக்குடி தெருவிலிருக்கும் சி.எஸ்.ஐ. பள்ளியில் படித்தேன். நான் அங்கு படிக்கும் போது, வேறு பள்ளியில் படிக்கும், என் சமவயதை உடைய பசங்கள் எங்கள் பள்ளிக்கு வைத்துள்ள பெயர் ‘ஓட்ட பள்ளிக்கூடம்’. எங்கள் பள்ளிக்கூடம் ஒன்றும் ஒட்ட உடைசலானதல்ல, மழை காலங்களில் ஒழுகும். அவ்வளவே. அதிலும் எங்களுக்கு ஒரு விளையாட்டு உண்டு. இரண்டு கைகளையும் ஒட்டி கிண்ணம்மாதிரி வைத்துக்கொண்டு, மேலே ஓட்டிலிருந்து விழும் தண்ணீரை பிடிக்க வேண்டும். யாரால் அதிகமாக தண்ணீர் பிடிக்க முடிகின்றதோ அவனே வெற்றியாளன். எனக்கு நான்கைந்து சொட்டுக்கு மேல் விழாது. கையை தவிர தலையிலோ, உடம்பின் எதாவது ஒரு பகுதியில்தான் விழும். அல்லது போட்டி முடியும் முன்பே என் அம்மா குடையுடன் என்னையும் என் தம்பியையும் கூப்பிட வந்துவிடுவார்கள். அடுத்த நாள், போட்டியில் யார் ஜெயித்தது என்று கேட்டால், அது ஜானாகத்தான் இருக்கும். ஜானின் முழு பெயர் ஜான்சன் பொன்னையா. விளையாடும் போது ‘ஜான்......முழம்’னு அவனை பட்ட பெயர் சொல்லும் போது உணர்ச்சிவசப்பட்டு கையை ஓங்கி தோற்றுவிடுவான். ஜான் பழகுவதற்க்கு நல்ல பையன், அவன் என்னுடைய நண்பன் மற்றும் வகுப்பில் எனக்கு பக்கத்தில் அமர்ந்திருப்பான். ஒவ்வொரு மாதாந்திர தேர்வின் ரேங்க் படிதான் வகுப்பில் அமர்ந்திருப்போம். அதாவது முதல் ரேங்க் மாணவன் முதலிலும். கடைசி ரேங்க் கடைசி பெஞ்சிலும் இருப்பார்கள். ஜான் மட்டுமல்ல, ஜார்ஜ், வில்சன், ராபர்ட் என்று சந்தைபேட்டையிலிருந்து வரும் பசங்க எல்லோருமோ எனக்கு நண்பர்கள்தான். பள்ளிக்கூடம் முடிந்தபின் இவர்கள் என்னுடைய தெருவில் அரச மரத்தடியில் விளையாடிவிட்டு போவார்கள். ஒரு நாள், நான் இவர்கள் இருக்கும் சந்தைபேட்டைக்கு விளையாடச் சென்றேன். அன்றுவரை, இவர்கள் தெருவும் எங்கள் தெருவும் ஒன்றுதான், இவர்கள் வீடும் என் வீடுமாதிரிதான் என்று நினைத்திருந்தேன். ஆனால் அங்கு சென்று பார்த்த காட்சிகள் எனக்கு வேறு உலகத்தை அறிமுகப்படுத்தியது. தெருவெல்லாம் தார் ரோடு அல்லாமல் மண் ரோடு. எங்கும் தண்ணீர் கட்டிகிடந்தது. சகதியில் பன்றிகள் சுகமாய் படுத்து கிடந்தன. தெரு ஓரத்திலே குழந்தைகள் மலம் கழித்துக்கொண்டிருந்தனர். விளையாட இடமே இல்லை. ஜான் வீட்டிற்க்கு சென்றேன். குடிசை வீடு. மண் தரை. தனி தனி அறைகள் எதுவும் இல்லை. இதே மாதிரிதான் எல்ல வீடுகளும் இருந்தன. அப்போதைய என் உணர்வை சொல்ல தெரியவில்லை, ஆனால் அந்த இடமே பிடிக்கவில்லை. விபரம் தெரியாத வயது.

