புதன், 11 ஜனவரி, 2012

அழிக்க விரும்பா பிம்பங்கள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் சி.எம்.எஸ். மேல்நிலை பள்ளியில் படிக்கும் போது படிப்பு மற்றும் விளையாட்டு (பள்ளியின் அணியிலிருந்ததால் தினமும் பேஸ்கட்பாலும், விடுமுறை நாட்களில் கிரிகெட்டும்) மட்டும்தான் பள்ளி வாழ்க்கை. அதைவிட்டால் பொழுது போக்கு என்றால் கதை புத்தகம் படிப்பது, ஓவியம் வரைவது மற்றும் நண்பர்களுடன் அரட்டை அடிப்பது. நண்பர்களுக்கு இருந்த மாதிரி எனக்கு சினிமாவில் விருப்பமே இருந்ததில்லை. பின்னர் புனித சவேரியார் கல்லூரி, பாளையம்கோட்டையில் புகுமுக வகுப்பில் சேர்ந்த போது படிப்பு மட்டுமே வாழ்கையாய் போனது. அடுத்த ஆண்டு நல்ல கல்லூரியும், விரும்பிய பாட படிப்பும் கிடைக்கவேண்டும் என்பதால் அப்படி அமைத்துக் கொண்ட வாழ்வு. இளம்கலை படிப்புக்காக கல்லூரியில் நுழைந்த போது வாழ்வே வித்தியாசமாவும் சுதந்திரமாயும் உணர்ந்தேன். ஆனால் மூன்று மாதத்தில் கேள்விப்படாத நிகழ்வுகள் நடந்தேறின கல்லூரியில். உடன் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவன், முந்தய நாள் இரவு ஹாஸ்டலில் மாணவர்களுக்குள் நடந்த கோஷ்டி தகறாறில் இரண்டு சீனியர் மாணவர்களுக்கு கைகள் உடைந்து போனதாய் சொன்னான். எலும்பு உடையும்படியான தகறாரா? அதுவும் 18 அல்லது 19 வயது பையன்களுக்கா? அப்படி என்ன அவர்களுக்குள் பிரச்சனை? ஒண்ணுமே புரியவில்லை முதலில். இந்தமாதிரி தகராறு அடிக்கடி நடந்தன. தகராறின் தன்மையையும் சேதத்தையும் பொறுத்து சில நாட்களோ, வாரங்களோ கல்லூரியை மூடிவிடுவர்கள். முதலாம் ஆண்டு முழுவதுமே தகராறின் காரணம் தெரியாவிட்டாலும், கல்லூரிக்கு விடுப்பு என்பதால் குஷியாகத்தான் இருந்தது. போகப்போக வகுப்புகள் நடந்த நாட்களைவிட கல்லூரி மூடப்பட்ட நாட்கள்தான் அதிகமாகின. மூடப்பட்ட நாட்களில் வீட்டிலிருந்த நாட்கள் போரடிக்க ஆரம்பித்தன.

இரண்டாம் ஆண்டில்தான் புரிந்தது தகராறின் காரணம் ஜாதிய வெறி என்பது. அப்போதுதான் எனக்கும் ஞாபகம் வந்தது, கல்லூரியில் சேர்ந்த போது, பல சீனியர் மாணவர்கள் ராகிங்கின் போது என்னுடைய ஜாதியை கேட்டது. இந்த கேள்வியே, என்னை எங்க அப்பவிடம் கேட்டு ‘நான் எந்த பிரிவில் வருவேன் – உயர் ஜாதியா? தாழ்ந்த ஜாதியா? கீழான ஜாதியா?’ என்று விளங்கிகொள்ள செய்தது. ஆனாலும் உடன் படிக்கும் சக மாணவர்களை வகை பிரிக்கவில்லை, இனம் பார்த்து சேரவுமில்லை. நான் மட்டுமல்ல, நிறைய மாணவர்களும் அப்படித்தான் – ஜாதியை பற்றி அறிவற்றவர்களாயும் அல்லது ஆர்வமற்றவர்களாயுமே இருந்தோம். ஆனால் இதற்க்கு மாறாக ஜாதிய வெறியில் ஊறித்திளைத்த கிராமத்திலிருந்தோ அல்லது குடும்ப பின்னணியிலிருந்து வரும் மாணவர்கள், ஜாதிய பிம்பங்களுடந்தான் வலம் வருவர்கள். அதுவும், தான் இன்ன ஜாதி என்று மிகவும் செருக்குடன். சரி, அவனவன் ஜாதி அவனுக்கு உயர்வாக தெரிந்தாலும் பரவாயில்லை. மற்றைய ஜாதிகாரர்களை, குறிப்பாக கீழ் ஜாதிகாரர்களை வசைபாடுவதையே வழக்கமாக்கி கொள்ளுவார்கள். உதாரணத்திற்க்கு,

