திங்கள், 28 பிப்ரவரி, 2011

நாளை மற்றுமொரு நாளே….

ஐந்தாவது வகுப்பு வரை நான், தொடக்க பள்ளி படிப்பை ஸ்ரீவில்லிபுத்தூர் பண்டாரக்குடி தெருவிலிருக்கும் சி.எஸ்.ஐ. பள்ளியில் படித்தேன். நான் அங்கு படிக்கும் போது, வேறு பள்ளியில் படிக்கும், என் சமவயதை உடைய பசங்கள் எங்கள் பள்ளிக்கு வைத்துள்ள பெயர் ‘ஓட்ட பள்ளிக்கூடம்’. எங்கள் பள்ளிக்கூடம் ஒன்றும் ஒட்ட உடைசலானதல்ல, மழை காலங்களில் ஒழுகும். அவ்வளவே. அதிலும் எங்களுக்கு ஒரு விளையாட்டு உண்டு. இரண்டு கைகளையும் ஒட்டி கிண்ணம்மாதிரி வைத்துக்கொண்டு, மேலே ஓட்டிலிருந்து விழும் தண்ணீரை பிடிக்க வேண்டும். யாரால் அதிகமாக தண்ணீர் பிடிக்க முடிகின்றதோ அவனே வெற்றியாளன். எனக்கு நான்கைந்து சொட்டுக்கு மேல் விழாது. கையை தவிர தலையிலோ, உடம்பின் எதாவது ஒரு பகுதியில்தான் விழும். அல்லது போட்டி முடியும் முன்பே என் அம்மா குடையுடன் என்னையும் என் தம்பியையும் கூப்பிட வந்துவிடுவார்கள். அடுத்த நாள், போட்டியில் யார் ஜெயித்தது என்று கேட்டால், அது ஜானாகத்தான் இருக்கும். ஜானின் முழு பெயர் ஜான்சன் பொன்னையா. விளையாடும் போது ‘ஜான்......முழம்’னு அவனை பட்ட பெயர் சொல்லும் போது உணர்ச்சிவசப்பட்டு கையை ஓங்கி தோற்றுவிடுவான். ஜான் பழகுவதற்க்கு நல்ல பையன், அவன் என்னுடைய நண்பன் மற்றும் வகுப்பில் எனக்கு பக்கத்தில் அமர்ந்திருப்பான். ஒவ்வொரு மாதாந்திர தேர்வின் ரேங்க் படிதான் வகுப்பில் அமர்ந்திருப்போம். அதாவது முதல் ரேங்க் மாணவன் முதலிலும். கடைசி ரேங்க் கடைசி பெஞ்சிலும் இருப்பார்கள். ஜான் மட்டுமல்ல, ஜார்ஜ், வில்சன், ராபர்ட் என்று சந்தைபேட்டையிலிருந்து வரும் பசங்க எல்லோருமோ எனக்கு நண்பர்கள்தான். பள்ளிக்கூடம் முடிந்தபின் இவர்கள் என்னுடைய தெருவில் அரச மரத்தடியில் விளையாடிவிட்டு போவார்கள். ஒரு நாள், நான் இவர்கள் இருக்கும் சந்தைபேட்டைக்கு விளையாடச் சென்றேன். அன்றுவரை, இவர்கள் தெருவும் எங்கள் தெருவும் ஒன்றுதான், இவர்கள் வீடும் என் வீடுமாதிரிதான் என்று நினைத்திருந்தேன். ஆனால் அங்கு சென்று பார்த்த காட்சிகள் எனக்கு வேறு உலகத்தை அறிமுகப்படுத்தியது. தெருவெல்லாம் தார் ரோடு அல்லாமல் மண் ரோடு. எங்கும் தண்ணீர் கட்டிகிடந்தது. சகதியில் பன்றிகள் சுகமாய் படுத்து கிடந்தன. தெரு ஓரத்திலே குழந்தைகள் மலம் கழித்துக்கொண்டிருந்தனர். விளையாட இடமே இல்லை. ஜான் வீட்டிற்க்கு சென்றேன். குடிசை வீடு. மண் தரை. தனி தனி அறைகள் எதுவும் இல்லை. இதே மாதிரிதான் எல்ல வீடுகளும் இருந்தன. அப்போதைய என் உணர்வை சொல்ல தெரியவில்லை, ஆனால் அந்த இடமே பிடிக்கவில்லை. விபரம் தெரியாத வயது.

நான் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வேலை மாற்றலாகி வந்தபோது, கல்லூரியில் படித்த நண்பன் சென்னையில் ஒரு பாம்பே கம்பெனிக்கான மேனேஜராக இருந்தான். அவன் அலுவலகம், பார்சன் காம்பிளக்ஸில் இருந்தது. அவன் அலுவலகத்தில் மொத்தம் மூன்று பேர், நண்பனையும் சேர்த்து. அவ்வப்போது அவன் அலுவலகத்திற்க்கு சென்று பேசிக்கொண்டிருப்பேன். அங்கு வெங்கட்டு (வெங்கட்) என்று ஒரு ஆபீஸ் பாய் இருந்தான். பதினேழு பதினெட்டு வயதிருக்கும். சுறு சுறுப்பாய் இருப்பான். பத்தாம் வகுப்பு பெயிலானதோடு படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டான். இவந்தான் காப்பி வாங்கிவருவான். ஒரு நாள், அங்கு சென்ற போது, என் நண்பன் கிளையண்டை (வாடிக்கையாளர்) பார்க்க வெளியே சென்றிருந்தான். வெங்கட்டு, ஆபீஸ் ஹாலில் இரண்டு கைகளால் கால்களை இருக்கி பிடித்து தரையில் குத்தவைத்து உட்கார்ந்திருந்தான். என்ன ஆச்சினு குனிந்து பார்தால், அவன் குளிர் ஜீரத்தில் நடுங்கி கொண்டிருந்தான். அலுவலகதிலுல குமஸ்த்தாவும் அன்று வரைவில்லையாம். சரினு, அலுவலகத்தை பூட்டிவிட்டு, வெங்கட்டை ஒரு டாக்டரிடம் அழைத்து சென்றேன். வைரல் இன்பெக்‌ஷன்னு சொல்லி மாத்திரையும் எழுதி கொடுத்து, ஜீரம் குறைய ஊசியும் போட்டார், டாக்டர்.

”சார் வந்திருவாரு, நான் ஆபீஸுக்கு போகணும். சாவி என்கிட்டதானே இருக்குது”என்று சொன்னான் வெங்கட்டு. அந்த நிலையில் அவனை ஆபீஸுக்கு பதில் வீட்டில் கொண்டு விடுவதே சரியென பட்டது எனக்கு.

“உன்னை உன் வீட்டில் விட்டுவிட்டு, ஆபீஸு சாவிய நான் எடுத்து கொண்டு போறேன்” என்று சொன்னேன்.

”வீட்டுக்கு நானாகவே போய்க்கிறேன் சார்” என்றான் வெங்கட்டு.

அவன் சொன்னதை கேட்காமல், நான் தான், அவனை என் டூ வீலரில் கூட்டிக் கொண்டு, அவன் வீடு இருக்கும் தேனாம்பேட்டைக்கு சென்றேன். அது, ரோட்டு மேலே இருக்கும் குடிசை பகுதி – சேரி. அங்கு இறங்கி, இனி போய்க் கொள்ளுவேன் என்று சொன்னவனுடன், விடாபிடியாக வீடுவரை சென்றேன். வெளியிலிருந்து பார்க்கும்போது வெறும் குடிசைகள் மட்டுமே தெரியும் பகுதி, அருகில் சென்று பார்த்தால், அவ்வளவு, சுகாதார கேடு நிறைந்தாய் இருக்கும். நான் சிறுவயதில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பார்த்ததைவிட மிக மிக மோசமாயிருந்தது சென்னையிலிருந்த சேரி. வாழ்வின் விளிம்பு நிலை மனிதர்களின் நிலை மனதிற்க்கு உறுத்தலாயிருக்கும். சில நாட்களுக்கு மனதைவிட்டு அகலாமல் நிலைகொண்டிருந்தன இழிநிலை காட்சிகள். இது நடந்து பல வருடங்களாகிவிட்டன. ஆனால் இப்போதும், எதாவது ஒரு குடிசை பகுதியை பார்க்கும் போதும், அந்த எண்ணங்கள் நிழலாடும்.

