ஞாயிறு, 28 நவம்பர், 2010

மோசடி என்றொரு மோசடி

இரண்டாம் தலைமுறை அலைபேசி மோசடி (2G Spectrum Scam) பற்றிய செய்திகளை படித்தவுடன் எனக்கு, “உண்மையான் உண்மை”, “பொய்யான உண்மை”, “பொய்யான பொய்”, “உண்மையான பொய்” பற்றிய நினைவுகள்தான் வந்தது. அத்துடன் பத்திரிக்கையில் படித்த மேலும் ஒரு காமெடியும் கூடவே நினைவுக்கு வந்தது.

’அப்பா கோரிப்பாளையத்திலிருந்து நம்ம வீட்டிற்க்கு பஸ்ஸில் வந்தால் டிக்கட் எவ்வளவு?”

”நாலு ரூபாய்” என்றார் அப்பா.

“அப்ப நான் நாலு ரூபா சேமித்துவிட்டேன்”

“எப்படி?” அப்பா

“நான் பஸ்ஸில் வருவதற்க்கு பதில், பஸ்ஸுக்கு பின்னால் ஒடி வந்தேன்”

ஒரு வினாடி சந்தோசப்பட்ட அப்பா, “அட போடா முட்டா பையலே, நீ பஸ்ஸுக்கு
பின்னால் ஓடி வந்தற்க்கு பதில் டாக்ஸிக்கு பின்னால் ஒடி வந்திருந்தால் நாற்பது ரூபாய் சேமித்திருகாலாமே” என்றார்.

மகன் சேமித்ததாய் சொன்ன நாலு ரூபாயும் சரி, அப்பா சேமிக்கச்சொன்ன நாற்பது ரூபாயும் சரி, இவை யாவுமே கருத்தியல் (notional) சேமிப்பே தவிர உண்மையானது அல்ல.


இதைப்போலத்தான் இரண்டாம் தலைமுறை அலைபேசி மோசடியும் உள்ளது. எல்லோரும் சொல்லுகின்ற அரசங்கத்திற்க்கு உண்டான இழப்பும், டாக்சிக்கு பின்னால் ஒடி சேமித்தமாதிரிதான். இந்த கருத்தியல் இழப்பு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய். எண்களில் சொன்னால் – 150000,00,00,000 ரூபாய். இந்த கணக்கில் இரண்டுவகையான முட்டாள்களும் ஒரே மாதிரியான பாட்டைத்தான் பாடுகின்றார்கள். படித்த முட்டாள், பாடிக்காத முட்டாள் என்ற இரண்டு வகை சரிதானே?. உரிமைத் தொகையாக (license fee) அரசங்கம் இழந்த தொகைதான் இவ்வளவு பெரிய பணம் என்கின்றார்கள். இந்த இழப்பிற்க்கு மொத்த பொறுப்பாளியாக மத்திய அரசின் முன்னாள் தகவல் தொடர்பு மந்திரி அ. ராசா என்று சொல்லுகின்றார்கள். ஆரம்பத்தில் வருமான இழப்பு என்று ஆரம்பித்து, பின்னர் அ. ராசாதான் கையூட்டாக இவ்வளவு தொகையையும் பெற்றமாதிரி ஒரு மாயை உண்டாக்க முயற்சி சொயப்படுகின்றது. (என்னை அ. ராசாவின் அனுதாபியாகவோ அல்லது தி.மு.க வின் தொண்டனாகவோ நினைக்கவேண்டாம். பிரச்சினையை எப்படி சமுதாயம் பொதுவெளியில் அலசுகின்றார்கள் என்றே நோக்குகின்றேன்)

