செவ்வாய், 26 ஏப்ரல், 2011

அன்னா ஹசாரேவுக்கு 3 ஆண்டுகள் சிறை

தமிழ்நாடு மருத்துவமனை ஸ்ரீவில்லிபுத்தூரில் பஸ் ஸ்டாண்டிலிருந்து கணபதி தியேட்டருக்கு போகின்ற வழியில் இருக்கும். பெயர் பார்த்து அரசாங்க ஆஸ்பத்திரினு நெனைக்க வேண்டாம். பிரைவேட் ஆஸ்பத்திரிதான். அதற்கு எதிரேதான் எங்கள் வீடு. ஆஸ்பத்திரிக்கு, ஊருக்குள் பெயர் இல்லாவிட்டாலும், சுற்றியுள்ள பட்டி தொட்டிகளில் ரெம்ப நல்ல பெயர். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகிலிருக்கும் கிராமங்களில் யாராவது மருந்தடித்தால் அவனையோ அவளையோ தூக்கி டிராக்டரில் போட்டு நேரே தமிழ்நாடு மருத்துவமனைக்குத்தான் கொண்டு வருவார்கள். (மருந்துன்னா பால்டாயில், அரளி விதை மேட்டர்). மருந்த குடிச்ச கேஸை தனியார் ஆஸ்பத்திரியில் எடுக்க மாட்டார்கள். போலீஸ் கேஸ் ஆகும்னுதான். ஆனால் இந்த ஆஸ்பத்திரியில் அப்படியெல்லாம் இல்லை. மருந்த குடிச்ச ஆளை கொண்டு வந்த பின்னாலே கிராமத்து பெண்கள் பத்து பதினைந்து பேர் தலைவிரி கோலமாய் அழுது கொண்டே வருவார்கள். அவர்கள் அப்படியே ஆஸ்பத்திரிக்குள் நுழைவார்கள். ஆனால் போன வேகத்தில் அவர்களை வெளியே அனுப்பிவிடுவார்கள். அவ்வளவு பேர் உள்ளே இருந்தா எப்படி வைத்தியம் பார்க்கிறது?. வெளியே வந்த பெண்கள் தங்கள் ஒப்பாரியை, தெருவில் தொடர்வார்கள். விஷம் சாப்பிட்டது ஆணா பெண்ணா, ஏன் சாப்பிட்டார் என்று ஒப்பாரியை கேட்டாலே தெரிந்துவிடும். சன் பிக்சர்ஸ் எடுக்கும் பட விளம்பரம் சன் டிவியில் ஐந்து நிமிடத்திற்க்கு ஒரு முறை வருவது மாதிரி விஷம் சாப்பிட்ட கதை ஒரு தொடர் இடைவெளியில் ஒப்பாரிக்கப்படும்.