கந்தன் என்ற ஒரு மனிதனின் ஒரோ ஒரு நாள் வாழ்வை பற்றிய படித்தேன். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒரு நாள்கூட இல்லை. காலையில் கந்தன் ஏழு மணிக்கு எழுந்திறுப்பதிலிருந்துதான் கதை ஆரம்பிக்கிறது. அன்று இரவே முடிகின்றது. இருபத்தி நான்கு மணி நேரம்கூட இல்லை. ஜி. நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே….நாவல் பக்கத்திற்க்கு பக்கம் விறுவிறுப்பாய் மட்டுமல்ல, அறுவறுப்பாயும் இருந்தது. அறுவறுப்பானது எழுத்தோ, நடையோ அல்ல, அவை அருமையானவை. அறுவறுப்பானது, கதையின் மறுக்கமுடியாத யதார்த்தமான கதைதளம், பாத்திரங்கள், மற்றும் நிகழ்வுகளே. கதாபாத்திரங்கள் உண்மையில்லை என்றோ, கதையே மிகைபடுத்தப்பட்ட புனைவு என்றோ மறுக்க முடியாது. நாம் தினமும் பார்த்துக் கொண்டிருக்கும் ஆனால் நாவலாக வாசிக்கப்படாத நிஜங்கள்.

காலையில் குடிசையில் படுத்திருக்கும் கந்தன் படுக்கையிலிருது பள்ளி எழும் காட்சியே இப்படித்தான்........”.....தலையணையை இலேசாகத் தள்ளிவிட்டுத் தந்தி அடிக்க ஆரம்பித்தது. மீண்டும் கையைத் தரையில் ஊன்றிக்கொண்டான். தேவைப்படாத ஒரு ஏப்பம். அதைத் தொடர்ந்து குமட்டல். குமட்டலோடு இருமல். விலா எலும்புகள் முறிவதுபோல் இருந்தது. வாயிலிருந்து ஐம்பது மில்லி கோழை வழிந்து பனியனை நனைத்த பிறகு சிறிது நிம்மதி”. எழுந்த கந்தன், மீனாவின் பெட்டியை துளாவி பணம் காசு இருக்கின்றதா என்று பார்கின்றான். வேறு எதற்க்கு, ஜிஞ்சர் (சரக்கு) அடிக்கத்தான். இரண்டு ரூபாய்க்கு மேல் தேறாததால் காலி பட்டில்களை, அப்போது வரும் மூக்கனின் மனைவி ராக்காயிடம் கொடுத்து தெரு முக்கிலிருக்கும் ராவுத்தர் கடையில் போட்டு வெறகு கடையில் ஜிஞ்சர் வாங்கிவர சொல்கிறான். காலையில் வெளியே போகணும்னா, மூன்று அவுன்ஸ் ஜிஞ்சர் அடித்தாதான் முடியும். அவனிடம் வந்த கிராக்கி ஒருவன், கொஞ்சம் வயசு கூடவானாலும் பரவாயில்லை, சிரிச்சுப் பிடித்து விளையாடற பிள்ளையா வேண்டும் என்று கேட்டதற்க்கு, கந்தனுக்கு ராக்கயி நினைப்பு வந்தாய் அவளிடம் சொன்னான். அவனுடயை அனுமதியுடன் அவனின் மீனா தொழிலுக்கு போவது கேட்ட ராக்காயி, அவளின் மூக்கனுக்கு தெரியாமல் அதையே செய்தால் சரி என்ற மனநிலைக்கு வந்துவிடுகின்றாள். ராக்காயி மோகனாவாக மாறுவதும் தேவை என உணர்த்தப்படுகின்றது. மோகனா வங்கிவந்த திரவத்தை ஒரே மடக்காக குடித்துவிட்டு, சிகரெட்டை புகைத்தான் கந்தன்.

பக்கத்து வீட்டு....குடிசை பெண்னை அனுப்பி மீனாவை அழைத்துவர சொன்னான். வந்த மீனாவிடம், ஏட்டையாவுக்கு கொடுக்க பணம் வேண்டும் என்கிறான். முந்தைய இரவில் சம்பாதிக்க முடியாததற்க்கு காரணம் சொல்லி, பேச்சியக்காவிடம் பணம் வாங்க எழுந்து செல்கிறாள். மீனாவை பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன் கோவிலில் பார்த்து பிடித்துபோனது அவனுக்கு. வெத்திலைக் கடை சோலையிடம் பேசிமுடித்ததும், கந்தனின் அம்மா சொர்ணாத்தம்மாள் சோலைக்கு சொந்தம் என்று அவர் சொன்னதும், அம்மாவிடம் ஒருவாட்டிக்கு ரெண்டுவாட்டிக்கு சம்மதம் வாங்கி மீனாவிற்க்கு கோவிலில் வைத்து தாலி கட்ட சொன்னதும் நினைவிற்க்கு வந்தன. பேச்சியக்காவிடம் பணமும், இட்டிலியும் வாங்கிவந்தாள் மீனா. கந்தன் காலை நேரத்து வயிற்று பசியை மீனா கொண்டுவந்த இட்டியாலும் உடற்பசியை மீனாவைக் கொண்டும் தணித்துக் கொண்டான். விறகு கடைக்கு சென்று மீண்டும் மூணு அவுன்சு ஜிஞ்சர் மருந்து சாப்பிட்டுவிட்டு, பல் விளக்கி, குளித்து, சலவை செய்யப்பட்ட ஆடைஅணிந்து வீட்டைவிட்டு கிளம்பும்போது நாமும் அவனோடு ஊருக்குள் பயணிக்கின்றோம்.

முத்துசாமிக்கு கைம்பெண்னை மணம்முடிக்க பெண்ணோடு பேசிவிட்டு, அவனோடு சேர்ந்து சாரயம் குடித்து, சாரயக்கடையில் தகர்ராரில் எதிராளியின் கத்திவீச்சிலிருந்து தப்பி, தகறாரு செய்தவனை அடித்து துவைத்துவிட்டு, வள்ளி லாட்ஜீக்கு சென்று நேற்று இரவு வந்த கிராக்கியிடம் மிரட்டி பணம் பிடுங்கி, செட்டியாருக்கும் ஐரீனுக்கும் பஞ்சாய்த்து பண்ணி முடித்து, தேவி லாட்ஜில் வந்து சிறிது தூங்கி எழுந்தான். தேவி லாட்ஜின் முதலாளி சுப்பு நாயுடு, தன் மேனேஜரிடமும், கோவில் டிரஸ்டியிடமும், பிசினெஸ்ல கொஞ்சம் நெளிவு சுளிவு வேண்டுமென்பார். கந்தனால், கறாராயிருந்த கோவில் டிரஸ்டி சமாதானம் செய்யப்பட்டார். எந்த அளவுக்கு என்றால், ஒன்றும் தெரியாமலோ எல்லாம் தெரிந்தோ, “பிசினெஸ்ல என்ன கோவில் காரியங்களில்கூட கொஞ்சம் நீக்குபோக்கு வேண்டியிருக்கு. நாமென்ன அரசியல்வாதிகளா, கொள்கைன்னு வம்பா இருக்க?” என்று சொல்லுமளவுக்கு. தூங்கி எழுந்து கிளம்ப ஆயத்தமான கந்தனிடம், லாட்ஜ் சிறுவன் “காப்பி வேணுமா சார்?”னு கேட்டதற்க்கு இருநூறு மில்லி சாராயம் வாங்கிவரச் சொன்னான். சோபாவில் உக்கார்ந்து பொருளாதரமும் சோஷியலிசமும் பேசிக்கொண்டிருந்தவர்களேடு சிறிது நேரம் இருந்துவிட்டு தரகர் அந்தோணியை பார்க்க ஷெனாய் நகருக்கு கிளம்பினான் கந்தன். அந்தோணி, வீடு, குடிமனை, நிலம், கார், ஆண்கள், பெண்கள், இன்னும் எதை எல்லாம் வாங்கி விற்க்கலாமோ அல்லது வாடகைக்கோ குத்தகைக்கோ அமர்த்திக் கொள்ளலாமோ, எல்லாமே அவரது தரகுத் தொழிலுக்கு உட்பட்டவைதான். அந்தோணி தரகராய் மட்டுமல்ல, தத்துவஞானியும்கூட. பலவகையான தொழில் செய்த அனுபவத்தாலும், ஐம்பத்தைந்து வயதாகியதாலும் அந்தோணியின் ஆலோசனைகளை மிகவும் மரியாதையுடன் கந்தன் எடுத்துக் கொள்வான். பணமே ஒரு மானங்கெட்ட விஷயம் என்ற ஞானம் அந்தோணிக்கு பள்ளிநாட்களில் கிடைத்ததே சுவாரசியமானதுதான். சோமு நாடார் பையன், பிறந்த மேனியா கிரவுண்டை சுற்றி ஓடிவந்தால் பத்து ரூபாய் தருவதாய் சொன்னபோது, இரண்டு தடவை கிரவுண்டை சுற்றிவந்தால் இருபது கிடைக்குமான்னு கேட்டார். முடியாது என்று சொன்னதற்க்கு, சரி, கெடெச்சது லாபம்னு ஓடி பத்து ரூபாயை வென்றவர். மீனா விசயமாய்தான், அவரை பார்க்கப்போனான் கந்தன். ஆனால் அவரோ பிடிகொடுக்காமல் நழுவியது, கந்தனுக்கு ஏமாற்றமாயிருந்தது. அந்தோணியின் வீட்டிலிருந்து இரவு திரும்பும்போது ஒரு கொலையை பார்த்த சாட்சியாய் இருந்து அன்னக்கிளியுடன் சேர்ந்து போலீஸ் ஜீப்பில் ஏறி செல்வதோடு கதை முடிகின்றது.

