புதன், 22 டிசம்பர், 2010

ஜட்கா வண்டிக்காரர் ஜட்ஜானார்

“ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரம்: சி.பி.ஐ, விசாரணையை நேரடியாக கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு (தினமலர், டிசம்பர் 16, 2010)”

இதைப் படித்த உடனே எனக்கு சந்தோசம். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக் கற்றைகள் பிரச்சினையை உச்சநீதிமன்றம் எப்படி கிடுக்கி பிடிபோட்டு இறுக்குகின்றது?. இந்த உத்தரவை போட்ட நீதிபதி, நமது நாட்டைக் காக்க வந்த கடவுள் மாதிரியேதான் தெரிந்தார். ஏன், உச்சநீதிமன்றமே ஒரு கோவிலாகத்தான் தெரிந்தது. எனக்கு ஊழல் இல்லா சமுதாயத்தில் வாழத்தான் பிடிக்கும். அதானால்தான் சந்தோசம். சரி இதை யாரிடமாவது பகிர்ந்து கொண்டு, அவர்களையும் மகிழ்விக்கலாமே என்று நினைத்து, ராஜப்பாவுக்கு போன் செய்து விசயத்தை சொன்னேன். நான் சொன்னதைக் கேட்டு, ஹா ...ஹானு வாய்விட்டு சிரித்தார். எனக்கு அவர் சிரிப்பதின் அர்த்தம் புரியவில்லை.

“ஏன்?”னு கேட்டேன்.

“நீ சொன்ன செய்தியையும் உன்னையும் நினைத்துத்தான்”

“புரியலயே”னு சொன்னேன்.

”புரியும்படி சொல்றேன்”.

”சரி”

“ உச்சநீதிமன்றமே ஸ்பெக்ட்ரம் வழக்கில் தன்னை ஒரு கண்காணிக்கும் நிறுவனமாய்
பிரகடனப்படுத்திக் கொண்ட உத்தரவுதானே உன் சந்தோசத்திற்கு காரணம்?.”

“ஆம்”

”சரிதான். நீதிபதிகள் அனைவரும் கங்காணியாகிவிட்டர்கள்”

“என்ன சொல்றீங்க”

“நீதிபதிகள், சி.பி.ஐ.யின் வேலையை கண்காணித்தால், நீதிமன்ற வேலையை யார்
பார்ப்பது?”

”???”

“இந்திய நீதிமன்றங்களில் 30000000 வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. ஒரு வழக்கில் குறைந்தது இரண்டு பேர் சம்பந்தப்பட்டிருந்தாலும், 60000000 பேர் காத்திருகின்றார்கள். அதுவும் வருடக்கணக்கில். எவ்வளவு காலவிரையம். ஐந்து வருடங்களுக்கு மேல் விசாரணைக் கைதியாக லட்சக்கணக்கானோர் சிறைசாலைகளில். வழக்கு துவங்கப்படாமலோ, வழக்கு மந்தமான முன்னேறத்தாலோ, வாழ்வை தொலைத்துவிட்டு சிறையில். அதில் நிறையபேர் நிரபராதியாகக்கூட இருக்கலாம். இந்த தாமதத்தை யார் கண்காணிப்பது?”

”நீங்க சொல்லுவது சரிதான்”

“இதுக்குத்தான், கிராமத்தில் அவங்க துருத்தியை அவங்க அவங்க ஊதணும்னு சொல்லுவாங்க”

”துருத்தினா?” னு கேட்டதற்கு பதிலே சொல்லாமல், ராஜப்பா தொடர்ந்தார்.

