வெள்ளி, 28 ஜனவரி, 2011

அவன் போனாள்

அன்று நானும் என் மனைவியும் காரில் சொல்லும் போது, ஒரு வயதான தம்பதி ரோட்டை கடந்து வந்து கொண்டிருந்ததால், காரை நிறுத்தினேன். கணவர் வயதின் காரணமாய் தளர்ந்து போயிருந்தார். மனைவியும் அப்படித்தான். ஆனால் கணவரை பார்க்கும் போது மனைவி பரவாயில்லை. அவர்தான் கணவனின் கைகளை இறுகப்பற்றியிருந்தார். மற்றொரு கையில் ஒரு சிறிய பை இருந்தது. ரோட்டைக் கடக்கும் போது ரோட்டின் இரண்டு பக்கமும் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே நடந்தார்கள். அவர்கள் ரோட்டை கடப்பதற்கு 15 வினாடி ஆகியது. அந்த சிறிய நேரத்திற்க்குகூட காத்திருந்து வழி விட பொறுமையற்று பைக்கில் ‘Z’ போட்டு (‘S’ மாதிரியல்ல) லாவகமாகக் கடந்து, வயதானவர்களை பயமுறுத்திச் சென்றார்கள் ஒரு இளம் தம்பதிகள் (தம்பதிகளா? என்றால் தெரியாது.ஆனால் மிகவும் நெருக்கமாய் அமர்ந்து, ஈருடல் ஓருடலாக அமர்ந்திருந்தார்கள்). ரோட்டைப் பாதி கடந்த வயதானவர்கள், திகைத்துப்போய் நின்றார்கள். அதைப் பார்த்தவுடன் “முட்டாள்” என்றேன் பைக்கில் சென்றவர்களை. மனதுக்கு எரிச்சலாயும் இருந்தது. ”மனிதர்கள் என்ன இயலாதவர்களுக்கு வழி கொடுக்க முடியாமல் இறுகியா போனார்கள்?” என்றேன், என் அருகிலிருந்த மனைவியிடம். “சரி..சும்மா இருங்க நீங்க” என்றார் என் மனைவி. ”நீங்க ஏன் கோபப்படுகிறீர்கள்? நீங்க கோபப்பட்டு எதாவது ஆகப்போகின்றதா?” என்பதே என் மனைவியின் வாதம்.

நாங்கள் பனகல் பார்க் சென்று இறங்கியவுடன், மனைவி,அங்கு இயர் பட்ஸ் (Cotton Ear Buds) விற்கும் 10 அல்லது 12 வயது குழந்தைகளைக் கண்டால் இரக்கப் பட்டு ஒரு பாக்ட் இயர் பட்ஸ் வாங்குவார்கள். இப்படி வாங்கியவைகளோ 42 பாக்கட் வீட்டில் இருக்கின்றது. ஆளுக்கு இரண்டு காதுகளையும், மகனுக்கு இரண்டு காதுகளையும், வைத்துக்கொண்டு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் காது குடைந்தாலும், எப்போதுதான் காலி செய்ய முடியும். அடிக்கடி காது குடைந்தாலும் நல்லதில்லையாமே. சரி என்ன செய்வது. யாருக்காவது கொடுக்கலாம் என்றால், இதையெல்லாம் கொடுப்பது சரிதானா எனவும் தெரியவில்லை. காலி செய்ய வழி தெரியாததால் இருந்து விட்டு போகட்டும் என்று விட்டுவிட்டோம். ஒவ்வொரு முறையும், பட்ஸ் வங்கியபின் “ஏன் இந்த மாதிரி சின்ன பிள்ளைகளை ரோட்டில் அலைய விடுகின்றார்ளோ” என்று கோபப்படுவார்கள். “அதான் நீயே சொல்வாயே கோபப்பட்டு ஒண்ணுமாகப்போவதில்லைனு. அப்ப ஏன் கோபப் படுகிறாய்?” என்று கேட்பேன். ”கோபப்படவில்லை. மனசு கஷ்டமாயிருக்கிறது.” என்பதே மனைவியின் பதில்.