ஒரு மனிதனின் ஒரு நாள் வாழ்க்கையில் செய்த சின்னத்தங்கள், காட்டிய துணிச்சல், பெற்ற நோய்கள், பட்ட அவமானங்கள்தான் கதை. இவையே கதை நாயகனின் வாழ்க்கை. அவனின் அடுத்த நாளைப்பற்றி நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? என்று கேட்கிறார் ஆசிரியர் ஜி. நாகராஜன். ஏனெனில் அவனுக்கும், நம்மில் பலரைப்போலவே – நாளை மற்றுமொரு நாளே.

புத்தகத்தின் தலைப்பு : நாளை மற்றுமொரு நாளே…….
ஆசிரியர் : ஜி.நாகராஜன்
வெளியீட்டாளர் : காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்

சனி, 26 பிப்ரவரி, 2011

தீ குளித்த நெருப்பு

கொடும்பாவி கொளுத்தினாய்
பிரியாணி பொட்டலம்
கொடுத்தார்கள் உனக்கு

உன் தலைவன்
அனல் தெறிக்க
அதிக பிரசங்கியாய் பேசி
சிறை பட்டான்.
பேருந்துக்கு தீ பொறியிட்டாய்
பேருந்து பற்றி எரிந்தது
வீரன் என்று சொன்னர்கள் உன்னை

இன்று கோழையாய்
உன்னையே கொளுத்தி கொண்டாய்
நெருப்பு தீ குளித்ததாய் சொல்லி
உன் புகைப்படத்துக்கு மாலையிட்டார்கள்
மாவீரன் என்று மார்தட்டினார்கள்

மாலைக்கா பஞ்சம் நாட்டிலே....
உன் தலைவன்
அனல் தெறிக்க
பேசுகின்றான்
அடுத்த மாவீரனை கண்டெடுக்க!

புதன், 16 பிப்ரவரி, 2011

பாழான பால்

கடந்த வாரம் நான் நாகர்கோவில் சென்றிருந்தேன். உறவினரின் மகனின் திருமணத்திற்காக கல்யாண மண்டபத்திற்கு போகும் போது என் மாமா வீட்டிற்க்கு சென்றேன். அவரும் உடன் வருவதாய் சொல்லியிருந்தார். குளித்து ரெடியாகிக்கொண்டிருந்தார். மாமா ஊரில் வியபாரம் செய்கின்றார். அது அவரின் அப்பாவுடைய தொழிலின் தொடர்ச்சி. மாமா கூட்டுக் குடும்பமாய் அவரின் தம்பி மற்றும் அக்காவின் குடும்பத்தோடு ஒரே (பெரிய) வீட்டில் இருக்கின்றார். என்னை பெருத்தமட்டில், அவர் கல கலனு பேசி பழகக்கூடியவர். ஆனால் அவர் வீட்டில்தான் அவரை கண்டால் எல்லோருக்கும் பயம் கலந்த மரியாதை. அதிலும் வீட்டுப் பெண்களுக்குதான் அவரின் கோபத்தை எதிர்கொள்ள முடியாது. கோபம் வந்தால், சாப்பாட்டு தட்டை தூக்கி எறிந்துவிட்டு சென்றுவிடுவார் மாமா. தரையில் காய்கறி கூட்டும், பொரியலும் சாதமும் இரைந்து கிடக்கும். பெண்கள், கீழே நொறுங்கி கிடக்கும் அப்பளத்தோடு அவர்களின் உடைந்த மனதையும் சுத்தமாய் துடைத்தெடுத்து குப்பையில் போடுவர்கள். காய்கறி நறுக்கி சமைத்து உப்பு உரைப்பு பார்த்து தளித்து செய்த பொறியலை தரையிலிருந்து கூட்டி பொருக்கும்போது மனதுக்கு கஷ்டம்தான். மாமா நல்ல மனிதர்தான். ஆனால் என்ன?, அவரின் கோபத்தின் வெளிப்பாடே சாப்பட்டை ....உணவை வீணடிப்பதுதான்.

இப்படி யோசித்துக் கொண்டிருக்கையில், மாமா ரெடியாகி வந்தார். ரெண்டு பேரும் கோட்டாரிலிருந்த கல்யாண மண்டபத்திற்க்கு சென்றோம். அந்த மண்டபம் பெரியது. பலமுறை அங்கு நடந்தேறிய திருமணத்திற்க்கு சென்றிருக்கின்றேன். மண்டபத்தில் சமுதாயத்தின் ஏழைகள் பணக்காரர்கள் வீட்டு கல்யாணங்கள் நடக்கும். ஏழை வீட்டுக் கல்யாணத்திற்க்கும் பணக்கார வீட்டுக் கல்யாணத்திற்க்குமான வித்தியாசம் இரண்டுதான் பிரதானம். ஒன்று மண்டப அலங்கார வேலைகள், மற்றது சாப்பாடு. வசதியான வீட்டுக் கல்யாணத்தில் வகை வகையாக கூட்டுப் பொரியல்கள் இலையை நிறைக்கும். அவியல், வாழைக்காய் துவரன், நாலுவகை பச்சடி, பருப்பு, சாம்பார், ரசம், மூணு வகை பாயாசம் – பப்படம் போட்டு சாப்பிட, பழம் போட்டு சாப்பிடனு 11 வகை, 13 வகை, 16 வகைனு அளவு வைத்து சாப்பாடு பரிமாரப்படும். இதையெல்லாம் ரசித்து, ருசித்து, செரிக்க சாப்பிட்டால் அரை மணிநேரமாவது ஆகும். ஆனால் இவை யாவும் ருசித்து சாப்பிடுவதற்க்கோ, செரிக்க சாப்பிடுவதற்க்கோ, ஏன் சாப்பிடுவதற்க்கே அல்ல. பின்னர் எதுக்குத்தான் உணவு?

நானும் மாமாவும் மூன்றாவது பந்தியில் சாப்பிட அமர்ந்தோம். அன்று இலையில் வைத்த கூட்டை எண்ணி பார்த்தால் 18 வந்தது. அது என்ன கணக்கு? கூட்டு பொரியலை சாப்பிட்டாலே வயிறு நிரம்பிவிடும் போல் இருந்தது. மீண்டும் எண்ணி சரி பார்கும் முன்பு சாதம் விளம்பினார்கள். நான் மிகவும் கொஞ்சமாய்தான் சாதம் வங்கினேன். சாதத்தை தொடர்ந்து பருப்பும் நெய்யும் வந்தது. அதை சாப்பிட ஆரம்பித்தவுடன் சாதமும், சாப்பாரும் வந்தது. நான் வேண்டாம் என்று சொல்லி பருப்பு சாதத்தை தொடர்ந்தோன். என் அருகில் இருந்த மாமா உட்பட பருப்பு சாதத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, சாதம் வாங்கி சாம்பாருக்கு சென்றார்கள். அதை முடிக்கும் முன்பே ரசம், மோர் என்று பாயாசம் என்று ரிலே ரேஸ் ஒடும் போது ஒவ்வொருவராய் இலையை மூடி எழுந்திரிக்க ஆரம்பித்தார்கள். மாமாவும் சாதம், கூட்டு பெரியலுடன் இலையை மூடிவிட்டார். நான் சிறிதே வாங்கிய பருப்பு சாதத்தையும் எல்லா கூட்டுகளையும் மீதமில்லாமல் காலி செய்துவிட்டேன். பந்தியில் யாருமில்லை. நானும், எனக்காக காத்திருக்கும் மாமாவும் மட்டுமே. மாமாவுக்கு சங்கோஜமாய் இருந்ததோ என்னவோ, தெரியவில்லை, என்னை பார்த்து மாமா கேட்டார்,

‘என்ன மாப்பிளை மக (என் மனைவி) உங்களுக்கு சரியா சாப்பாடு போட மாட்டாளா?’

