வெள்ளி, 14 ஜனவரி, 2011

ஒரு புளியமரத்தின் கதை


நான் படித்த சி.எம்.எஸ். உயர்நிலை பள்ளியில், வகுப்பறைகள் அருகருகே மூன்று இடங்களில் இருக்கும். அதில் ஒன்று, பங்களா வகுப்புகள். ஆங்கிலேய துரையின் வீடு – பங்களாவாக இருந்த இடம்தான் வகுப்பறைகளாக மாறிப்போயிருந்தது. அங்கிருந்து, மெயின் பள்ளிக்கு, கான்வெண்ட் அருகில் செல்லும் ரோடுவழியாகவோ அல்லது விளையாட்டு மைதானம் வழியாகவோ செல்லலாம். ஆறாம் வகுப்பில் நான்கு செக்‌ஷன்களும், ஏழாம் வகுப்பில் இரண்டு செக்‌ஷன்களும், எட்டாம் வகுப்பு ஒன்றே ஒன்றும் அங்கு இருந்தன. எட்டாம் வகுப்பு ’டெப்போ கிளாஸ்’ – அதாவது புத்தகம் நோட்டு வழங்கும் ’டெப்போ’ உடன் இணைந்த வகுப்பறை. ’டி’ செக்‌ஷன். எப்போதும் புது புத்தகத்தின் மணம் வகுப்பறை முழுவதும் இருக்கும். அங்கு படிக்கும் மாணவர்களுக்கு ரொம்பவும் பெருமையாயிருக்கும். நோட்டு புத்தகங்களை கொடுப்பதெல்லம் அந்த வகுப்பு மாணவர்கள்தாம். நானும் அந்த வகுப்பில்தான் படித்தேன். ஜன்னலுக்கு வெளியே புத்தகம் வாங்க வரும் மாணவர்களிடமிருந்து ரசீதை வாங்கி, சாரிடம் கொடுப்போம். சார் அதை பார்த்து, ரெஜிஸ்டரில் குறித்துக்கொண்டு, என்னென்ன நோட்டு புத்தகங்கள் கொடுக்க வேண்டுமென்பார். அங்கு வைத்திருக்கும் புத்தகதிலிதிருந்து ’செட்’ ’ செட்’ டாக எடுத்து கொடுப்போம்.

டெப்போ வகுப்பு, அளவில் மற்றைய வகுப்பறைகளைவிட பெரியது. ஜிலு ஜிலுனு நல்ல காற்று வரும். பங்களா வகுப்புகள் அனைத்துமே காற்றோட்டமாயிருக்கும். நிறைய மரங்கள். ஆங்கிலேயார்கள் வைத்தது. வேப்ப மரம், புளிய மரங்கள்தான் ஜாஸ்தி. சில தென்னை மரங்கள். நாங்கள், விளையாடுவது புளிய மரத்தின் கீழ்தான். புளியமரத்தின் காய், பழத்தை கல்லால் அடித்து, எடுத்து சாப்பிடலாம், புளியஇலை கொழுந்தையும் சாப்பிடலாம். மேலும், புளியமரக் கிளையை பிடித்து தொங்கி விளையாடினாலும் ஒடியாது. அதனால், எல்லா புளியமரத்தின் கீழும் பசங்க கூட்டமிருக்கும்.

பள்ளி நாட்களில், புளியமரத்தில் மேல் இருந்த ஈர்ப்பு கூட என்னை, சுந்தர ராமசாமியின் “புளியமரத்தின் கதை” நாவலை படிக்கத் தூண்டிய விஷயமாயிருக்கலாம்.