நான் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வேலை மாற்றலாகி வந்தபோது, கல்லூரியில் படித்த நண்பன் சென்னையில் ஒரு பாம்பே கம்பெனிக்கான மேனேஜராக இருந்தான். அவன் அலுவலகம், பார்சன் காம்பிளக்ஸில் இருந்தது. அவன் அலுவலகத்தில் மொத்தம் மூன்று பேர், நண்பனையும் சேர்த்து. அவ்வப்போது அவன் அலுவலகத்திற்க்கு சென்று பேசிக்கொண்டிருப்பேன். அங்கு வெங்கட்டு (வெங்கட்) என்று ஒரு ஆபீஸ் பாய் இருந்தான். பதினேழு பதினெட்டு வயதிருக்கும். சுறு சுறுப்பாய் இருப்பான். பத்தாம் வகுப்பு பெயிலானதோடு படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டான். இவந்தான் காப்பி வாங்கிவருவான். ஒரு நாள், அங்கு சென்ற போது, என் நண்பன் கிளையண்டை (வாடிக்கையாளர்) பார்க்க வெளியே சென்றிருந்தான். வெங்கட்டு, ஆபீஸ் ஹாலில் இரண்டு கைகளால் கால்களை இருக்கி பிடித்து தரையில் குத்தவைத்து உட்கார்ந்திருந்தான். என்ன ஆச்சினு குனிந்து பார்தால், அவன் குளிர் ஜீரத்தில் நடுங்கி கொண்டிருந்தான். அலுவலகதிலுல குமஸ்த்தாவும் அன்று வரைவில்லையாம். சரினு, அலுவலகத்தை பூட்டிவிட்டு, வெங்கட்டை ஒரு டாக்டரிடம் அழைத்து சென்றேன். வைரல் இன்பெக்‌ஷன்னு சொல்லி மாத்திரையும் எழுதி கொடுத்து, ஜீரம் குறைய ஊசியும் போட்டார், டாக்டர்.

”சார் வந்திருவாரு, நான் ஆபீஸுக்கு போகணும். சாவி என்கிட்டதானே இருக்குது”என்று சொன்னான் வெங்கட்டு. அந்த நிலையில் அவனை ஆபீஸுக்கு பதில் வீட்டில் கொண்டு விடுவதே சரியென பட்டது எனக்கு.

“உன்னை உன் வீட்டில் விட்டுவிட்டு, ஆபீஸு சாவிய நான் எடுத்து கொண்டு போறேன்” என்று சொன்னேன்.

”வீட்டுக்கு நானாகவே போய்க்கிறேன் சார்” என்றான் வெங்கட்டு.

அவன் சொன்னதை கேட்காமல், நான் தான், அவனை என் டூ வீலரில் கூட்டிக் கொண்டு, அவன் வீடு இருக்கும் தேனாம்பேட்டைக்கு சென்றேன். அது, ரோட்டு மேலே இருக்கும் குடிசை பகுதி – சேரி. அங்கு இறங்கி, இனி போய்க் கொள்ளுவேன் என்று சொன்னவனுடன், விடாபிடியாக வீடுவரை சென்றேன். வெளியிலிருந்து பார்க்கும்போது வெறும் குடிசைகள் மட்டுமே தெரியும் பகுதி, அருகில் சென்று பார்த்தால், அவ்வளவு, சுகாதார கேடு நிறைந்தாய் இருக்கும். நான் சிறுவயதில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பார்த்ததைவிட மிக மிக மோசமாயிருந்தது சென்னையிலிருந்த சேரி. வாழ்வின் விளிம்பு நிலை மனிதர்களின் நிலை மனதிற்க்கு உறுத்தலாயிருக்கும். சில நாட்களுக்கு மனதைவிட்டு அகலாமல் நிலைகொண்டிருந்தன இழிநிலை காட்சிகள். இது நடந்து பல வருடங்களாகிவிட்டன. ஆனால் இப்போதும், எதாவது ஒரு குடிசை பகுதியை பார்க்கும் போதும், அந்த எண்ணங்கள் நிழலாடும்.

கந்தன் என்ற ஒரு மனிதனின் ஒரோ ஒரு நாள் வாழ்வை பற்றிய படித்தேன். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒரு நாள்கூட இல்லை. காலையில் கந்தன் ஏழு மணிக்கு எழுந்திறுப்பதிலிருந்துதான் கதை ஆரம்பிக்கிறது. அன்று இரவே முடிகின்றது. இருபத்தி நான்கு மணி நேரம்கூட இல்லை. ஜி. நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே….நாவல் பக்கத்திற்க்கு பக்கம் விறுவிறுப்பாய் மட்டுமல்ல, அறுவறுப்பாயும் இருந்தது. அறுவறுப்பானது எழுத்தோ, நடையோ அல்ல, அவை அருமையானவை. அறுவறுப்பானது, கதையின் மறுக்கமுடியாத யதார்த்தமான கதைதளம், பாத்திரங்கள், மற்றும் நிகழ்வுகளே. கதாபாத்திரங்கள் உண்மையில்லை என்றோ, கதையே மிகைபடுத்தப்பட்ட புனைவு என்றோ மறுக்க முடியாது. நாம் தினமும் பார்த்துக் கொண்டிருக்கும் ஆனால் நாவலாக வாசிக்கப்படாத நிஜங்கள்.