எனக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை. அங்கு இருந்த மூடப்பட்ட இலைகள் எல்லாம் வீணாக்க பட்ட உணவை மறைக்க முயன்று தோற்று போய்க்கொண்டிருந்தன. கல்யாண வீட்டுகாரர்கள், அந்தஸ்துக்கா, பெருமைக்கா உணவை பரிமாரினார்கள்? வந்தவர்கள், பேருக்காக சாப்பிடோம் என்று சொல்லி உணவை வீணடிக்கின்றார்கள். இப்படி நடப்பது இந்த ஒரு கல்யாணத்தில் மட்டுமல்ல, எல்லா கல்யாணத்திலும்தான். எப்படியோ, வீணடிக்கப் படுவது உணவுதான்.

சாப்பிட்டு முடித்து அங்கிருந்த உறவுக்காரர்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பினோம். சென்னை திரும்ப மாலையில்தான் ரெயில். காலையில் ஊர் திரும்பினேன். காலையில் காப்பி குடிக்கலாமென்றால், பால் வரவில்லை. பால் உற்பத்தியாளர்களின் ஆர்பாட்டம்தான் காரணம் என்று அடுத்த நாள் தினமலர் படிக்கும்போது தெரிந்து கொண்டேன். அதிலிருந்த செய்தியும், மன வருத்தத்தைதான் தந்தது.

ஆத்தூரில் பால்விலையை உயர்த்தக்கோரி சாலையில் 5000 லிட்டர் பாலை கொட்டியும், க‌றவை மாடுகளுடன் 200-க்கும் மேறபட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆத்தூர் புளியங்குறிச்சியில் பால்விலையை உயர்த்தக்கோரி தனியார் பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் சாலையில் மறியல் செய்து 5000 லிட்டர் பாலை கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். (தினமலர் - பிப்ரவரி10, 2011)

ஆத்துரில் மட்டுமல்லது தமிழ்நாடு முழுவதும் ‘பாலை கொட்டும்’ போராட்டம். ஒரு வேளைக்கு ஒரு பச்சிளங் குழந்தைக்கு 100 மில்லி லிட்ட்ர் என்றால்கூட இலட்சக்கணக்கான குழந்தைகளுக்கு பயன் பட்டிருக்கும். யாருக்கும் பயன் படாமல் பாழானது பால். ஆர்பாட்டத்திற்க்கும் உணவுதான் வீணாக்கப் படுகின்றது.

கால் வயிறும், அரை வயிறும் சாப்பிட்டு உயிர் வாழ்வோர் கோடி கணக்கில் உள்ள நம் போன்ற தேசத்தில், என் மாமா போன்றோரின் தனி மனித கோபத்திற்கும், பால் வியபாரிகளின் ஆர்ப்பாட்டத்திற்க்கும் உணவை வீணடிக்கும் உத்திதான் வழியென மனம் ஒப்பு கொள்ள மறுக்கின்றது.

(புகைபடம்- நன்றி:தினமலர்-பிப்ரவரி,10,2011)

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

யாருக்கு யார்

தினம் தினம் கஷ்டம்
தீர்க்க தீர்க்க கஷ்டம்
கடவுளே காப்பாத்து
எங்களுக்கு உன்னைவிட்டால்
யார் இருக்கின்றார்கள்.
உனக்கும் தெரியும்
எனக்கும் தெரியும்
உனக்கு எங்களைவிட்டால்
யார் இருக்கின்றார்கள் என்று

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

அதுவரை..........

நாம், அணுகுண்டு வெடித்தோம்
கணடம் விட்டு கண்டம் பாயும்
ஏவுகணை செய்தோம்
சந்திரனில் கலம் இறக்கினோம்
சுதந்திரம் வாங்கி
அறுபதே ஆண்டுகளில்.

கழிப்பறை மட்டுமே பாக்கி
அதையும் அடுத்த நூற்றாண்டுக்குள்
கிடைக்கச் செய்வோம்.
அதுவரை திறந்த வெளியில்
மலம் கழிப்போம்.

திங்கள், 7 பிப்ரவரி, 2011

மிதிபடும் கண்ணீர்

நண்பனின்
துரோகங்கள்
மரணித்தது நட்பு

சந்திப்புகளில்
கவிழும் தலை
அவன் பார்வை
என் காலை தொடும்

மிதிடும் கண்ணீர்
அருவருப்போடு
விலகிச் செல்லும் கால்கள்

நட்பை அறியா
நயவஞ்சகன்
வலிகள் மறைந்தன
வடுகள் வலித்தன

புதன், 2 பிப்ரவரி, 2011

கனவை களவாடியவர்கள்

நான் மாலையில் வீட்டிற்க்கு திரும்போது கே.கே.நகர் டெப்போவைக் கடந்த உடனே அங்கு இருந்த போலீஸ், ரோட்டில் வந்த வாகனங்களையொல்லாம் வலது பக்கமாய் திருப்பிவிட்டார்கள். எதோ அரசியல் கட்சியின் பொது கூட்டமாம். வேறவழியில்லாமல், ஊரை சுற்றி வீடு வந்து சேர்ந்தேன். வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டுக்கு செல்லும்போது எதிர் பட்ட மூர்த்தி சாருக்கு ‘ குட் ஈவினிங் ‘ என்றேன்.

’குட் ஈவினிங், குட் ஈவினிங். என்ன மீட்டிங்குனு சொல்லி திருப்பிவிட்டானா?’

’ஆமா சார்’

‘ஆளும் கட்சி கூட்டம்தான். இலவசங்களை வழங்குவதையே அரசுக் கொள்கையாக வைத்திருகின்றார் முதலமைச்சர். ஆயிரத்தி ஐநூறு போருக்கு கேஸ் அடுப்பாம். இலவசமாக இப்படி வாங்கியே சொசைட்டி உருபடாமல் போகுது... ’னு சொல்லிவிட்டு சென்றார் மூர்த்தி சார்.

சென்னை நகர வாசிகளில் சிலர் இப்போதுதான் கேஸ் அடுப்பை உபயோகிக்கப் போகின்றார்களா?. நாங்கள் எப்போது கேஸ் அடுப்பை பயன் படுத்த ஆரம்பித்தோம் என யோசித்தேன். நன்றாக ஞாபகமிருக்கின்றது. 35 வருடங்களுக்கு முன்பு. எங்கள் ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில் அப்போது நாங்கள் இருந்த வீட்டிற்க்கு எதிரிலேயே புதுவீடு கட்டி குடிபுகுந்து ஒரு வருடம் ஆகியிருந்தது. அப்போது என் அப்பாவின் நண்பர் சின்னம்ம ராஜு என்பவர், எங்கள் ஊருக்கு பக்கத்து ஊரான ராஜபாளையத்தில் கேஸ் ஏஜன்ஸி எடுத்திருந்தார். ராஜபாளையம் பெரிய ஊர். அதனால் அங்கு கேஸ் ஏஜன்ஸி கொடுத்திருந்தார்கள். அவரும் அந்த ஊர்காரர்தான். என் அப்பாவை சந்தித்த அவர், கேஸ் கனெக்‌ஷன் வாங்கச் சொல்லியிருக்கின்றார். அப்பாவும் அம்மாவிடம் கேட்டு சரி என்று சொல்ல, அடுத்த நாளே வீட்டில் கேஸ் அடுப்பு ரெடி. அப்போதெல்லாம், கேஸ் கனெக்‌ஷன் வாங்கினால், அவர்களிடம்தான் அடுப்பும் வாங்க வேண்டும். அடுப்பின் விலை, கேஸ் கனெக்‌ஷன் டெப்பாசிட்டைவிட அதிகம்.