ஏன்டா *****நாய் இங்கு வாரான்? (கீழ் ஜாதியின் பெயரை செல்லி அத்துடன் ‘நாய்’ என்ற விகுதியும் இணைந்தே உரையாடல்கள் இருக்கும்)

ஹாஸ்டல் மெஸ் நேரத்திற்க்கு பின்னால் லேட்டாக செல்லுவார்கள். அங்கு ஒண்ணுமே இருக்காது சாப்பிடுவதற்க்கு. உடனே. “*****நாய்கள் வந்து தின்னுட்டு போயிட்டனுகளா?”னு கேக்க வேண்டியது.

இப்படி ஜாதிய வெறி வளர்ந்து, நாங்கள் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது நடந்த தகராறில், இரண்டு மாணவர்கள் அடித்துக் கொல்லப்பட்டார்கள். வயது 18, 19ல் இருப்பவர்கள், சக மாணவனை கம்பால், இரும்பு கம்பியால் அடித்து கொன்றார்கள். என்ன ஒரு வக்கிரமம், என்ன வெறி? அடித்தது, பணக்கார ஏழெட்டு மேல் ஜாதி பசங்கள். செத்தது, ஏழை தலித் மாணவர்கள். கோர்ட் கேசுனு நடக்கும் போது, பார்த்த சாட்சியாக எந்த மாணவனும் வர பயந்தார்கள் அல்லது பயமுறுத்தப் பட்டார்கள். சரியான சாட்சியஙகள் இல்லாததால், மரண தண்டனையிலிருந்தோ, ஆயுள் தண்டனையிலிருந்தோ தப்பிவிட்டார்கள். சில வருட படிப்பு நாசமானது. அது ஒன்றும் அந்த பணக்கார பசங்களுக்கு பெரிதில்லை. அது சரி, ஆனால், எப்படி இரண்டு மாணவர்கள் கொலையுண்டார்கள்? தண்டனை யாருக்கு? அதற்கு, இரண்டு ஆட்களை பணம் (கூலி) கொடுத்து, அவர்கள்தான் கொலைசெய்ததாய் சொல்லச் சொல்லி, தண்டனை பெற செய்தார்கள். சாட்சியங்கள் இல்லை, நடந்தது ஊரைவிட்டு தொலைவிலிருந்த இடத்தில், இரவில் நடந்த கொலைக்கு காலையில்தான் போலீஸ் வந்தது, அழிக்கபட்ட தடயங்கள், பணபலம், செத்தவர்களுடைய பெற்றோர்கள் கூலிகள், சமுதாயத்தில் பலமற்றவர்கள் என கொலையாளிகளுக்கு சாதகம்தான் நிறைய.

இது நடந்தது 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அப்போது கல்லூரியிலிருந்து படித்துமுடித்து மாணவர்களுக்கு இப்போது வயது 50. இவர்கள் எல்லாம், சிறந்த நிர்வகிகளாக தனியார் துறைகளிலும், அரசு பணியில் உயர் அதிகாரிகளாவும், கல்லூரிகளில் பேராசிரியர்களாகவும் இருக்கின்றார்கள். இவர்கள் சேர்ந்து, கூகுள் குரூப் ஆரம்பித்து நடத்தி வருகின்றார்கள். சிலரின் உழைப்பால், கல்லூரியில் படித்ததில் 10 அல்லது 12 பேரைத்தவிர, அனைத்து தோழர்களையும் கண்டறிந்து, தொடர்பை உருவாக்கினார்கள். கூகுள் குரூப்பில் தொடபுக்கு வந்தவுடன், எல்லோருக்கும் மகிழ்ச்சி. எல்லோரும், கல்லூரியிலிருந்து பிரிந்த 20 வயதிற்க்கு திரும்பினார்கள். பணம், நேரம், உழைப்பை செலவு செய்து ஒருங்கிணைத்தவர்களுக்கு சந்தோசமாயிருந்தது.

