திங்கள், 30 மே, 2011

இடையபொட்டல்

ஸ்ரீவில்லிபுத்தூர் இடையபொட்டலை நோக்கி எங்க தெருவிலிருந்த பசங்க எல்லோரும் சென்று கொண்டிருந்தோம். எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. முழுஆண்டு தேர்வுக்கு பின் வரும் கோடை விடுமுறைதான், ஆனால் ஆறாம் வகுப்பா அல்லது ஏழாம் வகுப்பு ஆண்டு தேர்வான்னு ஞாபகம் இல்லை. அப்படி ஒரு விடுமுறையில்தான், என் பள்ளி தோழன் சீனா சொன்ன செய்தியை கேட்டு தெரு பசங்க எல்லோரும் ஹைப்பர் டென்சன் ஆகிவிட்டோம். அதனால் தான் இடையபொட்டலுக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தோம். ‘சீனா’, அவனுடைய பெயர் இல்லை, அது ஒரு வழிச்சொல். ஆமா சீனாவுக்கு சீனானு பெயர் எப்படி வந்ததுனு தெரியுமா? அவன் பெயர் நாராயணன் - சி. நாராயணன். (அவன் அப்பா பெயர் சிவபிரகாசம்). ‘சி’யும் ‘நா’ வையும் சேர்த்து ‘சிநா’னு கூப்பிட ஆரம்பித்து அதுவே சீனாவகிவிட்டது. அவன் வீடு ஆர்.சி சர்ச்க்கு பக்கதிலிருக்கும் கீழப்பட்டி தெருவில் இருந்தது. அங்கிருந்து எங்க தெருவிற்கு விளையாடவருவான். எங்க தெருவிலும் ஒரு நாராயணன் இருந்தான் – ஜெ. நாராயணன். அவனை ‘ஜெனா’னுதான் கூப்பிடுவோம்.

எங்கோ இடையபொட்டலில் ஆரம்பித்து சீனா, ஜெனாவிற்க்கு வந்து விட்டது கதை. அப்படி இடையபொட்டல்ல என்னதான் இருந்தது? சரி, அதற்கு முன்பு ஒரு கேள்வி, இடையபொட்டல் எங்க இருக்குனு தெரியுமா?. தெரியாதுனா சொல்றேன். சி.எம்.எஸ் பள்ளிக்கூடம் புது பில்டிங்கிலிருந்து லெப்ட் திரும்பி ஊரணி வழியாக தைக்கப்பட்டிக்கு வரும்போது கீரை தோட்டத்திற்க்கு முன்னால் இருக்கும் திறந்த சிறுமைதானம்தான் இடையபொட்டல். மேற்கு பக்கமாயிருந்த கீரை தோட்டத்தில்தான் ஜெயகிருஷ்ணா தியேட்டர் கட்டியிருக்கின்றார்கள். இடையபொட்டலில்தான் நாடக கம்பெனிகள் கொட்டகை போட்டு சில மாதங்கள் நாடகம் நடத்துவார்கள். நாங்கள் இடையபொட்டலை சென்றடைந்து, அங்கு கிடந்த கம்பு, கலர் துணிகள் (ஷாமியானா துணிகள்), கம்பிகளை பார்த்தவுடன் சீனா சொன்னது உண்மைதான் என்று புரிந்தது. ஆம், எங்கள் ஊருக்கு சர்க்கஸ் வரப்போகின்றது. அன்றிலிருந்து, தினமும் இரண்டு மூன்றுதடவையாவது அங்கு வந்து சர்க்கஸ் வேலையின் முன்னேற்றம் பற்றி தெரிந்து கொள்ளுவோம் !!. ஒருவாரத்தில் சர்க்கஸ் கூடாரம் ரெடியாகி பெயர் பலகையும் நட்டுவிட்டார்கள் – “சின்னமனூர் சர்க்கஸ்” . அதன் பின்பும் அங்கு வருவோம். வெளியே இருந்து பார்த்தால் எதுவும் தெரியாது, தட்டிவைத்து காம்பவுண்ட் கட்டியிருப்பார்கள். ஆனால் சிங்கம் போன்ற மிருகங்களின் சத்தம் கேட்கும். அதற்காகத்தான் வருவோம்.