“சில மாதங்களுக்கு முன்பு வெளியான போபால் விஷவாய்வு தீர்ப்பு வந்தபோது, நாடு முழுவதும் ஒரே களேபரம். பாதிக்கப் பட்டவர்களைப் பற்றி இல்லை. இறந்து போன 20000 பற்றியுமல்ல. உயிர் பிழைத்தவர்கள் இன்றுவரை படும் அவதியை பற்றியுமல்ல. கண்பார்வை போனவர்களைப் பற்றியோ ஊனமுற்றவர்களைப் பற்றியோ அல்ல. அப்ப ஏன் களேபரம்?. சம்பவம் நடந்த போது, யூனியன் கார்பைடு கம்பெனியின் நிர்வாகி ஆண்டர்சனை தப்பவிட்டது யார்? ராஜீவ் காந்தியா? அர்ஜுன் சிங்கா?”

”ஆம் அப்படித்தான் நடந்தது”

“25 ஆண்டுகள் கழித்து கிடைத்த தீர்ப்பில் தப்பியது நீதிதான். கிடைக்காமல் போனது நீதிதான். இதை யார் கண்காணிப்பது.?”

”ம்”

”சென்ற ஆண்டு மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்தை, சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்று கேட்டார்கள். ஆனால் மத்திய ரயில்வே அமைச்சர் அப்படிப்பட்ட விசாரணைக்கு உத்தரவிடவில்லை. சி.பி.ஐ. விசாரணைக்கு போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்?”

”தெரியவில்லையே”

” ஜட்கா வண்டிக்காரர் ஜட்ஜாயிருப்பார்”

“ஒண்ணுமே புரியவில்லையே”

”அப்படி நடந்திருந்தால் நீதிபதிகள் சி.பி.ஐ. வேலையை கண்காணித்திருப்பர்கள். நீதிபதிகள்தாம் சி.பி.ஐ.யின் வேலையை கண்காணிப்பார்களேனு, சி.பி.ஐ.ல உள்ளவர்கள் ரயிலைத்தான் ஒழுங்கா ஒட்டுவதற்கு ஆள் இல்லைனு, ரயில் ஒட்ட சென்றிருப்பார்கள். ரயில் ஓட்டத்தான் சி.பி.ஐ. ஆபிசர்கள் வந்துவிட்டார்களேனு. ரயில் ஒட்டுனர்கள் உட்கார்ந்து யோசித்ததில், ஆளில்லா லெவல் கிராசிங்கில் குறுக்கே வந்த ஜட்கா வண்டிதான் விபத்துக்கு காரணம்னு புரிந்துபோயிருக்கும். ஜட்கா வண்டியை ஒழுங்கா ஓட்டினால், விபத்தே நடந்திருக்காதுனு தெரிந்து, ரயில் ஒட்டுனர்கள், ஜட்கா வண்டி ஓட்டப் போயிருப்பார்கள். ஜட்கா வண்டிக்காரருக்கு என்ன செய்யனு தொரியாம, சரி நீதிபதி வேலைதான் ஆளில்லாமல் சும்மாயிருக்குனு - ஜட்கா வண்டிக்காரர் ஜட்ஜாயிருப்பார்.”

“!!!”




(குறிப்பு:

‘துருத்தி’ என்பது ஆட்டுத் தோலினால் ஆன ஓர் ஊது இயந்திரம். இரும்புக் கொல்லரிடம், உலேகத்தை சூடாக்க உபயேகிக்கப்படும். ‘உன் துருத்தியை ஊது’ என்றால் ‘உன் வேலையை பார்’ என்பது)