’எல்லாம் இந்த மனுசனாலத்தான்”னு ஒரு வயதான அம்மா, கெஞ்ச தூரம் தள்ளி அமர்ந்து எதுவுமே நடக்காதமாதிரியான முகபாவனையுடனுடன் பீடி குடிக்கும் ஒரு வயதான ஆளை பார்த்து சொன்னால், அது ‘மகன்-அப்பா’ தாகராறுன்னு அர்த்தம். விஷம் சாப்பிட்டது ஒரு வலிப யையன், அழுது கொண்டிருப்பதுதான் அவனின் அம்மா என்பது விளங்கிவிடும். கூடவே ஒரு இளம் பெண்ணும் அழுதால், அது அவனின் மனைவி. அதே மாதிரி ஒரு வயதான அம்மா, ”எல்லாம் இந்த நாசமா போகிற பயலாலத்தான், இவளுக்கு இம்புட்டு கஷ்டம்”னு மேற்கே திரும்பி அழும்போது, ஒரு இளவயது ஆள் முறுக்கிக்கிட்டு கிழக்கே திரும்பி நின்றால், அது ‘கணவன் மனைவி’ தாகராருனு அர்த்தம். உள்ளே உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது ஒரு பெண், அழுவது அவளின் தாய், முறுக்கு கம்பிதான் கணவன். வந்த அன்று மாலையிலே ‘ஓ..ஓ”னு அழுகுரல் கேட்டால், வந்த கேஸ் பிழைக்கவில்லை. அப்படியில்லை என்றால் மூன்றாம் நாளோ நான்காம் நாளோ சத்தமில்லாமல் டிஸ்ஜார்ஜ் ஆகி சென்று விடுவார்கள். இந்த நிகழ்வுகளெல்லாம் எங்கள் தெருவிலிருக்கும் யாவருக்கும் தெரியும். ஆனால் ஒரே ஒரு கேஸ் மட்டுமே எல்லோரையும் குழப்பிவிட்டது. விஷம் சாப்பிட்டது ஒரு இளைஞன் என்பது மட்டுமே ஊகிக்க முடிந்தது. யாருடன் தகராரு, ஏன் விஷம் சாப்பிட்டான்னு தெரியவில்லை. அந்த வாலிபன் பிழைத்து எழுந்து டிச்ஜார்ஜ் ஆகும்போது பெரிய கூட்டம் “போலீசே..... போலீசே.....சட்டம் 309ல் கைது செய்”னு குரல் எழுப்பி கொண்டிருதார்கள். அங்கிருந்த போலீசும் அவனை ஸ்டேசனுக்கு கூட்டிச் சென்றது. தெருவிலிருக்கும் யாருக்கும் ஒண்ணுமே புரியவில்லை. எங்க அப்பாதான் விசாரித்து சொன்னார்கள். தற்கொலை சட்டப்படி குற்றமாம். அந்த சட்டம் 309 தான். வத்திராயிருப்பிலிருக்கும் கம்யூனிஸ்ட்டு கட்சிகாரங்கள் புகார் கொடுத்ததால் அவனை கைதுசெய்தார்கள் என்று நிறைய சொன்னது எதுவும் மனதில் நிற்கவில்லை. ஆனால் ’தற்கொலை சட்டப்படி குற்றம்’ என்பது மட்டும் பதிந்துவிட்டது. அதன்பின் அரளி விதையை அரைத்து குடித்து ஆஸ்பத்திரிக்கு வரும் கேஸை எல்லாம் போலீஸ் கைது செய்யும் என்று நினைத்தோம், ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
பின்னர், கல்லூரியில் படிக்கும் போதுதான் தெரிந்து கொண்டேன், இந்திய தண்டனைச் சட்டம் 309வது பிரிவில் ''யாராவது தற்கொலை செய்வதற்கு முயற்சி செய்து, அதற்கென ஏதாவது ஒரு செயலைப் புரிந்திருந்தால் அந்தக் குற்றத்திற்காக ஓர் ஆண்டுக்கு உட்பட வெறுங்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்'' என்று. அதுவும் தற்கொலை செய்வதற்கு முயற்சி பால்டாயில், அரளி விதை, .....னு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அப்படி பார்த்தால், ’சாகும்வரை உண்ணாவிரதம்னு’ போர்டு மாட்டி ஊரைக்கூட்டி தற்கொலை செய்வதற்கு முயற்சி சொய்த அன்னா ஹசாரேவுக்கு ஒருவருட சிறை தண்டனையாக விதிக்கப்பட வேண்டும். அதுவும் ஹசாரே, காந்திய வழியில் பொது சேவைக்காக சாகும்வரை உண்ணாவிரதமாம். என்ன பொய்? காந்தி என்றாகிலும் வெள்ளைக்காரனை எதிர்த்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தாரா? இல்லவே இல்லை. காந்தி இருந்த சாகும்வரை உண்ணாவிரதமெல்லாம், தான் சொன்னதையே கேட்க வேண்டும் என்ற பிடிவாதத்துக்காக, தன்னுடன் இருக்கும் இந்திய சாகாக்களை எதிர்த்துதான். சரத் பவார்க்கு லேக்பால் மசோதா கமிட்டிக்கு தலைமைதாங்க தகுதியில்லை என குற்றம் சாட்டப்பட்ட உடனேயே ராஜினாமா செய்தார். ஆனால் ஒரே குடுமபத்திலிருந்து ஏன்? சாந்திபூஷணும் அவரின் மகனும் என்ற கேள்வி வந்தபோதும், சாந்திபூஷணை பற்றிய CD வெளியாகி சர்ச்சையை கிளப்பியபோதும் பிடிவாதமாய் அவரை மாற்ற மறுத்துவிட்டார் ஹசாரே. CD அமெரிக்க விஞ்ஞான கூடத்தில் பொய்யானது என்று நிருபணம் ஆகியது என்று சப்பைகட்டுவேற. அப்ப என்ன இந்திய தொழில்நுட்ப வல்லுனர்கள் எல்லாம் என்ன திறமையற்றவர்களா? ஏன் 121 கோடி இந்திய மக்களில், இரண்டு பூசண்களைவிட்டால் வேறு ஆள் இல்லையா? ஹசாரேவின் செயல்கள் எல்லமே தன்னிச்சையான பிடிவாதம் நிறைந்ததுதானே.