வ்ருமான இழப்பிலிருந்து, கையூட்டமாய் மாறிய இந்த அறிவுஜீவிகளால் நடத்தப்படும் நாடகம், அடுத்த கட்டத்திற்க்கு நகர்கின்றது. அதற்கு பத்திரிக்கைகளும், தொலைகாட்சிகளும் தகுந்த சூழமைப்பை உருவாக்கித்தருகின்றன. இவ்வளவு பெரிய தொகையை எங்கு பதுக்கி வைத்திருக்கின்றார்கள்? யார்யாரெல்லம் பணத்தை பங்கு போட்டர்கள்?, கருணாநிதியா? கனிமொழியா?, அதற்கு CBI யா விசாரணையா அல்லது JPC கூட்டு விசாராணையா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்கின்றார்கள். அதற்காக, இந்த மாதிரியான தொலைதொடர்பு வர்த்தக உரிமையில் ஊழலே நடக்க வாய்ப்பில்லையா? என்றால், யாரும் மறுப்பதற்க்கில்லை. ஆனால் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கான மோசடி என்று ஒரு பொய்யான பொய்யை பிடித்துக்கொண்டு, மேலும் பயணிக்க வேண்டாம். இப்படி பயணப்படும்போது உண்மையான உண்மைகள் மறைக்கப்படுகின்றன அல்லது நம் கவனத்தை திசை
திருப்பிவிடுகின்றன. அப்படி திசை திருப்பப்பட்ட உண்மைகளில் ஒன்று.....

நமது நாட்டில் அலைபேசி அழைப்பு கட்டணமாய் ஒரு வினாடிக்கு ஒரு பைசா அல்லது ஒரு நிமிடத்திற்க்கு 50 பைசாவாக உள்ளது. இதேமாதிரியான சேவை, அமெரிக்காவில் நிமிடத்திற்க்கு 1100 பைசாவாகவும், இங்கிலாந்தில் நிமிடத்திற்க்கு 900 பைசாவாகவும் உள்ளது. அதாவது இந்தியாவில் நமக்கு கிடைக்கும் சேவை 1500 விழுக்கடு முதல் 2200 விழுக்காடுவரை மலிவாக இருக்கின்றது. தரத்திலோ தொழில்நுட்பத்திலோ குறைந்தது என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். உலகத் தரம்வாய்ந்த தொழில்நுட்பம்தான் இங்கும் இருக்கின்றது. நாம் எங்கே புதிய தொழில்நுட்ப்பத்தை கண்டு பிடித்தோம்? வெளிநாட்டிலிருந்து தொழில்நுட்ப்பத்தை பெற்று, அப்படியே பயன் படுத்திகின்றோம். பின்னர் எப்படி நம் நாட்டில் மட்டும் சேவை கட்டணம் குறைவாக இருக்கின்றது? சேவை நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட உரிமை கட்டணம் குறைவாக இருப்பதால். அதாவது, ஒன்றரை லட்சம் கோடி குறைவாக வசூலித்தால், பொது ஜனங்களுக்கான கட்டணமும் குறைவாக இருக்கின்றது.


நிலமை இப்படி இருக்க, அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் ”பொய்யான பொய்யை” ஊர் ஊராய் ஊர்வலமாய் எடுத்து சொல்வதும் மோசடியே.

வெள்ளி, 5 நவம்பர், 2010

என் பாகிஸ்தான் சகோதரிக்கு

நீ நலமாயிருக்க
நான் நலமாயிருக்கின்றேன்
நான் நலமாயிருக்க
நீ நலமாயிருக்கின்றாயா?

சீதனமாய்த்தானே கொடுத்தோம்
ஹரப்பாவையும் மொகஞ்சதாரோவையும்
பாகப்பிரிவினைனு
சொல்லிவிட்டார்கள் பாவிகள்

நம்முடைய பலத்தை
அன்பைவைத்து அளப்போம்
அணுகுண்டுகளை
வைத்து வேண்டாமே

நம் நாட்டின் எல்லையில்
யார் சுட்டாலும் யார் மாண்டாலும்
ஒட்டை விழுவது என்னவோ
நம் இதயத்தில்தானே

உன் தேசம் தண்ணீரில்
மூழ்கியிருந்த போது
நான் கண்ணீரில்
மூழ்கினேன்

உன்மேல் என் அன்பையும்
என்மேல் உன் அன்பையும்
சிந்துவும் பிரிக்கமுடியாது
இந்துவும் பிரிக்கமுடியாது

நான் மட்டும் வாழ்ந்து நீ வீழ்ந்தால்
நான் எப்படி வாழ முடியும்
ஜெய் பாகிஸ்தான்
ஜெய் இந்தியா.
பால்ராஜன் ராஜ்குமார்