சனி, 18 டிசம்பர், 2010

காண் என்றது இயற்கை

எனக்கு எட்டாம் வகுப்பு முழுஆண்டு தேர்வு முடிந்திருந்த நேரம். கட்டிப்போட்டிருந்த வெள்ளாட்டாங்குட்டியை அவிழ்த்துவிட்டால் அங்கும் இங்கும் குதித்தாடுமே அதேமாதிரி இரண்டு வாரங்கள் தெருவில் விளையாடினோம். அதன்பின்னர் ஒரு நாள் விளையாட நாங்கள் படித்துக்கொண்டிருந்த சி.எம்.எஸ். பள்ளிக்கூட விளையாட்டு மைதானத்திற்க்கு சென்றோம். அங்கிருந்து பார்த்ததில் மலையும் வனமும் அன்று வியப்பாய் தெரிந்து எனக்கு. மலை என்னைவாஎன்று என்னை அழைப்பது போல் இருந்து. ‘செண்பக தோப்புக்கு போகலாமாடா?’னு உடனிருந்த நண்பர்களிடம் கேட்டேன். எல்லோரும்சரிஎன்றார்கள். ‘யாருக்காவது வழி தெரியுமா?’. நாராயணன் தெரியும்னு சொன்னான். எங்கள் ஆறுபேரில் அவன் மட்டுமே பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய, எங்களைவிட மூத்தவன். அங்கிருந்து மேற்கே செல்லும் மண் சாலை வழியே நடக்க ஆரம்பித்தோம். நடக்க நடக்க வனமும் மலையும் அருகில் வந்தன. செண்பக தோப்பில், மரமும், செடியும், கற்களும், பாறைகளும், மலையும் மௌனமாய் ஆனால் வசீகரமாய் என் முன்னே நிற்பதை உணர்ந்தேன். பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. பசியறியாது வனத்தில் உலவியதில் நேரம் போனதே தெரியவில்லை யாருக்கும். அந்த வழியே வந்த ஒரு பெரியவர், எங்களை பார்த்துடேய் சாயங்காலமாயிருச்சி........வீட்டுக்கு போங்கஎன்று சொன்னார். நேரமானால் காட்டு விலங்குகளெல்லாம் வருமுனு உண்மையைச் சொல்லி பயமூட்டினார். எனக்குத்தான் அங்கிருந்து வரவே பிடிக்கவில்லை. வனமும் மலையும் சினேகமாயிருந்தன. வீட்டிற்க்கு கூட்டிக்கொண்டு வந்துவிட தேன்றியது. ஸ்ரீவில்லிப்புத்தூரில் பள்ளி படிப்பை முடித்து, மேற்படிப்பிற்க்காக வெளியூருக்கு செல்லும்வரை பல தடவைகள் அங்கு சென்றிருக்கின்றேன். காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டு தேர்வு விடுமுறைகளில் செண்பக தோப்பிற்க்கு சென்று மலையோடு மௌனமாய் பேசிய நாட்கள் பல. கல்லூரி நாட்களில் மூன்று நான்கு முறைதான் செல்ல முடிந்தது. அந்த குறைந்த வாய்ப்புகளும், நண்பர்களும் அதற்கு பின் கிடைக்கவில்லை. ஆனால் வனத்தையும் மலையையும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மனதில் இருந்து கொண்டிருந்தது.

நேற்று மலையை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும், மிக அருகில் சென்று பார்க்க முடிந்தது. ஆம், என்னை எஸ். ராமகிருஷ்ணன்தான் அழைத்து சென்றார். என் கைகளை இறுக பற்றியே நடந்து சென்றது மாதிரி ஓர் உணர்வு. அப்போது அவரின் மனம் மலையை தின்பதற்கு ஆசைப்பட்டதையும் காண முடிந்தது. என் மன உணர்வுகளையும், மலையின் மௌனத்தையும் வார்த்தைகளில் ‘மலை தோன்றுகிறது’ கட்டுரையில் கொட்டிவிட்டு சென்றார்.

