ஞாயிறு, 28 நவம்பர், 2010

மோசடி என்றொரு மோசடி

இரண்டாம் தலைமுறை அலைபேசி மோசடி (2G Spectrum Scam) பற்றிய செய்திகளை படித்தவுடன் எனக்கு, “உண்மையான் உண்மை”, “பொய்யான உண்மை”, “பொய்யான பொய்”, “உண்மையான பொய்” பற்றிய நினைவுகள்தான் வந்தது. அத்துடன் பத்திரிக்கையில் படித்த மேலும் ஒரு காமெடியும் கூடவே நினைவுக்கு வந்தது.

’அப்பா கோரிப்பாளையத்திலிருந்து நம்ம வீட்டிற்க்கு பஸ்ஸில் வந்தால் டிக்கட் எவ்வளவு?”

”நாலு ரூபாய்” என்றார் அப்பா.

“அப்ப நான் நாலு ரூபா சேமித்துவிட்டேன்”

“எப்படி?” அப்பா

“நான் பஸ்ஸில் வருவதற்க்கு பதில், பஸ்ஸுக்கு பின்னால் ஒடி வந்தேன்”

ஒரு வினாடி சந்தோசப்பட்ட அப்பா, “அட போடா முட்டா பையலே, நீ பஸ்ஸுக்கு
பின்னால் ஓடி வந்தற்க்கு பதில் டாக்ஸிக்கு பின்னால் ஒடி வந்திருந்தால் நாற்பது ரூபாய் சேமித்திருகாலாமே” என்றார்.

மகன் சேமித்ததாய் சொன்ன நாலு ரூபாயும் சரி, அப்பா சேமிக்கச்சொன்ன நாற்பது ரூபாயும் சரி, இவை யாவுமே கருத்தியல் (notional) சேமிப்பே தவிர உண்மையானது அல்ல.


இதைப்போலத்தான் இரண்டாம் தலைமுறை அலைபேசி மோசடியும் உள்ளது. எல்லோரும் சொல்லுகின்ற அரசங்கத்திற்க்கு உண்டான இழப்பும், டாக்சிக்கு பின்னால் ஒடி சேமித்தமாதிரிதான். இந்த கருத்தியல் இழப்பு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய். எண்களில் சொன்னால் – 150000,00,00,000 ரூபாய். இந்த கணக்கில் இரண்டுவகையான முட்டாள்களும் ஒரே மாதிரியான பாட்டைத்தான் பாடுகின்றார்கள். படித்த முட்டாள், பாடிக்காத முட்டாள் என்ற இரண்டு வகை சரிதானே?. உரிமைத் தொகையாக (license fee) அரசங்கம் இழந்த தொகைதான் இவ்வளவு பெரிய பணம் என்கின்றார்கள். இந்த இழப்பிற்க்கு மொத்த பொறுப்பாளியாக மத்திய அரசின் முன்னாள் தகவல் தொடர்பு மந்திரி அ. ராசா என்று சொல்லுகின்றார்கள். ஆரம்பத்தில் வருமான இழப்பு என்று ஆரம்பித்து, பின்னர் அ. ராசாதான் கையூட்டாக இவ்வளவு தொகையையும் பெற்றமாதிரி ஒரு மாயை உண்டாக்க முயற்சி சொயப்படுகின்றது. (என்னை அ. ராசாவின் அனுதாபியாகவோ அல்லது தி.மு.க வின் தொண்டனாகவோ நினைக்கவேண்டாம். பிரச்சினையை எப்படி சமுதாயம் பொதுவெளியில் அலசுகின்றார்கள் என்றே நோக்குகின்றேன்)

வ்ருமான இழப்பிலிருந்து, கையூட்டமாய் மாறிய இந்த அறிவுஜீவிகளால் நடத்தப்படும் நாடகம், அடுத்த கட்டத்திற்க்கு நகர்கின்றது. அதற்கு பத்திரிக்கைகளும், தொலைகாட்சிகளும் தகுந்த சூழமைப்பை உருவாக்கித்தருகின்றன. இவ்வளவு பெரிய தொகையை எங்கு பதுக்கி வைத்திருக்கின்றார்கள்? யார்யாரெல்லம் பணத்தை பங்கு போட்டர்கள்?, கருணாநிதியா? கனிமொழியா?, அதற்கு CBI யா விசாரணையா அல்லது JPC கூட்டு விசாராணையா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்கின்றார்கள். அதற்காக, இந்த மாதிரியான தொலைதொடர்பு வர்த்தக உரிமையில் ஊழலே நடக்க வாய்ப்பில்லையா? என்றால், யாரும் மறுப்பதற்க்கில்லை. ஆனால் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கான மோசடி என்று ஒரு பொய்யான பொய்யை பிடித்துக்கொண்டு, மேலும் பயணிக்க வேண்டாம். இப்படி பயணப்படும்போது உண்மையான உண்மைகள் மறைக்கப்படுகின்றன அல்லது நம் கவனத்தை திசை
திருப்பிவிடுகின்றன. அப்படி திசை திருப்பப்பட்ட உண்மைகளில் ஒன்று.....