வீட்டில் நச்சரித்து, ஒருவ்ழியாக அன்று சர்க்கஸ் பார்க்க எங்க்ள் குடும்பத்தோடு சென்றிருந்தோம். அதுதான் நான் வாழ்கையில் முதல் முதாலாய் பார்க்கும் சர்க்கஸ். சர்க்கஸ் ஆரம்பித்து ஒருவாரமாகிவிட்டது. பள்ளி தோழர்கள் நிறைய பேர் பார்த்துவந்து சொன்ன கதை கேட்டு, ஆர்வம் அதிகமாயிருந்தது. மரப்பலகையிலான கேலரியில் இருந்தோம். எனக்கும் என் தம்பிகளுக்கெல்லாம் சந்தோசம் பிடிபடவில்லை. திடீர் என்று அரங்கமே சிரித்தது. பார்த்தால், கலர் கலராய் கோடு போட்ட துணியில் பேண்ட், பூ போட்ட சட்டை, முகமொல்லாம் வெள்ளை கலரில் அலங்காரம் – கோமாளி ! அவர் நடுவில் இருக்கும் மைதானத்தில் நடந்து வந்து கொண்டிருக்கின்றார். வேறு ஒன்றுமே செய்யவில்லை, நடந்துதான் வந்து கொண்டிருக்கின்றர்ர். ஆனால் எல்லேரும் சிரிக்கின்றோம். சிறிது நேரத்தில் பார்வையாளர்களின் சிரிப்பு இரட்டிப்பானது. அதே மாதிரி இன்னுமொரு கோமாளி! ஆனால் அளவில் பாதிதான் இருந்தார். குட்டி கோமாளி!! இரண்டுபேரும், நடந்து கொண்டிருந்தார்கள். பெரிய கோமாளி, சும்மா நடந்து கொண்டிருந்த குட்டி கோமாளியை ஒரு எத்து விட்டார். குட்டி கோமாளி இரண்டு பல்டி அடித்து விழுந்தார். எல்லோரும் சிரித்தோம், யாருமே பரிதாப படவில்லை. விழுந்த குட்டி கோமாளி எழுந்து கோபமாய் உள்ளே சென்றார். கையில் கிரிக்கெட் பேட் மாதிரி கட்டையுடன் குட்டி கோமாளி வெளியே வந்து, நேராக பெரிய கோமாளியை நோக்கி சென்றார். இது எதுவுமே தெரியாமல், பார்வையாளர்கள் பக்கம் பார்த்து கொண்டிருந்த பெரிய கோமாளியை கொண்டுவந்த கட்டையால் அடி விட்டார் குட்டி கோமாளி. பெரிய சத்தம் – டமால்!. அடிவாங்கிய பெரிய கோமாளி ஒண்ணு ரெண்டு மூணு நாலுன்னு பல்டி அடித்து விழுந்தார். ஒரு வழியாக எழுந்து குட்டி கோமாளியை பிடிக்க போகும் போது கால் தடுக்கி விழுந்து இன்னும் இரண்டு பல்டி. அடிக்கின்ற ஒவ்வொரு பல்டிக்கும் நாங்கள் எல்லோரும் சிரித்து ஆரவாரம் செய்தோம். பசங்களுடைய மனப்பூர்வமான சப்போர்ட் எப்போதுமே குட்டி கோமாளிக்குத்தான். அது மட்டுமா, கடைசியாக நடக்கும் பார் விளையாட்டிலும் கோமாளியின் அட்டகாசம்தான். பார் விளையாட்டில் ஒவ்வொருவரும் ஒரு முனையிலிருந்து அடுத்த முனைக்கு கம்பியில் தொங்கிக் கொண்டே செல்வார்கள். எதிர் முனையிலிருப்பவர்கள் வருபவரை பிடித்துக் கொள்வார்கள். ஆனால் கோமாளி செல்லும் போது மட்டும் கோமாளியை பிடிக்கமுடியாமல், அவரின் பேண்டை பிடிக்க, கோமாளிக்கு பேண்ட் அவிழ்ந்து (உள்ளே மற்றுமொரு பேண்ட் போட்டிருப்பார்), அந்தரத்திலிருந்து கீழே இருக்கும் வலையில் விழுவார். விழும்போது சும்மாவா விழுவார் கோமாளி? இல்லை, ஆகாயத்தில் அந்தர் பல்டி சில அடிப்பார், வலையில் விழுந்து எம்பி எம்பி சில பல்டி அடிப்பார். அப்போது இருந்தே கோமாளிக்கும் அவர் அடிக்கும் பல்டிக்கும் நான் ரசிகன்.


