ஞாயிறு, 19 ஜூலை, 2020

முதிர் கன்னிகள்

இருபது வயதில்
    நிகழ்காலத்தில்
எதிர் கால கனவுகள்

நாற்பது வயதில்
    நிகழ் காலமே
இறந்த காலமாகிவிடும்

துணையை இழந்தால்
    வாழா வெட்டி
துணையே கிடைக்காவிடில்
    வாழ்வே வெட்டி

ஞாயிறு, 5 ஜூலை, 2020

ஃபேஷன்

சரிவுப்பாதை
     மாடல் நடந்து வந்தாள்
அவள் உடம்பொல்லாம்
     பார்வையாளர்களின்
கண்கள்
     ஒட்டிக்கொண்டன

கடலலைகள்

யாரங்கே
      மடித்து மடித்து
கரையில் வைத்த
      அலைகளை
கலைத்துவிடுவது

அப்பாவான மகன்

இரண்டு வயதில்
     நான் நீயாக
ஆசைப்பட்டேன்
     உன் சட்டையை அணிந்து
உன் செருப்பின் கட்டைவிரலில்
     காலையே நுழைத்து
நான் நீயானேன்

கற்பமாகாத இறகுகள்

அவள் படிப்பற்க்காக
     ஆங்கில புத்தகத்தை
அத்தனை முறை திறந்ததில்லை
     இன்று மட்டும்
பலமுறை பார்த்துவிட்டாள்
     நேற்று வைத்த மயிலிறகு
குட்டி போட்டதா என்றறிய

இருள்

பகலைக் காண
     இரவெல்லாம்
காத்திருந்தும்
     பகல் வந்ததும்
பார்க்காமல்
     போய்விட்டது இருள்

அடி

கிடந்த இலைமேல்
     விழுந்த இலை
மொதுவாய் கேட்டது 
     அடி பட்டதா? என்று

காமம்

கழிப்பரை சுவரின்
     கிறுக்கல்களும்
வாசகமும்
     சுவரில் புணரும்
சித்திரமாய்
     வழிந்துவிடுமோ
இயலாதவனின் காமம்

மரியாதை

நீ நிமிர்ந்து
     நடக்கும் போது
உன் நிலழ்கூட 
     மண்டியிடாது யாருக்கும்

ஞாயிறு, 28 ஜூன், 2020

அந்நியர்களுடன் பேசுதல் (Talking to Strangers)

மால்கம் கிளாட்வெல் ஒரு வெள்ளையின போலீஸ்காரரால் கைது செய்யப்பட்ட ஒரு கறுப்பினப் பெண் சாண்ட்ரா பிளாண்டின் மரணத்தால் ஏற்படுகிற பிரச்சனைகளுடன் தொடங்குகிறார். இது அமெரிக்காவில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் உள்ள, ஏன் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளேயும் இருக்கும் இருண்ட பகுதிதான் என்கிறார். சாண்ட்ரா பிளாண்டின் மரணம், ஃபிடல் காஸ்ட்ரோ சிஐஏவை முட்டாளாக்கியது, பெர்னி மடோஃப்பின் ஏமாற்றுகள், அமண்டா நாக்ஸின் விசாரணை, ஜெர்ரி சாண்டுஸ்கி பெடோபிலியா ஊழல் போன்ற நிகழ்வுகளை மால்கம் விவரிக்கும் போது நம் ஆர்வமும் அதிகரிக்கின்றது.

மக்கள் எப்போது பொய் சொல்கிறார்கள் என்று அறிவது மிகவும் கடினம் மேலும் வெளிப்படையானவர்கள் அல்ல. கிளாட்வெல் தனது அடிப்படை வாதத்தை நம்பியிருக்கும் உளவியலாளர் திமோதி லெவின் கூற்றுப்படி, மக்கள் உண்மையைச் சொல்கிறார்கள் என்ற அனுமானம் கிட்டத்தட்ட உலகம்முழுவதுமே உள்ளது . இதை, "புனித முட்டாள்" என்று ரஷ்ய நாட்டுப்புறக் கதைகளில் அழைக்கப்படுகிறது. லெவின் இதை தனது உண்மை இயல்புநிலை கோட்பாடு என்று அழைக்கிறார். கிளாட்வெல் அதை சர்வதேச நிதி மோசடி வரையிலான போலி வழக்குகளுக்கு பயன்படுத்துகிறார். கிளாட்வெல்லின் கூற்றுப்படி, ‘நம்பகமான’ மக்கள், அதாவது முகப் பண்புகளையும், கலாச்சார மரபுகளையும் ஒத்துப்போகும் உடல் மொழியையும் வெளிப்படுத்தும் மக்கள் பொய்யைக் கண்டறியவும், 'தவறாக பொருந்திய' நடத்தை சமிக்ஞைகளுடன் உண்மையைச் சொல்லுவதை கண்டறியவும் சிறந்த தொழில்நுட்பமும் ஏதும் இல்லை. டெக்சாஸ் சிறைச்சாலையின் காவலில் ஒரு கறுப்பின மாணவர் சாண்ட்ரா பிளாண்டின் இறந்ததற்கான காரணம், அந்நியர்களிடையே உள்ள தவறான மதிப்பீடு அல்லது எண்ணங்கள்தான். இந்த உதாரணத்தை அவர் தனது கதை புத்தகத்தை முடிக்கப் பயன்படுத்திக்கின்றார்.