இந்த திறந்த வெளி என்னும் கண்ணாடி கூண்டுக்குள் கல் எரிந்தான் ஒருவன். உடன் படித்த எத்தனையோ பெண்களிருக்க, ஒரு பெண்னை, கல்லூரியில் படிக்கும்போது இருந்தாளே ****வாலா? (ஒரு மிருகத்தின் வாலா?), அவளா இவள்? என்று கேட்டான் ஒரு ஈ மெயிலில். சிலர்தான் எதிப்பு தெரிவித்து, இது பொதுவெளி, இங்கு இப்படி நடப்பது தப்பு என்றும் அதற்கு மன்னிப்பு கேட்கவேண்டுமென்றார்க்ள். அவன் மன்னிப்பே கேட்கவில்லை. அது மட்டுமல்லது அவன் கல்லூரியில் படிக்கும்போதே அப்படிதான் என்று அவனின் குணாதியங்காளை செல்லி ஒருசாரார், மன்னிப்பு கேட்காமல் பார்த்து கொண்டார்கள். ஐம்பது வயதில் ஒரு பெண்ணைபார்த்து, ’*****வால்’னு பொதுவெளியில் கேட்பது, அநாகரிகம். தப்பையும் பண்ணிவிட்டு “சாரி’னு செல்ல முடியாமல் ஈகோ தடுப்பதாய் எண்ணினேன். அப்போதுதான், நண்பன் என்னிடம் பேசும்போது சொன்னன், அது ஈகோ பிரச்சனையில்லை, ஜாதிய வெறி என்று. அது மட்டுமல்லது, என்னதான் ஆனாலும் அவன் ‘சாரி’ கேட்க மாட்டான், கேட்கவும் விடமாட்டார்கள். காரணம், அந்த பெண் ஒரு தலித். அப்படி கேட்டவனை கூகுள் குரூப்பிலிருந்து யாரும் வெளியேற்ற சொல்லவில்லை.


மறறுமொரு நிகழ்வு. நிதி நிர்வாகதில் நடந்த முறைகேட்டை ஒருவன் கேட்டான். (அவனுக்கு சேகர்னு பெயர் வைத்துகொள்ளுவோம்). உடனே, நிதிக்கான பொறுப்பானவனும் (அருண் என்று வைத்து கொள்வோம்) அவனை சேர்ந்தவர்கள் யாரும் விளக்கம் அளிக்காமல், சேகரை அடித்து விடுவேம், நொறுக்கிவிடுவோம் என்று ஈ மெயிலிலே மிரட்டினார்கள். அப்படி மிரட்டிய அருணுக்கு கல்லூரி பேராசிரியர் வேலை! (அப்படி நாங்கள் மிரட்டவே இல்லை என்று சொல்ல முடியாது. அதற்கான எழுத்து பூர்வமான சாட்சியம் கூகுள் குருப்பிலிருக்கும் எல்லோரிடமும் உண்டு). இந்த மிரட்டலுக்கு சேகர் பயப்படாமல் ’வந்து பார்’ என்றான். செய்வதறியாத அருண், நான் சேகருடன் தொலைபேசியில் பேசி சமாதானமானதாய் ஒரு மெயில் அனுப்பிவிட்டான். சேகரும், அரசு நிர்வாகதில் உயர் அதிகாரிதான். அவன் கேட்ட கேள்வியும் சரிதான். அப்ப ஏன் அவனை மிரட்டினார்கள். என்றால், அவர் ஒரு தலித்.