சரி, ஹசாரேவின் ’சாகும்வரை உண்ணாவிரத’த்துக்கு வருவோம். தற்கொலை முயற்சிக்கு ஒரு வருடம். அப்புறம், மிரட்டியதற்க்காக (Blackmail), லோக்பால் மசோதா வேண்டுமென அரசாங்கத்தை மிரட்டியதற்க்காக (threatening to fast unto death), இ.பி.கோ 503ன் படி இரண்டு ஆண்டுகள். ஆக மொத்தம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட வேண்டும்.



குறிப்பு:

அது போக 82 லட்சம் ரூபாய்க்கு கணக்கு காட்டாததற்க்கு தனியே வருமான வரித்துறை வழக்கும், நரேந்திர மோடி நல்ல ஆட்சியாளர் என்று சான்றிதழ் வழங்கிய சமுதாய ஊழல் (social corruption) க்குகான வழக்கும் தனித்தனியே விசாரித்து தண்டனை வழங்கப் படவேண்டும்.

சனி, 23 ஏப்ரல், 2011

அன்னா ஹசாரேவும் உண்ணாவிரதமும்

ஸ்ரீவில்லிபுத்தூரின் பிரபலமான நகைவியபாரியின் மகன் கல்யாணம், அப்போது புதிதாக கட்டியிருந்த பிள்ளைமார் கல்யாண மணடபத்தில் வைத்து நடந்தது. அந்த மண்டபம் ராமகிருஷ்ணாபுரத்தில், மதுரை ரோட்டிலிருந்து பைபாஸ் ரோடு பிரிகின்ற இடத்தில் இருந்தது. ஊரிலிருந்த மண்டபங்களிலே பெரியது (இருபது வருடங்களுக்கு முன்பு). 150 பேர் ஒரே நேரத்தில் உட்கார்ந்து சாப்பிடக்கூடிய வசதி உடையதாய் இருந்தது. பணக்கார வீட்டு கல்யாணமென்றால் ஏழு எட்டு பந்திவரை சாப்பாடு பரிமாரப்படும். நடுத்தர வீட்டு கல்யாணத்திற்க்கு மூன்று நான்கு பந்திகள். நகைவியபாரியின் வீட்டு கல்யாணத்தில் இருபது பந்திக்கு மேல் ஊரில் பேசிக்கொண்டார்கள். ஆயிரக்கணக்கில் விருந்து சாப்பிட்டதை ஊர் மக்கள் வெகுநாட்க்களாக பேசியது எனக்கு நன்றாக ஞாபகமிருக்கின்றது. சாப்பாட்டு செலவே ஐம்பது அறுபது ஆயிரம் ரூபாயிருக்கும் என்றார்கள். இப்போதய கணக்குபடி, இரண்டு, இரண்டரை லட்சம் ரூபாய். 3000 பேர் சாப்பிடுவதர்க்கு இவ்வளவு செலவானது சரியே. செலவு மட்டுமல்ல விசயம். அதற்க்கான வேலையும் நிறைய. காய்கறி வங்குவது, அதை மண்டபத்திற்க்கு கொண்டுவந்து சேர்ப்பது, சமையல் ஆட்களை ஏற்பாடு செய்வது, சமையல் நடக்கும்போது உடன் இருந்து பார்ப்பது, பந்தி பரிமாறுவதுன்னு எகப்பட்ட வேலையிருக்கும்.

சென்னை அண்ணாநகரில் என்னுடன் வேலை பார்த்தவரின் மகளுக்கு கல்யாணம் நடந்தது. சாப்பாடு எல்லமே காண்ட்ராக்ட்டில் விட்டுவிட்டார்கள். கொஞ்சம் செலவுகூட, ஆனால் எல்லா வேலைகளையும் அவர்களே பார்த்துக் கொள்ளுவார்கள். கல்யாணவீட்டுக்காரர்கள் ப்ரீயாக இருக்கலாம். எத்தனை சாப்பாடுன்னு மட்டும் சொன்னால் போதும். அவர்களுக்கு அன்று ஆன செலவு எப்படியும் லட்சம் ரூபாய் இருக்கும்.