புத்தகத்தின் முக்கியமான அம்சம் என்னவென்றால், "நீங்கள் எதையாவது நம்புகிறீர்கள், ஏனெனில் உங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை." பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் முகவரான அனா மான்டெஸ் பற்றி ஒரு சிறந்த கதை உள்ளது. அவர் ஒரு கியூப உளவாளி என்ற போதிலும், பல ஆண்டுகளாக அவர் சிறந்த செயல்திறன் சான்றிதழ்களைப் பெற்றார். பிடல் காஸ்ட்ரோ தனிப்பட்ட முறையில் அவருக்கு ஒரு பதக்கத்தை வழங்கினார். ஆனால் அவரது காதலன் பென்டகனுக்காக பணிபுரிந்தார், மற்றும் அவரது சகோதரர் மற்றும் சகோதரி இருவரும் எஃப்.பி.ஐ. பணிபுரிந்தார்கள். இவர்களில் ஒருவருக்கு கூட சந்தேகம் வரவில்லை. அனாவை பேட்டி காணும்போது, அவர் ஒரு உளவாளி என்று சில குறிப்புகள் இருந்தன. ஆனாலும், அவர் ஒரு உளவாளி என்று யாரும் சந்தேகிக்கவில்லை, அவர் கைது செய்யப்பட்டபோது, ​​அவளுடைய சக ஊழியர்கள் அவநம்பிக்கையில் இருந்தனர். யாருக்கும் சந்தேகம் இல்லை. 

உண்மைச் சிக்கலுக்கான தோல்வி வேறுவிதமாகக் கூறினால், நிதானமான எண்ணம் கொண்ட விஞ்ஞானிகளைப் போல, ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு, உண்மைக்கான ஆதாரங்களை அல்லது பொய்யான தகவல்களை சேகரிப்பதை நிராகரிக்கின்றோம். நாம் அதற்கு நேர்மாறாக செய்கிறோம். நாம் நம்புவதன் மூலம் தொடங்குகிறோம். நம்முடைய சந்தேகங்கள், இனி அவற்றை விவரிக்க முடியாத அளவுக்கு உயரும்போதுதான் நாம் நம்புவதை நிறுத்துகிறோம். 

வெளிப்படைத்தன்மை ஒரு கட்டுக்கதை. மக்கள் எப்படி உள்ளே உணர்கிறார்கள் என்பது பெரும்பாலும் அவர்கள் வெளியில் எவ்வாறு தோன்றும் என்பதோடு சரியாக பொருந்தவில்லை, அதாவது மற்றவர்களின் நோக்கங்களை நாம் தவறாக மதிப்பிடுகிறோம். நெருங்கிய நண்பர்களிடம் இது ஒன்றும் முக்கியமல்ல, அவர்களின் தனித்துவமான வெளிப்பாடுகள் என்னவென்று நாம் புரிந்திருப்போம், ஆனால் நாம் ஒரு அந்நியரை எதிர்கொள்ளும்போது, ​​ நம்மின் வெளி தோற்றத்தின் மதிப்பீடுகளை மாற்றவேண்டும். இருப்பினும், அந்நியர்களைக் கையாள்வதற்கான முறை கடினமானது என்றாலும், இது சமூக ரீதியாகவும் அவசியம். 

சிலவரிகள் மனதில் தங்கிவிடுகின்றது. மேலும் இன்றைய அரசியல் மற்றும் சமுதாய பிரச்சனைகளுக்கு கார்பன் காப்பி போல் இருக்கின்றது. அவைகளுள் சில: 

ஒரு சிறந்த (பொருளாதார) நாட்களில் அவர்கள் (இன்றைய அரசியல்வாதிகள்) திறமையற்றவர்கள், ஒரு மோசமான (பொருளாதார அல்லது பெருத்தொற்று) நாளில் அவர்கள் வக்கிரமானவர்களாக இருக்கிறார்கள் மற்றும் மோசடிக்கு செய்கின்றார்கள் (அத்தியாயம் 4, பக் 98). 

