ஞாயிறு, 30 ஜனவரி, 2011

மாறாத மேடைகள்

நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது எனது வகுப்பு தோழன் சூரிய நாராயணனின் விட்டிற்க்கு சென்றிருந்தேன். அவன் வீடு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு பக்கத்திலிருக்கும் மாடத் தெருவிலிருந்தது. சிறிது நேரம் அவன் வீட்டில் இருந்துவிட்டு கிளம்பி பேசிக்கொண்டே கால் போன போக்கில் சென்றோம். நடந்து தேரடி தெருவு (கீழரதவீதி)க்கு வந்து சேர்ந்தோம். அங்கு ஒரு அரசியல் கட்சி கூட்டம் நடந்து கொண்டிருந்தது. எந்த கட்சி?, என்ன பேசினார்கள்? என்றெல்லாம் ஞாபகம் இல்லை இப்போது. எங்களை பொருத்தமட்டில், தேரடியில் கூட்டம் என்பது மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்கும் கூட்டத்திற்க்கு சமம் (என்பது பின்பொரு நாளில் எனக்கு புரிந்தது). பேசிய அனைவரும் தொடக்கத்தில் ஒரே மாதிரிதான் அவர்களின் உரையை ஆரம்பித்தார்கள். குரல், பேச்சில் அமைந்த ஏற்ற இரக்கம் கூட ஒரே மாதிரி இருந்ததாய்த்தான் மனதில் நினைவாடுகின்றது. அன்று மெய் மறந்து கூட்டத்தில் இருந்துவிட்டு வீட்டிற்க்கு சென்று அம்மாவிடம் அடி வாங்கியது பசுமையாக ஞாபமிருக்கின்றது. வீட்டில் விழுந்த அடியால், அதன் பின் அந்த மாதிரி கூட்டங்களுக்கு செல்லும் வாய்ப்பிற்க்கு முயற்ச்சிக்கவில்லை.

மதுரையில் கல்லூரியில் படிக்கும் போது அரசரடியிலிருக்கும் தேம்பாவணி இல்லத்தில்தான் தங்கி படித்தேன். அரசரடி தேமபாவணி இல்லம் என்பது அரசியல் கட்சி கூட்டத்திற்கான இடக்குறி (Landmarkக்கு தமிழில் இடக்குறினு மொழிபெயர்க்கலாமா?). அங்கு கூட்டம் நடத்தாத கட்சியும் இல்லை, பேசாத வளரும், வளர்ந்து கொண்டிருந்த பேச்சாளர்களும் இல்லை. இலக்கிய நயமான (!) மேடை பேச்சுக்கள் பல கேட்டிருக்கின்றேன். இதை விளக்கி சொல்ல புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் நீங்களும் நானும் கையெழுதிட வேண்டாம். ஒரு உதாரணத்தை சொன்னாலோ போதும், உங்களுக்கு புரிந்துவிடும். தீப்பொறி ஆறுமுகத்தின் கூட்டம் அடிக்கடி நடக்கும். போதுமா? புரிந்துவிட்டதா? அவர் கூட்டத்திற்க்கு கூட்டமிருக்கும். அதே இடத்தில் திராவிட கட்சிகளிருந்து இடதுசாரி கட்சிகள் வரை அனைத்து கூட்டங்களும் நடக்கும். யாராக இருந்தாலும் உரையின் ஆரம்பம் ஒரே மாதிரிதான் இருக்கும். இதுதான் மேடைபேச்சின் இலக்கணமோ? இருக்கலாம். அது மாத்திரமல்லாது, முதலில் பேசும் பத்து பதினைந்து போச்சாளர்களின் பேச்சும் ஒரே மாதிரிதான் இருக்கும். இந்த பத்து பதினைந்து பேச்சாளர்கள், தலைமை அல்லது முக்கியமான பேச்சாளர்கள் வரும்வரை கூடியிருக்கும் மக்கள் வெள்ளத்தை (அதுவும் பத்து பதினைந்துதான்) கட்டுக்குள் வைத்திருக்க பேசுவார்கள் !!.

சில நாட்களுக்கு முன்பு சென்னையின் நெசப்பக்கத்தில் நடந்த ஒரு அரசியல் கூட்டத்திலும் அதேமாதிரிதான். எல்லோருடைய உரையின் ஆரம்பமும் அப்படியே. அங்கு வைத்திருந்த சவுண்ட் சிஸ்டம், எங்கள் வீடுவரை தெள்ளத் தெளிவாக கேக்கும் படியிருந்த்து (உண்மையை சொல்லனும்னா, வீட்டில் டி,வி கூட கேக்க முடியவில்லை. அவ்வளவு சத்தம்.) என் மனைவிக்குத்தான் எரிச்சல். எனக்கு சுவாரசியமாய் இருந்தது. மெத்தம் பதினொரு பேச்சாளர்கள் உரையாற்றினார்கள், அதிலிருந்து ஒன்று......