நமது நாட்டில் அலைபேசி அழைப்பு கட்டணமாய் ஒரு வினாடிக்கு ஒரு பைசா அல்லது ஒரு நிமிடத்திற்க்கு 50 பைசாவாக உள்ளது. இதேமாதிரியான சேவை, அமெரிக்காவில் நிமிடத்திற்க்கு 1100 பைசாவாகவும், இங்கிலாந்தில் நிமிடத்திற்க்கு 900 பைசாவாகவும் உள்ளது. அதாவது இந்தியாவில் நமக்கு கிடைக்கும் சேவை 1500 விழுக்கடு முதல் 2200 விழுக்காடுவரை மலிவாக இருக்கின்றது. தரத்திலோ தொழில்நுட்பத்திலோ குறைந்தது என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். உலகத் தரம்வாய்ந்த தொழில்நுட்பம்தான் இங்கும் இருக்கின்றது. நாம் எங்கே புதிய தொழில்நுட்ப்பத்தை கண்டு பிடித்தோம்? வெளிநாட்டிலிருந்து தொழில்நுட்ப்பத்தை பெற்று, அப்படியே பயன் படுத்திகின்றோம். பின்னர் எப்படி நம் நாட்டில் மட்டும் சேவை கட்டணம் குறைவாக இருக்கின்றது? சேவை நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட உரிமை கட்டணம் குறைவாக இருப்பதால். அதாவது, ஒன்றரை லட்சம் கோடி குறைவாக வசூலித்தால், பொது ஜனங்களுக்கான கட்டணமும் குறைவாக இருக்கின்றது.


நிலமை இப்படி இருக்க, அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் ”பொய்யான பொய்யை” ஊர் ஊராய் ஊர்வலமாய் எடுத்து சொல்வதும் மோசடியே.

வெள்ளி, 5 நவம்பர், 2010

என் பாகிஸ்தான் சகோதரிக்கு

நீ நலமாயிருக்க
நான் நலமாயிருக்கின்றேன்
நான் நலமாயிருக்க
நீ நலமாயிருக்கின்றாயா?

சீதனமாய்த்தானே கொடுத்தோம்
ஹரப்பாவையும் மொகஞ்சதாரோவையும்
பாகப்பிரிவினைனு
சொல்லிவிட்டார்கள் பாவிகள்

நம்முடைய பலத்தை
அன்பைவைத்து அளப்போம்
அணுகுண்டுகளை
வைத்து வேண்டாமே

நம் நாட்டின் எல்லையில்
யார் சுட்டாலும் யார் மாண்டாலும்
ஒட்டை விழுவது என்னவோ
நம் இதயத்தில்தானே

உன் தேசம் தண்ணீரில்
மூழ்கியிருந்த போது
நான் கண்ணீரில்
மூழ்கினேன்

உன்மேல் என் அன்பையும்
என்மேல் உன் அன்பையும்
சிந்துவும் பிரிக்கமுடியாது
இந்துவும் பிரிக்கமுடியாது

நான் மட்டும் வாழ்ந்து நீ வீழ்ந்தால்
நான் எப்படி வாழ முடியும்
ஜெய் பாகிஸ்தான்
ஜெய் இந்தியா.