வீட்டைவிட்டு வெளியே வந்து நடப்பவற்றை பார்த்தாலே, மனதுக்கு கஷ்டமான நிகழ்வுகள்தான் இருப்பதாய் தெரிகின்றது. படித்தவன் படிக்காதவன் என்ற பாகுபாடற்று ஒரே மாதிரியான நடத்தை உள்ளவர்களாய்த்தான் இருக்கின்றார்கள். அவற்றில் பல நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் போவதால் வரும் இயலாமையால் தோன்றும் வக்கற்ற கோவம்தான் மிஞ்சும். ஆனால் இதற்கு மாறாக, மனதுக்கு நிறைவான, சமூகமாற்றத்தால் சந்தோஷப் படக்கூடிய நிகழ்வு ஒன்று நடந்தது.

சென்ற வாரம் பாண்டி பஜாருக்கு போகும்போது பனங்கல் பார்க் டிராபிக்கில் மிகவும் மொதுவாகச் சென்று கொண்டிருந்தோம். எங்களை கடந்து சென்ற ஸ்கூட்டியை (Scooty) பார்த்த என் மனைவி “அங்க பாருங்களேன்” என்று சொல்ல, நான் பார்ப்பதற்குள் எங்களைத் தாண்டி சென்றுவிட்டது ஸ்கூட்டி. அவர்கள் அந்த டிராபிக்கில் ரொம்ப தூரம் செல்லவில்லை. எங்களைவிட பத்தடி தூரம்தான் முன்னிருந்தார்கள். அவ்வளவே. ஆனாலும் எனக்கு அவர்களை ஒழுங்காக பார்க்க முடியவில்லை. பின் இருக்கையில் அமர்திருந்த பெண்ணின் புடவை நீல நிறம் என்பது மட்டுமே தெரிந்தது. என் மனைவியிடம் திரும்பி, “ஏன் அவர்களை பார்க்கச் சொன்னாய்? என்ன விஷேசம்?” என்றேன். முன்னே நின்ற வாகனம் நகர்ந்ததை காண்பித்து, “கொஞ்சம் போனால் நீங்களே பார்க்கலாம்” என்றார். நானும் அவர்கள் அருகில் சென்று பார்த்தேன். நீல நிற புடவை உடுத்தி பின் இருக்கையிலிருந்தவர், அதற்க்கு மேச்சாக நீல நிற பிளவுஸ் அணிந்திருந்தார். ஸ்கூட்டி வண்டியை ஓட்டியவர் நடுத்தர வயதுக்காரர், மா நிறம். முகத்தை சுத்தமாய் சவரம் (close shave) சொய்திருந்தார். சிரித்த முகம். சிவப்பு நிறத்தில் புடவையும், அதே நிறத்தில் பூ போட்ட பிளவுஸ்சும் அணிந்திருந்தார்.

ஆம்! அவர்கள் இருவரும் திருநங்கைகள்!!. ’அலி’ , ‘ஒம்போது’ என்று (தரங்கெட்ட) நம்மால் அழைக்கப்படும், நம்மைப்போன்ற மனித ஜென்மங்கள். எல்லா வாகனமும் நகரத் தொடங்கியதும், விருட் என்று அவர்களும் சென்றுவிட்டார்கள். ’அவள் போனான்’ என்றுதான் வார்தைகள் வந்தன. ‘அவள் போனான்’ என்றால் தப்பா? மொழியின் இலக்கணப் படி தப்பு. ஆனால்.. மெய் இலக்கணமாய் பார்த்தால் அது சரிதான். அவள் போனான். இலக்கண குற்றமா? இல்லை. குரோமசோம் குழறுபடியால் குற்றமானவர்களை, மனிதராக வாழவே மறுக்கப்பட்டவர்களை எப்படி அழைப்பது?. அவள் விரும்பும் பெண்மையை ஆமோதித்து. ‘அவள் போனாள்’ என்று திருத்தி அழைக்கவே என்னை பழக்கப்படுத்திக்கொள்ள முடிவெடுத்தேன்.

திருநங்கைகளை, தெருக்களிலும் கடைகளிலும் பிச்சை எடுக்கவும், இழிநிலையில் இருத்தி பார்க்கவும்தான் நம் சமுதாயத்தால் இன்றளவும் முடிந்திருக்கின்றது. அதையெல்லாம் புறந்தள்ளி, முன்னேறி இரண்டு சக்கர வாகனம் ஓட்டிச்செல்லும் அந்த இரண்டு திருநங்கைகளை பார்த்தில் எனக்கும் என் மனைவிக்கும் சந்தோஷமாயிருந்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பால்ராஜன் ராஜ்குமார்