புளியமரத்தின் கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் சமகால நிகாழ்வாய்தான் தோன்றுகின்றன. படிக்கும் போது நாற்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட நாவலாய் தெரியவில்லை, ஒருசில சம்பவ விபரிப்பைத் தவிர. நாவலின் நகர்வு, மையக்கருத்தை நோக்கியே இருக்கும் என்ற வரைமுறைக்கு உட்படவில்லை. கதை நேர் கோட்டில் நகர்கின்றது. உடன் வருவது புளியமரம்தான். அதுவும் கதையின் நாயகன் இல்லை. நகரின் வளர்ச்சியும் புளியமரத்தோடு பின்னப்பட்டு நகர்கின்றது.கதை புளியமரத்தில் ஆரம்பிக்கின்றது. கதையோடு பயணிக்கின்றது. இறுதியில், புளியமரம் இறந்தே விடுகின்றது. கொலை செய்யப்படுகின்றது. இடைப்பட்டதில் மனிதர்கள். நாகர்கோவிலில் இன்று உள்ள வேப்பமூடு ஜங்ஷன்தான் கதையில் வரும் புளியமர ஜங்ஷனாக தோன்றுகின்றது.

கதையில் வரும் பாத்திரங்களின் சித்தரிப்பு அவர்களின் குணாதிசியங்களை யதார்த்தமாய் சொல்வதாயும், சூழ்ச்சி, பொறாமை, சுயநலம் போன்ற குண வொளிப்பாடுகளை சித்தரிக்கும் நிகழ்வுகளும் நையாண்டியாக சொல்லபட்டிருக்கின்றது. ஒவ்வொரு மனிதரும் ஜாதீய அடைமொழியிட்டு புனையப்படுவது தேவையில்லாததாயும் தவிற்கப்பட்டிருக்கக் கூடியதாயும் தோன்றுகின்றது. வாழ்க்கையிலும், சமுதாயச் சூழலிலும் கடைநிலையிலிருக்கும் நகராட்சியின் துப்புரவு தொழிலாளர்களை ‘தோட்டி’ ,’தோட்டிச்சி’ என்று விளிப்பதும், அவர்கள் புளியம் பழத்தை கல்லெறிந்து எடுத்து செல்வதாய் புனையப்பட்டதும், தரம் குறைந்த ரசனைக்குத்தான் இட்டுசெல்லுகின்றது. இந்த கதை பெரும்பாலான மனிதர்களின் வீழ்ச்சியையே விவரிக்கின்றது. இரண்டு வியபாரிகளிடையே நடக்கும் போட்டியே புளியமரத்தின் மரணத்திற்க்கு காரணமாகிறது. அதற்க்குமுன், புளியமரதின் உயிரை காப்பாற்றிய தாமோதர ஆசான் சொல்லும் கதையிலிருந்து புளியமரத்தை புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் ஆசானைப் பற்றித்தான் தெரிந்துகொள்ள முடியவில்லை. கதையை நகர்த்திவிட்டு அவரும் கதையைவிட்டு நகன்றுவிடுகிறார். ஆசான் கதைசொல்லும் போது, மண் மணம் கமழும் வார்த்தைகள் தெறித்துச் சிதறுகின்றன.

”எதையேனும் ஒன்றை இழந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டு விடுவது என்பது எப்பொதும் புத்திசாலித்தனமான காரியம்தானே? இழப்பதற்க்குப் பல்லிக்கு வாலும், பொண்ணுக்குக் கற்பும், மனிதனுக்குக் கொள்கையும், கடவுளுக்கு முகமுடியும் உண்டு”

எனற வரிகள் மூலம், சுந்தர ராமசாமி தத்துவவாதியாகிறார். மேலும், புதுப்பிக்கப் பட்ட ஊர் பூங்காவில் மாலை வேளைகளில் ஒன்றுகூடும் பென்ஷன் வாங்கும் வயோதிகர்களைப் பற்றி கூறும் போது

”.....தற்போதைய அனுபவ அறிவோடு பாலியம் திரும்பி வாழ்க்கை ஆரம்பித்தால் அது எவ்வளவு மகோன்னதமாக இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கின்றார்கள். மகத்தான தோல்விகளை மறைக்க, அற்ப வெற்றிகளைப் பறையடித்துக் கொள்ளும் பலஹீனம் பரஸ்பரம் அம்பலமாகி, வெட்ட வெளிச்சமாகிவிடுகிறபொழுது ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்துகொள்ளவே வெக்கமாயிருக்கிறது அவர்களுக்கு......”