சிறுவயதில், எனக்கு பள்ளித் தேர்வு விடுமுறைகளில் மட்டுமல்லாது, பிற நாட்களிலும் மற்றுமொரு மனமொத்த பொழுதுபோக்கு, செடிகள் வளர்ப்பது. எங்கள் வீட்டுத் தோட்டத்தில் எல்லாவகையான காய்கறிச் செடிகளையும் நானும் எனது தம்பிகளும் வளர்ப்போம். அதிலும் எனக்கு, கொத்தமல்லிச் செடி வளர்க்க ரொம்பப் பிடிக்கும். அது விதைத்ததிலிருந்து வேகமாய் வளரக்கூடிய செடி. தோட்டத்தில் மண்ணைத்தோண்டி, கிளறி விட்டு, மல்லி விதையை விதைத்து தண்ணீர் ஊற்றி, அது முளைவிடும் வரை மண்ணை பார்த்துக் கொண்டிருப்பேன். துளிர்விடும் முதல் இலையிலிருந்து ஒவ்வொரு இலையும் பரிட்சயமாகிவிடும். ஒருநாள், காலையில் பள்ளிக்கூடத்திற்கு செல்லும்முன் பார்த்த, நன்கு வளர்ந்த மல்லிச் செடி, காணாமல் போய் மதிய உணவில் துவையலாய் வந்து உக்காரும். கொத்தமல்லி துவையலை சாப்பிடப் பிடிக்காமல் அம்மாவிடம் கோபித்துக் கொண்டு, ரசச்சோற்றை சாப்பிட்டுவிட்டுச் செல்வேன். நான் செடிகளிடம் உரையாடிய நிகழ்ச்சிகளையும் உறவாடிய நாட்களையும் இப்போது நினைத்தாலும் சிறுபிள்ளையின் விளையாட்டு என்று புறந்தள்ள முடியவில்லை. ராமகிருஷ்ணனின் ‘சிறு செடி’ கட்டுரை, கொண்டாடிய நாட்களை நினைவுக்கு கொண்டுவருகின்றது.

தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும் போது யானையின் மணிச் சத்தம் கேட்டால், எந்த விளையாட்டாயிருந்தாலும் அப்படியே கைவிட்டுவிட்டு ஓடிவிடுவோம். அது ஆண்டாள் கோவில் யானை ‘கணேசா’னு ஊரிலுள்ள எல்லா பசங்களுக்கும் தெரியும். அதற்கு பின்னால், பத்து பதினைந்து பசங்க ஓ.....ஓனு ஊளையிட்டுக்கொண்டே ஓடிவருவார்கள். அவர்களுடன், நாங்களும் இணைந்து கொள்ளுவோம். இது, அந்த கால கிரேக்க ஒலிம்பிக்ஸ் மாதிரிதான் – ஆண்களுக்கு மட்டுமேயானது. யானையை கோயில் கொண்டு சேர்க்கும் போது மொத்தம், எப்படியும் இருபது முப்பது பசங்களாவது தேறுவோம். இப்போதும்கூட, யானையை கண்டால், நின்று பார்க்காமல் கடந்து செல்ல முடியாது. அது யானை ‘கணேசா’வாக இருந்தாலென்ன? அல்லது கல் யானையாயிருந்தாலென்ன? அதன் வசீகரம் அப்படி. ’யானை பார்த்தல்’ கட்டுரையும் நம்மை வசியம் செய்துவிடுகின்றது.

’மழையில் நனையாதே....காய்ச்சல் வந்திரும்’ னு சொல்லாத அம்மாக்களும் இருந்ததில்லை, கேட்கப்படாத குழந்தைகளும் இருந்ததில்லை நம்மூரில். ஆனால் குழந்தைகளுக்கு ’மழை என்ன செய்யும்?’ என்ற கேள்விதான் தொக்கிநிற்கும் மனதில். மழை, நம் வாழ்க்கையில் ஒவ்வொரு பருவத்திலும் வித விதமான அனுபவத்தைத்தான் பொழிந்திருக்கின்றது. மழை பற்றி மூன்று கட்டுரைகளும் இப்படித்தான். கண்முன் மழையை நிறுத்திவிடுகின்றார். நாமும் நனைந்து விடுகின்றோம்.

நாம் குற்றாலத்தின் பாறைகளில் சத்தமிடும் அருவிகளை பார்த்து அனுபவித்திற்கின்றோம். பாறைகளில் சத்தமிடாமல் வழியும் வெயிலை நமக்கு காண்பிக்கின்றார் ராமகிருஷ்ணன். சத்தத்தில் குளித்துப்பழகிய நமக்கு நிசப்த்தத்தில் குளிப்பதும் சுகமாய்த்தான் இருக்கின்றது. வெறுமையும் இருப்புதானே.


