சனி, 15 ஜனவரி, 2011

நகரும் கழிப்பறைகள்

என்னை பொறுத்தமட்டில் பள்ளிப் படிப்பு முடித்து ஸ்ரீவில்லிபுத்தூரை விட்டுச் செல்லும் வரை, எங்கள் ஊர், ஒரு மாநகரை ஒப்பிடுமளவுக்கு பெரிய ஊர் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். வசதி வாய்ப்பை பார்த்தோமானால், கிராமம்தான். மக்கள் தொகை ஜாஸ்தியான கிராமம். விடுமுறைக்கு எங்கள் ஊருக்கு பக்கதிலிருக்கும் மம்சாபுரம் சென்று ஒரு வாரம் சொந்தக்காரங்க வீட்டில் தங்கியிருந்தேன். மம்சாபுரம் ஒரு வளமான கிராமம். ஸ்ரீவில்லிபுத்தூருக்கும், மம்சபுரத்திற்க்கும் மக்கள் தொகையைத் தவிர ஒரே ஒரு வித்தியாசம்தான். மம்சபுரத்தில் தண்ணீர் பஞ்சம் கிடையாது. ஸ்ரீவில்லிபுத்தூரில் தண்ணீர் கிடையாது. நானும் முத்துராஜும்தான் மம்சபுரத்தில் எல்லா இடமும் சுற்றுவோம். வயல் வெளி, வரப்பு, தோப்பு என்று இடம் விடாமல் திரிவோம். கிணற்றில் நீந்தி குளிப்பது என்பதே தனி சுகம்தான். தவளை நீச்சி, வாழமட்ட நீச்சி, சொருக்கு நீச்சி, முங்கு நீச்சி, கடப்பார நீச்சினு பல வகையான நீச்சல் வகைகள் உண்டு. எல்லா நீச்சல்களும் எல்லா பசங்களும் அடிக்கலாம், கடப்பார நீச்சைதவிர. ஊரிலேயே ஒரே ஒரு தாத்தாதான் அடிப்பாராம். அதுவும் அவருடைய இளமைக்காலங்களில், இப்போது இல்லையாம். மம்சபுரத்தில் நாட்கள் நகருவதே தெரியாது. அங்கு இருக்கும் ஒவ்வொரு நாளும் கொண்டாட்டம்தான். ஆனால் ஒரோ ஒரு விசயம்தான் அசெளகரியமாய் இருக்கும். காலைக் கடனை முடிப்பதற்க்கு அரை கிலோமீட்டர் ஓடையை நோக்கி ஓடவேண்டும். அந்த அவசரத்தில், அரை கிலோமீட்டர் தூரம் என்பது ஐந்து கிலோமீட்டராய் தெரியும்.

எங்கள் பழைய வீட்டுக்கு இரண்டு வாசல்கள். தலைவாசல்தான் வீட்டிற்க்கான வழி. உள்ளே நுழைந்தால் முற்றவெளி, வலது பக்கம் படுக்கை அறையும், பெரிய ஹாலும், அதை ஒட்டி மாடிக்கு சொல்லும் படிகட்டும் இருக்கும். இடது பக்கம் ஒரு படுக்கை அறையும், டைனிங் ஹாலும், சமையலறையும் இருக்கும். அதையும் தாண்டி வந்தால் தாழ்வாரமும், தண்ணீர் தொட்டியும், கொஞ்ச தூர இடைவெளியில் மாட்டுத்தொழுவத்தைக் காணலாம். தொழுவத்தை அடுத்து கழிப்பறை, முற்றவெளியிலிருந்து இருநூறு அடி தூரத்தில் இருந்தது. நாங்கள் சின்ன பசங்களாக இருக்கும்போது, இரவில் கழிப்பறைக்குப் போக பெரியவர்களை துணைக்கு கூட்டிச் செல்வோம்.

நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது, எங்கள் பழைய வீட்டுக்கு எதிரே இருந்த காலிமனையில் வீடுகட்டி சென்றோம். புதுவீடு, அளவில் சின்னது. ஒவ்வொரு அறைகளும் அடுத்தடுத்து இருக்கும். ஹால், படுக்கைஅறை, சமையலறையும் அதையடுத்து மாடிக்கு செல்லும் படிக்கட்டும் இருக்கும். படிக்கட்டுக்குப் பக்கத்தில் குளியலறையும், கழிப்பறையும் கட்டப்பட்டிருக்கும். கழிப்பறை, ஹாலிருந்து ஐம்பது அடி தூரந்தான். இரவில் போகவேண்டுமொன்றாலும் தனியாகப் போகலாம்.

வேலை நிமித்தம், ஊர் ஊர்ராய் சுற்றி, கடைசியில் சென்னையில் அப்பார்ட்மெண்டில் ஒரு பிளாட் வாங்கி குடியேறினோம். மொத்தம் இருபத்தி நான்கு பிளாட்கள். வீட்டில் ஒரு சிறிய ஹால், இரண்டு படுக்கையறைகள், சமையலறை, பால்கனி என்பதுதான் அமைப்பு. இரண்டு படுக்கையறைகளுக்கு நடுவில் ஒரு குளியலறையும், கழிப்பறையும், பிரதான படுக்கையறையில் ஒரு குளியலறையும், கழிப்பறையும் இருக்கும்.

நான் மம்சாபுரத்தில் சுற்றித்திரிந்த நாட்களுக்கும், இப்போது சென்னையில் இருக்கும் நாட்களுக்கும் இடைப்பட்ட காலம், இருபத்தி ஐந்து ஆண்டுகள். இந்த காலத்தில் கழிப்பறைகளும் ஆயிரத்தி ஐநூரு அடி தூரம் நகர்துள்ளன. ஆமா....மம்சாபுரத்தில் அரைகிலோ மீட்டர் அதாவது சுமார் ஆயிரத்தி ஐனூரு அடி தூரத்திலும், ஸ்ரீவில்லிபுத்தூர் பழய வீட்டில் இருநூறு அடி தூரத்திலும், ஸ்ரீவில்லிபுத்தூர் புதிய வீட்டில் ஐம்பது அடி தூரத்திலும் இருந்த கழிப்பறைகள், சென்னை பிளாட்டில் படுக்கையறைக்குள் நகர்ந்து வந்துவிட்டன.

நாகரீக வளர்ச்சியில் மனிதன் மட்டுமல்ல, கழிப்பறைகளும் நகர்கின்றன !.

2 கருத்துகள்:

Unknown சொன்னது… Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது… Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அடட வித்தியசமன பார்வை ரசிக்க வைக்கிறது, கிரமங்களில் அலைந்து திரிதல் எப்போதும் அலாதியானது.

கருத்துரையிடுக

பால்ராஜன் ராஜ்குமார்