கொஞ்ச நாட்கள் பொருத்திருந்தவர்கள், மீண்டும் சேகரின் மேல் குற்றசாட்டு. என்னவென்றால், அவன் கூகுள் குரூப்பில் ஒரு குறிப்பிட்ட மதம் சார்பாய் மெயில் அனுப்புவதாய். அது என்னமோ உண்மைதான். ஆனால் குற்றம் சாட்டுபவர்கள், அவர்களின் மதம் சார்பாய் அவர்கள் நம்பும் கடவுளின் படங்களையும், மத நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுவது என்று பார்த்தால் 20 மடங்கு மிகுதி. (யார் மதம் சம்பந்தமாய் எழுதுகின்றார்கள் என்று இருக்கின்ற ஈ மெயில்களை பார்த்தாலே தெரியும். அதை குற்றம் சாட்டுபவர்கள் மறந்து விட்டார்கள்). சேகர் மதம் சார்பாய் மெயில் எழுதுவதால் அவரை கூகுள் குருப்பிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற மிரட்டல்கள். மேலும் சிலர் சேகரை பார்த்து ‘நாய்’ என்ற விகுதியும் இணைந்தே ஈ மொயில்தான் அனுப்புகின்றார்கள். (இதில் கூத்து என்னான்னா? இப்படி ‘நாய்’ உரையாடல் நடத்துவது, ’*****வால்’ என்று கேட்ட ஒழுக்கசீலர்!!!!). வெறியில் ஒருவன், ’மாறுகால் மாறுகை வாங்கிவிடுவேன்’ என்று சேகரை பார்த்து மெயிலில் எழுதுகின்றான். இப்படி சொன்னவன் ஒரு அரசு ஊழியன். ’மாறுகால் மாறுகை வங்கிவிடுவேன்’ என்று சொல்லுமளவுக்கு ஜாதிய வெறி. அப்படி சொல்லுவதனால் ஆன பின் விளைவுகளை எண்ணிபார்ப்பதில்லை. எண்ணமற்ற மனம், அறிவை இழந்துவிடுகின்றது. அறிவற்றவனுக்கு தெரியாது, இந்த ஈ மெயில்லை வைத்து சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்பது.

இவர்கள் ஒன்றை சுத்தமாக மறந்துவிட்டார்கள். இபோது இவர்கள் ஆடும் களம் மாறியிருக்கின்றது. ஈ மொயில், அதுவும் ஈ மொயில் குழுமம் என்பது திறந்த வெளி. கூகுள் குருப் எனபது பொது வெளி. இங்கு தடையங்களை அழிக்க முடியாது. சாட்சியஙகளை குலைக்க முடியாது. எனக்கு என்ன அதிர்ச்சி என்றால், கல்லூரி நாட்களில் ஜாதி பிரஞ்சை இல்லாமல் இருந்தவர்கள் சிலர்கூட, இப்போது ஜாதிய பிம்பங்களின் பிரதிபலிப்பாய் பட்டவர்தனமாய் வெளிபடுகின்றார்கள். என்ன செய்ய, ஜாதிய உணர்வு என்பது இவர்களுக்கு அழிக்க விரும்பா பிம்பங்கள். ஜாதிய வெறி இவர்களின் எலும்புகளின் உள்ளே உறைந்து போயிருக்கும் மஜ்ஜைகள் (Caste feeling is buried so deeply into their bones). இவர்களின் பிம்பங்கள் உடைபட, ஜாதியமற்ற சமுதாயம் அமைய இன்னும் சில நூற்றாண்டுகள் காத்திருப்போம்.

1 கருத்துகள்:

ELANGO T சொன்னது… Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//இவர்களின் பிம்பங்கள் உடைபட, ஜாதியமற்ற சமுதாயம் அமைய இன்னும் சில நூற்றாண்டுகள் காத்திருப்போம்.//

எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் இந்த பிம்பங்கள் அவ்வப்போது புது அவதாரம் எடுப்பார்கள். இப்போது கூகிள் குழுமத்தில் புது அவதாரம். எல்லா ஜாதியிலும் நல்லவர்களும் உண்டு.தீயவர்களும் உண்டு. நல்லவர்கள் துணை கொள்ள வேண்டும்.நல்ல கட்டுரை.

கருத்துரையிடுக

பால்ராஜன் ராஜ்குமார்