வெயிலில் அலைந்து திரிந்து கிறங்கிய ராமகிருஷ்ணனும் அவரது நண்பரின் முகத்தை கண்டு முன்பின் தெரியாத பெண்ணின் ’சாப்பிட்டுட்டு போறீங்களா சார்’ என்ற உபசரிப்பு, ஒரு கிராமத்தின் பிம்பத்தை ‘மைனா அலையும் பகல்’ கட்டுரையில் கிடைக்கச்செய்கின்றார்.

ஒவ்வொரு கட்டுரையையும் படிக்கும்போதும் என்னுடைய பழைய நினைவுகளைக் கிளறி விடுகிறது. என்னுடன் தெரு புளுதியில் உருண்ட மழையில் நனைந்த என் இளம் வயது பையனாய் ராமகிருஷ்ணன் இருப்பதை உணர்வுபூர்வமாய் உணர்ந்தேன்.

ராமகிருஷ்ணனின் ‘காண் என்றது இயற்கை’ நூல் இரண்டு பிரிவுகளை கொண்டது. முதல் பிரிவு, ’இயற்கை அறிதல்’. அதன் வாசிப்பில் கிடைத்த அனுபவங்கள்தான் மேலே சொன்னது. ஒவ்வொரு கட்டுரையும் என்னுடைய சிறு பிராயத்தின் நிகழ்வுகளை என் உடனிருந்து எந்தன் அனுவபத்தை பங்கிட்டு கொண்ட நண்பனின் நுண்ணிய பகிர்வாய்த்தான் உண்ர்ந்தேன்.

எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து என்னுடைய அம்மா ஆனந்த விகடன், குமுதம், கல்கி வாரப்பத்திரிகைகளை படித்துக் கொண்டுருந்தார்கள். அதில் வரும் தொடர் கதைகளை கிழித்தெடுத்து பையிண்டு செய்து புத்தகமாய் உருவாக்கிவிடுவார்கள். சாண்டில்யனிலிருந்து,தேவன், …போன்றோர்களின் கதைகளை அப்படித்தான் வாசித்துக் கொண்டிருந்தோம். இந்த Home Made Booksல் கதை படிப்பதில் மற்றுமொரு பயனுமுண்டு. பிரதான கதையுடன் சேர்த்து ஆங்காங்கே ஜோக்குகளும் சுவாரசியமான கட்டுரைகளும் படிக்க கிடைக்கும். அது மாதிரிதான், ‘காண் என்றது இயற்கை’ நூலின் இரண்டாவது பிரிவு – அனுபவம்.

’மாஸ்டர் ஹெல்த் செக்கப்’ என்று நமது உடல் நலனை சோதிக்க பெருநகர மருத்துவ மனைகளில் வசதிகள் இருக்கின்றன. வருடத்திற்கு ஒருமுறை சென்று சோதித்துக் கொள்ளலாம். மனநலனை சோதிக்க ஏதாவது வழி இருக்கின்றதா?. இருக்கின்றது. ராமகிருஷ்ணனின் அனுபவத்தில் வரும் ‘எலிக்கடி’ யை படித்துவிட்டு வாய்விட்டு தொடர்ந்து சிரித்தீர்கள் என்றால், நீங்கள் நல்ல மனநலனோடு இருக்கின்றீர்கள் என்பது நிச்சயம். இதை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை படித்துபார்த்து........சிரித்து...சோதித்துக்கொள்ளவது நலம்.



புத்தகத்தின் தலைப்பு : காண் என்றது இயற்கை
ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன்
வெளியீட்டளர் : உயிர்மை பதிப்பகம், சென்னை.
பால்ராஜன் ராஜ்குமார்