மைக் கில்லியம் (ஒரு சைக்காலஜிஸ்ட்), பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சில சமயங்களில் தங்கள் அனுபவத்தை மிகவும் ஆழமாக புதைத்து விடுகிறார்கள், அவர்கள் மிகுந்த அக்கறையுடனும் பொறுமையுடனும் மட்டுமே மீட்டெடுக்க முடியும்(அந்நியரிடம் பேசுதல், அத்தியாயம் 5, பக் 116). இன்றைய பாலியல் வல்லுறவுக்கு பாதிக்கப்பட்ட நபரின் வலிகளை வெளிக்கொணர்வதும் மிகவும் சிக்கலான வேலைதான். சில சமயங்களில் புறசான்ன்று இல்லாமல்கூட இருக்கலாம். 

அந்நியரைப் புரிந்துகொள்வதற்கான தடயங்கள் உள்ளன. ஆனாலும் அந்நியர்களைப் புரிந்துகொள்வதற்கான நமது திறனின் வரம்புகள் மிக குறைவு. முழு உண்மையையும் நாம் ஒருபோதும் அறிய மாட்டோம். அந்நியர்களுடன் பேசுவதற்கான சரியான வழி எச்சரிக்கையுடன் இருப்பதே. “நீங்கள் நினைப்பதை விட மக்கள் மிகவும் சிக்கலானவர்கள்”, மனித நடத்தைகளை விளக்குவதில் மனிதர்களாகிய நாம் இயல்பாகவே மோசமானவர்கள் என்பதைக் காட்டும் பல்வேறு வழக்கு ஆய்வுகள் மூலம் செல்கிறது. உணர்ச்சி வெளிப்பாடுகள் அல்லது மைக்ரோ வெளிப்பாடுகள் பற்றி நமக்குக் கற்பிக்கப்பட்டவை உண்மையில் நிஜ வாழ்க்கையில் பொருந்தாத மாதிரியானவை. 

இந்த புத்தகத்தைப் பற்றி எனக்குப் பிடிக்காத ஒரே விஷயம் என்னவென்றால், "அந்நியர்கள்" என்பதன் அர்த்தம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. இந்த புத்தகம் அனைவருக்கும் இல்லை என்றாலும் நான் பரிந்துரைக்கிறேன். 

(ISBN: 978-0241351574 Publisher: Allen Lane Language: English)

செவ்வாய், 19 மே, 2020

மனிதாபிமானம்


புலம்பெயர் தொழிலாளிகள்
      அடிமேல் அடிவைத்து
ஆயிரம் மைல்கள் நடந்தார்கள்

ஒவ்வொரு அடியிலும்
      நசுங்கி செத்தது
மனிதாபிமானம்

கொரோனாயணம்


தூணிலும் இருப்பேன்
துரும்பிலும் இருப்பேன்
என்றான் கடவுள்

தும்மலிலும் இருப்பேன்
தொண்டையிலும் இருப்பேன்
என்றார் கொரோனா

நம்மளை கை கழுவ சொன்ன 
அரசாங்கம்
நம்மளை கை கழுவியது

நம்ம வீட்டிலே இருந்தால்
கோரோனா வீதியில்  இருக்கும்
நாம் வீதிக்கு வந்தால்
கொரோனா நம் வீட்டுக்கு  வரும்

மாடத்தில் விளக்கு ஏத்த
நம்ம வீட்டில் எரிந்த விளக்கை
அணைக்க சொன்னார்
   
சத்தமா சாப்பாட்டு தட்டை
தட்ட சொல்லி
சத்தமில்லாமல் நம்மக்கு
திருஓட்டை தந்துசென்றார்

ஊரெல்லாம் அடங்கிக்கிடந்தது
தெருவெல்லாம் முடங்கிக்கிடந்தது
சாதி  வெறி முழித்தே இருந்தது

தேசிய ஊரடங்கில் பணக்காரர்கள்
ராமாயணம் பார்த்தார்கள் 
ஏழைகள் பசியை தின்றார்கள்

வறுமையோடு வாழ்பவர்களை
வைரஸ் சாகும்வரை
வைரசோடும் வாழ சொன்னார்கள்
   
புலம்பெயர்ந்த தொழிலாளிகள்
நடை பிணங்களாக சாலைகளில்
நாய்குட்டிகளுக்கு விமானம்சேவை

ஊருக்குள்ளே நல்ல ஊர்
எங்க ஊர்
பாருக்குள்ளே நல்ல நாடு
எங்க நாடு
பால்ராஜன் ராஜ்குமார்