கூண்டுக்குள் பைக் ஒட்டுவது, ஜீப் குதிப்பது போன்ற வீர விளையாட்டுகளைவிட மிருகங்களின் சாகசங்கள்தான் ரெம்பவே வசீகரிக்கும். யானை, முன்னங்காலை தூக்கி ரொண்டு காலாலும் நடந்து வரும்போது உடன் வந்த உங்கள் வீட்டு குழந்தையையோ, சர்க்கஸ் பார்க்க வந்த குழந்தைகளையோ கவனித்து பாருங்கள், அவர்களும் இரண்டு கைகளையும் துக்குவார்கள். சிறுபிள்ளையில், நானும்தான், என்னையறியாமல் கையைதூக்கி எழுந்து நின்றிருக்கிறேன். அது உணர்வோடு உடலும் ஒன்றிவிடும் நிகழ்வு. ஏன் என்று தெரியவில்லை? வளர்ந்தபின் நமக்கு நாமே தடை போட்டுக் கொள்கின்றோம். வாய்விட்டு சத்தமாய் வீட்டிலிருக்கும் போதுகூட சிரிப்பதில்லை. உணர்வை அடக்கி அடக்கி, உணர்வற்று போகின்றோம்.

கால்பந்து விளையாடும் போது, யானை அடிக்கும் பந்து சொல்லும் திசையை நோக்கி ’ஓ...ஓ...ஒ....’ னு சத்தமும் பயணிக்கும். யானை புட்பால் விளையாண்டதை பற்றி ஒருவாரம் பேசி திரிந்த நாட்களும் உண்டு. கம்பி வேலிக்குள், ரிங்மாஸ்ட்டரின் சாட்டைக்கு பயப்படாமல் ஒரு சிங்கம் கர்ஜிக்கும் போது நமக்கு பயமாகத்தான் இருக்கும். எந்த வித்தையும் காடாமல் தள தள பள பளனு நடந்து போகும் நீர்யானையும் அதிசயமே.


சின்ன பெண், உடலை வில்லாக வளைந்து, கப் அன் சாசரை ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்குவாள். அதில் ஒரு கப் கிழே விழும் போது, நம் இதயத்தின் ஒரே ஒரு துடிப்பும் சிதறி விழும். எல்லாவற்றையும் அடுக்கி முடித்தபின், வரும் கைதட்டல் நிற்கவே வெகுநேரமாகும். அந்த சின்ன பெண், துள்ளி குதித்து பார்வையாளர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு ஓடும் அழகே அழகு.

சர்க்கஸ் முடிந்து கூடாரத்தை பிரித்து கொண்டு போகும் போது எங்கள் இதயத்தின் ஒரு பகுதியும் அதனுடன் சென்றுவிடுவாதாய் தோன்றும். தெரு பசங்க எல்லோரும் சேகமாய் பார்த்து கொண்டிருப்போம்.

அதற்க்கு பின் ஸ்ரீவில்லிபுத்தூரிலே ஜம்போ சர்க்கஸ், ராஜ் சர்க்கஸ், பாரத் சர்க்கஸ்னு நிறைய சர்க்கஸ் கம்பெனிகள் ஒவ்வொரு லீவுக்கும் வந்தன. எதையுமே விட்டுவிடவில்லை. எல்லாமே பார்த்து அனுபவித்தோம். சென்னை வந்தபின் மூர் மார்கட் கிரவுண்டுக்கு, எனது மகனை கூட்டிக் கொண்டு குடும்பத்தோடு ஜெமினி சர்க்கஸ், ரஷ்யன் சர்க்கஸ்னு சென்று பார்த்த போதும் சர்க்கஸை அதே ரசனையுடன் ரசிக்க முடிகின்றது.

சர்க்கஸ்க்கு சென்றே ரெம்ப நாட்களாகின்றது........போக வேண்டும்.

பால்ராஜன் ராஜ்குமார்