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

சிலந்தி வலையில் சிறைபட்ட சிங்கங்கள்

நாங்கள் யார்?
குழந்தைகளா
?
தொழிலாளர்களா?, இல்லை
குழந்தைத்
தொழிலாளிகள்

நாங்கள்......
பூவாகாமலே

புதைக்கப்பட்ட
மொட்டுக்கள்


நாங்கள்......
துவக்கத்தையே

தொலைத்த
முடிவுகள்


நாங்கள்......
முகவுரையிலேயே

முடிவுரையாய்
போனவர்கள்


நாங்கள்......
கல்
உடைக்கும்
செதுக்கப்படாத
சிற்பங்கள்


நாங்கள்......
சிலந்தி
வலையில்
சிறை பிடிக்கபட்ட
இளம்
சிங்கங்கள்

நாங்கள்......
ஐம்பதிலும்
வளைவோம்
சம்மட்டி அடித்து
ஐந்திலேயே
வளைந்துவிட்டோமே

நாங்கள்......
இந்தியாவின்
எதிர்கால தூண்கள்
இப்போதைய வேலை
செங்கல்
சூளையில்

நாங்கள்......
மத்தாப்பு
தொழிற்சாலையில்
புஸ்வாணம் ஆகிபோன
எதிர்கால
நட்சத்திரங்கள்

நாங்கள்......
இறக்கைகள்
இருப்பதையே
இருட்டடிப்பு செய்யப்பட்ட
பறவைக்
குஞ்சுகள்

நாங்கள்......
கிழக்கிலேயே

அஸ்தமிக்கும்
சூரியன்கள்


நாங்கள்......
தீப்பெட்டி
தொழிற்சாலையில்
கருகிப்போன
தீக்குச்சிகள்


நாங்கள்......
இந்நாட்டு
மன்னர்களாம்
மாடு மேய்க்கும்
மாயாண்டியுமா
?

எங்கள்
இந்தியாவின்
எதிர்காலம்
இளைஞர்கள் கையிலாம்
பூ
விற்கும் சிறுமி கைலோ பூக்கூடை

நாங்கள்......
சுண்டல்
விற்கும்போது
இளமைப் பருவமே
சுனாமியால்
சுருண்டுவிடும்

நாங்கள்......
சாலையில்
'குழந்தைகள் ரைம்ஸ்'
புத்தகம் விற்கும்

பள்ளிசெல்லா
குழந்தைகள்

நாங்கள்......
திருவிழாவில்
தொலைந்ததுபோல்
திக்கு தெரியாமல்
தொழிற்சாலையில்


நாங்கள்......
குழந்தை
என்ற
முகவரி இழந்த
முகங்கள்


நாங்கள்......
கொண்டாட்டங்கள்
கேட்கவில்லை
கூடங்கள்

பள்ளிகூடங்கள்
தான்

அப்பா......
பள்ளிகூடம்
செல்லும்
பாதை மட்டும்
காட்டேன்
எனக்கு

அம்மா.....
பட்டரை
சுத்தியலைவிட
பாடப்புத்த்கம்
கனமானதா
?

அண்ணா...
சட்டைக்கு
காஜா
போட்டது போதும்
பள்ளிச்
சீறுடை வங்கித்தா எனக்கு

அக்கா....
சிலேட்டும்
பலப்பமும்
வாங்கி கொடேன்
உளிகள்
சுமந்து கை வலிக்கிறது

எங்களுக்கு வேண்டாம்
மே
தினக் கொண்டாட்டம்
எங்களை குழந்தைகளாகவே
இருக்க
விடுங்கள்

கைமட்டும் கொடுங்கள்
எங்கள்
கால்கள்
வாழ்கையின் அடுத்த
அடி
எடுத்து வைக்க !

செவ்வாய், 19 அக்டோபர், 2010

காந்தியும் கை துப்பாக்கியும்

மஹாத்மாவே, உன்னை
எல்லோரும் மறந்து விட்டார்கள்
இப்போது நீ இருப்பது
என் இதயத்திலும்
அரசு விடுமுறை பட்டியலில் மட்டுமே

காந்தி ஜெயந்தி கொண்டாட
எல்லோருக்கும் பிடிக்கும்
வார நாளில் வந்தால்,
ஒரு நாள் விடுமுறை தானே

உனக்கு தெரியுமா?
நாம் நாட்டில் மற்றுமொரு
விடுதலை போராட்டம் நடகின்றது
அஹிம்சை என்ற அறப்போராட்டம் இல்லை
இது ஒரு ஆயுத போரட்டம்

சாதியின் பெயரால்
சகோதரனை சாவடிப்போம்
மதத்தின் பெயரால்
மதில்களை இடிப்போம்

சொன்னால் நம்பமாட்டாய்
இந்த போராட்டதில்
சத்தியாகிரஹமே
செத்துவிட்டது

உன் கைத்தடிக்கு இனி
வேலை இல்லை இங்கு
கை துப்பக்கி
இருந்தால் கொண்டுவா
பால்ராஜன் ராஜ்குமார்