இவ்வளவு ஏன்?, எங்க அப்பார்மொண்டில் நடக்கும் பிறந்த நாள் விழாக்களுக்குகூட டின்னர் சாப்பாடு ஹோட்டலில் ஆர்டர் செய்தால், பார்ட்டி நடக்கும் இடத்துக்கே வந்து பரிமாறுகின்றார்கள். 25 பேர் இருந்தால்கூட பரவாயில்லை. இரண்டாயிரம் ரூபாய்க்கு பில் வரும். ஆனால் வேலை மிச்சம்.

பத்து நாட்களுக்கு முன்பு மதிய உணவு ஹோட்டலில் சாப்பிட வேண்டியதாகிவிட்டது. கே.கே. நகர் சரவண பவனில் சாப்பிட்டேன். சா
தா அளவு சாப்பாடு. விலை 60 ருபாய். போதுமானதாய் இருந்தது. ருசியாகவும் இருந்தது.

சென்னையில் இன்றைய தேதிக்கு ஒரு ஆள் ஹோட்டலில் போய் சாப்பிட்டால் 60 ரூபாய் ஆகிறது. அதே மாதிரி கல்யாண விழாவில் 1000 பேர் சாப்பிட்டால் லட்சம் ரூபாய் ஆகின்றது.

ஒரு ஆளுக்கு, ஒரு நாள் சாப்பாட்டு செலவு (3 x 60 ) ரூபாய் 180. அதே நான்கு நாட்களுக்கு சாப்பாட்டுக்கு எவ்வளவு ஆகும் என்றால் ரூபாய் 720 னு கணக்கு போட்டுவிடலாம். இது என்ன ராக்கட் விஞ்ஞானமா என்ன?

அதே ஆள் நான்கு நாட்களுக்கு சாப்பிடாமலிருந்தால் என்ன செல்வாகும்? ஒன்றுமே செலவாகாதுன்னு சொன்னால், அது சரிதான். ஆனால் அன்னா ஹசாரே நான்கு நாட்கள் சாப்பிடாமல், அதாங்க உண்ணாவிரதம் இருந்தால் செலவு எவ்வளவு தெரியுமா? ரூபாய் 50 லட்சமாம். இது ராக்கட் விஞ்ஞானத்தைவிட கடினமாயிருக்கின்றது. உண்ணாவிரதத்துக்கு இவ்வளவு செலவு தேவையா? இவர் இதற்காக வசூலித்த தொகை மொத்தம் ரூபாய் 82 லட்சம். இவ்வளவு பணம் கொடுத்து யார் யாரெல்லம்னு இதுவரை அன்னா ஹசாரே செல்லவேயில்லை. ஊழலுக்கு காரணமே ஒளிவு மறைவான பரிவர்த்தனை தானே. சரி சரி அதொல்லாம் மற்றவர்களுக்குத்தானே. அன்னா ஹசாரேதான் ஊழலை ஒழிக்க பிறந்த
கான். அதனால் எதுவும சொல்ல தேவையில்லை. அவருக்குதான் சென்னை மெரினா பீச்சிலிருந்து டில்லிவரை மெழுகுவத்தி எந்திச் செல்ல ஒரு பகுத்தறிவற்ற கூட்டமிருக்கின்றதே.

திங்கள், 4 ஏப்ரல், 2011

உணர்வுக்கு என்ன பெயர்? (NRI)

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒரு வறண்ட பூமி. தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடும் என்று சொல்லமுடியாது. அது பாட்டுக்கு தலையைவிரித்து போட்டு ஹாய்யா ஊர் முழுக்க நிதானமாய் நடந்து கொண்டிருக்கும். அவ்வளவே! வருடத்திற்க்கு பத்து மாதம் தண்ணீர் தட்டுபாடுதான். ஆனால் மக்களின் இதயங்கள் ஈரமானவை. என்னுடைய சொந்த ஊர் என்பதற்க்காக சொல்லவில்லை. மக்கள் ஆசா பாசத்துடன் பழகுவார்கள். எங்கள் தெருவில் ஒருவரை ஒருவர் மாமா, அத்தை, அண்ணே, அண்ணினு உறவுமுறை சொல்லிதான் வளர்ந்தேன். சாதியம் புரிந்து, அதில் அனேகர் வேற்று சாதி என்பது அறிந்து, அதை புறந்தள்ளி, இன்றும் உறவு முறையோடுதான் அழைத்துக்கொள்கின்றோம். எங்கள் தெருவிலிருக்கும் அம்மாக்களும் அக்காக்களும் கன்னிமார் கோவில் தெருவிலிருந்து தைக்கபட்டி தெருக்கு தண்ணீருக்காக குடம் சுமப்பார்கள். காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலமிட்டு, சமையல் செய்து, துணிதுவைப்பது போன்ற அன்றாட வேலைகள் மாதிரிதான் தண்ணீருக்கு குடம் சுமப்பதும்.