கேஸ் அடுப்பு வந்த புதிதில், என் அம்மாவுக்கு ஒரே சந்தோசம். சமையல் சட்டுனு முடியுதுனு சொல்லுவார்கள். வீட்டில் சாயங்காலமானால் ஒரே பெண்கள் கூட்டம். எல்லாம் கேஸ் அடுப்பை பார்க்கதான். வருகின்றவர்களுக்கெல்லாம், கேஸ் அடுப்பிலே பாலை சூடு பண்ணி காப்பி போட்டு கொடுப்பார்கள் என் அம்மா. காப்பியை குடித்துவிட்டு அவர்கள் அடித்த கமெண்ட்களை நினைத்தால், சிரிப்புதான் வருகின்றது. அதில் சில....

- கேஸ் அடுப்பிலே போடுகிற காப்பி நல்ல டேஸ்டா இருக்கு.
- கரி அடுப்பைவிட கேஸ் அடுப்பு காப்பி வித்தியாசமாய்தான் இருக்கு.
- கேஸ் அடுப்பிலே போட்டா காப்பிக்கு பால் கம்மியாதான் சொலவகும்

வர வர பெண்களின் வருகை கூடிக்கொண்டே போனதால், அம்மாவிற்க்கு காப்பி கொடுத்து கட்டுபடியாகவில்லை. என்ன பண்ண? கேஸ் அடுப்பை பார்க்க வந்தவர்களுக்கு எப்படி டொமோ (Demo) காண்பித்து பெருமை பட்டு கொள்வது? காப்பியும் கட்டுபடியாகது. சரி, இருக்கவே இருக்கின்றது – கேஸ் அடுப்பில் தண்ணீரை சூடு பண்ணி, ‘சுடு தண்ணீர்’ கொடுப்பது. (சுடு தண்ணீர் குடித்துவிட்டு என்ன கமெண்ட் அடித்தார்கள் என எனக்கு நினைவில்லை). இந்த கூத்தெல்லாம், ஒரு வார காலத்திற்க்குதான். கூட்டதில் வந்த யாரோ ஏதோ சந்தேகம் கேக்க, என் அம்மா கேஸ் அடுப்பில் சமையல் செய்வதையே நிறுத்திவிட்டார்கள். என் அம்மாவிற்க்கு அடுப்பை பத்தவைக்கவே பயம். ஏன் நிறுத்தினார்கள்?வந்தவர் அப்படி என்ன சந்தேகம் கேட்டார்கள்?

“ஏங்க்கா........மதுரையில ஒரு வீட்டில கேஸ் அடுப்பில சோறு வடிக்கும் போது அடுப்பு வெடித்து ஒரு பொம்பள செத்து போனது உண்மையா?”

இத கேட்டுத்தான் என் அம்மாவுக்கும் பயம். அதன் பின், ராஜபாளையத்திலிருந்து கேஸ் ஏஜன்ஸி ஆட்கள் வந்து, எடுத்து சொல்லிய பிறகு சமைக்க ஆரம்பித்தார்கள். உடன் இருந்த என் அப்பாவின் பாதுகாப்பு சான்றிதழ் (Safety Certificate) வேற, என் அம்மாவிற்க்கு மனதளவில் ஊக்கமளித்தது. (இத்தனைக்கும், சமையல் அறையில் என் அப்பாவை நான் பார்த்தது, அது இரண்டாவது முறை).

வருடங்கள் பல ஓடிவிட்டன. இப்போது நான் சென்னையின் அப்பார்ட்மெண்ட் வாசி. எங்கள் அப்பார்ட்மெண்டில் மொத்தம் இருபத்திநாலு வீடுகள். நான்கு தளங்கள். அதில் பதினாலு வீடுகளில் வாடகை-குடித்தனகாரர்களும், மீதி பத்து வீடுகளில் உரிமையாளர்கள் இருக்கின்றோம். வாடகையிருப்பவர்கள், எவ்வளவு வாடகை கொடுகின்றார்கள்? ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாடகை. ஆனா குறைந்த மாத வாடகையே ரூபாய் 10,000. இங்கு மொத்தம் 12 பேர் கார் வைத்திருக்கின்றார்கள். 21 இரண்டு சக்கர வாகங்கள். இங்கு உள்ளவர்கள் தனியார் துறையிலும், வங்கிகளிலும் உயர் பதவிகளிலும், மென்பொருள் துறையிலும் வேலை பார்பவர்கள். நல்ல தண்ணீர் வசதி. அமைதியான சுற்றம். என்னடா, அப்பார்ட்மெண்டை பற்றி இவ்வளவு விளக்கம் எதற்கு? வேற எதுவும் இல்லங்க. பொருளாதர ரீதியில் எந்த மாதிரியானவர்கள் வசிக்கின்றார்கள் என்பதை சுட்டிக்காட்டவே எழுதியது. மத்தியதர வர்க்கத்தை Lower middle, Middle middle, upper middle னு மூறாய் பிரித்தால் நடுவிலிருக்கும் “நடு நடு (Middle middle)’ தான் எங்கள் அப்பார்ட்மெண்ட் என்பது புரிந்திருக்கும்.

அப்பார்ட்மெண்டிக்கு மின்சாரம் மீட்டர் ரீடிங்க்கு E.B யிலிருந்து வரும்போது வாட்ச்மேன் எல்லோருக்கும் கேக்கும்படி விசில் ஊதூவார். வீடுக்காரர்கள் வந்து ரீடிங்கை பதிவு செய்து கொள்வார்கள். வாட்ச்மேன் ’விசில் ஊதூவது’ என்பது எல்லோருக்குமான அறிவிப்பு. சென்ற மாதம், ஒரு ஞயிற்றுக் கிழமை காலையில் விசில் ஊதினார். ஊதிவிட்டு, “டி.வி கொடுக்காங்க, ரேசன் கார்டுடன் வாங்க”னு குரல் கொடுத்தார். அப்பார்ட்மெண்டிலிருந்த அனைவரும் ரேசன் கார்டுடன் ஒடினார்கள், மூன்று வீட்டுக்கரர்களை தவிர. ஒன்று எங்கள் வீடு, மற்றொன்று அடுத்த பிளாக்கில் இரண்டாவது மாடி வீட்டுக்காரர்கள், மூன்றாவதாய் உள்ளவர் அன்று வீட்டில் இல்லை, ஊருக்கு சென்றிருந்தனர். அப்பார்மெண்டிக்கு வந்த சென்னை கார்பரேசன் அதிகாரிகள், ரேசன் கார்டில் ஏதோ குறித்துக் கொண்டு, ஆளுக்கு ஒரு டோக்கன் கொடுத்தார்கள். டோக்கன் பொற்றவர்கள், தெருவின் முனையில், அம்மன் கோவில் அருகில் சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் டோக்கனை காண்பித்தார்க்ள். அவர்கள் லாரியிலிருந்து .டி.வி ஒன்றை வாங்கிக் கொண்டு திரும்பினார்கள், எங்கள் அப்பார்ட்மெண்ட் வாசிகள். அப்படி வாங்கியவர்களில் மூர்த்தி சாரும் ஒருவர். அப்போது எனக்கு கேட்க வேண்டும் என தோன்றியது, ஆனால் கேட்கவில்லை.

மூர்த்தி சார், டி.வி வேண்டும் என்று ஏங்குபவர்கள், வீட்டில் டி.வி இல்லாத எழைகள். அவர்களுக்காக அரசங்கம் கொடுக்கும் டி.வியை ஏன் நீங்கள் வாங்கிச் செல்லுகின்றீர்கள்?. உங்கள் வீட்டிதான் பிளாஸ்மா டி.வி இருக்கின்றதே!.
கிடைக்கும் என்று கனவு காணும், எழையின் கனவை ஏன் களவாடுகின்றீர்கள்?