‘...................டொக் டொக்....(மைக்கை இரண்டு முறை தட்டினார்)........இங்கு மேடையில் அமர்ந்திருக்கும் பொரும் மதிப்பிற்குறிய அண்ணன் கானா. மானா. சங்கர் அவர்களே, அண்ணன் விருகை வல்லல் (வள்ளல்) ராமச்சந்திரன் அவர்களே, அண்ணன் கோவி திருவேங்கடம் அவர்களே, பெருமதிப்பிற்குரிய கழக வீரர் எனது சகலை செங்கை மொக்கையன் அவர்களே, பாலம்மாள் நகர் அண்ணன் ஏழுமலை அவர்களே, எம்.ஜியார் நகர் அண்ணன் அண்ணாமலை அவர்களே, 128 வது வார்டு அண்ணன் கோவிந்த சாமி அவர்களே, 128 வது வார்டு தம்பி புகழேந்தி அவர்களே........

(”அண்ணன் ராமருக்கு இந்த மலர் மாலையை மாணிக்க மாலையாக அணிவிக்கின்றேன்” என்று சொல்லி யாரே ஒருவர் ராமர் ஆற்றிக்கொண்டிருந்த வீர உரைக்கு நடுவில் புகுந்து மாலை அணிவித்து சென்றார். அனேகமாக அந்த மாணிக்க மாலை கைத்தறி துண்டாகத்தான் இருக்கும்)

........கிருசுனபட்டு அண்ணன் முருகன் அவர்களே, அண்ணன் பீடா முருகேசு அவர்களே, அண்ணன் இலக்கடை மூர்த்தி அவர்களே, அண்ணன் பார்வதி நகர் சீனிவாசன் அவர்களே, அண்ணன் மணிகண்டன் அவர்களே, அண்ணன் விருகை சந்திரசேகர் அவர்களே, அண்ணன் போருர் கிருஷ்ணன் அவர்களே, அண்ணன் ராமாவரம் குணசேகரு அவர்களே, அண்ணன் ராமாவரம் கணேசன் அவர்களே, அண்ணன் ராமாவரம் இருளப்பன் அவர்களே, அண்ணன் ஆள்வார்திருநகர் ராஜு அவர்களே, அண்ணன் டெப்போ சுரேசு அவர்களே, அண்ணன் வலசை இளங்கோ அவர்களே, அண்ணன் திருவொற்றியூர் தமிழரசு அவர்களே,

உங்களுக்கு என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு என் பேச்சை ஆரம்பிக்கின்றேன். நான் ஸ்ட்ரைய்ட்டாவே கேக்கிறேன். ராஜா, நீ அடித்த பணத்தை எங்க பதுக்கி வைத்திருக்கின்றாய்? உங்க தலைவர் வீட்டிலயா வெச்சிருக்க? உங்க தலைவருக்கு தில் இருந்தா ஏங்கூட இப்ப இந்த மேடையில் ஒண்டிக்கு ஒண்டி பேசமுடியுமா? நா எங்கேயும் ஒடி ஒழிய மாட்டேன். தையிரியமா நிக்கேன். வரச்சொல் உன் தலைவனை. எனக்கு பின் நிறையப்பேர் பேச இருப்பதால், என்னுடைய உரையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன். நன்றி. வணக்கம்.

(மேலே இருப்பது ஒரு பேச்சாளரின் உரை. பேசிய பதினொரு பேரின் பேச்சை கேட்க வேண்டும்போல் இருந்தால், அதையே மேலும் பத்துதடவை படித்துக்கொள்க.)

பேசும் பொருள் அறியா , யாருக்கும் உபயோமகற்ற உளறல்கள். போக்குவரத்து இடஞ்சல்கள். அளவுக்கு அதிகமான சத்தத்துடன் அலறும் ஒலிபெருக்கிகள். கட் அவுட் வைக்கவும், மேடைபோடவும் ரோட்டை தோண்டி பாழ் பண்ணுவது. மின்சார செலவுகள் (மின் திருட்டுகள்). நேர விரயங்கள்தாம் இந்த மேடை பேச்சுகள். தேர்தல் வேறு வருகின்றது. கேக்கவே வேண்டாம், கட்சிக்காரர்களின் மேடை சேவைகளை. இதில் கட்சி பாகுபாடே கிடையாது. ஆளும் கட்சி, எதிர் கட்சி, எதிரி கட்சி, தோழமைக் கட்சி, தேழர்கள் கட்சி, ஜாதி கட்சி, மத கட்சி, மாநில கட்சி, தேசிய கட்சி, மக்கள் கட்சி, நூற்றாண்டு கண்ட கட்சி, நேற்று பிறந்த கட்சி, உழவர் கட்சி, உழைப்பாளி கட்சி....என்று அனைத்துக் கட்சிகளும் இந்த ஜனநாயக கூத்தை மேடையில் அரங்கேற்றும், தினம் தினமும்.

”அவர்களே......... அவர்களே” னு பத்து நிமிஷம் தொண்டை கிழிய கத்திவிட்டு, அடுத்த நிமிஷம் மேடையைவிட்டு இறங்கி போய்விடுவதுதான் (கட்சி) மேடை பேச்சின் இலக்கணமோ? என்னமோ போங்க அன்றிலிருந்து இன்றுவரை அப்படித்தான். போச்சாளர்களுக்கு போர்த்தும் துண்டு மட்டுமல்ல, அரசியல் மேடைகளும் மாறவே இல்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பால்ராஜன் ராஜ்குமார்