என்கிறார். இது வயதானவர்களை பற்றிய கிண்டலாக அல்லாமல், சமுதாயத்தில் எல்லா மட்டங்களிலும் நடப்பவைகளை பகடி செய்வதாய்த்தான் தெரிகின்றது.

நியாயம் தர்மம் என்று தம்படம் அடிப்போரை சுரா,

”......கீதையும் குறளும் மாறிமாறிக் காதில் விழும் வேளைகளிலேயே, அவற்றைக் கையிலேந்திக் கொண்டிருக்கும் பெரியோர்கள் தக்க தருணங்களில் அவற்றை ரகசியமாக மீறிய நடைமுறைச் சாமர்த்தியத்தில்தான் அவர்களுடைய வெற்றிகளின் ரகசியம் புதையுண்டு கிடக்கிறது.......” எனறு எள்ளுகின்றார்.

காதர் என்ற பையன் கோபால ஐய்யரின் கடையின் வேலைக்காரனாய் சேர்ந்து, படிப் படியாக வளர்ச்சியடைந்து வியாபாரியானதும், தாமு என்ற வியாபாரியின் போட்டியில் தோற்ப்பதும் நுணுக்கமாய் சொல்லப்பட்டிருக்கின்றது. தோல்வியில் துவண்டு போன காதரை, பத்திரிக்கை நிருபர் இசக்கியின் தவறான வழிகாட்டுதல் முனிசிபாலிட்டி தேர்தலில் போட்டியிடவைத்து முற்றிலும் அழிவுக்கு இட்டுச் செல்லுவது நேர்த்தியாக புனையப்ட்டிருக்கின்றது. கதையில் வரும் ஆசாரிபள்ளம் ரோடு, மீனாட்சிபுரம், வடசேரி, சுசீந்திரம் இடங்களுக்கெல்லாம் நம்மை கூட்டிச் செல்லுகிறார் கதை ஆசிரியர்.

தாமோதர ஆசான், காதர், தாமு என்று வரும் முக்கிய கதை மாந்தர்கள் எல்லோருமே வைப்பாட்டி வைத்திருக்கிறார்கள், வேறு பெண்களையும் நாடுகிறார்கள். தாமுவும் அவர் சகோதரரும் ஒரே மனைவியை வைத்திருக்கின்றார்கள். பெண்களுக்கென பாத்திரம் கதையில் இல்லாவிட்டலும், அவர்கள் போகப்பொருளாக சித்தரிக்கப் பட்டிருக்கின்றார்கள். கதா பாத்திரம் மேசமானவன் எனக்காட்ட பெண் தொடர்பு குணாதிசயத்தை காட்டவேண்டிய அவசியம் கதைக்கும் இல்லை, பெண்களை கேவலப் படுத்திதான், ஆண் பாத்திரங்களை கொட்டவனாக வகை படுத்துதல் என்பது நல்ல சித்தரிப்பும் இல்லை.


புத்தகத்தின் தலைப்பு : ஒரு புளியமரத்தின் கதை
ஆசிரியர் : சுந்தர ராமசாமி
வெளியீட்டாளர் : காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்

1 கருத்துகள்:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது… Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இனம் மறந்து இயல் மறந்து
இருப்பின் நிலைமறந்து
பொருள் ஈட்டும் போதையிலே
தமிழின் தரம் மறந்த தமிழனுக்கு
நினைவூட்டும் தாயகத் திருநாள்

உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

கருத்துரையிடுக

பால்ராஜன் ராஜ்குமார்