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

மாறாத மேடைகள்

நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது எனது வகுப்பு தோழன் சூரிய நாராயணனின் விட்டிற்க்கு சென்றிருந்தேன். அவன் வீடு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு பக்கத்திலிருக்கும் மாடத் தெருவிலிருந்தது. சிறிது நேரம் அவன் வீட்டில் இருந்துவிட்டு கிளம்பி பேசிக்கொண்டே கால் போன போக்கில் சென்றோம். நடந்து தேரடி தெருவு (கீழரதவீதி)க்கு வந்து சேர்ந்தோம். அங்கு ஒரு அரசியல் கட்சி கூட்டம் நடந்து கொண்டிருந்தது. எந்த கட்சி?, என்ன பேசினார்கள்? என்றெல்லாம் ஞாபகம் இல்லை இப்போது. எங்களை பொருத்தமட்டில், தேரடியில் கூட்டம் என்பது மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்கும் கூட்டத்திற்க்கு சமம் (என்பது பின்பொரு நாளில் எனக்கு புரிந்தது). பேசிய அனைவரும் தொடக்கத்தில் ஒரே மாதிரிதான் அவர்களின் உரையை ஆரம்பித்தார்கள். குரல், பேச்சில் அமைந்த ஏற்ற இரக்கம் கூட ஒரே மாதிரி இருந்ததாய்த்தான் மனதில் நினைவாடுகின்றது. அன்று மெய் மறந்து கூட்டத்தில் இருந்துவிட்டு வீட்டிற்க்கு சென்று அம்மாவிடம் அடி வாங்கியது பசுமையாக ஞாபமிருக்கின்றது. வீட்டில் விழுந்த அடியால், அதன் பின் அந்த மாதிரி கூட்டங்களுக்கு செல்லும் வாய்ப்பிற்க்கு முயற்ச்சிக்கவில்லை.

மதுரையில் கல்லூரியில் படிக்கும் போது அரசரடியிலிருக்கும் தேம்பாவணி இல்லத்தில்தான் தங்கி படித்தேன். அரசரடி தேமபாவணி இல்லம் என்பது அரசியல் கட்சி கூட்டத்திற்கான இடக்குறி (Landmarkக்கு தமிழில் இடக்குறினு மொழிபெயர்க்கலாமா?). அங்கு கூட்டம் நடத்தாத கட்சியும் இல்லை, பேசாத வளரும், வளர்ந்து கொண்டிருந்த பேச்சாளர்களும் இல்லை. இலக்கிய நயமான (!) மேடை பேச்சுக்கள் பல கேட்டிருக்கின்றேன். இதை விளக்கி சொல்ல புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் நீங்களும் நானும் கையெழுதிட வேண்டாம். ஒரு உதாரணத்தை சொன்னாலோ போதும், உங்களுக்கு புரிந்துவிடும். தீப்பொறி ஆறுமுகத்தின் கூட்டம் அடிக்கடி நடக்கும். போதுமா? புரிந்துவிட்டதா? அவர் கூட்டத்திற்க்கு கூட்டமிருக்கும். அதே இடத்தில் திராவிட கட்சிகளிருந்து இடதுசாரி கட்சிகள் வரை அனைத்து கூட்டங்களும் நடக்கும். யாராக இருந்தாலும் உரையின் ஆரம்பம் ஒரே மாதிரிதான் இருக்கும். இதுதான் மேடைபேச்சின் இலக்கணமோ? இருக்கலாம். அது மாத்திரமல்லாது, முதலில் பேசும் பத்து பதினைந்து போச்சாளர்களின் பேச்சும் ஒரே மாதிரிதான் இருக்கும். இந்த பத்து பதினைந்து பேச்சாளர்கள், தலைமை அல்லது முக்கியமான பேச்சாளர்கள் வரும்வரை கூடியிருக்கும் மக்கள் வெள்ளத்தை (அதுவும் பத்து பதினைந்துதான்) கட்டுக்குள் வைத்திருக்க பேசுவார்கள் !!.

சில நாட்களுக்கு முன்பு சென்னையின் நெசப்பக்கத்தில் நடந்த ஒரு அரசியல் கூட்டத்திலும் அதேமாதிரிதான். எல்லோருடைய உரையின் ஆரம்பமும் அப்படியே. அங்கு வைத்திருந்த சவுண்ட் சிஸ்டம், எங்கள் வீடுவரை தெள்ளத் தெளிவாக கேக்கும் படியிருந்த்து (உண்மையை சொல்லனும்னா, வீட்டில் டி,வி கூட கேக்க முடியவில்லை. அவ்வளவு சத்தம்.) என் மனைவிக்குத்தான் எரிச்சல். எனக்கு சுவாரசியமாய் இருந்தது. மெத்தம் பதினொரு பேச்சாளர்கள் உரையாற்றினார்கள், அதிலிருந்து ஒன்று......

‘...................டொக் டொக்....(மைக்கை இரண்டு முறை தட்டினார்)........இங்கு மேடையில் அமர்ந்திருக்கும் பொரும் மதிப்பிற்குறிய அண்ணன் கானா. மானா. சங்கர் அவர்களே, அண்ணன் விருகை வல்லல் (வள்ளல்) ராமச்சந்திரன் அவர்களே, அண்ணன் கோவி திருவேங்கடம் அவர்களே, பெருமதிப்பிற்குரிய கழக வீரர் எனது சகலை செங்கை மொக்கையன் அவர்களே, பாலம்மாள் நகர் அண்ணன் ஏழுமலை அவர்களே, எம்.ஜியார் நகர் அண்ணன் அண்ணாமலை அவர்களே, 128 வது வார்டு அண்ணன் கோவிந்த சாமி அவர்களே, 128 வது வார்டு தம்பி புகழேந்தி அவர்களே........

(”அண்ணன் ராமருக்கு இந்த மலர் மாலையை மாணிக்க மாலையாக அணிவிக்கின்றேன்” என்று சொல்லி யாரே ஒருவர் ராமர் ஆற்றிக்கொண்டிருந்த வீர உரைக்கு நடுவில் புகுந்து மாலை அணிவித்து சென்றார். அனேகமாக அந்த மாணிக்க மாலை கைத்தறி துண்டாகத்தான் இருக்கும்)

........கிருசுனபட்டு அண்ணன் முருகன் அவர்களே, அண்ணன் பீடா முருகேசு அவர்களே, அண்ணன் இலக்கடை மூர்த்தி அவர்களே, அண்ணன் பார்வதி நகர் சீனிவாசன் அவர்களே, அண்ணன் மணிகண்டன் அவர்களே, அண்ணன் விருகை சந்திரசேகர் அவர்களே, அண்ணன் போருர் கிருஷ்ணன் அவர்களே, அண்ணன் ராமாவரம் குணசேகரு அவர்களே, அண்ணன் ராமாவரம் கணேசன் அவர்களே, அண்ணன் ராமாவரம் இருளப்பன் அவர்களே, அண்ணன் ஆள்வார்திருநகர் ராஜு அவர்களே, அண்ணன் டெப்போ சுரேசு அவர்களே, அண்ணன் வலசை இளங்கோ அவர்களே, அண்ணன் திருவொற்றியூர் தமிழரசு அவர்களே,

உங்களுக்கு என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு என் பேச்சை ஆரம்பிக்கின்றேன். நான் ஸ்ட்ரைய்ட்டாவே கேக்கிறேன். ராஜா, நீ அடித்த பணத்தை எங்க பதுக்கி வைத்திருக்கின்றாய்? உங்க தலைவர் வீட்டிலயா வெச்சிருக்க? உங்க தலைவருக்கு தில் இருந்தா ஏங்கூட இப்ப இந்த மேடையில் ஒண்டிக்கு ஒண்டி பேசமுடியுமா? நா எங்கேயும் ஒடி ஒழிய மாட்டேன். தையிரியமா நிக்கேன். வரச்சொல் உன் தலைவனை. எனக்கு பின் நிறையப்பேர் பேச இருப்பதால், என்னுடைய உரையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன். நன்றி. வணக்கம்.

(மேலே இருப்பது ஒரு பேச்சாளரின் உரை. பேசிய பதினொரு பேரின் பேச்சை கேட்க வேண்டும்போல் இருந்தால், அதையே மேலும் பத்துதடவை படித்துக்கொள்க.)

