புதன், 22 டிசம்பர், 2010

ஜட்கா வண்டிக்காரர் ஜட்ஜானார்

“ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரம்: சி.பி.ஐ, விசாரணையை நேரடியாக கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு (தினமலர், டிசம்பர் 16, 2010)”

இதைப் படித்த உடனே எனக்கு சந்தோசம். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக் கற்றைகள் பிரச்சினையை உச்சநீதிமன்றம் எப்படி கிடுக்கி பிடிபோட்டு இறுக்குகின்றது?. இந்த உத்தரவை போட்ட நீதிபதி, நமது நாட்டைக் காக்க வந்த கடவுள் மாதிரியேதான் தெரிந்தார். ஏன், உச்சநீதிமன்றமே ஒரு கோவிலாகத்தான் தெரிந்தது. எனக்கு ஊழல் இல்லா சமுதாயத்தில் வாழத்தான் பிடிக்கும். அதானால்தான் சந்தோசம். சரி இதை யாரிடமாவது பகிர்ந்து கொண்டு, அவர்களையும் மகிழ்விக்கலாமே என்று நினைத்து, ராஜப்பாவுக்கு போன் செய்து விசயத்தை சொன்னேன். நான் சொன்னதைக் கேட்டு, ஹா ...ஹானு வாய்விட்டு சிரித்தார். எனக்கு அவர் சிரிப்பதின் அர்த்தம் புரியவில்லை.

“ஏன்?”னு கேட்டேன்.

“நீ சொன்ன செய்தியையும் உன்னையும் நினைத்துத்தான்”

“புரியலயே”னு சொன்னேன்.

”புரியும்படி சொல்றேன்”.

”சரி”

“ உச்சநீதிமன்றமே ஸ்பெக்ட்ரம் வழக்கில் தன்னை ஒரு கண்காணிக்கும் நிறுவனமாய்
பிரகடனப்படுத்திக் கொண்ட உத்தரவுதானே உன் சந்தோசத்திற்கு காரணம்?.”

“ஆம்”

”சரிதான். நீதிபதிகள் அனைவரும் கங்காணியாகிவிட்டர்கள்”

“என்ன சொல்றீங்க”

“நீதிபதிகள், சி.பி.ஐ.யின் வேலையை கண்காணித்தால், நீதிமன்ற வேலையை யார்
பார்ப்பது?”

”???”

“இந்திய நீதிமன்றங்களில் 30000000 வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. ஒரு வழக்கில் குறைந்தது இரண்டு பேர் சம்பந்தப்பட்டிருந்தாலும், 60000000 பேர் காத்திருகின்றார்கள். அதுவும் வருடக்கணக்கில். எவ்வளவு காலவிரையம். ஐந்து வருடங்களுக்கு மேல் விசாரணைக் கைதியாக லட்சக்கணக்கானோர் சிறைசாலைகளில். வழக்கு துவங்கப்படாமலோ, வழக்கு மந்தமான முன்னேறத்தாலோ, வாழ்வை தொலைத்துவிட்டு சிறையில். அதில் நிறையபேர் நிரபராதியாகக்கூட இருக்கலாம். இந்த தாமதத்தை யார் கண்காணிப்பது?”

”நீங்க சொல்லுவது சரிதான்”

“இதுக்குத்தான், கிராமத்தில் அவங்க துருத்தியை அவங்க அவங்க ஊதணும்னு சொல்லுவாங்க”

”துருத்தினா?” னு கேட்டதற்கு பதிலே சொல்லாமல், ராஜப்பா தொடர்ந்தார்.

“சில மாதங்களுக்கு முன்பு வெளியான போபால் விஷவாய்வு தீர்ப்பு வந்தபோது, நாடு முழுவதும் ஒரே களேபரம். பாதிக்கப் பட்டவர்களைப் பற்றி இல்லை. இறந்து போன 20000 பற்றியுமல்ல. உயிர் பிழைத்தவர்கள் இன்றுவரை படும் அவதியை பற்றியுமல்ல. கண்பார்வை போனவர்களைப் பற்றியோ ஊனமுற்றவர்களைப் பற்றியோ அல்ல. அப்ப ஏன் களேபரம்?. சம்பவம் நடந்த போது, யூனியன் கார்பைடு கம்பெனியின் நிர்வாகி ஆண்டர்சனை தப்பவிட்டது யார்? ராஜீவ் காந்தியா? அர்ஜுன் சிங்கா?”

”ஆம் அப்படித்தான் நடந்தது”

“25 ஆண்டுகள் கழித்து கிடைத்த தீர்ப்பில் தப்பியது நீதிதான். கிடைக்காமல் போனது நீதிதான். இதை யார் கண்காணிப்பது.?”

”ம்”

”சென்ற ஆண்டு மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்தை, சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்று கேட்டார்கள். ஆனால் மத்திய ரயில்வே அமைச்சர் அப்படிப்பட்ட விசாரணைக்கு உத்தரவிடவில்லை. சி.பி.ஐ. விசாரணைக்கு போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்?”

”தெரியவில்லையே”

” ஜட்கா வண்டிக்காரர் ஜட்ஜாயிருப்பார்”

“ஒண்ணுமே புரியவில்லையே”

”அப்படி நடந்திருந்தால் நீதிபதிகள் சி.பி.ஐ. வேலையை கண்காணித்திருப்பர்கள். நீதிபதிகள்தாம் சி.பி.ஐ.யின் வேலையை கண்காணிப்பார்களேனு, சி.பி.ஐ.ல உள்ளவர்கள் ரயிலைத்தான் ஒழுங்கா ஒட்டுவதற்கு ஆள் இல்லைனு, ரயில் ஒட்ட சென்றிருப்பார்கள். ரயில் ஓட்டத்தான் சி.பி.ஐ. ஆபிசர்கள் வந்துவிட்டார்களேனு. ரயில் ஒட்டுனர்கள் உட்கார்ந்து யோசித்ததில், ஆளில்லா லெவல் கிராசிங்கில் குறுக்கே வந்த ஜட்கா வண்டிதான் விபத்துக்கு காரணம்னு புரிந்துபோயிருக்கும். ஜட்கா வண்டியை ஒழுங்கா ஓட்டினால், விபத்தே நடந்திருக்காதுனு தெரிந்து, ரயில் ஒட்டுனர்கள், ஜட்கா வண்டி ஓட்டப் போயிருப்பார்கள். ஜட்கா வண்டிக்காரருக்கு என்ன செய்யனு தொரியாம, சரி நீதிபதி வேலைதான் ஆளில்லாமல் சும்மாயிருக்குனு - ஜட்கா வண்டிக்காரர் ஜட்ஜாயிருப்பார்.”

“!!!”




(குறிப்பு:

‘துருத்தி’ என்பது ஆட்டுத் தோலினால் ஆன ஓர் ஊது இயந்திரம். இரும்புக் கொல்லரிடம், உலேகத்தை சூடாக்க உபயேகிக்கப்படும். ‘உன் துருத்தியை ஊது’ என்றால் ‘உன் வேலையை பார்’ என்பது)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பால்ராஜன் ராஜ்குமார்