மழை காலங்களில் முதல் மழையை விட்டுவிட்டு, அடுத்த மழையிலிருந்து மொட்டைமாடியில் விழுந்து குழாயில் வரும் தண்ணீரை வாளியில் பிடித்து தண்ணீர் தொட்டியில் நிரப்புவோம். நிரப்பியபின், குழாய்க்கடியில் நாங்கள் அமர்ந்து குளிப்போம். அதுதான் எங்களுக்கு அருவி குளியல். அப்போதொல்லாம், நான் பார்த்தவரை ராஜபாளையத்திற்க்கு அருகிலிருக்கும் ‘அய்யனார் அருவி’தான் மிகப்பொரிய நீர்வீழ்ச்சி என நினைத்துக்கொண்டிருந்தேன். பள்ளியில் படிக்கும்போது, ஒரு விடுமுறையில் குடும்பத்துடன் குற்றாலம் சென்று, ஐந்தருவி, பழய குற்றாலம் அருவி, தேனருவி, புலியருவினு பார்த்து குளித்து குதூகலித்த அனுபவம் மனதில் இன்றும் நிற்க்கின்றது. பிரமிப்பும் மனதைவிட்டு நீங்கவில்லை. அய்யனார் அருவியுடன் ஒப்பிடும்போது குற்றாலத்தை பார்த்து பிரமிப்பதில் ஆச்சரியமில்லைதான். இப்போதெல்லாம், நாகர்கோவிலுக்கு போகும்போது அருகிலிருக்கும் திருபரப்பு அருவியில் நேரம் போவதே தெரியாமல் குளிப்போம். குளித்து முடித்து பசியுடன் வந்து அங்கு இருக்கும் கடைகளில் சூடான பஜ்ஜி சாப்பிட்டால் ....சுகமே சுகம்தான்.

ஒரு வினாடி, பார்த்து மலைத்துதான் போனேன். அடுத்த வினாடி, கீழே விழும் இவ்வளவு தண்ணீரும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு போனால், ஊரில் தண்ணீர் பஞ்சம் தீர்ந்து விடுமே என்ற எண்ணம் தோன்றியது. சத்தமாய் வாய்விட்டும் சொல்லிவிட்டேன். அதை கேட்ட என் மனைவியும், சுற்றியிருந்த நண்பர்கள் கூட்டமும் அடக்கமுடியாமல் சிரித்தார்கள். அதில் ஒரு நண்பன், “நயாகரா நீர்வீழ்ச்சியை பார்த்து ஊருக்கு எடுத்து சொல்ல எங்கிய உன் நினைப்பை .......”னு சொல்லி மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான். அன்று முழுவதும் நான் தான் அவர்களுக்கு காமெடி டார்கட். அதுதான் என்னுடைய அப்போதைய உணர்வு. அமெரிக்கா, நல்ல வளம் நிறைந்த நாடு, நலமான மக்கள். அங்கு இந்தியர்கள், நல்ல முறையில் வளமோடு வாழ்ந்து அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் பெருமையும் பொருளும் ஈட்டுகின்றனர். ஆனால் எல்லோரும் அப்படியல்ல.