காலையில் குடிசையில் படுத்திருக்கும் கந்தன் படுக்கையிலிருது பள்ளி எழும் காட்சியே இப்படித்தான்........”.....தலையணையை இலேசாகத் தள்ளிவிட்டுத் தந்தி அடிக்க ஆரம்பித்தது. மீண்டும் கையைத் தரையில் ஊன்றிக்கொண்டான். தேவைப்படாத ஒரு ஏப்பம். அதைத் தொடர்ந்து குமட்டல். குமட்டலோடு இருமல். விலா எலும்புகள் முறிவதுபோல் இருந்தது. வாயிலிருந்து ஐம்பது மில்லி கோழை வழிந்து பனியனை நனைத்த பிறகு சிறிது நிம்மதி”. எழுந்த கந்தன், மீனாவின் பெட்டியை துளாவி பணம் காசு இருக்கின்றதா என்று பார்கின்றான். வேறு எதற்க்கு, ஜிஞ்சர் (சரக்கு) அடிக்கத்தான். இரண்டு ரூபாய்க்கு மேல் தேறாததால் காலி பட்டில்களை, அப்போது வரும் மூக்கனின் மனைவி ராக்காயிடம் கொடுத்து தெரு முக்கிலிருக்கும் ராவுத்தர் கடையில் போட்டு வெறகு கடையில் ஜிஞ்சர் வாங்கிவர சொல்கிறான். காலையில் வெளியே போகணும்னா, மூன்று அவுன்ஸ் ஜிஞ்சர் அடித்தாதான் முடியும். அவனிடம் வந்த கிராக்கி ஒருவன், கொஞ்சம் வயசு கூடவானாலும் பரவாயில்லை, சிரிச்சுப் பிடித்து விளையாடற பிள்ளையா வேண்டும் என்று கேட்டதற்க்கு, கந்தனுக்கு ராக்கயி நினைப்பு வந்தாய் அவளிடம் சொன்னான். அவனுடயை அனுமதியுடன் அவனின் மீனா தொழிலுக்கு போவது கேட்ட ராக்காயி, அவளின் மூக்கனுக்கு தெரியாமல் அதையே செய்தால் சரி என்ற மனநிலைக்கு வந்துவிடுகின்றாள். ராக்காயி மோகனாவாக மாறுவதும் தேவை என உணர்த்தப்படுகின்றது. மோகனா வங்கிவந்த திரவத்தை ஒரே மடக்காக குடித்துவிட்டு, சிகரெட்டை புகைத்தான் கந்தன்.

பக்கத்து வீட்டு....குடிசை பெண்னை அனுப்பி மீனாவை அழைத்துவர சொன்னான். வந்த மீனாவிடம், ஏட்டையாவுக்கு கொடுக்க பணம் வேண்டும் என்கிறான். முந்தைய இரவில் சம்பாதிக்க முடியாததற்க்கு காரணம் சொல்லி, பேச்சியக்காவிடம் பணம் வாங்க எழுந்து செல்கிறாள். மீனாவை பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன் கோவிலில் பார்த்து பிடித்துபோனது அவனுக்கு. வெத்திலைக் கடை சோலையிடம் பேசிமுடித்ததும், கந்தனின் அம்மா சொர்ணாத்தம்மாள் சோலைக்கு சொந்தம் என்று அவர் சொன்னதும், அம்மாவிடம் ஒருவாட்டிக்கு ரெண்டுவாட்டிக்கு சம்மதம் வாங்கி மீனாவிற்க்கு கோவிலில் வைத்து தாலி கட்ட சொன்னதும் நினைவிற்க்கு வந்தன. பேச்சியக்காவிடம் பணமும், இட்டிலியும் வாங்கிவந்தாள் மீனா. கந்தன் காலை நேரத்து வயிற்று பசியை மீனா கொண்டுவந்த இட்டியாலும் உடற்பசியை மீனாவைக் கொண்டும் தணித்துக் கொண்டான். விறகு கடைக்கு சென்று மீண்டும் மூணு அவுன்சு ஜிஞ்சர் மருந்து சாப்பிட்டுவிட்டு, பல் விளக்கி, குளித்து, சலவை செய்யப்பட்ட ஆடைஅணிந்து வீட்டைவிட்டு கிளம்பும்போது நாமும் அவனோடு ஊருக்குள் பயணிக்கின்றோம்.