பேசும் பொருள் அறியா , யாருக்கும் உபயோமகற்ற உளறல்கள். போக்குவரத்து இடஞ்சல்கள். அளவுக்கு அதிகமான சத்தத்துடன் அலறும் ஒலிபெருக்கிகள். கட் அவுட் வைக்கவும், மேடைபோடவும் ரோட்டை தோண்டி பாழ் பண்ணுவது. மின்சார செலவுகள் (மின் திருட்டுகள்). நேர விரயங்கள்தாம் இந்த மேடை பேச்சுகள். தேர்தல் வேறு வருகின்றது. கேக்கவே வேண்டாம், கட்சிக்காரர்களின் மேடை சேவைகளை. இதில் கட்சி பாகுபாடே கிடையாது. ஆளும் கட்சி, எதிர் கட்சி, எதிரி கட்சி, தோழமைக் கட்சி, தேழர்கள் கட்சி, ஜாதி கட்சி, மத கட்சி, மாநில கட்சி, தேசிய கட்சி, மக்கள் கட்சி, நூற்றாண்டு கண்ட கட்சி, நேற்று பிறந்த கட்சி, உழவர் கட்சி, உழைப்பாளி கட்சி....என்று அனைத்துக் கட்சிகளும் இந்த ஜனநாயக கூத்தை மேடையில் அரங்கேற்றும், தினம் தினமும்.

”அவர்களே......... அவர்களே” னு பத்து நிமிஷம் தொண்டை கிழிய கத்திவிட்டு, அடுத்த நிமிஷம் மேடையைவிட்டு இறங்கி போய்விடுவதுதான் (கட்சி) மேடை பேச்சின் இலக்கணமோ? என்னமோ போங்க அன்றிலிருந்து இன்றுவரை அப்படித்தான். போச்சாளர்களுக்கு போர்த்தும் துண்டு மட்டுமல்ல, அரசியல் மேடைகளும் மாறவே இல்லை.

வெள்ளி, 28 ஜனவரி, 2011

அவன் போனாள்

அன்று நானும் என் மனைவியும் காரில் சொல்லும் போது, ஒரு வயதான தம்பதி ரோட்டை கடந்து வந்து கொண்டிருந்ததால், காரை நிறுத்தினேன். கணவர் வயதின் காரணமாய் தளர்ந்து போயிருந்தார். மனைவியும் அப்படித்தான். ஆனால் கணவரை பார்க்கும் போது மனைவி பரவாயில்லை. அவர்தான் கணவனின் கைகளை இறுகப்பற்றியிருந்தார். மற்றொரு கையில் ஒரு சிறிய பை இருந்தது. ரோட்டைக் கடக்கும் போது ரோட்டின் இரண்டு பக்கமும் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே நடந்தார்கள். அவர்கள் ரோட்டை கடப்பதற்கு 15 வினாடி ஆகியது. அந்த சிறிய நேரத்திற்க்குகூட காத்திருந்து வழி விட பொறுமையற்று பைக்கில் ‘Z’ போட்டு (‘S’ மாதிரியல்ல) லாவகமாகக் கடந்து, வயதானவர்களை பயமுறுத்திச் சென்றார்கள் ஒரு இளம் தம்பதிகள் (தம்பதிகளா? என்றால் தெரியாது.ஆனால் மிகவும் நெருக்கமாய் அமர்ந்து, ஈருடல் ஓருடலாக அமர்ந்திருந்தார்கள்). ரோட்டைப் பாதி கடந்த வயதானவர்கள், திகைத்துப்போய் நின்றார்கள். அதைப் பார்த்தவுடன் “முட்டாள்” என்றேன் பைக்கில் சென்றவர்களை. மனதுக்கு எரிச்சலாயும் இருந்தது. ”மனிதர்கள் என்ன இயலாதவர்களுக்கு வழி கொடுக்க முடியாமல் இறுகியா போனார்கள்?” என்றேன், என் அருகிலிருந்த மனைவியிடம். “சரி..சும்மா இருங்க நீங்க” என்றார் என் மனைவி. ”நீங்க ஏன் கோபப்படுகிறீர்கள்? நீங்க கோபப்பட்டு எதாவது ஆகப்போகின்றதா?” என்பதே என் மனைவியின் வாதம்.

நாங்கள் பனகல் பார்க் சென்று இறங்கியவுடன், மனைவி,அங்கு இயர் பட்ஸ் (Cotton Ear Buds) விற்கும் 10 அல்லது 12 வயது குழந்தைகளைக் கண்டால் இரக்கப் பட்டு ஒரு பாக்ட் இயர் பட்ஸ் வாங்குவார்கள். இப்படி வாங்கியவைகளோ 42 பாக்கட் வீட்டில் இருக்கின்றது. ஆளுக்கு இரண்டு காதுகளையும், மகனுக்கு இரண்டு காதுகளையும், வைத்துக்கொண்டு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் காது குடைந்தாலும், எப்போதுதான் காலி செய்ய முடியும். அடிக்கடி காது குடைந்தாலும் நல்லதில்லையாமே. சரி என்ன செய்வது. யாருக்காவது கொடுக்கலாம் என்றால், இதையெல்லாம் கொடுப்பது சரிதானா எனவும் தெரியவில்லை. காலி செய்ய வழி தெரியாததால் இருந்து விட்டு போகட்டும் என்று விட்டுவிட்டோம். ஒவ்வொரு முறையும், பட்ஸ் வங்கியபின் “ஏன் இந்த மாதிரி சின்ன பிள்ளைகளை ரோட்டில் அலைய விடுகின்றார்ளோ” என்று கோபப்படுவார்கள். “அதான் நீயே சொல்வாயே கோபப்பட்டு ஒண்ணுமாகப்போவதில்லைனு. அப்ப ஏன் கோபப் படுகிறாய்?” என்று கேட்பேன். ”கோபப்படவில்லை. மனசு கஷ்டமாயிருக்கிறது.” என்பதே மனைவியின் பதில்.

வீட்டைவிட்டு வெளியே வந்து நடப்பவற்றை பார்த்தாலே, மனதுக்கு கஷ்டமான நிகழ்வுகள்தான் இருப்பதாய் தெரிகின்றது. படித்தவன் படிக்காதவன் என்ற பாகுபாடற்று ஒரே மாதிரியான நடத்தை உள்ளவர்களாய்த்தான் இருக்கின்றார்கள். அவற்றில் பல நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் போவதால் வரும் இயலாமையால் தோன்றும் வக்கற்ற கோவம்தான் மிஞ்சும். ஆனால் இதற்கு மாறாக, மனதுக்கு நிறைவான, சமூகமாற்றத்தால் சந்தோஷப் படக்கூடிய நிகழ்வு ஒன்று நடந்தது.

சென்ற வாரம் பாண்டி பஜாருக்கு போகும்போது பனங்கல் பார்க் டிராபிக்கில் மிகவும் மொதுவாகச் சென்று கொண்டிருந்தோம். எங்களை கடந்து சென்ற ஸ்கூட்டியை (Scooty) பார்த்த என் மனைவி “அங்க பாருங்களேன்” என்று சொல்ல, நான் பார்ப்பதற்குள் எங்களைத் தாண்டி சென்றுவிட்டது ஸ்கூட்டி. அவர்கள் அந்த டிராபிக்கில் ரொம்ப தூரம் செல்லவில்லை. எங்களைவிட பத்தடி தூரம்தான் முன்னிருந்தார்கள். அவ்வளவே. ஆனாலும் எனக்கு அவர்களை ஒழுங்காக பார்க்க முடியவில்லை. பின் இருக்கையில் அமர்திருந்த பெண்ணின் புடவை நீல நிறம் என்பது மட்டுமே தெரிந்தது. என் மனைவியிடம் திரும்பி, “ஏன் அவர்களை பார்க்கச் சொன்னாய்? என்ன விஷேசம்?” என்றேன். முன்னே நின்ற வாகனம் நகர்ந்ததை காண்பித்து, “கொஞ்சம் போனால் நீங்களே பார்க்கலாம்” என்றார். நானும் அவர்கள் அருகில் சென்று பார்த்தேன். நீல நிற புடவை உடுத்தி பின் இருக்கையிலிருந்தவர், அதற்க்கு மேச்சாக நீல நிற பிளவுஸ் அணிந்திருந்தார். ஸ்கூட்டி வண்டியை ஓட்டியவர் நடுத்தர வயதுக்காரர், மா நிறம். முகத்தை சுத்தமாய் சவரம் (close shave) சொய்திருந்தார். சிரித்த முகம். சிவப்பு நிறத்தில் புடவையும், அதே நிறத்தில் பூ போட்ட பிளவுஸ்சும் அணிந்திருந்தார்.