கல்லூரியில் என்னுடன் படித்தவன் இருந்த அப்பார்ட்மெண்ட் அரிசோனாவின் பினிக்ஸ் நகரின் தெற்க்கு பகுதியில் இருந்தது. நாங்களும் அதே அப்பார்ட்மெண்டில் வீடுபார்த்தது சந்தோசமாயிருந்தது. எங்கள் இருவரின் மனைவிமார்களும் எங்களுடைய் குழந்தைகளும் நெருக்கமானவர்கள். அப்போது நண்பனின் குடும்பம் அமெரிக்காவந்து நான்கு வருடங்கள் ஆகியிருந்தன. வரும்போது அவர்களின் மகனுக்கு வயது ஆறு. அதுவரை சென்னையில் சூளைமேட்டிலிருந்த பள்ளிகூடத்தில் படித்துகொண்டிருந்தான். நன்றாக வளர்ந்திருந்தான் அவர்களின் பையன், அவனுடன் பேசும்போது, அவன் பதில் சொல்லாமல் திரு திருனு முழித்துக் கொண்டிருந்தான். அதற்க்கு அவனின் அம்மா, “அவனுக்கு தமிழ் புரியாது. ஆதனால்தான் முழிக்கின்றான்” என்றார்கள். அதை கேட்ட எனக்கும் என் மனைவிக்கும் அதிர்ச்சியாயிருந்தது. ஆறு வயதுவரை தாய் மொழி பேசிய பையன், நான்கே வருடதில் தமிழ் மறக்கடிகப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சியாயிருந்தது. அதை தொடர்ந்து அவர் சொன்னதை கேட்டு மனவருத்தம்தான் மிஞ்சியது. அவர், “பசங்களுக்கு புரியகூடாது அல்லது சீக்கிரட்டா பேசணும்னா நாங்க ரெண்டுபேரும், தமிழில் பேசிக்கொள்வோம்”னு அவரது கணவரை காண்பித்து சொன்னார்கள். அவரின் மாமனார், அதாவது என் நண்பனின் அப்பா, கல்லூரியில் தமிழ் ஆசிரியராய் இருந்து ஓய்வு பொற்றவர். கணவன் மனைவி இருவருக்கும் சொந்த ஊர் மதுரை. இருவருமே பட்டிமன்ற போச்சாளர் (தமிழ்) போராசிரியர் சால்மன் பாப்பயையா அவர்களின் உறவினர்கள்.

இவர்களை மட்டுமல்லாது, வேறு சில இந்தியர்களிடம் பெற்ற கமெண்ட்களும் சில இங்கு

- இந்தியாவிற்க்கு கோடைகாலத்தில் போக கூடாது, ஒரே வெயில். (இவர் அமெரிக்காவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின் இந்தியா சென்று திரும்பியபின் அடித்த கமெண்ட். சொந்த ஊர் குடிவாடா, ஆந்திரா. இவர் அமெரிக்கா போகும்முன்பு, குடிவாடா குளு குளுனு இருந்தது போலவும், இப்போது மாறிவிட்டது போலவும்தான் இருக்கின்றது)
- சேலை கட்டிக்கொண்டு எப்படித்தான் ஊரில் இருக்கின்றார்களோ?. என்ன உடை இது? (What a costume is this?). இப்படி சொன்னவர், சேலத்தை சேர்ந்தவர்.

எந்த நாட்டவனும், பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற, நமது அண்டை நாட்டவரோ, ஏழை கிழக்கு ஐரோப்பிய நாட்டவனும் இப்படி சொல்ல நான் கேட்ட்தில்லை. இதை கேட்கும் போது வரும் உணர்வை, என்ன உணர்வு என்றே சொல்லத் தெரியவில்லை. வலியா? வருத்தமா? கோபமா? எரிச்சலா?, அது எல்லாம் கலந்த ஒரு உணர்வுதான் ஒவ்வொரு முறையும். அதற்க்கு காழ்புணர்வு என மாணிக்கம் அவர்கள் பெயரிட்டால், அதை எடுப்பதா? இல்லை விடுப்பதா?


[என்னுடய ‘வெளிநாட்டு வாழ் இந்தியன் (NRI)’ என்ற பதிவிற்க்கு நண்பர் மாணிக்கதின் பின்னூட்டம்:


கக்கு - மாணிக்கம்
எதன் அடிபடையில் இவைகளை எழுதினீர்கள் என்று விளக்க வேண்டும் நண்பரே. அது உங்கள் கடமையும் கூட இப்போது. வெறும் காழ்புணர்வில் மட்டுமே இதுபோல எழுத நீங்கள் தலைப்பட மாட்டர்கள் என்ற நம்பிகையுடன் கேட்கிறேன்.
நட்புடன் - மாணிக்கம் ]
பால்ராஜன் ராஜ்குமார்