முத்துசாமிக்கு கைம்பெண்னை மணம்முடிக்க பெண்ணோடு பேசிவிட்டு, அவனோடு சேர்ந்து சாரயம் குடித்து, சாரயக்கடையில் தகர்ராரில் எதிராளியின் கத்திவீச்சிலிருந்து தப்பி, தகறாரு செய்தவனை அடித்து துவைத்துவிட்டு, வள்ளி லாட்ஜீக்கு சென்று நேற்று இரவு வந்த கிராக்கியிடம் மிரட்டி பணம் பிடுங்கி, செட்டியாருக்கும் ஐரீனுக்கும் பஞ்சாய்த்து பண்ணி முடித்து, தேவி லாட்ஜில் வந்து சிறிது தூங்கி எழுந்தான். தேவி லாட்ஜின் முதலாளி சுப்பு நாயுடு, தன் மேனேஜரிடமும், கோவில் டிரஸ்டியிடமும், பிசினெஸ்ல கொஞ்சம் நெளிவு சுளிவு வேண்டுமென்பார். கந்தனால், கறாராயிருந்த கோவில் டிரஸ்டி சமாதானம் செய்யப்பட்டார். எந்த அளவுக்கு என்றால், ஒன்றும் தெரியாமலோ எல்லாம் தெரிந்தோ, “பிசினெஸ்ல என்ன கோவில் காரியங்களில்கூட கொஞ்சம் நீக்குபோக்கு வேண்டியிருக்கு. நாமென்ன அரசியல்வாதிகளா, கொள்கைன்னு வம்பா இருக்க?” என்று சொல்லுமளவுக்கு. தூங்கி எழுந்து கிளம்ப ஆயத்தமான கந்தனிடம், லாட்ஜ் சிறுவன் “காப்பி வேணுமா சார்?”னு கேட்டதற்க்கு இருநூறு மில்லி சாராயம் வாங்கிவரச் சொன்னான். சோபாவில் உக்கார்ந்து பொருளாதரமும் சோஷியலிசமும் பேசிக்கொண்டிருந்தவர்களேடு சிறிது நேரம் இருந்துவிட்டு தரகர் அந்தோணியை பார்க்க ஷெனாய் நகருக்கு கிளம்பினான் கந்தன். அந்தோணி, வீடு, குடிமனை, நிலம், கார், ஆண்கள், பெண்கள், இன்னும் எதை எல்லாம் வாங்கி விற்க்கலாமோ அல்லது வாடகைக்கோ குத்தகைக்கோ அமர்த்திக் கொள்ளலாமோ, எல்லாமே அவரது தரகுத் தொழிலுக்கு உட்பட்டவைதான். அந்தோணி தரகராய் மட்டுமல்ல, தத்துவஞானியும்கூட. பலவகையான தொழில் செய்த அனுபவத்தாலும், ஐம்பத்தைந்து வயதாகியதாலும் அந்தோணியின் ஆலோசனைகளை மிகவும் மரியாதையுடன் கந்தன் எடுத்துக் கொள்வான். பணமே ஒரு மானங்கெட்ட விஷயம் என்ற ஞானம் அந்தோணிக்கு பள்ளிநாட்களில் கிடைத்ததே சுவாரசியமானதுதான். சோமு நாடார் பையன், பிறந்த மேனியா கிரவுண்டை சுற்றி ஓடிவந்தால் பத்து ரூபாய் தருவதாய் சொன்னபோது, இரண்டு தடவை கிரவுண்டை சுற்றிவந்தால் இருபது கிடைக்குமான்னு கேட்டார். முடியாது என்று சொன்னதற்க்கு, சரி, கெடெச்சது லாபம்னு ஓடி பத்து ரூபாயை வென்றவர். மீனா விசயமாய்தான், அவரை பார்க்கப்போனான் கந்தன். ஆனால் அவரோ பிடிகொடுக்காமல் நழுவியது, கந்தனுக்கு ஏமாற்றமாயிருந்தது. அந்தோணியின் வீட்டிலிருந்து இரவு திரும்பும்போது ஒரு கொலையை பார்த்த சாட்சியாய் இருந்து அன்னக்கிளியுடன் சேர்ந்து போலீஸ் ஜீப்பில் ஏறி செல்வதோடு கதை முடிகின்றது.

ஒரு மனிதனின் ஒரு நாள் வாழ்க்கையில் செய்த சின்னத்தங்கள், காட்டிய துணிச்சல், பெற்ற நோய்கள், பட்ட அவமானங்கள்தான் கதை. இவையே கதை நாயகனின் வாழ்க்கை. அவனின் அடுத்த நாளைப்பற்றி நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? என்று கேட்கிறார் ஆசிரியர் ஜி. நாகராஜன். ஏனெனில் அவனுக்கும், நம்மில் பலரைப்போலவே – நாளை மற்றுமொரு நாளே.

புத்தகத்தின் தலைப்பு : நாளை மற்றுமொரு நாளே…….
ஆசிரியர் : ஜி.நாகராஜன்
வெளியீட்டாளர் : காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பால்ராஜன் ராஜ்குமார்