ஆம்! அவர்கள் இருவரும் திருநங்கைகள்!!. ’அலி’ , ‘ஒம்போது’ என்று (தரங்கெட்ட) நம்மால் அழைக்கப்படும், நம்மைப்போன்ற மனித ஜென்மங்கள். எல்லா வாகனமும் நகரத் தொடங்கியதும், விருட் என்று அவர்களும் சென்றுவிட்டார்கள். ’அவள் போனான்’ என்றுதான் வார்தைகள் வந்தன. ‘அவள் போனான்’ என்றால் தப்பா? மொழியின் இலக்கணப் படி தப்பு. ஆனால்.. மெய் இலக்கணமாய் பார்த்தால் அது சரிதான். அவள் போனான். இலக்கண குற்றமா? இல்லை. குரோமசோம் குழறுபடியால் குற்றமானவர்களை, மனிதராக வாழவே மறுக்கப்பட்டவர்களை எப்படி அழைப்பது?. அவள் விரும்பும் பெண்மையை ஆமோதித்து. ‘அவள் போனாள்’ என்று திருத்தி அழைக்கவே என்னை பழக்கப்படுத்திக்கொள்ள முடிவெடுத்தேன்.

திருநங்கைகளை, தெருக்களிலும் கடைகளிலும் பிச்சை எடுக்கவும், இழிநிலையில் இருத்தி பார்க்கவும்தான் நம் சமுதாயத்தால் இன்றளவும் முடிந்திருக்கின்றது. அதையெல்லாம் புறந்தள்ளி, முன்னேறி இரண்டு சக்கர வாகனம் ஓட்டிச்செல்லும் அந்த இரண்டு திருநங்கைகளை பார்த்தில் எனக்கும் என் மனைவிக்கும் சந்தோஷமாயிருந்தது.

சனி, 15 ஜனவரி, 2011

நகரும் கழிப்பறைகள்

என்னை பொறுத்தமட்டில் பள்ளிப் படிப்பு முடித்து ஸ்ரீவில்லிபுத்தூரை விட்டுச் செல்லும் வரை, எங்கள் ஊர், ஒரு மாநகரை ஒப்பிடுமளவுக்கு பெரிய ஊர் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். வசதி வாய்ப்பை பார்த்தோமானால், கிராமம்தான். மக்கள் தொகை ஜாஸ்தியான கிராமம். விடுமுறைக்கு எங்கள் ஊருக்கு பக்கதிலிருக்கும் மம்சாபுரம் சென்று ஒரு வாரம் சொந்தக்காரங்க வீட்டில் தங்கியிருந்தேன். மம்சாபுரம் ஒரு வளமான கிராமம். ஸ்ரீவில்லிபுத்தூருக்கும், மம்சபுரத்திற்க்கும் மக்கள் தொகையைத் தவிர ஒரே ஒரு வித்தியாசம்தான். மம்சபுரத்தில் தண்ணீர் பஞ்சம் கிடையாது. ஸ்ரீவில்லிபுத்தூரில் தண்ணீர் கிடையாது. நானும் முத்துராஜும்தான் மம்சபுரத்தில் எல்லா இடமும் சுற்றுவோம். வயல் வெளி, வரப்பு, தோப்பு என்று இடம் விடாமல் திரிவோம். கிணற்றில் நீந்தி குளிப்பது என்பதே தனி சுகம்தான். தவளை நீச்சி, வாழமட்ட நீச்சி, சொருக்கு நீச்சி, முங்கு நீச்சி, கடப்பார நீச்சினு பல வகையான நீச்சல் வகைகள் உண்டு. எல்லா நீச்சல்களும் எல்லா பசங்களும் அடிக்கலாம், கடப்பார நீச்சைதவிர. ஊரிலேயே ஒரே ஒரு தாத்தாதான் அடிப்பாராம். அதுவும் அவருடைய இளமைக்காலங்களில், இப்போது இல்லையாம். மம்சபுரத்தில் நாட்கள் நகருவதே தெரியாது. அங்கு இருக்கும் ஒவ்வொரு நாளும் கொண்டாட்டம்தான். ஆனால் ஒரோ ஒரு விசயம்தான் அசெளகரியமாய் இருக்கும். காலைக் கடனை முடிப்பதற்க்கு அரை கிலோமீட்டர் ஓடையை நோக்கி ஓடவேண்டும். அந்த அவசரத்தில், அரை கிலோமீட்டர் தூரம் என்பது ஐந்து கிலோமீட்டராய் தெரியும்.

எங்கள் பழைய வீட்டுக்கு இரண்டு வாசல்கள். தலைவாசல்தான் வீட்டிற்க்கான வழி. உள்ளே நுழைந்தால் முற்றவெளி, வலது பக்கம் படுக்கை அறையும், பெரிய ஹாலும், அதை ஒட்டி மாடிக்கு சொல்லும் படிகட்டும் இருக்கும். இடது பக்கம் ஒரு படுக்கை அறையும், டைனிங் ஹாலும், சமையலறையும் இருக்கும். அதையும் தாண்டி வந்தால் தாழ்வாரமும், தண்ணீர் தொட்டியும், கொஞ்ச தூர இடைவெளியில் மாட்டுத்தொழுவத்தைக் காணலாம். தொழுவத்தை அடுத்து கழிப்பறை, முற்றவெளியிலிருந்து இருநூறு அடி தூரத்தில் இருந்தது. நாங்கள் சின்ன பசங்களாக இருக்கும்போது, இரவில் கழிப்பறைக்குப் போக பெரியவர்களை துணைக்கு கூட்டிச் செல்வோம்.

நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது, எங்கள் பழைய வீட்டுக்கு எதிரே இருந்த காலிமனையில் வீடுகட்டி சென்றோம். புதுவீடு, அளவில் சின்னது. ஒவ்வொரு அறைகளும் அடுத்தடுத்து இருக்கும். ஹால், படுக்கைஅறை, சமையலறையும் அதையடுத்து மாடிக்கு செல்லும் படிக்கட்டும் இருக்கும். படிக்கட்டுக்குப் பக்கத்தில் குளியலறையும், கழிப்பறையும் கட்டப்பட்டிருக்கும். கழிப்பறை, ஹாலிருந்து ஐம்பது அடி தூரந்தான். இரவில் போகவேண்டுமொன்றாலும் தனியாகப் போகலாம்.

வேலை நிமித்தம், ஊர் ஊர்ராய் சுற்றி, கடைசியில் சென்னையில் அப்பார்ட்மெண்டில் ஒரு பிளாட் வாங்கி குடியேறினோம். மொத்தம் இருபத்தி நான்கு பிளாட்கள். வீட்டில் ஒரு சிறிய ஹால், இரண்டு படுக்கையறைகள், சமையலறை, பால்கனி என்பதுதான் அமைப்பு. இரண்டு படுக்கையறைகளுக்கு நடுவில் ஒரு குளியலறையும், கழிப்பறையும், பிரதான படுக்கையறையில் ஒரு குளியலறையும், கழிப்பறையும் இருக்கும்.

நான் மம்சாபுரத்தில் சுற்றித்திரிந்த நாட்களுக்கும், இப்போது சென்னையில் இருக்கும் நாட்களுக்கும் இடைப்பட்ட காலம், இருபத்தி ஐந்து ஆண்டுகள். இந்த காலத்தில் கழிப்பறைகளும் ஆயிரத்தி ஐநூரு அடி தூரம் நகர்துள்ளன. ஆமா....மம்சாபுரத்தில் அரைகிலோ மீட்டர் அதாவது சுமார் ஆயிரத்தி ஐனூரு அடி தூரத்திலும், ஸ்ரீவில்லிபுத்தூர் பழய வீட்டில் இருநூறு அடி தூரத்திலும், ஸ்ரீவில்லிபுத்தூர் புதிய வீட்டில் ஐம்பது அடி தூரத்திலும் இருந்த கழிப்பறைகள், சென்னை பிளாட்டில் படுக்கையறைக்குள் நகர்ந்து வந்துவிட்டன.

நாகரீக வளர்ச்சியில் மனிதன் மட்டுமல்ல, கழிப்பறைகளும் நகர்கின்றன !.
பால்ராஜன் ராஜ்குமார்